26

26

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களில் வழிபட மக்களுக்கு அனுமதி !

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு உட்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள ஏழு இந்து ஆலயங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

 

இதற்கமைய கடுவன் முத்துமாரி அம்மன் கோவில், வசாவிளான் மணம்பிறை கோவில், விசாவிளான் சிவன் கோவில், வசாவிளான் நாக கோவில், பலாலி ராஜ ராஜேஸ்வரி கோவில், பலாலி நாக தம்பிலான் கோவில் மற்றும் பலாலி சக்திவேலி முருகன் கோவில் ஆகியவற்றில் வாராந்த பூஜை மற்றும் பிற சடங்குகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். .

 

கோவில் அறங்காவலர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பல கோரிக்கைகளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

 

முன்னர் இந்த கோவில் வளாகத்தில் மாதாந்த மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கை அரச அலுவலகங்களில் காணப்படும் தொலைபேசி எண்களில் 49 சதவீதம் செயலற்ற நிலையில்!

இலங்கையில் உள்ள அரச அலுவலகங்களில் காணப்படும் தொலைபேசி எண்களில் 49 சதவீதம் அதாவது பாதி எண்கள் செயல்படாத நிலையில் உள்ளாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரதேச செயலகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களைக் கருத்தில் கொண்டு இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த எண்கள் பயன்பாட்டில் உள்ளதா என்றும், அழைப்புகளுக்கு பதில் வழங்கப்படுகின்றதா மற்றும் கேள்விகளுக்கு பதில்கள் வழங்கப்படுகின்றவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 589 தொலைபேசி எண்களில் 286, அதாவது 49 சதவீதம் செயலற்ற எண்கள் என்று தெரியவந்துள்ளது.

அத்துடன், 22சதவீத தொலைபேசிகள் செயலில் உள்ளபோதும், பதிலளிக்கவில்லை. ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, அழைப்புகளுக்கு பதிலளிக்கும் சதவீதம் 29% ஆகும்.

98 உள்ளூராட்சி மன்றங்கள், 23 மாநகர சபைகள் மற்றும் 36 நகர சபைகளின் நிலையான இலக்கங்கள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல, அரச சேவையில் தற்போதுள்ள வினைத்திறன் இன்மை குறித்து இந்த ஆய்வு முடிவுகள் மூலம் புரிந்து கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகரின் முறையற்ற செயற்பாடுகளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடுகள் அரசியலமைப்பையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் மலினப்படுத்தும் வகையில் உள்ளன. நிறைவேற்று அதிகாரத்தின் பிரதிநிதியாகச் செயற்படும் சபாநாயகரின் செயற்பாடுகளுக்கு இடமளித்தால் அது எதிர்காலத்துக்குத் தவறானதொரு எடுத்துக்காட்டாக அமையும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

 

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவதற்கு முதல்கட்டமாக கைச்சாத்திட்டுள்ளோம். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.

 

93வருடகால பாராளுமன்ற ஜனநாயகத்தின் அம்சங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சபாநாயகர் செயற்படுகிறார்.இவரது முறையற்ற செயற்பாடுகளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்பதால் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர தீர்மானித்தோம்.

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிரதிநிதியாகச் சபாநாயகர் பாராளுமன்றத்தில் செயற்படுகிறார்.இவர் தனது தனிப்பட்ட அரசியல் செயற்பாட்டை பாராளுமன்றத்துக்குள் செயற்படுத்திக் கொள்ள முயற்சிப்பதால் நாட்டு மக்களின் அரசியல் உரிமை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் அரசியலமைப்பும் மலினப்படுத்தப்படுகிறது.

 

அண்மையில் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த சட்டத்தின் 57 ஏற்பாடுகளில் 34 ஏற்பாடுகளில் குறைப்பாடுகள் காணப்படுகின்றன அவற்றைத் திருத்தம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.

 

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. தன்னிச்சையான முறையில் அரசாங்கத்தின் அவசரத்துக்கு அமைய செயற்பட்டார்.

 

சட்டமூலத்தை சான்றுரைப்படுத்துவதை மீள்பரிசீலனை செய்யுமாறு தேசிய மட்டத்தில் உள்ள சிவில் அமைப்புக்களும், சர்வதேச அமைப்புக்களும் வலியுறுத்தி போது அதனை கவனத்திற் கொள்ளாமல் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார். இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த யோசனைகளில் ஐந்து பிரதான திருத்தங்கள் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்று மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடுகளுக்கு இடமளித்துக் கொண்டிருந்தால் அது எதிர்காலத்துக்கு தவறானதொரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதால் தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானித்தோம் என்றார்.

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது !

ஐஸ் போதைப்பொருளுடன் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் 30 வயதுடைய மாவனெல்லை பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவராவார். இவர் தற்போது மிஹிந்தலை ருவங்கம பிரதேசத்தில் வசித்து வருகிறார்

 

அநுராதபுரம் கண்டி வீதியைச் சேர்ந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 23 வயதுடைய ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே கான்ஸ்டபிளைக் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உலகில் ஆப்பிள் அதிக விலைக்கு விற்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம் !

ஆப்பிள் என்றாலே விலை உயர்வான பழம் என்றே சொல்வார்கள். அந்தவகையில், உலகில் ஆப்பிள் பழம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்திலுள்ளது.

 

இதனை உலகின் வாழ்க்கைச் செலவு தொடர்பான மிகப்பெரிய தரவுத்தளமான நம்பியோவை (Numbeo) மேற்கோள்காட்டி பார்வையாளர் குறியீடு (The Spectator Index) எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.