30

30

மருத்துவமனைக்குள் நுழைந்து மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய படையினர் !

மருத்துவமனை பணியாளர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மருத்துவமனையொன்றிற்குள் நுழைந்து மூவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

Israel’s war on Gaza live: Israeli forces kill 3 in West Bank hospital | Israel War on Gaza News | Al Jazeera

மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபின் சின மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் போல நுழைந்த இஸ்ரேலிய படையினர் மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்றனர் என இஸ்ரேலிய பாலஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளன.

தாதிமார்கள் ஹிஜாப்அணிந்த பெண்கள் மருத்துவர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய விசேட படைப்பிரிவினர் மருத்துவமனைக்குள் நுழைவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.

ஒருவர் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு செல்கின்றார் மற்றுமொருவர் குழந்தைகள் நாற்காலியுடன் காணப்படுகின்றார்.

மருத்துவமனைகள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் பின்னர் ஒவ்வொருவராக மூன்றாவது தளத்திற்கு சென்று இரண்டு இளைஞர்களை கொலை செய்தனர் என மருத்துவமனைக்குள் காணப்பட்டவர்களை மேற்கோள்காட்டி பாலஸ்தீன அரச செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் குறிப்பிடத்தக்க பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்ட மருத்துவமனைக்குள் மறைந்திருந்த  முகமட் ஜலாம்னே என்பவரே கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் மீதான தாக்குதல்கள் உட்பட பலதாக்குதல்களில் ஈடுபட்டுள்ள ஜெனின் பட்டாலியனை சேர்ந்த ஜெனின் முகாமை சேர்ந்த முகமட் அல் கஜாவியும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

31,000 போதை மாத்திரைகளுடன் மன்னாரில் இளைஞர் ஒருவர் கைது !

மன்னார் – சௌத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை ஒன்றில் இருந்து போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடம் இருந்து 31,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தாய் ,தந்தை இருவருக்கும் இடையில் தகராறு – தற்கொலை செய்து கொண்ட சிறுமி !

பதுளை – புவக்கொடமுல்ல பிரதேசத்தில் தாய் ,தந்தை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலுக்குள்ளான மகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் 16 வயதுடைய தரம் 11 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவியாவார்.

இவர் தனது மேலதிக வகுப்புகளுக்கு பெற்றோரிடம் பணம் கோரிய நிலையில் இது தொடர்பில் தாய் மற்றும் தந்தைக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பெற்றோரின் தகராறில் மன உளைச்சலுக்குள்ளான மகள் அதிகளவிலான மருந்துகளை உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில் திடீரென சுகயீனமடைந்த மகளை அவரது தந்தை பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

மகளை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் இரத்த அழுத்த மருந்துகளை அதிகளவில் பருகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அம்புலன்ஸ் வண்டிகள் கூட பயணிக்க முடியாத நிலையில் பிரதான வீதி – கிளிநொச்சியில் அல்லல்படும் மக்கள் !

கிளிநொச்சி, கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுண்டிகுளம் கடற்கரை செல்லும் பிரதான வீதியில் நோயாளர் காவு வண்டி கூட செல்ல முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்” வடமாகாணத்தில் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாகவும், சட்ட விரோத மணல் அகழ்வு செயற்பாடுகள் காரணமாகவும் சுண்டிகுளம் கடற்கரை செல்லும் பிரதான வீதி மற்றும் உள்ளகவீதிகள் அனைத்துமே மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகிறன.

இதனால் அப்பகுதியில் நோயாளர் காவு வண்டியைக் கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதியில் பயணிக்கும் பேருந்துகள் தொடர்ச்சியாக பழுதடைந்து வருவதால்  தற்போது பேருந்து சேவையும் இடம்பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத காரணத்தினால்  மீன்பிடி தொழிலுக்காக செல்லும் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரத்திற்காக செல்பவர்களும் இதனால் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும்” இவ்வாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்கலைகழங்களில் தொடரும் பகிடிவதைகள் – ஆறு மாத காலத்திற்குள் 82 முறைப்பாடுகள் !

பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 82 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இந்த விசேட தொலைபேசி இலக்கமானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த விசேட தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் காணப்படுவதோடு 3000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வரலாறு காணாத அளவிற்கு 2023ஆம் ஆண்டில் ஆயுதங்களை விற்றுத்தள்ளிய அமெரிக்கா !

கடந்த வருடம் (2023) அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள இராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022இல் ரஸ்யா உக்ரைன் போர் ஏற்பட்டதையடுத்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் களமிறங்கின.

இந்நிலையில் தீவிரமாக போரிட்டு வரும் உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் இராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இதற்கமைய, 2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை ஆகி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவை மையமாக கொண்ட லாக்ஹீட் மார்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ராப் க்ரம்மேன் உள்ளிட்ட தனியார் ராணுவ தளவாட நிறுவனங்கள் செய்த விற்பனையும் அமெரிக்க அரசு நேரடியாக $81 பில்லியன் விற்பனையும் இதில் அடங்கும்.

அமெரிக்கா அதிகளவில் ராணுவ தளவாடங்களை விற்பனை செய்த நாடுகளில் போலந்து ($29.75 பில்லியன்) முன்னணியில் உள்ளது.

ஜெர்மனி ($8.5 பில்லியன்), பல்கேரியா ($1.5 பில்லியன்), நார்வே ($1 பில்லியன்), செக் குடியரசு ($5.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளை தவிர, தென் கொரியா ($5 பில்லியன்), ஆஸ்திரேலியா ($6.3 பில்லியன்), ஜப்பான் ($1 பில்லியன்) ஆகிய நாடுகளும் குறித்த பட்டியலில் உள்ளன.

“பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ராணுவ பாதுகாப்புக்கான வர்த்தகமும், ஆயுத விற்பனையும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமான அம்சம்” என அமெரிக்கா தொடர்ந்தும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சரமாரித்தாக்குதல் – ஐவர் கைது !

யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று (29) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழுவாக நின்றவர்களை சோதனையிட இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் முயன்றுள்ளனர். இதன்போதே பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மானிப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு காவல்துறை உத்தியோகத்தரும் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக  விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை – முல்லைத்தீவில் நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாகவும் போராட்டம் !

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அயல் வீட்டு குடும்பஸ்தரினால் குறித்த கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கும் தொடர்ச்சியாக வாக்குவாதம் இருந்து வந்த நிலையில் அது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே கேப்பாபிலவு மாதிரி கிராமம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நான்கு நாட்களாக தொடர்ச்சியான முறையில் இரு குடும்பங்களை சேர்ந்த 12 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றையநாள் நான்காவது நாளாக தொடரும் இவர்களின் போராட்டத்தினை குறித்த பகுதி கிராம அலுவலரோ, பொலிஸாரோ கண்டுகொள்ளவில்லை. இதுவரை குறித்த போராட்டத்திற்கான நீதி கிடைக்காததனால் இரு குடும்பங்களும் வீட்டிற்கு செல்ல முடியாமலும், வீட்டில் இருக்க பாதுகாப்பற்ற நிலையிலும் வீதியிலேயே இருக்கின்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபடும் இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கும் போது குறித்த பகுதி கிராம அலுவலரும் தம்மை கண்டு கொள்ளவில்லை எனவும், பொலிஸார் நேரடியாக நீதிமன்றத்துக்கே தம்மை அனுப்புவதாகவும், தமக்கு குழந்தைகளும் இருப்பதனால் வீதியில் தொடர்ச்சியாக கொசுகடிக்குள் இருக்க முடியாது,வேலைக்கும் செல்ல முடியாது, வருமானமும் இல்லாமல் போக நாம் வீதியிலையே இருக்கின்றோம். எம் பிள்ளைகள் வீதியிலே போகும்போது எதிராளிகள் துப்புகின்றனர். எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கின்றது எனவும், எம் உயிர் போக முன்னமே சமாதானமாக வாழ நீதியை பெற்றுதருமாறு கேட்டுக்கொள்கின்றோம் .

இரு குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்ட வேளை வீட்டில் தனிமையில் 14 வயதுடைய இரு சிறுவர்கள் இருந்தபோது பிரச்சினைக்குரிய அயல் வீட்டு குடும்பஸ்தர் அங்கு சென்று போதைப்பொருளை வைத்து விட்டு பொலிஸாரை அழைத்துவந்து குறித்த இரு சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தினை கண்டித்தும், அடாவடியில் ஈடுபடும் அயல் வீட்டுக்காரர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்தும் நியாயம் கிடைக்கவில்லை எனவும் அதற்கான நீதி தமக்கு வேண்டும் எனவும், வீட்டில் இருப்பதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி இரு குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.