February

February

புலம்பெயர் தமிழர்களை சந்திக்க தயாராகும் அனுரகுமார தரப்பு!

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் வாரம் கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதன் போது, கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கடந்த 5 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, இந்தியாவின் முக்கிய தரப்பினரை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் வாரம் அனுரகுமார திஸாநாயக்க கனடாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பயணத்தின் போது கனடாவில் உள்ள அரசியல்வாதிகளை அவர் சந்திக்கவுள்ளதுடன், ரொரன்டோ பகுதியில் நடைபெறவுள்ள கூட்டமொன்றிலும் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் கைது !

ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஹலவத்தை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால், புத்தளம் – ஹலவத்தை வீதியின் லுனு ஓயா பாலத்திற்கு அருகில் வைத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கைதுசெய்யப்பட்டவர் புத்தளம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் என தெரியவந்துள்ளது.

 

இந்தநிலையில் குறித்த ஆசிரியரிடம் இருந்து 90 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் பதவியை கைவிட்டுவிட்டு கடற்தொழிலாளர்களுடன் இணைந்து போராடுவேன் – டக்ளஸ் தேவானந்தா

எல்லைதாண்டிய இந்திய மீன்பிடியாளர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து நியாயமான தீர்வுக்காக போராடுவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

நேற்று (27) யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் இந்திய தூதருடனான சந்திப்பு போது கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.

 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இந்திய தூதுவருடனான சந்திப்பின் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் அல்லது அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன்.

 

குறிப்பாக நான் நீண்டகாலமாக எதை கூறிவந்தேனோ அதுதான் இன்று ஜதார்த்ததாகயுள்ளது என்றும் அதையே இன்று ஏனைய தரப்பினர் ஏற்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

 

அதேநேரம் அன்று நான் கூறியதை சக தமிழ் இயக்கங்கள் கட்சிகள் ஏற்றிருந்தால் இன்று இந்த அழிவுகள் இழப்புகள் அவல நிலைகள் ஏற்பட்டிருக்காது என்பதையும் எடுத்துக் கூறியிருந்தேன்.

 

இதேவேளை நாட்டின் எதிர்கால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தொடர்பாகவும் விரிவாக இந்திய தூதருடன் கலந்துரையாடியிருந்தேன்.

 

அதைவிட மிகப்பிரதானமானது சமீபத்தில் ஜேவி்பியின் தலைவர் இந்தியா சென்று பலதரப்பட்டவர்களுடன் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேச்சுக்களை நடத்தியிருந்தார். ஆனாலும் அவர் இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதுவிதமான கருத்தையும் எடுத்தக் கூறியிருக்கவில்லை.

 

அதேபோன்று சமீபத்தில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்திய தூதுவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அச்சந்தர்ப்பத்தில் கூட எமது வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் அதே பகுதி தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்று கூறித்திரியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

ஆனால் என்னுடனான சந்திப்பின்போது இந்திய மீன்பிடியாளர்களின் எல்லைமீறிய அத்துமீறிய சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அதனால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன். குறிப்பாக எமது கடல் வளங்கள் சுறண்டப்படுவது தொடர்பிலும் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவது தொடர்பிலும் சுட்டிக்காட்டி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.

 

ஆனால் அதை தொடர்வதற்கான அழுத்தங்கள் தொடர்ந்தும் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது முன்னெடுக்கப்படுமாக இருந்தால் எனது அமைச்சு பதவியை இராஜனாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராடுவேன் எனவும் தெரிவித்தார்.

 

“இதனிடையே இலங்கை எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டமை தொடர்பில் தமிழகத்தில் போராடடங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” அது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர் கருத்து கேட்டபோது,

 

போராட்டம் செய்வது அவர்களது உரிமை. அதேநேரம் அவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஆனால் சட்டரீதியாக இதை பார்க்க வேண்டும். 2018 இல் இது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் ஒரு தடவை எல்லை மீறியிருந்தால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்படுவர் என்றும் அதற்கு மேல் மீண்டும் எல்லை தாண்டியிருந்தால் சட்டரீதியான தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதற்கேற்ப தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் எல்லைதாண்டி உள்நுழைந்த வந்தவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் படகு ஓட்டி உரிமையாளர்கள், தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அவர்களுக்கு சுட்டுவிட்டது போலுள்ளது.

 

என்னைப் பொறுத்தளவில் எமது நாடு, எமது கடல், எமது மக்கள் அதற்கே எனது முன்னுரிமை என்பதாகும். அதுவே நியாயம் என்றும் கருதுகின்றேன் என தெரிவித்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இந்தியாவில் மரணம் !

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) காலை காலமானார்.

 

கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார்.

 

இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

 

இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதையடுத்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 

எனினும் இன்று சிகிச்சை பலனின்றி சாந்தன் காலமானார்.

 

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையிலுள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி உருக்கத்துடன் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

இந்த நிலையில் அவர் நாடு திரும்ப அண்மையில் இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது.

 

அதற்குள் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

யுக்திய நடவடிக்கைகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் – நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

சிறைச்சாலைகள் நிரம்பி வழிவது தொடர்பில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, ​​அதற்கு தற்போது இடம்பெற்று வரும் யுக்திய நடவடிக்கையே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதில் இந்த நடவடிக்கை வெற்றியடைந்தாலும், கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் இது பங்களித்துள்ளது என நிதியமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த அமைச்சர், சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், வழக்குகளில் தேவையற்ற தாமதங்களைத் தடுக்கவும் சட்ட நடவடிக்கைகள் இயற்றப்பட்டுள்ளதாக மேலும் வலியுறுத்தியுள்ளார்.

5 தொடங்கி 19 வயது வரையிலான பாடசாலை மாணவர்களுக்கு மார்ச்மாதம் முதல் பாலியல் தொடர்பில் கல்வி !

முன்பிள்ளை பருவ அபிவிருத்தி காலத்திலிருந்து வயதுவந்தோர் வரையில் பாலியல் தொடர்பில் கல்வியை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி வெளியீடுகள் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் அண்மையில் (20) கூடிய பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட இலங்கையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தனிநபர்களின் பாலியல் கல்வி தொடர்பில் கொண்டுள்ள குறைந்த அறிவை விருத்தி செய்யும் நோக்கில் இந்த பாலியல் கல்வி வெளியீடுகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஒன்றியத்தின் முன்னிலையில் தெரிவித்தனர்.

முன்பள்ளி மாணவர்கள் முதல் 13ஆம் தரம் வரையிலான பாடசாலை மாணவர்கள் வரையிலும், வயது வந்தவர்களுக்காகவும் இந்த வெளியீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த பாலியல் கல்வி வெளியீடுகள் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் முழுமையான மேற்பார்வை மற்றும் அவற்றின் அனுமதியுடன் துறைசார்ந்த நிபுணர்களால் தொகுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

முதல் கட்டத்தின் கீழ் பாலியல் கல்வி தொடர்பான வெளியீடுகள் இலத்திரனியல் வெளியீடுகளாக வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சமூகத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் பாலியல் பற்றிய அறிவை முறையாக வழங்குவதன் மூலம், சமூகத்தில் உருவாகி வரும் பல நெருக்கடிகளை களைய முடியும் என்றும், இதன் மூலம் பாடசாலை மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் ஒன்றியத்தின் முன்னிலையில் தெரிவித்தனர்.

பாலஸ்தீன் மீது தொடரும் அமெரிக்காவின் அழுத்தம் – பாலஸ்தீன பிரதமர் இராஜினாமா !

பாலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் முகமட் சட்டேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசிடம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் காசா யுத்தத்தின் பின்னரான அரசியல் ஏற்பாடுகள் குறித்து பாலஸ்தீனியர்களிடையே கருத்துடன்பாடு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக தான் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன ஜனாதிபதி பாலஸ்தீன அதிகாரசபையில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்துவருகின்ற நிலையில் இந்த இராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது

மோடியின் கட்சி ஆட்சி செய்யும் இந்திய மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் 75 சதவீதமாக அதிகரிப்பு – “இஸ்ரேல் – காசா“ மோதலை முன்வைத்தும் பிரச்சினை !

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் 75 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுத் தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக 36 சதவீதமும், முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை குறிவைக்கும் பேச்சு 25 சதவீதமும் இதில் அடங்கும்.

கடந்த 2023-ல் மட்டும் இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து 668 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனை அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘இந்தியா ஹேட் லேப்’ எனும் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதன் மூலம் தெரிவித்துள்ளது. ‘இந்தியாவில் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் இது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டின் முதல் பாதியில் 223 மற்றும் பிற்பாதியில் 413 என வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகவும் தகவல்.

இதில் 498 சம்பவங்கள் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் இதன் பங்கு 75 சதவீதமாகும்.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக 36 சதவீதம் ஒட்டுமொத்தமாக பதிவாகி உள்ளது. ஜிஹாத் போன்றவற்றை முன்வைத்து 63 சதவீத சம்பவங்களும், முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை குறிவைக்கும் வகையிலான பேச்சு 25 சதவீதமும் பதிவாகியுள்ளது.

இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் வெறுப்புப் பேச்சு அதிகரித்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநில தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக பார்த்தால் மகாராஷ்டிரா (118), உத்தர பிரதேசம் (104), மத்திய பிரதேசம் (65), ராஜஸ்தான் (64), ஹரியாணா (48), உத்தராகண்ட் (41), கர்நாடகா (40), குஜராத் (31), சத்தீஸ்கர் (21) மற்றும் பிஹார் (18) மாநிலங்களில் வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் அரங்கேறும் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ளன.

பாஜக ஆளும் மற்றும் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இதை ஒப்பிட்டு பார்த்ததில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்தும் வெறுப்பை பரப்பும் பேச்சுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் 78 சதவீதம் அரங்கேறி உள்ளன. இதில் பாஜக பிரமுகர்கள்/பிரதிநிதிகளின் பங்கு 10.6 சதவீதம். அதுவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அக்கட்சியின் பிரமுகர்கள்/பிரதிநிதிகள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 27.6 சதவீதம் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பு ரீதியாக வெறுப்புப் பேச்சை வெளிப்படுத்தும் வகையில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், சங் பரிவார், கோ ரக்‌ஷா தளம் உள்ளிட்ட அமைப்புகள் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ ராஜா சிங், மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ நிதிஷ் ராணா, ஏஹெச்பி தலைவர் பிரவீன், வலதுசாரி ஆதரவாளர் கஜல் சிங்காலா, சுரேஷ் ஷவாங்கே, யதி நரசிங்கானந்த், காளிசரண் மகாராஜ், சாத்வி சரஸ்வதி மிஸ்ரா ஆகிய 8 பேர் வெறுப்பை பரப்பும் வகையில் பேசுவதில் முதல் 8 இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இஸ்ரேல் – காசா இடையிலான போர், நூ (ஹரியாணா) வன்முறை சம்பவம் போன்றவற்றை முன்வைத்தும் வெறுப்பு பேச்சு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சை பரப்புவதில் புதியவர்களும் ஆர்வம் காட்டி வருவதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் – ஜே.வி.பி

எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மகளிர் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் மட்டுமன்றி பெண்களுக்கும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமது கட்சியில், நாடாளுமன்றத்தில் வேட்பாளர்களாக களமிறங்க பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய மக்கள் சக்திக்கு அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், மேடைகளில் ஆரம்பம் முதல் இறுதி வரையில் கட்சியை குறைகூறி விமர்சனம் செய்வதாக விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாவது முறையாகவும் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு !

அரசியலமைப்பு பேரவையினால் பொலிஸ்மா அதிபர் நியமனத்தை அங்கீகரிக்கவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசியலமைப்பு பேரவையினால் பொலிஸ்மா அதிபர் நியமனத்தை அங்கீகரிக்கவில்லை. அதற்கு ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 2  வாக்குகளும் மற்றும் 2 பேர் வாக்களிப்பதை தவிர்த்தும் இருந்தனர்.

முடிவெடுக்க குறைந்தபட்சம் 5 வாக்குகள் தேவை. வாக்குகள் சமமாகும் போது மாத்திரம் பயன்படுத்தக்கூடிய அறுதியிடும் வாக்கு சபாநாயகருக்கு உள்ளது. 4/2  என்பது சமமான வாக்குகள் அல்ல! இரண்டாவது முறையாகவும் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

வெட்கம் சபாநாயகர் அவர்களே! என்று குறிப்பிட்டுள்ளது.