இவ்வாரம் சர்வதேச அரசியல் சூழலில் மிக முக்கியமான வாரம். சர்வதேச அரசியலில் யார் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அதன் சாதக பாதகங்களும் அமையும். பல் துருவ அரசியல் வலுப்பெற்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் இராணுவ அரசியல் ஆளுமையின் பலம் முன்னைய நிலையிலிருந்து சற்று பலவீனப்பட்டுப் போயுள்ளதன் பின்னணியில் இவற்றைக் காணலாம்.
மேற்குலகின் முழு ஒத்துழைப்புடன் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு 53 நாடுகளும் மூன்று நிறுவனங்களும் இணைந்து தொடுத்துள்ளன. பெப்ரவரி 19இல் ஆரம்பமான இவ்வழக்கில் 76 ஆண்டுகள் பாலஸ்தீனிய மண் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டது மற்றும் பாலஸ்தீனிய மக்கள் மீதான ஆக்கிரமிப்பின் சட்டத்தன்மை பற்றியும் சர்வதேச நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவுக்கு, இஸ்ரேவேலின் ஊழல் குற்றவாளியும் இனப்படுகொலை பிரதமருமான பென்ஜமின் நெதன்யாகு கட்டுப்படப்போவதில்லை.
ஆனாலும் இந்த இனப்படுகொலைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் அமெரிக்க, பிரித்தானிய, மேற்குலக மற்றும் ஐரோப்பிய அரசுகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் துணை போனால் அவர்கள் போட்டிருக்கும் ஜனநாயகப் போர்வை முற்றாகப் பொசுங்கிவிடும். சர்வதேசத்தில் அவர்களும்; கொலையாளிகளாகவும் காட்டான்களாகவுமே பார்க்கப்படும் நிலையுள்ளது. அதனால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் தற்போது இஸ்ரேலை சற்று கண்டிக்க ஆரம்பித்துள்ளன. யுத்த நிறுத்தம் என்பது தீண்டத்தகாத சொல்லாக இருந்த நிலைமை மாறி யுத்த நிறுத்தம் வேண்டும் என்று கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் ஐநாவில் அல்ஜீரியாவால் கொண்டுவரப்பட்ட உடனடி யுத்த நிறுத்தத் தீர்மானத்தை மீண்டுமொரு தடவை இன்று பெப்ரவரி 20 அமெரிக்கா எதிர்த்து வாக்களித்துள்ளது. பிரித்தானியா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
பாலஸ்தீனத்தில் 30,000 உயிர்கள், பெரும்பாலும் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்ட போதும் ஒரு இனமே அழிக்கப்பட்டு வருகின்ற போதும் மனித உரிமைகள் பற்றி மூச்சுக்காட்டாமல் இருந்த அமெரிக்க நேட்டோ அணி ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி பெப்ரவரி 17இல் சிறையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனது. மேற்கு நாட்டு ஊடகங்கள் அனைத்தும் ரஸ்யாவை ‘பறையா ஸ்ரேட் – paraiah state’ என்று கூப்பாடு போட்டன. பல மேற்கு நாட்டு ஊடகங்கள் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் கொண்டுவரப்பட்ட வழக்குப் பற்றி மௌனமாக இருக்கின்றன. ஆனால் பிரேஸில் ஜனாதிபதி லூல டி சில்வா காஸாவில் நடைபெறுவது இனப்படுகொலை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
எதியோப்பியாவில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே பிரேஸில் ஜனாதிபதி லூல இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அன்று ஹிட்லர் யூதர்களுக்கு செய்த அநீதியை இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கின்றது என்றும் அன்று ஹிட்லர் செய்தது ஹொலக்கோஸ்ட். இன்று இஸ்ரேல் செய்வதும் ஹொலக்கோஸட் என்றும் ஒப்பிட்டு பெப்ரவரி 19இல் கருத்து வெளியிட்டார். ஒரு கண்ணியமிக்க அரசுத் தலைவர் இஸ்ரேலை இவ்வளவு பச்சையாகச் சாடியது இதுவே முதற்தடவை. இதே கருத்துப்பட துருக்கியின் ஆட்சித் தலைவர் ஏடவானும் கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிரேஸில் – இஸ்ரேல் ராஜதந்திர உறவுகள் அடிமட்டத்துக்குச் சென்றுள்ளது.
இந்த அமளிதுமளிகள் அரங்கேறுவதற்கு சில தினங்களுக்கு முன் சரியான திகதி இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை, ரஷ்யரான மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பவர் ஸ்பெயினில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவர் மீது வாகனத்தையும் ஏற்றியுள்ளனர். ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டரை ஓட்டிச்சென்ற ரஷ்யர் மக்ஸின் குஸ்ஸிநோவ் உக்ரைனில் ஓகஸ்ட் 9, 2023இல் தரையிறங்கி உக்ரைனிடம் இருந்து 500,000 டொலரை சன்மானமாகப் பெற்றார். இதனை மிகப்பெரிய தேசத்துரோகம் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்ததுடன் அதற்கான தண்டணை வழங்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். கொல்லப்பட்டவர் விளாடிமிர் புட்டினால் சுட்டிக்காட்டப்பட்ட ரஷ்ய ஹெலிகொப்டரைக் கடத்திச் சென்று கூட இருந்த இரு ரஷ்ய வீரர்களைப் படுகொலை செய்த மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு துரோகி உக்ரைனுக்கும் நேட்டோ அணிக்கும் கதாநாயகனாக இருந்து இப்போது தியாகி ஆகிவிட்டார் மக்ஸி;ன் குஸ்ஸிநோவ்.
அலெக்ஸி நவால்னி, மக்ஸின் குஸ்ஸிநோவ் ஆகியோரின் மரணங்கள் பற்றி அவர்களது மனித உரிமைகள் பற்றி நேட்டோ அணி புலம்பிக்கொண்டிருக்கையில் உலகின் மிகப் பிரபல்யமான ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் யை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவது பற்றிய வழக்கு பிரித்தானிய நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஊடகவியலாளர் யூலியன் அசான்ஜ்யை விடுவிக்குமாறு கோரிய போதும் அதை எதனையும் பொருட்படுத்தாமல் யூலியன் அசான்ஜை சிறையில் வைத்துள்ளது, தன்னை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் காவலாளியாகக் காட்டிக்கொள்ளும் பிரித்தானியா.
அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹசைனிடம் பேரழிவு ஆயதங்கள் உள்ளது என அமெரிக்காவும் – பிரித்தானியாவும் கூட்டாகச் சதி செய்து ஈராக்கைத் தாக்கி அந்நாட்டை அதன் எண்ணை வளத்தை அபகரிக்க சின்னனாபின்னமாக்கினர். ஈராக்கில் அமெரிக்க இராணுவம் அப்பாவி மக்கள் மீதும் மிக மோசமான தாக்குதல்களை நடத்தியது. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களைச் சித்திரவதை செய்தது. இவற்றை அம்பலப்படுத்தியதற்காக தலைசிறந்த ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் மீது அமெரிக்கா தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அலெக்ஸி நவால்னி போல் மரணத்தைத் தழுவுவார் என யூலியன் அசான்ஜ் உடைய மனைவி அச்சம் வெளியிட்டுள்ளார்.
அத்தோடு யூலியன் அசான்ஜ்யை படுகொலை செய்ய அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டை யூலியன் அசான்ஜ்க்கு நீண்டகாலம் தனது தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்த ஈக்குவடோரும் உறுதிப்படுத்தியுள்ளது. யூலியன் அசான்ஜ் ஒரு நாள் அலெக்ஸி நிவால்னி போன்றோ அல்லது மக்ஸின் குஸ்ஸிநோவ் போன்றே ஆகலாம் என்ற நிலையேற்பட்டுள்ளது.
மேற்குலகு விதந்துரைக்கும் மனித உரிமைகள், ஜனநாயகம் என்பதெல்லாம் அவரவர் நலன்சார்ந்ததே. “ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி” என்றும் கொள்ளலாம் இல்லையேல் “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் என்றும் கொள்ளலாம்”.
அன்று இனவாத பிரிட்டோரியா அரசோடு இணைந்து நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி என்று முத்திரை குத்திய பிரித்தானியா இறுதியில் அதே நெல்சன் மண்டேலாவுக்கு தன்னுடைய நாட்டிலேயே சிலை எழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டது. பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலைக்கு செய்யப்படுவதற்கு ஒத்துழைக்கும் பிரித்தானியா எதிர்காலத்தில் பாலஸ்தீன அரசை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிரித்தானியா உலகில் மிக மோசமான குரூரமான காலனித்துவத்தை ஈவிரக்கமின்றி விஸ்தரித்த நாடு. ஆனால் அரசியல் சூழல்கள் மாற்றமடையும்போது அதற்கேற்ப மாறி தன்னுடைய குறைந்தபட்ச நன்மதிப்பை முற்றிலும் இழக்காமல் காப்பாற்றிக் கொண்டுள்ளது.
தற்போது நான்கு மாதம் கழிந்தபின் முன்வைக்கின்ற யுத்தநிறுத்தக் கோரிக்கையும் தன்னுடைய ஜனநாயகப் போர்வை பொசுங்கி தான் அம்பலப்பட்டுப் போவேன் என்ற அச்சமே. அது போல் யுலியன் அசான்ஜ் நாடுகடத்தல் வழக்கில், அவர் நாடுகடத்தப்பட்டால் உலகில் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரத்துக்கு விழும் மிகப்பெரும் அடியாக அது அமையும். அது வரலாற்றில் பிரித்தானியாவின் நீதித்துறைக்கு ஏற்படும் மிகப்பெரும் கறையாக அமையும். ஏனைய நாடுகளும் பிரித்தானிய சட்டத்துக்கு இணங்க ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தும்.