22

22

காசாவில் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல் – 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் பலி !

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து காசா சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று(21) கூறியதாவது, காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்தனா்.

அதையடுத்து, அந்தப் பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் குண்டுவீச்சில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 29,313ஆக அதிகரித்துள்ளது.

தாக்குதலில் இதுவரை 69,333க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

பதவி விலகினார் மாணவர்கள் குப்பிவிளக்கில் படிக்க வேண்டும் என கூறிய இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த !

மாணவர்கள் குப்பிவிளக்கில் கல்விகற்க பழகவேண்டும் என இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார்.

 

மாணவர்கள் அவசியம் ஏற்பட்டால் குப்பிவிளக்கில் கல்விபயில முயலவேண்டும் இந்த விடயத்தில் முன்னோர்களை அவர்கள் பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

அதிகரிக்கும் மின்கட்டணங்கள் குறித்த கரிசனைகள் குறித்து; கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

மின்கட்டணங்களை செலுத்தாததால் மின்துண்டிக்கப்படுவதால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள மின்சாரசபையின் பேச்சாளர் இலவச மின்சாரம் என்ற கலாச்சாரத்திலிருந்து நுகர்வோர்கள் மாறுவதால் இந்த நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தை மின்கட்டண அதிகரிப்பு ஒருதசாப்தகாலத்திற்கு பின்னரே மேற்கொள்ளப்பட்டதாகதெரிவித்துள்ள மின்சாரசபையின் பேச்சாளர்

 

இலங்கை மின்சார சபை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிகள் குறித்தும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்திற்கு பெரும்தொகையை செலுத்தவேண்டிய நிலையில் மின்சார சபை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மின்சாரசபை பேச்சாளரின் கருத்தினை சவாலுக்கு உட்படுத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நவீன தொழில்நுட்பம் இலத்திரனியல் சாதனங்கள் காரணமாக தற்போதைய சிறுவர்களை முன்னைய தலைமுறையிடன் ஒப்பிடமுடியாது என தெரிவித்தார்.

 

இதேவேளை மின்கட்டண அதிகரிப்பை நியாயப்படுத்தியமின்சாரசபை பேச்சாளர் கல்விகற்பதற்கு ஏன் மின்சாரம் அவசியம் என கேள்வி எழுப்பியதுடன் குப்பிவிளக்குகள் போன்ற பாரம்பரிய முறைகள் போதுமானவை என தெரிவித்துள்ளார்.

 

நான் குப்பிவிளக்கிலேயே படித்தேன் என தெரிவித்த அவர் தொழில்நுட்ப வசதிகளை நம்பியிருப்பதற்கு பதில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிற்கு அவசியமான தேவைகளை மாத்திரம் வழங்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் மேற்குறித்த கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளார்

 

அமைச்சர் காஞ்சன விஜயசேகர இதனை உறுதி செய்துள்ளார்.

 

இலங்கை மின்சாரசபையின் பேச்சாளரின் கருத்துக்களில் தொழில்சார் தன்மையோ அல்லது இரக்கமோ கருணையோ இல்லாததை அமைச்சர் தொண்டமான் உட்பட பலர் சுட்டிக்காட்டியுள்ளனர் அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

 

மின்சாரசபை பேச்சாளரின் கருத்துக்கள் இலங்கை மின்சாரசபையினதோ அல்லது அரசாங்கத்தினதோ நிலைப்பாடுகளை பிரதிபலிக்கவில்லை அவரின் கருத்துக்காக நான் அமைச்சு மற்றும் மின்சாரசபையின் சார்பில் மன்னிப்கோருகின்றேன் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

 

பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் தனது கருத்துக்களிற்காக பொதுமன்னிப்பு கோரியுள்ளார் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என்கிறார் பேராசிரியர் ராஜ் சோமதேவ!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

 

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட எச்சங்களில் இருந்து பிறிதாக எடுக்கப்பட்ட அனைத்து பிற பொருட்கள் தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கை இன்று மன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் த.பிரதீபனால் மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

பகுப்பாய்வின் அடிப்படையில் இது 1994 ஆம் ஆண்டுக்கு முற்படாததும் 1996 ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியினை கொண்டிருக்கலாம் என பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகின்றது.

 

அத்தோடு மீண்டும் எஞ்சிய எலும்புக்கூட்டு தொகுதியினை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அனேகமாக மார்ச் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

 

இருப்பினும் அதற்கான நிதி, அமைச்சினால் வழங்கப்படும் பட்சத்தில் அகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே மீண்டும் மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு குறித்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரம் வைத்தியர்களின் அறிக்கையின் மனித எச்சங்களின் வயது, பால், இறப்பிற்கான காரணம் போன்றவை இன்னும் வராமல் நிலுவையில் இருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் போட்டித் தன்மை நிறைந்த உலக தொழில் சந்தையில் வெற்றி பெறுவதற்குத் உகந்த சூழல் உருவாக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நவீன உலகிற்கு ஏற்றவாறு தொழில் கல்வியை மறுசீரமைத்து, இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் போட்டித் தன்மை நிறைந்த உலக தொழில் சந்தையில் வெற்றி பெறுவதற்குத் உகந்த சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

 

அதற்கமைய நாட்டின் அனைத்து தொழில் பயிற்சி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஒரே பல்கலைக்கழக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதோடு, புதிய விடயப்பரப்புக்களை உள்ளடக்கிய பாடநெறிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரத்மலானை லலித் அத்துலத்முதலி தொழில்பயிற்சி நிலையத்திற்கு இன்று வியாழக்கிழமை (22) காலை மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே இதனைத் தெரிவித்தார்.

 

லலித் அத்துலத்முதலியின் நினைவாக இந்நாட்டு பிள்ளைகளின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் தற்போது தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கீழ் இயங்கி வருவதுடன் மோட்டார் இயந்திரவியல், தகவல் தொழில்நுட்பம், முப்பரிமாண வடிவமைப்பு 3D,பாலர் பாடசாலை ஆசிரியர் பாடநெறி, நவீன தொழில்நுட்பப் பாடநெறி, அழகுக்கலை நிபுணர் பாடநெறி, மொழிப் பாடநெறிகள் உட்பட நவீன உலகிற்கு தேவையான பல்வேறு பாடநெறிகள் இங்கு நடத்தப்படுகின்றன.

 

பாடநெறிகள் நடத்தப்படும் வகுப்பறைகளுக்குச் சென்று மாணவர்களின் நலன்புரி மற்றும் பிற நலன் தொடர்பிலான விடயங்கள் குறித்து ஜனாதிபதி மாணவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதோடு, மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

 

நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக இலங்கையின் இளைஞர் யுவதிகள் முன்னோக்கிச் செல்ல காணப்படும் வாய்ப்புகள் குறித்து இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, தற்போது டிஜிட்டல் மாற்றத்திற்கான முன்னெடுப்புக்கள் துரிதமாக இடம்பெற்று வருவதோடு, இதன்போது செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், நாளாந்தம் மாற்றமடையும் தொழில்நுட்பத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பாகும் எனவும் தெரிவித்தார்.

 

முன்பள்ளி கற்கைநெறியை மேற்கொண்டு சொந்தமாக முன்பள்ளியொன்றை நடாத்த எதிர்பார்ப்பதாகவும் அதற்கு ஒழுங்கான முறைமையொன்றை உருவாக்கித் தருமாறும் முன்பள்ளி கற்கைநெறியை கற்கும் மாணவியொருவர் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளித்த ஜனாதிபதி, முன்பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் ஆரம்பித்துள்ள திட்டத்துடன் இணைந்ததாக இந்தக் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

 

அதனையடுத்து தொழில் பயிற்சி நிலையத்தின் விசேட விருந்தினர்களுக்கான பதிவேட்டில் குறிப்பு இட்ட ஜனாதிபதி, மாணவர்களுடன் குழுப் புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

 

பின்னர் மாணவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி மாணவர்களின் செல்பி புகைப்படங்களிலும் இணைந்துகொண்டார்.

 

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மஹேஷன், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவரும் பணிப்பாளருமான பசிந்து குணவர்தன,இளைஞர் மற்றும் நிலைபெறு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் பணிப்பாளர் ரந்துல அபேவீர, லலித் அத்துலத்முதலி தொழில் பயிற்சி நிலையத்தில் ஆசிரியர்கள் குழாம், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது இணைந்து கொண்டிருந்தனர்.