19

19

லொறி சாரதியை சுட்டு கொலை செய்த விவகாரம் – உப பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!

நாரம்மலயில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு லொறி சாரதி ஒருவரை கொலை செய்தமைக்காக கைது செய்யப்பட்ட உப பொலிஸ் அத்தியட்சகர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபர் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

சிவில் உடையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் லொறியொன்றை நிறுத்துமாறு நேற்று பிற்பகல் சமிக்ஞை செய்துள்ளனர்.

 

உத்தரவை மீறி பயணித்த அந்த லொறியை பின்தொடர்ந்த பொலிஸார், தம்பலஸ்ஸ பகுதியில் அதனை நிறுத்தியுள்ளனர்.

 

அத்துடன், லொறி சாரதியின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்தபோது அது இயங்கியுள்ளது. இதனையடுத்து, அலவ்வ பகுதியை சேர்ந்த 40 வயதான லொறி சாரதி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

இந்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

 

இதனிடையே, அந்த பொலிஸ் உத்தியோகத்தர், கவனயீனமாக செயற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

 

பொலிஸார் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு முரணாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

இதனிடையே, இது தொடர்பான விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக சித்திரவதை தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு ‘109’ற்கு அழைப்பெடுங்கள் – 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை என்கிறார் பொலிஸ் மா அதிபர்!

போதைப்பொருட்களை பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அவர்கள் சேவையில் இருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள். பாதாள குழுவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

 

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக சித்திரவதை மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு ‘109’ என்ற விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளுக்கு அமைய 48 மணிநேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

பொலிஸ் சேவையில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் உட்பட கீழ்மட்ட அதிகாரிகள் போதைப்பொருள் பாவிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தற்போது வைத்திய பரிசோதனை அறிக்கை கோரப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகள் ஒருமாத காலத்துக்குள் சேவையில் இருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள்.

 

போதைப்பொருள் சுற்றிவளைப்பு தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் 4,292 பேரில் இதுவரை 1,973 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகவே போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை வெற்றிப்பெற்றுள்ளன.

 

இந்த சுற்றிவளைப்பின் போது எவரும் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்படவில்லை. தடுப்பு காவலில் வைக்கவுமில்லை. நீதவானின் அனுமதியுடன் தான் தடுப்பு காவல் செயற்படுத்தப்படுகிறது. கடந்த ஒரு மாத காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட 40,590 பேரில் சுமார் 5,000 பேர் மாத்திரமே தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமரா பதிவுகளை கொண்டு வீதி சட்டங்களை மீறும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விசேட திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படும். அநுராதபுரத்தில் வசிக்கும் ஒருவர் கொழும்புக்கு வருகை தந்த போது அவர் வீதி சட்டத்தை மீறியிருந்தால் அதற்கான நடவடிக்கை அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் அதற்கு இந்த சி.சி.டி.சி பதிவுகள் உரிய பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

சட்டமியற்றும் செயற்பாட்டில் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளோம் – அமைச்சர் விஜயதாச ராஜபக்ச

சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் – ஆன்ட்ரே- பிரான்சேவிற்கும் நீதி அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று நீதியமைச்சில் இடம்பெற்றது.

 

இதன்போது இலங்கையின் நீதிச் செயற்பாட்டை வலுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்படும் என்றும் விஜயதாச ராஜபக்ச இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் இவ்வாறு கொண்டுவரப்படுகின்ற புதிய சட்டங்கள், சர்வதேச தரத்திற்கு ஏற்பவும், வெளிப்படைத்தன்மையை பாதுகாக்கும் அடிப்படையிலும் உருவாக்கப்படுமென அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

 

எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கான, இலங்கையின் முயற்சிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் மிகவும் முக்கியமானவை எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

மேலும் ஐக்கிய நாடுகளின் மனநல ஆணைக்குழுவின் அனுபவம் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடன் தவணையை செலுத்த முடியாமல் இரண்டு பிள்ளைகளின் தந்தை தற்கொலை!

தம்புள்ளை, மகந்தனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கடன் தவணையை செலுத்த முடியாமல் தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி, மாதம் ரூ.34 ஆயிரம் தருவதாக உறுதியளித்ததாகவும், அதை திருப்பி செலுத்த முடியாமல் மனமுடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

தொழில் நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இந்த கடன் தொகையை செலுத்த முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பல தவணை கட்ட முடியாததால், கடன் தொகையை அடிக்கடி செலுத்த நிதி நிறுவனமும், கடன் உத்தரவாததாரர்களும் தொந்தரவு செய்துள்ளனர்.

 

உயிரிழந்தவர் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு சர்வதேச கடவுச்சீட்டு !

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்

 

” வடக்கு கிழக்கை சேர்ந்த இலங்கையர்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

 

இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் பாஸ்கள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுசென்ற போது, அவரது வழிகாட்டுதலின்கீழ், இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உடன் அமலுக்கு வரும்வகையில் இலங்கை அரசின் வரலாற்றில் முதல்தடவையாக சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

 

உலகில் வேறெங்கிலும் இதற்கு முன்னர் இலங்கை அரசால் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.

 

மேலும் இந்திய அகதி முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குமாறு இரண்டுமுறை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட பா.ஜ.க தமிழகத் தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சர் அமத்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் அவ்விடயம் தொடர்பான வேலைத் திட்டங்களுக்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

 

இந்த தருணத்தில் 40 வருடங்களாக தாய் நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு அடைக்கலம் வழங்க உதவிய இந்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“தாராளமாக வாருங்கள்! கொல்ல வேண்டும் என்றாலும் வாருங்கள்!” – சிங்கள இளைஞரை அழைத்த விக்னேஸ்வரன் !

என்னை கொலை செய்ய கொலை வெறியில் இருந்த சிங்கள இளைஞன் தன் தவறை உணர்ந்து மனம்மாறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதிலிலேயே இவ்விடயத்தை தெரிவித்தார்.

 

அந்த கேள்வி பதிலில்,என்னுடைய சில கேள்வி பதில்களை வாசித்துவிட்டு ஒரு படித்த சிங்கள இளைஞர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். பேச்சு கிட்டதட்ட பின்வருமாறு அமைந்தது.

 

இளைஞர் – “சேர்! உங்களைக் கொல்ல வேண்டும் என்ற கொலை வெறியில் இருந்தேன். என்றாலும் நீங்கள் குறிப்பிட்ட பேராசிரியர் ஆரியரட்ணவின் சிங்கள நூலான “தெமள பௌத்தயா”வை (தமிழ் பௌத்தர்கள்) வாசித்த பின்னர்தான் உங்கள் கூற்றுக்களின் உண்மையைப் புரிந்து கொண்டேன். உங்களை வந்து சந்திக்க விரும்புகின்றேன்.”

 

நான் – “தாராளமாக வாருங்கள்! கொல்ல வேண்டும் என்றாலும் வாருங்கள்! எனக்கு இப்பொழுது 83 வயது (அப்போதைய வயது). தொடர்ந்து இந்த உலகத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை எதுவும் எனக்கில்லை.”

 

இளைஞர் – :“இல்லை சேர்! நான் வெறும் பேச்சுக்கே அவ்வாறு சொன்னேன்.” இன்றுவரை அவர் என்னை வந்து சந்திக்கவில்லை. ஆனால் அவர் தமது மனமாற்றத்தை வெளியிட்டமை தான் இந்தக் கேள்வி – பதிலுக்கு முக்கியமானது.

 

சிங்கள மக்களுக்கு எம்மைப் பற்றிய போதிய அறிவு இல்லாமையே தமிழ் -சிங்கள உறவானது இன்றும் மேம்படாமல் இருப்பதற்குக் காரணம் – என்றுள்ளது

சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறியுள்ள இலங்கை – 2023இல் சிறுவர்களின் ஒரு லட்சம் நிர்வாண காணொளிகள் வலைத்தளங்களில்!

கடந்த வருடம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களின் அந்தரங்க காணொளி காட்சிகள் சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்த அதிர்ச்சி தகவலை பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

 

சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் அவர்களின் நிர்வாணத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த காணொளிகள் வைரலாக பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த காணொளிகளை பதிவேற்றியவர்களை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சில தொழில் வல்லுநர்கள் கூட இந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது.

இவ்வாறான சம்பவங்களில் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த வருடத்தில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.