பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு ( Bushra Bibi) 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனினும், அந்த வழக்குகள் அரசியல் பழிவாங்கல் காரணமாக தொடரப்பட்டிருப்பதாக இம்ரான் கான் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தண்டனையை எதிர்த்து இம்ரான் கான் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், மற்ற வழக்குகளில் பிணை கிடைக்கவில்லை.
இதற்கிடையே, அரச இரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது உதவியாளர் ஷா முகமது குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று (30) நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இன்று மேலும் ஒரு ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்த போது, அவருக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் கிடைத்த பரிசுப்பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதன்போது, இருவருக்கும் தலா 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் இருவரும் 10 ஆண்டுகளுக்கு அரச பதவிகளை வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.