February

February

2023 இல் உலகநாடுகளில் கொலை செய்யப்பட்ட 99 பத்திரிகையாளர்களில் 72 பத்திரிகையாளர்கள் பாலஸ்தீனியர்கள் !

2023 இல் 99 பத்திரிகையாளர்கள் உலகநாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள  பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு இவர்களில் 72 பத்திரிகையாளர்கள் பாலஸ்தீனியர்கள் என தெரிவித்துள்ளது.

காசாவில் இவ்வளவு பெருந்தொகையில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் கடந்த வருடம் உலகில் கொலைசெய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை முன்னைய வருடங்களை விட குறைவாக காணப்பட்டிருக்கும் என  பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

காசா- இஸ்ரேல் யுத்தத்தின் முதல் மூன்று மாதங்களில் ஒருநாடொன்றில் ஒருவருடத்தில் கொல்லப்பட்டதை விட அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

காசாவில் கொல்லப்பட்ட 77 பத்திரிகையாளர்களில் 72 பேர் பாலஸ்தீனியர்கள் மூவர் லெபனானை சேர்ந்தவர்கள் இருவர் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் என சிபிஜே தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களிற்கான அச்சுறுத்தல் என்ற விடயத்தை பொறுத்தவரை காசா யுத்தம் முன்னொருபோதும் இல்லாத அச்றுத்தலாக காணப்படுகின்றது என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் ஜோடி கின்ஸ்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தத்தை பொறுத்தவரை காசா பத்திரிகையாளர்களால் மாத்திரமே காசாவிற்குள் என்ன நடைபெறுகின்றது என்ற செய்தியை வெளியுலகிற்கு தெரிவிக்கமுடியும் என்பதை மனதில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள சிபிஜேயின் தலைவர் சர்வதேச பத்திரிiயாளர்களிற்கு காசாவிற்குள் செல்வதற்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவத்தினர் அழைத்துச்சென்றால் மாத்திரமே சர்வதேச பத்திரிகையாளர்களால் அங்கு செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நாங்கள் செய்திகளை வெளிக்கொணர்வதற்காக  தங்கள் உயிர்களை பணயம்வைக்கும்  பாலஸ்தீன பத்திரிகையாளர்களையே நம்பியிருக்கின்றோம் எனவும் ஜோடி கின்ஸ்பேர்க்தெரிவித்துள்ளார்.

காசா யுத்தத்தின் போது பாலஸ்தீன பத்திரிகையாளர்களிற்கு போதிய ஆதரவின்மை குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள யுத்தம் என்பதால் காசாவில் இலக்குவைக்கப்படுபவர்கள் கொல்லப்படுபவர்களுக்கான ஆதரவை வெளியிட  மேற்குலகம் தயங்குகின்றது எனவும் தெரிவித்துள்ள  பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் இஸ்ரேல் இந்த  யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சர்வதேச ஊடகங்கள் பிளவுபட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்தவருடங்களுடன் ஒப்பிடும்போது உக்ரைனிலும் மெக்சிக்கோவிலும் கொல்லப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 2023 இல் குறைவடைந்து காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக மெக்சிக்கோ பிலிப்பைன்ஸ் சோமாலியா காணப்படுவதாகவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஸ்ய எதிர்கட்சி தலைவர் சிறைச்சாலையில் உயிரிழப்பு – புடினே காரணம் என்கிறார் பைடன் !

ரஸ்ய எதிர்கட்சி தலைவரும் விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்துவந்தவருமான  அலெக்சே நவல்னி சிறையில் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்ட்டிக்கில் உள்ள சிறைச்சாலையில் அவர் உயிரிழந்துள்ளார் என ரஸ்ய சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளிக்கிழமை நவல்னி திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டார் சிறிது நேரத்தில் சுயநினைவிழந்தார் என ரஸ்ய சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன எனரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ரஸ்ய  ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்த எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின்  மரணத்திற்கு ரஸ்ய ஜனாதிபதியே காரணம் என  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருள் உட்கொண்ட 10வயது மாணவர்கள் – 4 மாணவர்கள் வைத்தியசாலையில் !

குருநாகல் – மதுராகொட பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்து வைத்திருந்த மாத்திரையை பாடசாலைக்கு எடுத்துச் சென்று ஏனைய 3 மாணவர்களுடன் சேர்த்து அருந்தியதாகவும், இதனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைக்கு மாத்திரைகளை எடுத்துச் சென்ற மாணவனின் தந்தை ஹெரோயின் போதைக்கு அடிமையானவர் எனவும் அவர் மீது போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுராகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும் – யாழ் பிரதிப் காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்க

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும் என யாழ் பிரதிப் காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் காவல்துறையினருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்துக்கு இன்று(17) முற்பகல் வருகை மேற்கொண்ட யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்க இந்தக் கட்டளைகளை வழங்கினார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர் பொதுமக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூறாக உள்ள குற்றச்செயல்களை விரைந்து தடுக்குமாறும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

போதைப்பொருள் விற்பனையை தடுத்தல் அதன் பாவனையை முற்றாக ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்ற ஆலோசனைகளையும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 17 பெண்கள் கைது !

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில்  596 ஆண்களும் 17 பெண்களும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 342 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 332  ஆண்களும் 10 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 84 கிராம் ஹெரோயின் , 32 கிராம் ஐஸ் , 168 கிராம் கஞ்சா  உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 68 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 66  ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 14 கிராம் ஹெரோயின் , 555 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 133 கிராம் 911 மில்லிகிராம் ஹெரோயின், 177 கிராம் 616 மில்லிகிராம் ஐஸ் , 2,204 கிராம் 479 மில்லிகிராம் கஞ்சா , 50 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 28 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 126 சந்தேக நபர்களும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

2023 ஆம் ஆண்டில் 470 காட்டு யானைகள் உயிரிழப்பு !

2023 ஆம் ஆண்டில் 470 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதோடு, அவற்றில் 200 யானைகள் மனித செயற்பாடுகளினால் உயிரிழந்துள்ளன.

இதனை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் (பாதுகாக்கப்பட்ட பகுதி முகாமைத்துவம்) மஞ்சுள அமரரத்ன தெரிவித்துள்ளார்.

அதில்,  துப்பாக்கிச் சூட்டினால் 83 யானைகளும், யானை வெடிகளால் 47 யானைகளும், மின்சார தாக்கி 66 யானைகளும், உடம்பில் நஞ்சேற்றம் இடம்பெற்றதால் 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.

மேலும், உடல் நலக்குறைவு, இயற்கை காரணங்கள் அல்லது விபத்துக்களால் 70  யானைகளும், ரயிலில் மோதி 23  யானைகளும் உயிரிழந்துள்ளன.

கடந்த வருடம் செம்டம்பர் மாதம் 27 ஆம் திகதி அதிகளவான யானை உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. ரயிலில் மோதி 11 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

10வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை – மன்னாரில் சம்பவம் !

மன்னாரில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில்  அறிக்கையிடப்பட்டுள்ளது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டநிலையில், இன்று  சனிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

அதன் போதே , சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்த 52 வயதான திருகோணமலை – குச்சவெளியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை காணாமற்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போது, தென்னந்தோட்டத்தில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

சிறுமியின் தாயும் தந்தையும் புத்தளம் – பூக்குளம் கிராமத்தில் வசித்து வருவதுடன், பாடசாலை செல்வதற்காக சிறுமியும் அவரது இரு மூத்த சகோதரிகளும் சகோதரனுடன் ஊர்மனை கிராமத்திலுள்ள அம்மம்மாவின் வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தவளை ஐஸ்கிரீம் விற்றவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் தண்டப்பணம்!

யாழ்ப்பாணம் – செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட குளிர்களிக்குள் (ஐஸ் கிறீம்) தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட, விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது

கடந்த புதன்கிழமையன்று (14) ஆலய சூழலில் குளிர்களி விற்பனையில் ஈடுபட்டவரிடம், அதனை வாங்கிய நபர் ஒருவரின் குளிர்களிக்குள் தவளை ஒன்று காணப்பட்டது.

அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை சுகாதார பரிசோதகர் குளிர்களி விற்றவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

குறித்த வழக்கானது இன்றைய தினம் (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குளிர்களியை விற்பனை செய்தவர், சுன்னாகம் பகுதியில் இயங்கும் குளிர்களி தயாரிப்பு நிறுவனத்திடம் கொள்வனவு செய்த குளிர்களியையே, ஆலய சூழலில் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து விற்பனை செய்தவருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் நடாத்தப்பட்ட உணவகம் ஒன்றிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளருக்கு 36 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி ஆலயத்திற்கு தினமும் வழிபாட்டிற்காகவும், ஆலயத்தில் நடைபெறும் திருமண நிகழ்வுகளுக்காகவும் பல நூற்றுக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர்.

அவர்கள் ஆலய சூழலில் உள்ள உணவகங்களில் சிற்றுண்டிகள், குளிர்பானங்களை கொள்வனவு செய்கிறனர், அதனால், ஆலய சூழலில் உள்ள உணவகங்கள் மற்றும் குளிர்பான விற்பனை நிலையங்களின் சுகாதாரத்தை சுகாதார பரிசோதகர்கள் கண்காணிக்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாக ஜேவிபி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது…? – டக்ளஸ் தரப்பு கேள்வி !

இந்திய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய ஜேவிபியின் தலைவர் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் நிலை தொடர்பில் எவ்வாறான கருத்தை கொண்டுள்ளார் என வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் இன்றையதினம் (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இணைந்த வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயக பிரதேசம் தொடர்பில் ஜே.வி.பி. எவ்வாறான கருத்தை கொண்டுள்ளது என பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பப்பட்டபோதும் அவர்களிடமிருந்து தமிழர் தாயக பிரதேசம் தொடர்பாக எவ்விதமான தெளிவூட்டல்களும் வெளியிடப்படவில்லை.

இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு ஜே.வி.பி.யே முக்கிய காரணமாக செயற்பட்டது.

ஆனால் ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நடைபெறலாம் என்ற கருத்து நிலவும் சூழலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜேவிபி எழுச்சி பெற்று வருவதாக ஊடகமொன்றிற்கு கூறியுள்ளார்.

ஆனால் தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாக ஜேவிபி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை சரத்பொன்சேகா கூட தெரிவிக்க முயலவில்லை.

ஆகவே வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக ஜே.வி.பியின் நிலைப்பாட்டை நட்புடன் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

குடும்ப தகராறு – 23 வயது மனைவியை கொலை செய்த கணவன்!

மிகிந்தலை பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கொலை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று(15) இரவு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரிவிக்கையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை ஆயுதம் ஒன்றால் தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மிஹிந்தலை, கெலே திரப்பனய, இஹலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இக்கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 23 வயதுடைய இளம் மனைவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.