February

February

வடக்கு மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் இலங்கை விமானப்படை!

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலுள்ள 73 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு தினம் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

 

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான நட்புறவின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் பல விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

குறிப்பாக களனி ரஜமகா விகாரையில் விசேட பூஜைகள் மற்றும் சர்வ சமய சடங்குகளுக்கு முன்னுரிமை அளித்து, 73வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 

இந்த வருடமும் விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படையின் மரியாதை அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி நோக்கங்களுக்கு இணங்க, தரமான கல்வி மற்றும் சுற்றாடல் பேண்தகைமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வடக்கு மாகாணத்தில் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கி அபிவிருத்தி செய்யப்படவுள்ள 73 பாடசாலைகள் இனங்காணப்பட்டுள்ளன.

 

குறித்த பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு, அதற்காக 100 மில்லியன் ரூபா நிதி மதிப்பிடப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் மார்ச் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் தொழில்நுட்ப, கல்வி கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

இலங்கை விமானப்படையின் விமானங்கள், வளங்களின் கண்காட்சி மற்றும் விமானப்படையின் பணிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி பற்றிய விழிப்புணர்வும் இடம்பெறவுள்ளது.

 

இந்த கண்காட்சியில் வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களின் புத்தாக்க உபகரணங்களை காட்சிப்படுத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

பாடசாலை மாணவர்களுக்காக இக்கண்காட்சி முற்றாக இலவசமாக இடம்பெறுவதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மூன்று சர்வதேச பல்கலைக்கழகங்கள்!

கல்வியில் சர்வதேச அனுபவமுள்ள நிபுணர்களின் அவதானத்திற்குப் பின்னர் அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல்துறைப் பட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

03 சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவற்றில் இரண்டு பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே மாதத்திற்குள் மூன்றாவது பல்கலைக்கழகமும் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும்.

கண்டியில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (indian institutes of technology) ஆரம்பிக்கப்பட உள்ளது. ஏனைய இரண்டு பல்கலைக்கழகங்களும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தை மையமாக கொண்டு அவற்றின் இரண்டு கிளைகள் திறக்கப்படவுள்ளதுடன் அவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் தயாராக உள்ளோம்.

விஜயதாச ராஜபக்ஷ குழுவின் அறிக்கை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் குழு அறிக்கையை இணைத்து புதிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. குழுவின் தலைவர் பதவிக்கு, முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான சட்டக் கட்டமைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டு, சட்ட வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அரச பல்கலைக்கழகங்களில் பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இலங்கைக்கு வருகை தருமாறு அவுஸ்திரேலிய உயர்கல்வி அமைச்சருக்கு அவுஸ்திரேலிய தூதரகத்தின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ன், சிட்னி பல்கலைக்கழகம் உட்பட 10 பல்கலைக்கழகளுடன் தொடர்புள்ள நிபுணத்துவ அறிவுள்ள வேந்தர்களும் இலங்கைக்கு வருகை தர உள்ளனர். எமது கல்வி நிலைமையை ஆய்வுசெய்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தனியார் உயர்கல்வித் துறையை முறைப்படுத்த வேண்டும். ஆனால் கல்வித்துறையை விற்பனை செய்வதற்கு நாம் தயாரில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாந்தன் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு தற்காலிக கடவுச்சீட்டு !

இந்தியாவின்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு மாத்திரம் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகரகத்தினால் குறித்த கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

32 வருடகால சிறை தண்டனைக்கு பின்னர், சாந்தன் நாடு திரும்புவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் எகிறும் முறைப்பாடுகள் – பாதுகாப்பற்ற நிலையில் இலங்கை சிறார்கள்!

2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 2,242 முறைப்பாடுகளும், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் 472 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 404 முறைப்பாடுகளும், சிறுமிகள் துஷ்பிரயோகம் தொடர்பில் 51 முறைப்பாடுகளும், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பில் 06 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக முறைபாடுகளை விட 2023 ஆம் ஆண்டு அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொறுப்பற்ற சாரதிகளும் விதிமுறைகளை பின்பற்ற தவறும் மக்களும் – வடக்கில் அதிகரிக்கும் வீதி விபத்து உயிரிழப்புகள் !

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன்  வானொன்று மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த மூவரில்  இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரிழந்துள்ளனர் எனவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத கடவை காப்பாளர் இல்லாதமையே இப் விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றைய தினம் அரச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்ததுடன், பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

குறித்த விபத்து நேற்று மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து நாவற்குழியில் விபத்து இடம்பெற்ற குறித்த பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சமிக்கை விளக்கை ஒளிரவிட்டு திரும்புகையில், அதே திசையில் பயணித்த பேருந்து மோதியுள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பருத்தித்துறை பகுதியில் நெல் காயப்போட்டுக்கொண்டிருந்த விவசாயி ஒருவரும் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வந்த வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் தொடரும் பேருந்து மற்றும் வாகன விபத்துக்களில் மக்களின் அவதானமின்மையும் – சாரதிகளின் பொறுப்பற்ற தன்மையுமே காரணம் என பொலிஸார் தெரிவிப்பதுடன் யாழ்ப்பாணத்தில் வீதி விதிமுறைகளை பின்பற்றாமல் செயற்பட்டதற்காக தினசரி நூறு தொடங்கி இருநூறு முறைப்பாடுகள் பதிவாவதாக கடந்த வருடம் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொருளாதார நெருக்கடியால் 263,000 குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மூடப்பட்டுள்ளன !

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில், 2018 ஆம் ஆண்டில் நாட்டில் இயங்கிய 263,000 குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் கோவிட் நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

2018 ஆம் ஆண்டில், 254,000 சிறு வணிகங்கள், 6,900 சிறிய அளவிலான வணிகங்கள் மற்றும் 1,800 நடுத்தர அளவிலான வணிகங்கள் மூடப்பட்டுள்ளன.

 

மூடப்பட்ட நிறுவனங்களில் 197,000 நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாகவும், மேலும் 56,600 தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்த ஆண்டு (2023) மார்ச் முதல் ஜூன் வரை திணைக்களம் நடத்திய “இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களில் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வில்” இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

 

நாட்டில் விவசாயம் அல்லாத நடவடிக்கைகள் தொடர்பான 7,813 சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் மாதிரியைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இங்கு, குறுந்தொழில் துறையின் கீழ், முச்சக்கரவண்டி வேலை செய்பவர்கள், சிறிய சில்லறை விற்பனைக் கடைகள் நடத்துபவர்கள், ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப் பணியில் ஈடுபடுபவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கு, கடந்த 2018 ஆம் ஆண்டில் செயல்பட்ட, ஆனால் 2022 ஆம் ஆண்டிற்குள் செயல்படாமல் இருக்கும் வணிக இடங்கள் குறித்து கணக்கெடுப்பு கவனம் செலுத்தியுள்ளது. 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட புதிய வணிக இடங்கள் இந்தக் கணக்கெடுப்பில் உள்ளடக்கப்படவில்லை என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில், செயல்பாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் எண்ணிக்கை 13 லட்சமாக இருந்தது.

 

கடந்த 2020 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இது ஒரு சதவீதமாக 33.4 சதவீதமாகும். 2019ல் 9.9 சதவீத நிறுவனங்கள், 2021ல் 27.4 சதவீத நிறுவனங்கள், 2022ல் 29.3 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

 

கடந்த 2018 ஆம் ஆண்டில், இந்த வணிக நிறுவனங்களில் 2.7 மில்லியன் ஊழியர்கள் பணிபுரிந்தனர், இந்த எண்ணிக்கை 2.5 மில்லியனாக குறைந்துள்ளது.

 

நிரந்தரமாக மூடப்பட்ட வணிகங்களில் 27,600 பெண்களால் நடத்தப்பட்டன. மேலும், தற்காலிகமாக மூடப்பட்ட வணிகங்களில் 11,700 பெண்களால் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

நிகழ்நிலை காப்பு சட்டத்தினூடாக பேச்சு சுதந்திரத்திற்கு அழுத்தம் – USAID

நிகழ்நிலை காப்பு சட்டத்தினூடாக பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வௌியிடும் சுதந்திரத்திற்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அந்த நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்து இலங்கை மேற்கொண்டுள்ள சட்டத் திருத்தம் காரணமாக சர்வதேச சமூக வலைத்தள நிறுவனங்கள் குற்றவியல் வழக்குகளுக்கு உட்படும் அபாய நிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் !

காலநிலை மாற்றம் மற்றும் மனித செயற்பாடுகளின் விளைவாக உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின்  இடம்பெயரும் மிருகங்கள் பற்றிய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும்  100 கோடி  விலங்குகள் பாலைவனங்கள், சமவெளிகள் அல்லது பெருங்கடல்கள் வழியாக இனப்பெருக்கம் மற்றும்  உணவுகளை தேடி  இடம்பெயர்வை மேற்கொள்கின்றன.

இந்நிலையில், இடம்பெயரும் உயிரினங்களின் மீது திணிக்கப்படும் நீடிக்க முடியாத அழுத்தங்கள் அவற்றின் எண்ணிக்கையை குறைவடைய செய்வதோடு, உணவு விநியோகத்தை சீர்குலைத்து வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் ,

1979 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயரும் விலங்குகளை பாதுகப்பதற்கான மாநாட்டில் 1,189 இனங்கள் இருப்பதாக பட்டியலிடப்பட்டது. அதில்  44 சதவீதம் குறைவடைந்துள்ளதோடு, 22  சதவீதம் முற்றிலும் அழிந்துவிடும்.

இந்த தரவினை  1970 முதல் 5,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையை ஒருங்கிணைக்கும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையின் நிலையைக் குறிக்கும் லிவிங் பிளானட் இன்டெக்ஸ் (எல்பிஐ)  வழங்கிய மதிப்பீடுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் பிற வகையான அதீத சுரண்டல் உள்ளிட்ட செயல்பாடுகளால், மனிதர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர், இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் பட்டியலில் உள்ள 70 சதவீதமான  உயிரினங்கள் பாதிப்படைகின்றன.

வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வறட்சி அல்லது காட்டுத் தீ போன்றவை வானிலையில் பாதிப்பை ஏற்படுத்திதுகிறது.இதன் காரணமாக  இடம்பெயர்வு காலத்தை சீர்குலைக்கிறது.

இதேவேளை , வாழ்விடங்கள் அழிந்து வருவதால் 75 சதவீதமான உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தனிமைப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு இடையே அதிக இணைப்பு தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அணைகள், குழாய்கள் அல்லது காற்றாலைகள் போன்ற உள்கட்டமைப்பை நிறுவும் போது வாழ்விடங்கள் மற்றும் இடம்பெயர்வு பாதைகளை சீர்குலைப்பதைத் தவிர்க்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய உலகளாவிய உயிர்ப்பல்வகைமை ஒப்பந்தத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் 30 சதவீதமான நிலம் மற்றும் கடல் பிரதேசங்களை இயற்கைக்காக ஒதுக்கி வைப்பதற்கான 2022 ஆம் ஆண்டு உறுதிமொழியை மதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை !

திருமணம் ஆகாத (35) வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் உட்பட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்க வேண்டும். என நுவரெலியா மேல் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பினை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய நேற்று (13) செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

வழக்கு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கந்தப்பளை ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றிய லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்பவர் கடமை நேரத்தில் 35 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக கடந்த 2019 ஆண்டு நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கின் சாட்சியங்கள் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்தரான லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்பவர் நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு அவருக்கான தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதபதி விராஜ் வீரசூரிய நேற்று செவ்வாய்க்கிழமை (13) வழங்கினார்.

இதன்போது, மன்றில் ஆஜராகியிருந்த குற்றவாளியான லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்ற பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் உட்பட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்காத பட்சத்தில் மேலும் மூன்று வருட சிறை தண்டனையும்,தண்டப்பணம் 20 ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

தேசிய கீதம் பாடப்படுகின்ற போது மாணவர்கள் அதிகளவான கவனத்தையும் மரியாதையையும் செலுத்தவது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தேசிய கீதம் பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் அதன் மீது அதிகளவான கவனத்தையும் மரியாதையையும் செலுத்தவது அவசியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசிய தெரிவித்தார்.

யா / அச்சுவேலி புனித திரோச பெண்கள் கல்லூரியில் இடம்பெற்ற பிரிவெனா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடநூல் மற்றும் பாடசாலை சீருடைத் துணிகள் பகிர்ந்தளிக்கும் தேசிய நிகழ்வில் பிரதம விருந்தினராக இன்று புதன்கிழமை (14) கலந்து கொண்டு பிரதம அதிதியாக உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

பொதுவாக அரசியலோ , பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகளின் மனோநிலையிலிருந்து நான் முற்றிலும் வேறுபட்டவராகவே இருக்கின்றேன்.

இதேநேரம் எமது வடக்கு மாகாணத்தின் கல்வி செயற்பாடுகளின் மேம்பாட்டுக்கும் அதனை பாதுகாப்பதற்கும் கல்விசார் அதிகாரிகள் அதிகளவான ஊக்குவிப்புகளை வழங்கிவருகின்றனர்.

ஆனாலும் நான் அறிகின்ற வகையில் உயரதிகாரிகளின் இந்த முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகள் கிடைப்பதில்லை என தெரியவருகின்றது. இந்த நிலை இல்லாது போக வேண்டும். அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் நான் கவனத்தில் எடுத்து கொள்வதுடன் வடக்கின் கல்வி தரத்தை மேலும் வலுப்படுத்த என்னாலான முழுமையான ஒத்துழைப்புகளையும் எந்த வேளையிலும் வழங்க தயாராகவே இருக்கின்றேன்.

மேலும் பன்மைத்துவம் சமத்துவம், சம உரிமை போன்றவை கடந்த காலங்களில் கொள்கையளவில் மாத்திரம் இருந்தமை தான் நாடு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு காரணமாக இருந்தது , இனிவருங்காலத்தில் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் மனப்பூர்வமாக உணர்ந்து கொள்ளும் வகையில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார்.