21

21

“சிறீதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை மகிழ்வளிக்கிறது – எனது முழுமையான ஆதரவை அவருக்கு வழங்குவேன்” – எம்.ஏ.சுமந்திரன்

ஜனநாயக தேர்தல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், தலைவர் சிறீதரனுக்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என்றும் சக தலைமைப்பதவிப் போட்டியாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் கூறுகையில்,

 

தமிழரசுக் கட்சித் தலைவருக்கான தேர்தலிலே மிக ஆரோக்கியமாக, எமது கட்சி உட்கட்சி ஜனநாயகத்தினை நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் முன்மாதிரியாக நடத்திக் காட்டியிருக்கின்றது.

 

இதிலே வெற்றிபெற்ற நண்பன் சிறீதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

எமது தலைவர் மாவை சேனாதிராஜா வழிநடத்திய தமிழரசுக் கட்சிப் பொறுப்பு, இப்பொழுது சிறிதரனுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.

 

இந்தப் பயணத்திலே நாம் தொடர்ந்தும் ஒன்றாகவே பயணிப்போம். இதை நாம் இருவரும் தேர்தல் காலத்திலும் தெளிவாக மக்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். அவ்வாறே தொடர்ந்து பயணிப்போம்.

 

ஆகவே, எனது முழுமையான ஆதரவினை தற்போது ஜனநாயக முறையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தலைவர் சிறீதரனுக்கு முழுமையாக வழங்குவேன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக சி.சிறீதரன் !

இலங்கத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

திருகோணமலையில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 137வாக்குகளைப் பெற்றுள்ளார்.

புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார்.

அமெரிக்க தளத்தை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதல் – ஈரான் சார்பு குழுவினர் மீது அமெரிக்கா சாடல் !

ஈராக்கின் மேற்கு பகுதியில் அமெரிக்க தளமொன்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பல அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர். ஆசாட் விமானபடைதளம் மீது ஈரான் சார்பு குழுவினர் தாக்குதலை மேற்கொண்டனர் என அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது.

ஏவுகணைகளையும் ரொக்கட்களையும் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறிப்பிடபடாத எண்ணிக்கையிலான அமெரிக்க படையினர் மூளை காயங்களிற்கு உட்பட்டுள்ளனரா என்ற மதிப்பீடுகள் இடம்பெறுகின்றன. ஈராக் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஈராக்கில் உள்ள இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் என்ற அமைப்பே இந்த தாக்குதலை மேற்கொண்;டுள்ளது,2023 இல் உருவான இந்த குழு ஈராக்கில் உள்ள பல ஆயுதகுழுக்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

இந்த குழுவினரே ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்களிற்கு உரிமை கோரிவருகின்றனர்.

அல்ஆசாட் தளம் தொடர்ச்சியாக தாக்குதலிற்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வித்தியா கொலை வழக்கு – மரண தண்டனை கைதிகளின் மேன்முறையீடுகள் நாளை விசாரணைக்கு !

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் கடந்த 09 ஆம் திகதி அழைக்கப்பட்டது. அதன்போது, இந்த வழக்கு தொடர்பான சிங்கள மொழிபெயர்ப்பு பிரதிகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டது. 2015 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற 18 வயது பாடசாலை மாணவி கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மரண தண்டனை விதித்தது. தமக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள விதம் சட்டத்துக்கு முரணானது என குறித்த பிரதிவாதிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, குற்றச்சாட்டில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் யுக்திய – போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் !

தற்போது நாடளாவிய ரீதியில் யுக்திய என்ற பெயரில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையும் அதனை விற்பனை செய்பவர்களையும் மையப்படுத்தி காவல்துறையினர் விசேட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்த வியாபாரத்தை முற்றாக அழிக்கும் நோக்கில் இந்த செயற்பாடு முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்த போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்திற்காக 200 வளவாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவை மன்ற பயிலுனர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆபிரிக்க பயணத்தால் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பின்னணி உருவாகியுள்ளது – அமைச்சர் அலி சப்ரி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உகண்டாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினால் எதிர்காலத்தில் உலகில் துரிதமாக அபிவிருத்தியை எட்டுமென கருதப்படும் 1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்திக்கொள்ள முடிந்துள்ளது என வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்த விடயம் இலங்கை வௌிவிவகார கொள்கைகளின்போது இதுவரையில் கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“ஆபிரிக்காவைப் பார்ப்போம்” (Look Africa) என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவான இலங்கையின் புதிய பொருளாதார பயணத்திற்காக ஆபிரிக்க நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பின்னணி உருவாகியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அணிசேரா நாடுகளின் 19ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் சீனா மற்றும் தென் துருவத்தில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக உகண்டாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அணிசேரா நாடுகளின் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகளாவிய பிரச்சினைகள், காசா பகுதியின் நிலவரம், இஸ்ரேல் – பாலஸ்தீன நிலவரம், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள், கடன் சுமையில் முடங்கிக் கிடக்கும் தரப்பினரை மீட்பதற்கான முன்னெடுப்புகள், காலநிலை அனர்த்தம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உரையாற்றினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த உரையை வெளிநாட்டு பிரதிநிதிகள் பாராட்டினர்.

அதற்கு இணையாக ஆபிரிக்க வலயத்தின் தென் துருவ நாடுகளின் தலைவர்களையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடினார். மாநாட்டினை நடத்திய உகண்டாவின் ஜனாதிபதி,  எத்தியோப்பிய பிரதமர், பெனின் குடியரசின் உப ஜனாதிபதி, பஹாமாஸ் பிரதமர், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க சந்தித்திருந்தார். மேலும் குறித்த நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திகொள்வது தொடர்பிலும் அவர் கலந்துரையாடினார்.

பெருமளவில் பேசப்படாத, 1.3 பில்லியன் மக்கள்தொகை கொண்ட, எதிர்காலத்தில் மிக வேகமாக வளர்ச்சியடையும் என்று உலகம் எதிர்பார்க்கும் ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த இந்தப் பயணம் வித்திட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கை அடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதற்கு ஜனாதிபதியின் பங்களிப்பு ஆகியன இதன்போது அனைவராலும் பாராட்டப்பட்டது.  ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், இந்த நாடு இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை அனைவரும் பாராட்டினர்.

குறிப்பாக, உகண்டாவின் ஜனாதிபதி யொவேரி முசெவேனி, வீழ்ச்சி அடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப அவர் ஆற்றிய பங்களிப்புக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், இம்முறை அணிசேரா நாடுகளின் மாநாட்டின் ஊடாக, இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த உண்மைகளை சர்வதேச சமூகத்திற்கு முன்வைக்கும் சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்தது. அத்துடன், ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வளர்த்துக்கொள்ள ஜனாதிபதியின் இந்த விஜயம் உதவியது என்றே கூற வேண்டும்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ‘ஆபிரிக்காவைப் பார்ப்போம்’ (Look Africa) என்ற எண்ணக்கருவின் கீழ் இலங்கைக்கான புதிய பொருளாதாரப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு ஆபிரிக்க நாடுகளில் முதலீடு செய்வதற்கு இதன்போது அடித்தளமிடப்பட்டது.

அதற்கமையவே, இரு நாடுகளும் பயனடையும் என்ற நோக்குடன் பெனின் குடியரசுடன் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் என்ற முறையில், பங்களாதேஷ், பஹ்ரைன், கானா, தன்சானியா, அஸர்பைஜான் போன்ற பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை  நடத்தும் வாய்ப்பும் எனக்கு கிடைத்ததோடு, அந்த நாடுகளுடன் நட்புறவை மேலும் பலப்படுத்திக்கொள்ளவும், பொருளாதார உறவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு கிட்டியது.

எனவே, இவ்வாறான மாநாடுகளின் மூலம் சர்வதேச நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தி, நாட்டுக்கு நன்மைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.