12

12

யாழில் இந்திரன் பல்கலைக்கழகம் கட்டுகிறாரா? இந்திர(ன்)லோகக் கன்னிகைகள் கழகம் கட்டுகிறாரா?

யாழில் பெப்பரவரி 9 அன்று இந்திய நடிகர்கள் மற்றும் பாடகர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது. ரம்பாவின் கணவர் என்றும் இந்திரன் என்றும் அறியப்பட்ட இந்திரகுமார் பத்மநாதனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு யாழ் தமிழ்த் தேசியவாதிகளால் கடும் விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தது. ஆயினும் தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடித்தவர்களையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் தங்கள் கனவுக் கன்னிகைகளைப் பார்க்க இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பார்வையாளர்களின் இருக்கை மற்றும் அவர்கள் பார்ப்பதற்கான திரைகள் எதனையும் ஏற்பாடு செய்யாத நிலையில் இளைஞர்கள் தங்கள் கனவுக் கன்னிகைகளைப் பார்ப்பதற்கு முண்டியடித்து தடுப்பு வேலிகளை உடைத்தெறிந்து முன்னோக்கி நகர்ந்ததுடன் ஒளி, ஒலி அமைப்புக்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மேடைகளிலும் ஏறி நிகழ்வுகளைப் பார்க்க முயன்றனர். ரசிகர்கள், நிகழ்வுக்கு சுற்றிவரப் போட்ட வேலிகளைத் தாண்டி உள்ளே நுழைந்ததால் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் அங்கு நிலவியது. எழுபதுகளில் தமிழாராச்சி மாநாட்டில் நிகழ்ந்தது போன்ற அசம்பாவிதம் அதிஸ்ரவசமாக அன்று நிகழவில்லை. நிழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வந்திருந்த கலைஞர்களும் ரசிகர்களை அமைதிகாக்கச் சொல்லிக் கெஞ்சிய போதும் நிகழ்ச்சியை முழுமையாக திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.

இந்நிகழ்வை இந்திரன் ஆரம்பிக்கப்போகின்ற நோர்தேர்ன் யூனி வர்சிற்றிக்கான விளம்பரமாகவே ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் தமிழகத்தின் முக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் எனப் பலரும் யாழ் வந்திருந்தனர். நேற்றைய நிகழ்வானது தமிழக சினிமா உலகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழகத்தின் சில நடிகர்இ நடிகைகளுக்கு எதிராக அவர்களுடைய நிகழ்வுகளைக் குழப்பியிருந்தனர். தற்போதைய இந்நிகழ்வுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

“இது இசை நிகழ்ச்சி அல்ல இது ஒரு குத்தாட்ட நிகழ்ச்சி….. இலவசம் எனக் கூறி எமது இளைஞர் பரம்பரையை அவமானப்படுத்திஇ அவர்களைக் கோபம் கொள்ள வைத்த கூத்து… இந்த நிகழ்ச்சிக்கு எம்மவர்கள் குடும்பம், குடும்பமாக சென்றது எமது பிழை….” என்கிறார் ஒடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பினைச் சேர்ந்த தம்பி தம்பிராசா.

இது தொடர்பாக தேசம்நெற்க்குத் தெரிவித்த இந்நிகழ்வை ஒளிப்பதிவு செய்யச் சென்ற முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவரான த ஜெயக்குமார், “அமையப் போகின்ற பல்கலைக்கழகம் ஒரு திரைப்படத்துறை சார்ந்த பல்கலைக்கழகம் என்றால் கூட தம்மன்னா கோஸ்டியைக் கொண்டு வந்து இப்படியொரு நிகழ்ச்சியை நடத்துவது பொருத்தமற்றது. ஆனால் நொதேர்ன் யூனிவர்சிற்றி, Sri Lanka Institue of Information Technology – SLIIT உடன் இணைந்து கணணித்துறைசார்ந்த கற்கைநெறிகளையே மேற்கொள்ள உள்ளது. இதற்கு தம்மன்னா கோஸ்டி எதற்கு?” என்றார். இதே கேள்வி கல்வியியலாளர்கள் பலரிடமும் எழுந்துள்ளது.

இந்திரன் என்று அறியப்பட்ட நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ் சுதுமலையிலிருந்து கனடாவுக்கு குடும்பத்தோடு புலம்பெயர்ந்தவர். அங்கு வெற்றிகரமாக “மஜிக் வூட்ஸ்”மற்றும் பல துணை நிறுவனங்களை நடத்தி வருகின்றார். அக்காலகட்டத்தில் புலிகளும் பல நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது தமிழகத்திலும் புலிகள் சில பல முதலீட்டு முயற்சிகளில் ஒன்று இந்த மரங்களை தளபாடங்களை உற்பத்தி செய்வதும் ஏற்றுமதி செய்வதும். அவ்வேளையில் புலிகள் தங்கள் முதலீட்டுக்கு நம்பகரமான ஒரு நபர்களைத் தேடிய போது ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல்’ இந்திரனுக்கு அடித்தது அதிர்ஸ்ட்டம். இத்தகவலை புலிகள் அமைப்புடன் நெருங்கிச் செயற்பட்ட நம்பகமான ஒருவர் தேசம்நெற்ககுத் தெரிவித்தார். இது தொடர்பாக இந்திரனுடைய பள்ளி நண்பரும் தமிழீழ விடுதலைப் புலிகளில் மாத்தையா அணியில் இருந்தவருமான தேவன் குறிப்பிடுகையில், அது இந்திரனின் முதலீடு மட்டுமே எனத் தெரிவித்தார்.

இந்த மஜிக் வூட்ஸின் விளம்பரத்திற்கு வந்தவர் தான் ரம்பா. அப்போது இவர் தயாரித்த ‘திறி ரோசஸ்’ என்ற படம் தோல்வியடைந்த நிலையில் மிகுந்த பண நெருக்கடியில் இருந்த போது இந்திரன் அவரைக் கண்டு காதல் வசப்பட்டார். ரம்பாவின் கடனையும் அடைத்தார். அத்தோடு முதல் மனைவியை விவாகரத்துச் செய்து ரம்பாவைத் திருமணம் செய்ததைத் தொடர்ந்து பிரபல்யமானார்.

நேற்றைய நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் நிகழ்வு முகாமைத்துவம் இன்மையே காரணம் என ஜேர்மனியில் வாழும் சமூகச் செயற்பாட்டாளரும் தொழில் முனைவருமான இரத்தினசாமி ரமேஸ்வரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஆயினும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பல இளைஞர்கள் மதுபோதையிலும் போதைப்பொருட்கள் பாவித்த நிலையிலுமே கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்சியைத் திட்டமிட்டபடி தொடர்ந்து நடத்த முடியாமல் போனதற்கு இதுவும் முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாது. ஆனாலும் இவ்வாறானவர்களை நிகழ்வில் பங்கேற்க விடாமல் தடுப்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பும் கூட. ஒரு பொதுவான களியாட்ட நிகழ்வை எப்படி நடத்தக்கூடாது என்ற வரலாற்றுப் படிப்பினையை இந்திரன் ஈழத்தமிழர்களுக்கு கற்றுத் தந்துள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் யாழில் வந்து செய்கின்ற செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக இல்லை என்று குறிப்பிடும் தம்பி தம்பிராசா தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியை மோசடி செய்த பலர் தற்போது தாயகம் திரும்பி யாழ் சமூகத்தின் கலாச்சாரத்தை சீரழித்து வருவதாகத் தெரிவிக்கின்றார். இந்தப் பட்டியலில் வரக்கூடிய அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தம்பி தம்பிராசா, குறிப்பிடாத சிலர்:
வலன்ரைன்ஸ் டேய்க்கு பிரான்ஸ், லண்டன் ஸ்ரைலில் பூட்டுப் போடவும், காதல் செய்யவும் தங்கள் ரீட்சா ஹொட்டலுக்கு கூவி அழைக்கும் ஐபிசி பாஸ்கரன்,
யாழ் ஆணாதிக்க வெள்ளாள சைவப் பழம் ஆறுதிருமுருகனிடம் ஆசீர்வாதம் பெற்று யாழில் மதுவும் மாதுவுமாக டிஸ்கோ கிளப் நடாத்தும் திருவள்ளுவருக்கு திருநீற்றுப் பட்டையும் சந்தனப் பொட்டும் வைத்து வள்ளுவரின் வரலாற்றை யாழில் மாற்றியமைத்த புலிகளின் ஆணிவேர் படத் தயாரிப்பாளரும் ரில்கோ ஹொட்டல் உரிமையாளருமான திலகராஜா,

 

பிரான்ஸ் லாக்குர்னே சிவன் ஆலயம் நடத்தும் நல்லூரில் உள்ள காமவிடுதி லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் ஜெயந்திரன்,
(அண்மையில் யாழில் பிறந்தநாள் கொண்டாடிய ஒரே மகனின் மனைவி) மருமகளிடம், அவரின் தாயும் தங்கையும் குடியிருந்த கொழும்பு வீட்டை சீதனமாக எழுதித்தரச்சொல்லி வற்புறுத்திய கொடைவள்ளல் சுவிஸிலிருந்து வந்து எம்ஜிஆர் வேசம் போடும் ‘தியாகி’ அறக்கட்டளையின் வாமதேவன் தியாகேந்திரன் (இவர் லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் ஜெயந்திரனின் சகோதரர்.)

லண்டனில் உள்ள சில புலி ஆதரவு ஆர்வக்கோளாறுகள் எவ்வாறு இந்திய உளவுத்துறை றோ உடன் சேர்ந்து தமிழீழம் காணப் போகிறோம் என்று கூறுகிறார்களோ அதே போல் மேற்குறிப்பிட்டவர்கள் இலங்கை அரசோடும் புலனாய்வுத்துறையோடும் சேர்ந்து யாழில் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கின்றனர். யாழ் சட்டத்தரணி செலஸ்ரினின் மொழியில் சொன்னால், “தம்மன்னாவை அழைத்து இளைஞர்களை எழுச்சிபெற வைத்து தமிழ் தேசியத்தை எழுச்சி பெறச் செய்கின்றனர்”.

யாழில் இந்திரன் பல்கலைக் கழகம் கட்டுகிறாரோ இல்லையோ இந்திரலோகக் கன்னிகைகள் கழகம் கட்டுவார் என்பதை மட்டும் உறுதியாகத் தெரியப்படுத்தியுள்ளார். உலகில் கவர்ச்சி நடனம் ஆடி பல்கலைக்கழகம் கட்டிய முதல் தமிழன் என்ற பெருமை இந்திரனையே சேரும். தவறணைக்கும் பாருக்கும் கவர்ச்சி நடனம் போட்டு ஆண்களை வரவழைப்பது மேற்குநாட்டுக் கலாச்சாரம். அது லண்டனில் தவறணை நடத்தும் கொன்ஸ்ரன்ரைனின் வியாபார தந்திரம். அதையே இந்திரன் யாழில் பல்கலைக்கழகத்திற்கும் பயன்படுத்தியுள்ளார். பதிவு செய்பவர்களுக்கு அனுமதி இலவசம் என்று சொல்லிஇ இளைஞர்கள் தங்கள் தொலைபேசி இலக்கங்கள் தகவல்களைச் சேகரித்தனர். காரியமானதும் ரிக்கற்றுகளுக்கு பணம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஹொட்டல்காரர்கள் யாழை அந்தப்புரமாக்க, இந்திரன் அவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று இந்திரலோகக் கன்னிகைகள் கழகத்தை கொண்டுவந்து ஒரு சிக்ஸரே அடித்துள்ளார். யாழின் தமிழ் தேசியம் இதைத்தான் வெளிப்படுத்துகிறது. இவர்களினால் ஈர்க்கப்பட்டு இன்னும் பல வெளிநாட்டு வியாபாரப் புள்ளிகள் யாழில் ஹொட்டல் கட்ட ஓடித்திரிகின்றனர்.

எண்பதுகளில் ஈபிஆர்எல்எப் ஆல் கடத்தப்பட்ட அமெரிக்க அலன் தம்பதிகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தும் சுழிபுரத்தில் புளொட்டின் மிருகத்தனமான கோரப் படுகொலையை படமெடுத்தும் பிரபலமான லண்டன் தவறணை பார் உரிமையாளர் கொன்ஸ்ரன்ரைன் சட்டத்தரணி தேவராஜனிடம் மண்கவ்வி நீண்டகாலம் தன்னை மௌனமாக்கிக் கொண்டவர். கோமாவில் இருந்து எழுந்து தமிழ் தேசியவாதியாகியுள்ளார். தற்போது தனது தவறணை வியாபாரத்திலிருந்து ஓய்வுபெறப்போவதாக லண்டன் சைவ ஆலயங்களின் ஒன்றியத்தின் வட்ஸ்அப் குறுப்பில் குமுறியிருந்தார், ஓய்வூதியர் கொன்ஸன்ரைன் யாழ் தமிழ்ப் பத்திரிகைகளை வடஸ்அப் குறுப்பில் பகிர்வதை தனது தமிழ் தேசியக் கடமையாக எண்ணிச் தன் ஓய்வுக்காலத்தை மிகப்பெறுமதியாகக் களித்து வருகின்றார். அவர் கொன்ஸ்ரன்ரைன் அசோசியேட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி யாழில் ஹொட்டல் கட்டும் திட்டத்தை தனது முகநூலிலும் பதிவிட்டுள்ளார். இவரொரு கிறிஸ்தவர் என்பதால் கோயில்கட்ட முடியாததால் ஹொட்டல் கட்டும் தமிழ்த் தேசிய நிரோட்டத்தில் ஒரு வழியாக தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியை ஹொட்டலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற புதமொழியை ஹொட்டலியர்கள் ஏற்படுத்தி வருகின்றனர் என யாழ் சிவனடியாரான சிவநாதன் நளினமாகத் தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணயின் தலைவர் அ அமிர்தலிங்கம் நிச்சாம சாதியத்துக்கு எதிரான கிளர்ச்சி பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது நிச்சாமம் பீக்கிங்காக மாறுகிறது எனச் சினந்துகொண்டார். யாழில் சாதிய ஒடுக்குமுறை சங்கிகளினாலும் தமிழ் தேசியவாதிகளினாலும் கூர்மையடைந்திருக்கும் இந்நிலையில் யாழை தாய்லாந்தின் பட்டாயாவாக்கும் கைங்கரியத்தில் தமிழ் தேசிய ஹொட்டலியர்கள் ஆறுதிருமுருகனின் ஆசீர்வாதத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழில் இந்திரன் ஏற்பாடு செய்த களியாட்ட நிகழ்ச்சி முற்றிலும் தவறானது என்று தட்டிக்கழித்துவிடவும் முடியாது. அந்த நிகழ்ச்சியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்றுதான் பல லட்சம் பேர் விரும்பியுள்ளனர். ஆனால் அடிப்படையில் இந்நிகழ்ச்சியை இந்திரன் ஏற்பாடு செய்த நோக்கம், நிகழ்ச்சி ஏற்பாடு, அந்த மண்ணின் மரபுகளை கருத்திலெடுக்காதது, வியாபார உத்திக்காக குறிப்பாக நடிகைகளை போகப்பொருளாக இளைஞர்கள் முன் நிறுத்தியது என்பன மிகமோசமான மன்னிக்க முடியாத செயல். உலகின் முன் யாழ் சமூகத்தை, யாழ் இளைஞர்களை பாலியல் இச்சைக்கு அலைபவர்களாக சித்தரிக்க வைத்துள்ளார். ஒரு சில இளைஞர்கள் தவறான முறையில் நடந்துகொள்வார்கள் எனற கணிப்பில்லாமல் இவ்வாறானதொரு களியாட்ட நிகழ்வை நடத்தியது அவருடைய முட்டாள்தனம். இதில் யாழ் இளைஞர்கள் மீதோ யாழ் மக்களின் மிதோ எவ்வித தவறும் கிடையாது.

மேற்கு நாடுகளின் தவறணைகளில், பார்களில் சில பத்துப்பேர் கலந்துகொள்ளும் களியாட்ட நிகழ்வுகளுக்கே வாயில் காப்பாளர்கள் இருப்பதும் பொலிஸார் வரவழைக்கப்படுவதும் நாளாந்த நிகழ்வு. இந்திரன் இந்நிகழ்வை நடத்துவதற்கு முன், லண்டன் தவறணை உரிமையாளர் கொன்ஸ்ரன்ரைனிடம் ஆலோசணை பெறாதது, மிகப்பெரும் வரலாற்றுத் தவறு.

இதே போல் ரோ தமிழீழம் பெற்றுத்தரும் என்று ஆர்ப்பரிக்கும் வட்ஸ்அப் போராளி நிலா பிரபாகரன் தன்னை மதியுரைஞராக வைக்காமல், கிறிஸ்தவரான சிஐஏ ஏஜென்டான அன்ரன் பாலசிங்கத்தை மதியுரைஞராக வைத்ததால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் மே 18, 2009இல் தோல்வியடைந்ததாக உறுதியாக நம்புகிறார். முன்னையது இந்திரன் விட்ட வரலாற்றுத் தவறு. பின்னையது வே பிரபாகரன் விட்ட வரலாற்றுத் தவறு. இதுதான் காலக்கொடுமை என்பது.

யாழ் மக்களும் இளைஞர்களும் ‘மானாட மயிலாட’ பார்க்கத்தான் வேண்டும். ஆனால் அதனை நேர்மையுடன் பார்வையாளர்களை ரசிகர்களை மதித்து, வரக்கூடிய விளைவுகளை அறிந்து முற்கூட்டியே திட்டமிட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சரிவரச் செய்து நடத்த வேண்டும். லண்டனில் வோல்தம்ஸ்ரோவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமாருடனான ஒரு உரையாடல் ஒன்று 2009இல் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்ததின் பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை லண்டன் திருக்கோயில்கள் ஒன்றியக் கோயில்களில் ஒன்றின் தர்மகர்த்தாவும் பாஉ சிறிதரனின் நிதியாளருமானவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட போதையூட்டப்பட்ட தமிழ் தேசிய புலி ஆதரவாளர்களைக் கொண்டு கூட்டத்தைக் குழப்ப மூன்று மணிநேரம் போராடினார். ஆனால் கொன்ஸ்ரன்ரைன் மிகச்சாதுரியமாக இரு பட்டாலியன் ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸாரை இறக்கி கூட்டத்தை மிகவெற்றிகரமாக நடத்தினார். இந்திரன் கொன்ஸ்ரன்ரைனோடு ஒரு கொன்ஸ்பிரன்ஸ் ஹோல் போட்டிருந்தால் இன்றைய தலைப்புச் செய்திகளே வேறுமாதிரி அமைந்திருக்கும். உங்களுக்கு என்ன தெரியும் என்பதிலும் உங்களுக்கு யாரைத் தெரியும் என்பது மிக முக்கிய பாடம். இதுதான் இந்திரன் மூலம் ஈழத் தமிழர்கள் 2024 பெப்ரவரி 9இல் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம்.

தமிழ் தேசியத்தை போர்துக்கொண்டு ஹொட்டலியர்களோடும் கள்ளச்சாமிகளோடும் ஆறுதிருமுருகன் போன்றவர்கள் போடும் கூத்திலும் பார்க்க யாழ் இளைஞர்கள் தம்மன்னாவின் நடனத்தை பார்த்து ரசிக்கச் சென்றதில் எந்தத்தவறும் கிடையாது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளைச் செய்கிறோம் என்ற பெயரில் தாயகத்தை உங்கள் அந்தப்புரமாக்காமல், பாலியல் சுரண்டலில் ஈடுபடாமல் அங்குள்ள மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளை முன்னேற்றும் வைகயில் செயற்பட வேண்டும். அதுவொன்றே அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் மீறி தங்களை வளர்த்துக்கொள்ள உதவும்.

மேலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஆலயங்கள் இலங்கை மற்றும் நாடுகளினது உளவு அமைப்புகளின் முகவர்களோடும் இலங்கையில் உள்ள தவறணை ஒப்பந்தங்களை விநியோகிக்கும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளான தற்போதைய தேசியத் தலைவர் சிறிதரன் போன்றவர்களுக்கு வாரி இறைத்து அங்குள்ள இளைஞர்களை போதையில் மிதக்க விடாமல் அந்த இளைஞர்களின் கல்வி, பொருளாதார மற்றும் தனிமனித ஆளுமைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

இலங்கையில் அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதைக் கொண்டுவந்தவர் கல்வி அமைச்சராக இருந்த கன்னங்கரா. இந்த இலவசக் கல்வித்திட்டத்தின் பின் இடதுசாரிகளினது உழைப்பும் கணிசமானது. செல்வந்த நாடுகளான மேற்குலகில் கூட பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி என்ற நிலையில்லை. ஆனால் வறிய நாடான இலங்கையில் பல்கலைக்கழகப் படிப்பு முடியும்வரை இலவசக் கல்வியுள்ளது. ஆனால் அண்மைய காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உலகவங்கியின் அழுத்தம் காரணமாக அரசு தனது பொறுப்புக்களைக் குறைக்க ஆரம்பித்துள்ளது. காலப்போக்கில் கல்வியைத் தனியார் மயப்படுத்தும் திட்டம் நாசுக்காக நடந்தேறி வருகின்றது.

இலங்கையில் தனியார் கல்வி ஸ்தாபனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்துள்ளன. கல்விக்கடன் பெற்று படிக்கச் செல்லும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. தனியார் மருத்துவமனைகள் வந்து, பொதுமருத்துவமனைகள் வினைத்திறனற்றவையாகிக் கொண்டுள்ளன. அதனால் பணம் உள்ளவரே சிகிச்சை பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை பணமுள்ள மாணவர்களுக்கே கல்வி என்ற நிலைக்கு இட்டுச்செல்லும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

“இந்திரனால் ஒருநாள் களியாட்ட நிகழ்வையே திட்டமிட்டு குழப்பமின்றி நடத்த முடியவில்லை. இவர் எப்படி பல்கலைக்கழகம் நடத்துவார்?” என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது.

மேலும் லாப நோக்கத்திற்காக மட்டும் நடத்தப்படும் இந்த தனியார் பல்கலைகழகங்கள் இப்போது இருக்கின்ற கல்விக்கட்டமைப்புகளை வலுவிழக்கச் செய்து, சமூகத்தில் உள்ளவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளியை அதிகரிப்பதோடு சமூக முரண்பாடுகளை தீவிரப்படுத்தும். இது விழிம்புநிலை மக்கள் மீது நடத்தப்படும் அப்பட்டமான சுரண்டல். அம்மக்களை தொடர்ந்தும் ஏழ்மையில் தங்களுக்கு சேவகம் செய்யும் கூலிகளாக தம்மன்னாவைக் கண்டவுடன் ஓடிச் சென்று விசிலடிச்சான் குஞ்சுகளாக வைத்திருக்கும் நிகழ்ச்சிநிரல்.

மேலும் பெண்களை போகப்பொருட்களாக முன்னிறுத்துவதும் அவர்களை இந்த ஹொட்டலியர்களும் கோயில்காரர்களும் வட்ஸ்அப் குறுபிப்பில் போட்டு பந்தாடுவதும் மிகக்கீழ்த்தரமான செயல். அவர்கள் நடிகைகளாக இருந்தாலும் அது அவர்களுடைய உத்தியோகம். அவர்களை விபச்சாரிகளாகச் சித்தரித்து பாலியல் இச்சைகளுடன் எழுதி சிற்றின்பம் காண்கின்ற கீழ்த்தரமான செயல்களை தமிழ் தேசியம் முற்றாகக் கைவிடவேண்டும்.

ஆறுதிருமுருகன் தன்னைப் பெற்றெடுத்த தன்னால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று எழுதுவதைக்காட்டிலும் தன்னைப் போன்ற தன்னோடு கூடி உறவாடும் ஹொட்டலியர்களும் கோயில்காரர்களும் எப்படி நடந்துகொள்வது என்று எழுதினால் யாழ் சமூகத்திற்கு பயனுடையதாக இருக்கும். ஆனால் அதற்கு ஆறுதிருமுருகனுக்கு ஆறாவது அறிவு கொஞ்சமாவது இருக்கவேண்டும். அத்தோடு சற்று சமூக அக்கறையும் இருக்க வேண்டும்.

ஆற்றில் தொலைத்ததை குளத்தில் தேடக்கூடாது என்பது பழமொழி. ஒரு காலத்தில் ஒரேற்றர் சுப்பிரமணியத்தின் கீழ் இலங்கை முழவதற்குமே எடுத்துக்காட்டாக விளங்கிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபராக அதற்கான திறமையின்றி நியமிக்கப்பட்டு பதவி விலகிய ஆறுதிருமுருகன், யாழில் வழிதவறிய ஆண்கள் தொலைத்த, தொலைத்துக் கொண்டிருக்கும், தொலைக்கப் போகும் ஒழுக்கத்தை ஏன் பெண்களிடம்; தேடுகின்றார்? யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவையில் படுத்துக் கிடந்து என்னதான் செய்தார் ஆறுதிருமுருகன்?

புலம்பெயர்ந்த ஹொட்டலியர்கள், கோயில் கடைக்காரர்கள்;, வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மண்ணின் பண்புகளை மதித்து தாயகமக்களின் இயலாமையை பலவீனங்களை தமிழ் தேசியம் என்ற போர்வையில் முதலீடாக்காமல் அவர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை சுயமரியாதையோடும் கௌரவத்தோடும் வாழவிடுங்கள். காலம் காலமாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை அழிப்பதில் தமிழ் தேசியவாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே முன்னிற்கின்றனர். இவ்வாறான அனைத்து பிற்போக்குத் தனங்களையும் களையெடுத்து ஏனைய சமூகங்களோடு, மதப்பிரிவினரோடு, சக இனத்தவரோடு கைகோர்த்து அனைத்து மக்களிற்குமாக குரல்கொடுக்கின்ற முற்போக்குத் தேசியம் கட்டியமைக்கப்பட வேண்டும். அதுவொன்றே இலங்கையர் அனைவருக்குமான விடுதலைக்கு வித்திடும்.

இலங்கையின் பிரதான கட்சியாக எழுச்சியடையவுள்ள ஜே.வி.பி – எதிரிக்கட்சி எம்.பி எஸ்.எம். மரிக்கார் !

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக மாற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவின் இந்திய பயணம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினரின் இந்திய பயணம் வரவேற்கத்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தை தொடர்ந்து, இலங்கைக்கான முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான சிறந்த அறிவை அனுரகுமார பெற்றிருப்பார் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக மாற தேசிய மக்கள் சக்தி முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தேசிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாகும் பட்சத்தில் இலங்கையின் அரசாங்கமாக ஐக்கிய மக்கள் சக்தி திகழும் என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய விருப்பம் வெளியிட்டுள்ளமை தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளை அந்த கட்சியின் உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வெளி தாக்குதல் – 100க்கும் அதிகமானவர்கள் பலி !

ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வெளி தாக்குதல் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஃபாவை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தீவிரமான விமானதாக்குதல்கள் எறிகணை தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது.

நகரின் பல பகுதிகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எல்லை பகுதிகளில் ஹெலிக்கொப்டர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் கொல்லப்பட்டவர்கள் இடிபாடுகளிற்குள் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என செம்பிறை சமூகம் அச்சம் வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் குண்டுவீச்சினால்  அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளனர் அவர்களிற்கு சிகிச்சை வழங்குவதற்கான வளங்கள் இல்லை என அபுயூசெவ் அல் நிஜார் மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ரவா மருத்துவமனைக்குள் குழப்பமான நிலை காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது.

குழந்தையொன்றை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் போராடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

யப்னா முகாமில் இரண்டு மசூதிகள்  தாக்கப்பட்டதில் அங்கு தஞ்சமடைந்திருந்த பெருமளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குவைத் மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளிலும் எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கும் நாடு இலங்கை என கூறுவது நியாயமில்லை – அமைச்சர் காஞ்சன கவலை !

ஒன்பது வருடங்களாக ஒரே மாதிரியான மின்சாரக் கட்டணத்தை வசூலித்த ஒரே நாடு இலங்கை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில் தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கும் நாடு இலங்கை என கூறுவது நியாயமில்லை என்றார்.

மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறு பாராளுமன்றத்தில் கூச்சலிட்ட போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் எந்தவொரு யோசனையையும் முன்வைக்கவில்லை.

வழங்கப்படக்கூடிய குறைந்த கட்டண விளிம்புகள் தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கட்டண திருத்தம் தொடர்பான இறுதிப் பொறுப்பு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினுடையது என்றும், அவர்கள் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று பரிந்துரைகளை வழங்கியதன் பின்னர், மின்சார சபை மீண்டும் கட்டண முறை தொடர்பான முன்மொழிவுகளைத் தயாரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சுக்கு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

ஜே.வி.பியினருக்கு ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும் அழைப்பு விடுக்க வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன

ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மக்கள் விடுதலை முன்னணிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியுடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெல்லவாய பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. முறையான மறுசீரமைப்புக்களுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளோம் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

பொருளாதார மீட்சிக்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மாற்றியமைத்தால் அல்லது இடைநிறுத்தினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் என்பதை அரசியல் தரப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களை தவறான வழிநடத்தும் வகையில் போலி அரசியல் வாக்குறுதிகளை வழங்குவதை அரசியல்வாதிகள் அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் வாக்குறுதிகளினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் அரசியல் வாக்குறுதிகளை அனைவரும் தவிர்த்துக் கொள்வது அத்தியாவசியமானது. இந்தியா, சீனா உள்ளிட்ட முன்னிலை நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய எதிர்ப்பு கொள்கைகளை கடைப்பிடித்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டமை வரவேற்கத்தக்கது. மக்கள் விடுதலை முன்னணிக்கு ஜப்பான், தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும் என்றார்.

மக்கள் விடுதலை முன்னணியினரை இந்தியா அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தததது பாரிய பேசுபொருளானது. இலஙட்கை அரசியலில் சீனச்சார்புக்கு எதிரான நிலைப்பாட்டை ஜே.வி.பி எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என்ற நிலையிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கு பின்னணியில் இருப்பதாக பலரும் குறிப்பிட்டிருந்த நிலையில் ஜே.வி.பியினர் இதனை முழுமையாக மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் சடுதியாக அதிகரித்த போதை மாத்திரைகளைா் பயன்படுத்துவோர் எண்ணிக்கை  – இலங்கை பொலிஸ் !

போதைப் பொருட்களுக்கு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடு காரணமாக போதை மாத்திரைகளைா் பயன்படுத்துவோர் எண்ணிக்கை  அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இது தொடர்பான தகவல்கள் தெரிய வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் கடந்த நாட்களில் 3,63,438 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யுக்திய நடவடிக்கை காரணமாக பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் வருட மாணவர்களை தாக்கிய 7 சிரேஷ்ட மாணவர்களுக்கு விளக்கமறியல் !

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவி மற்றும் இரு மாணவர்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 7 சிரேஷ்ட மாணவர்களையும் நாளை  (13) வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதிவான்  ஹெஷானி ரொட்ராகோ இன்று (12) உத்தரவிட்டார்.

சமனலவெவ பொலிஸாரிடம் சரணடைந்ததையடுத்து  பொலிஸார் அவர்களைக் கைது செய்து பலாங்கொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

சப்ரகமுவ,  பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று நேற்று (09) இரவு மின்சாரத்தை துண்டித்த பின் இவர்களைத் தடிகளால் தாக்கியதகாக விசாரணைகளில் தெரிய வருகிறது.

காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பலாங்கொடை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை-தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. – மனோ கணேசன்

“யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை-தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

நேற்று முதல்நாள் யாழ்ப்பாண முற்றவெளியில்  நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்களை கடந்து போக வேண்டும்.

இதை விட இசை நிகழ்வு கலவர பூமியாக மாறி, பலர் கொலையுண்ட சம்பவம் கொழும்பில், 2004ம் வருட டிசம்பர் மாதம் நிகழ்ந்தது. பொலிவுட் நடிகர் ஷாருக் கான் கலை நிகழ்ச்சி நடத்த கொழும்பு வந்த போது, குண்டு வீசப்பட்டது. நடிகர், ஷாருக், அப்படியே திருப்பிக்கொண்டு விமான நிலையம் போனவர்தான். இன்று, அவரது உலக வரைபடத்தில் இலங்கை இல்லையாம்.

அந்த வெடிப்பில், எனது சில நண்பர்கள் உட்பட, பல ரசிகர்கள் இறந்தார்கள். பிரபல சோம தேரரின் நினைவு தினமன்று இந்த கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி இருந்ததால், அந்த நிகழ்வை சிங்கள-பெளத்த தீவிர அமைப்பினர் எதிர்த்து போராடியதால், ஒரு பதட்ட நிலைமை அன்று நிலவியது. அதையடுத்து, இத்தகைய கலை நிகழ்வுகள் தொடர்பில், பல விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.

சினிமா ஒரு தொழில். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. பணம் கொடுத்தால், சகாரா பாலைவனத்திலும் அவர்கள் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். சினிமா, பணம் கொழிக்கும் வியாபாரம் என்பதால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். கலைஞர்களை அழைத்தால் வருவார்கள். வர வேண்டாம் என்றால் வர மாட்டார்கள். இலங்கை வந்து செல்வது என்பது மிகப்பெரும் பணம் கொழிக்கும் முன்னணி வருவாய் இல்லை. பக்கத்தில் இருக்கும் நாடு என்பதால், சடுதியாக வந்து விட்டு, ஆடி, பாடி, நிகழ்வு நடத்தி போகலாம் என்று வருகிறார்கள்.

இனி எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி, இப்படியான நிகழ்வுகளுக்கு விதிமுறைகளை அறிவிக்கலாம். முழுக்க, முழுக்க ஏற்பாட்டாளர்களின் கைகளில் மட்டும் பொறுப்புகளை வழங்கி விட்டு, ஒதுங்க கூடாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட எம்பிக்களுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பும், அதிகாரமும் உண்டு.

இளம் தலைமுறையினர், இசையை கேட்க, நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம். இப்படியான ஒரு தரப்பு இளையோர் எங்கும் உள்ளார்கள். கொழும்பிலும், சென்னையிலும், லண்டனிலும், சிக்காகோவிலும் உள்ளார்கள். முற்றவெளியில், ஒலி அமைப்பு அரங்கத்தின் மீது இளையோர் ஏறி நின்றார்கள். பாரம் தாங்காமல் அந்த அரங்கு உடைந்து போயிருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கலாம்.

வாள் வெட்டு சம்பவங்களால் கடந்த ஆண்டு மட்டும் யாழில் 13 பேர் பலி !

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் வாள் வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு இலக்காகி, சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வாள், வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

இது தவிர அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பி இங்குள்ளவர்கள் மீது வாள்வெட்டு மேற்கொள்வது, வீட்டை எரிப்பது போன்ற வன்முறைச்சம்பவங்களும் பதிவாவதாக   யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.