18

18

சிறைகளில் இன்னும் 14 அரசியல் கைதிகளே விடுதலை செய்யப்படாமல் உள்ளனர் – வவுனியாவில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!

கந்தக்காடு முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (17) வவுனியாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

 

வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்த நீதி அமைச்சர், பிரபா மற்றும் கௌதமன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஆலய பரிபாலனசபை மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பு என்பவற்றின் ஒழுங்கமைப்பில் திவாகரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் ஊடகங்க சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

 

“கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அங்கு புனர்வாழ்வு பெறுபவர்கள்,போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மற்றும் யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் போன்றோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

 

இந்த கந்தக்காடு முகாமானது இவ்வாறு மூன்று பிரிவுகளாக இயங்கி வருகின்ற நிலையில், அண்மையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்களையடுத்து அதன் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை காரணமாக இளம் சமுதாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக யுக்திய நடவடிக்கை மூலம் போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் மாபியாக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தவிரவும் யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேலும், அரசியல் கைதிகள் விடயத்தில் 5 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் 14 அரசியல் கைதிகளே விடுதலை செய்யப்படாமல் உள்ளனர், அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.

 

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேசப்படுகிறது, யாருக்கு ஆதரவு என கட்சி இன்னும் முடிவு எடுக்காத நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும் தமக்குள் பேசுகிறார்கள், இன்னும் யார் வேட்பாளர் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை, கட்சியுடன் கலந்துரையாடியே அது தொடர்பில் முடிவு எடுக்க முடியும்.”என்றார்.

ஊழல் குற்றச்சாட்டு – தனது பதவியை ராஜினாமா செய்தார் சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் !

சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இ லஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

 

இருப்பினும், தாம் குற்றமற்றவரென அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் வாதிட்டுள்ளார்.

Formula One Grand Prix கார் பந்தயம் சிங்கப்பூரில் நடைபெற்ற போது, அந்நாட்டு சுற்றுலாத்துறையை மேற்பார்வை செய்தவராக அவர் நன்கு அறியப்படுகின்றார்.

 

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, அவர் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஊழல், மோசடிகள் அற்ற ஆட்சி நடத்துவதாக சிங்கப்பூர் தெரிவித்து வருகின்ற நிலையில், அமைச்சர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் !

பாகிஸ்தானில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

 

ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை இலக்கு வைத்து துல்லியத் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

ஈரான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயற்பட்டு வரும் சன்னி பிரிவு ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) பயங்கரவாத அமைப்பின் இரண்டு நிலைகள் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

 

முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலில் 2 சிறுவா்கள் உயிரிழந்ததுடன், சிறுமிகள் மூவர் காயமடைந்தனா்.

 

இந்த நிலையில், தென்மேற்கு ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் பகுதியில் இன்று (18) அதிகாலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 7 பேர் பலியானதாக மாகாணத்தின் துணை ஆளுநர் அலிரேசா தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாகிஸ்தான் – ஈரான் இடையிலான மோதல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

 

பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை அடுத்து, அந்நாட்டு தூதரை பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செங்கடலில் அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் !

செங்கடலில் ஏடன் வளைகுடாவில் அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானம் தமது கப்பலை தாக்கியதாகவும் ஆனால் கப்பல் பெரிய அளவில் சேதமடையவில்லை என்றும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

 

ஹவுதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதளுக்கு பின்னர் அமெரிக்க கப்பல் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

 

கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாகவும் கப்பலும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அக் கப்பலின் கேப்டன் தெரிவித்தார்.

காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இலக்குகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுதது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஈராக்கின் எர்பில் நகரில் உள்ள அமெரிக்கத்  தூதரகம் அருகே இடம்பெற்ற ட்ரோன் தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் நாட்டின் புரட்சி காவற்படை பொறுப்பேற்றுள்ளது. இதேவேளை இத்தாக்குதல்களில் அமெரிக்கப்படைவீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என ஈரான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

 

இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மின்சாரம் தாக்கி மொத்தம் 50 காட்டு யானைகள் பலி – இலங்கை மின்சார சபை

சட்டவிரோதமான முறையில் விவசாய நிலங்களை பாதுகாக்கும் வேலிகளுடன் இலங்கை மின்சார சபையின் மின்கம்பிகளை இணைத்ததன் மூலம் கடந்த வருடத்தில் மின்சாரம் தாக்கி மொத்தம் 50 காட்டு யானைகள் பலியாகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் (வணிகம் மற்றும் செயற்பாட்டு உத்தி) மற்றும் ஊடகப் பேச்சாளர் பொறி. கே.ஏ. நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், கடந்த வருடத்தில் பல்வேறு மனித நடவடிக்கைகளினால் மொத்தம் 474 காட்டு யானைகள் பலியாகியுள்ளன.

 

எனவே, யானைகளைக் கொல்ல சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக மின்சார சபை ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்திருந்தது. நாட்டிலுள்ள யானைகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்க மக்கள் ஆதரவை வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோருகிறது.

 

இதன்படி, பயிர்ச்செய்கைகளைப் பாதுகாக்கும் வேலிகளுடன் மின்கம்பிகளை இணைப்பது தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக நேரடியாக முறைப்பாடு செய்ய 1987 என்ற அவசர இலக்கத்தை இலங்கை மின்சார சபை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யுக்திய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை – ஒரே மாதத்தில் 40,590 பேர் கைது !

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் நாட்டில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது

இந்த சுற்றிவளைப்புகளின் ஊடாக இதுவரை 40,590 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

 

அத்தோடு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 4,791 மில்லியன் ரூபா என மதிப்படப்பட்டுள்ளது. இந்தநிலையில், குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களின் 725 மில்லியன் ரூபா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுக்திய சுற்றிவளைப்புச் செயற்பாடுகளை யார் சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு!

யுக்திய சுற்றிவளைப்புச் செயற்பாடுகளை யார் சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு யுக்திய சுற்றிவளைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசல் தொடர்பாக உரிய அதிகாரிகள்தான் கவனம் செலுத்த வேண்டும்.

 

அதைவிடுத்து, சிறைச்சாலைகளில் கூட்டம் அதிகரிக்கிறது என்பதற்காக யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு யாரேனும் கோரினால், அது உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகவே பார்க்கப்படும்.

 

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய சிறைச்சாலைகள் இரண்டை நிர்மாணிக்க உரிய இடத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

 

உரிய ஆலோசனைகளைகளும் இதற்காக வழங்கப்பட்டுள்ளன. யுக்திய நடவடிக்கையானது, குடும்பங்களை பாதுகாக்கும் செயற்பாடாகும். பெற்றோரை, சமூகத்தை பாதுகாக்கும் ஒரு செயற்பாடாகும்.

 

யுக்திய செயற்பாட்டை யார் சொன்னாலும் நிறுத்தமாட்டோம். இதனை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிக்க மாட்டார் என நாம் உறுதியாக நம்புகிறோம்” என அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க – நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்க உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பதாக நடத்தப்படுமென தாம் எதிர்பார்க்கின்றோம்.

 

எமது கட்சியின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விங்கிரமசிங்கவும் ஒருவர். எமது கட்சியின் ஆதரவுடனே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

 

எனவே ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் இணைந்து செயற்படுகின்றார்.

 

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளது என்பதை கூறிக்கொள்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.