28

28

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் சுமந்திரன் கோரிக்கை!

உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளீர்க்கப்படும் வரையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,நிகழ்நிலைப் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வாறு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் சதாரண பெரும்பான்மையுடன் அச்சட்ட மூலத்தினை நிறைவேற்றுவதாக இருந்தால் சில பரிந்துரைகளைச் செய்திருந்தது.

ஆனால், பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டபோது எமக்கு அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சம்பந்தமாக குழு நிலையில் தெளிவாக வழங்கப்படவில்லை.

அத்தோடு அத்த திருத்தங்கள் 12 மணிக்கு முன்னதாக பாராளுமன்றத்தில் எமக்கு வழங்கப்பட வேண்டும் என்ற முறைமையும் உள்ளது.

ஆகவே உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் அதில் உள்ளீர்க்கப்பட்டுள்ளனவற்றை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் நான் 13 விடயங்களை உயர்நீதிமன்றத்தினால் குறிப்பிட்டும் அவை உள்ளீர்க்கப்படவில்லை என்பதை கண்டறிந்துள்ளேன்.

அதன்பின்னர் அதனை சபையில் சுட்டிக்காட்டி சபாநாயகரிடத்தில் எழுத்துமூலமாக வழங்கினேன். அதனை சட்டமா அதிபரின் பிரதிநிதிகளிடத்தில் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அத்திருத்தங்களை அமைச்சர் குழுநிலையில் இணைத்துக்கொள்வார் என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால் குழுநிலையில் அவை இணைத்துக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது தற்போதைக்கு தெளிவாக இல்லை.

ஆகவே முழுமையாக ஆராயாத வரையில் குறித்த சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு நாம் சபாநாயகரைக் கோருவதற்கு உள்ளோம் என்றார்.

பொலிஸ் சீருடையில் இருக்கும் போது யாரேனும் தாக்கினால் திருப்பி அடியுங்கள் – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

யுக்திய நடவடிக்கைக்கு சர்வதேச அழுத்தங்கள் இருந்த போதிலும், அது தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்தினார்.

 

நீர்கொழும்பு பிரதேச சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்,

 

“சீருடையுடன் இருக்கும் போது யாரேனும் தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டும், இல்லையேல் சீருடை அணிவதில் பயனில்லை, கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும், ஜனாதிபதி எனக்கு பலத்தை வழங்கியதால் தான் இதனை கூறுகின்றேன். யுக்தியை துவக்கி, நாட்டை சுத்தம் செய்ய நினைத்தேன். சில யூடியூபர்கள் போதைப்பொருள் மோசடியாளர்களின் பணத்தில் வாழ்கின்றனர். அவர்களை பயன்படுத்தி எம்மை விமர்சிக்கின்றனர். யுக்திய நடவடிக்கையை நிறுத்துங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையும் கூறியது, எங்கள் நாட்டில், நாங்கள் விரும்பியபடி செயல்படுகிறோம், சர்வதேசத்தின் விருப்பப்படி நான் செயல்படவில்லை.”

 

“பாதாள உலக குழு வழக்குகளில் வாதாடும் சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள்.பாதாள உலக குழுவினர் மில்லியன் கணக்கில் பணம் ஈட்டுகின்றனர். பாதாள உலக குழுக்களும், போதைப்பொருள் வியாபாரிகளையும் வைத்திருக்க முடியாது. அவர்கள் இந்த நாட்டிற்கு ஒரு சுமை ” என்றார்.

றோ இருக்கப் பயமேன்! தமிழீழம் மலரும்!! : ஈழம் வரையல்ல லண்டன் வரை பாயும் மோடியின் கோமியம்!!! – தேசம்திரை காணொளி

மரபுத் திங்களாக அறிவிக்கப்பட்ட தை மாதம் 28இல் நோத் ஹரோவில் “மாறிவரும் உலக ஒழுங்கில் ஈழத்தமிழர்களும் இந்தியாவும் மேற்குலகமும்” என்ற தலைப்பிலான சந்திப்பை சிறு துளிகள் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சிறு துளிகள் மற்றும் மள்ளர் மீட்புக் களம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. சிறு துளிகள் ஒரு உதவி அமைப்பாக தன்னை முன்னிலைப்படுத்தினாலும் அதன் செயற்பாடுகள் அது ஒரு அரசியல் அமைப்புப் போலவே உள்ளது. இக்கூட்டத்திற்கு இவர்கள் விடுத்துள்ள அழைப்பிதழில் ஒரு கையேட்டை இணைத்துள்ளனர். அதனை வாசித்துவிட்டு வரும்படியும் கோரியுள்ளனர். இக்கையேடானது ஏற்பாட்டாளர்களின் அரசியல் முகத்தை வெளிப்படுத்தி நிக்கின்றது. இலங்கையில் 1970களின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் அதன் உச்ச கட்டத்தை அது எட்டிய 1980களின் நடுப்பகுதி வரை முக்கியமான ஐந்து விடுதலை இயக்கங்கள் உட்பட 40 விடுதலை இயக்கங்கள் உருவாகி இருந்தன. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் துப்பாக்கியின் நிழலில் ஓரளவு கட்டுக்கோப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, அவரும் ஆயதங்களும் மௌனிக்கப்பட்ட பின் எண்ணற்ற பிரிவுகளாகின. இப்பிரிவுகள் நாட்டுக்கு நாடு வெவ்வேறு குழுக்களாக செயற்படுகின்றன. அவ்வாறான குழக்களில் ஒன்று தலைவர் இருக்கின்றார் என்று சொல்லியும் தங்கை துவாரகா உயிர்த்தெழுந்து வந்துவிட்டார் என்று சொல்லியும் எழுச்சி கொண்டுள்ளனர். இன்னும் சில பிரிவுகள் இலங்கை, இந்திய புலனாய்வுப் பிரிவுகளுடன் தங்களை இணைத்துக்கொண்டு செயற்படுகின்றனர்.

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்க்ஐ கிளிக் செய்யுங்கள்..

நிகழ்நிலைச் சட்டவாக்கத்தில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் உள்வாங்கப்பட்டதா..? – ஆய்வு நடத்தப்படும் என்கிறார் மஹிந்த யாப்பா அபேவர்தன !

நிகழ்நிலைச் சட்டவாக்கத்தின்போது உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக அனைத்து திருத்தங்களும உரிய முறையில் உள்வாங்கப்பட்டதா என்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் ஆய்வுகளை நடத்துமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த 23 மற்றும் 24ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு நிகழ்நிலை பாதுகாப்புச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அச்சட்டமூலம்நிறைவேற்றப்பட்ட முறைமை தொடர்பிலும், உயர்நீதிமன்றம் சுட்டிக்காண்பித்த விடயங்கள் குழுநிலையில் திருத்தப்பட்டதா என்பது தொடர்பில் மீளாய்வுக்கு உட்படுத்துமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கருத்து வெளியிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அவற்றை சட்டங்களாக அங்கீகரித்து சான்றுரைப்படுத்தி கையெழுத்திடப்படுவதற்கு முன்பு மேலும் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, அச்சட்டங்கள் சட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் சாத்தியமான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் சட்டமா அதிபர் அலுவலகத்தால் ‘ஒவ்வொரு சட்டமூலங்களும்’ திருத்தங்களின் பின்னர் அத்தகைய ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

மேலும், சட்டமா அதிபரிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பாராளுமன்ற அதிகாரிகள் குழு இரண்டாவது மீளாய்வை மேற்கொள்ளும்.

இச்செய்பாடுகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே நான் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்துவது வழக்கமானது. அந்த வழக்கம் நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கும் பொருந்தும் என்றார்.

முன்னதாக, நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன் பின்னர் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையில் 2023ஆம் ஆண்டில் சிறுவர்களுக்கெதிராக 5000 குற்றச் செயல்கள் – 167 சிறுமிகள் கர்பந்தரிப்பு” – பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுதந்தர

நாட்டில் கடந்த ஆண்டு பாலியல் துன்புறுத்தல் உள்ளடங்கலாக சிறுவர்களுக்கெதிராக 5000 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 4000க்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் பாலியல் துன்புறுத்தல்களுடன் தொடர்புடையவையாகும் என பொலிஸ் தலைமையகத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுதந்தர தெரிவித்தார்.

இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்களில் 167 சிறுமிகள் கர்பந்தரித்துள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுதந்தர சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2023ஆம் ஆண்டில் சிறுவர்களை கொலை செய்தல், கொலை முயற்சி, காயப்படுத்தல், பாலியல் துஷ்பிரயோகம், கடத்தல் உள்ளிட்ட 3074 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன. இவை தவிர பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 1463 சிறு குற்றச் செயல்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறு பாலியல் துன்புறுத்தல் உள்ளடங்கலாக கடந்த ஆண்டு சுமார் 5000 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.

ஏனைய குற்றச் செயல்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பாரியளவில் அதிகரிக்காத போதிலும், பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்த போக்கினையே காணபிக்கின்றன.

அதற்கமைய 18 வயதுக்குட்பட்ட  சிறுமிகளுக்கெதிரான 1502 பாலியல் துஷ்பிரயோகங்களும், சிறுவர்களுக்கெதிரான 584 பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகங்களும், சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல் தொடர்பில் 70 குற்றச் செயல்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்களின் போது 167 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர். இவர்களில் 127 பேர் தமது காதலர்களால் இந்நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலைக்கு உள்ளாகும் பெரும்பாலான சிறுமிகளின் குடும்ப பின்னணி இதில் பாரியளவில் தாக்கம் செலுத்துகின்றது.

சில சந்தர்ப்பங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் காதல் உறவைப் பேணுவதற்கு அவர்களது பெற்றோரால் எவ்வித எதிர்ப்புக்களும் வெளியிடப்படாமையும் இனங்காணப்பட்டுள்ளது.

பெற்றோர்களுக்கிடையிலான பிளவுகளும் சிறுவர்கள் இவ்வாறு தவறான வழிகளில் செல்வதில் தாக்கம் செலுத்துகின்றது. தற்போது பொலிஸ் திணைக்களத்தின் கீழுள்ள 607 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன.

அவற்றில் 605 பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு காணப்படுகிறது. இவை தவிர தேசிய மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினால் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய அப்பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து சிறுவர்களுக்கெதிரான துன்புறுத்தல்கள் தொடர்பான தகவல்களை வழங்க முடியும். இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களின் இரகசியத்தன்மை நிச்சயம் பேணப்படும்.

அதே போன்று தகவல் வழங்குபவர்களின் தனித்துவத்தன்மையும் பாதுகாக்கப்படும். எனவே தமது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் கூற முடியாத, பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடளிக்க முடியாத சிறுவர்கள் இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தமது பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என்றார்.