29

29

என்னுடைய அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதற்காக 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை பெற்றுத்தாருங்கள் – கெஹலிய ரம்புக்வெல்ல மனுத்தாக்கல்!

நியாயமான காரணமின்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை தனக்குப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

கெஹலிய ரம்புக்வெல்ல சட்டத்தரணிகள் ஊடாக இன்று (29) உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 

இந்நிலையில், சட்டத்தரணி சனத் விஜேவர்தன தாக்கல் செய்த மனுவில், பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மாளிகாகந்தை நீதிமன்றில் முன்னிலைப்பட்டார்.

இதையடுத்து சிறைச்சாலையின் வாகனமொன்றில் இன்று(29) பிற்பகல் அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

 

தரமற்ற இம்யுனோகுளோபியுலின் தடுப்புசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த இரண்டாம் திகதி கைது செய்யப்பட்ட கெஹலியவை மூன்றாம் திகதி மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளது.

அதன் போது பெப்ரவரி 14 ஆம் திகதி வரை கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பெப்ரவரி 14 ஆம் திகதி மீண்டும் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டு இன்றைய தினம் வரை விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

 

இந்நிலையிலேயே, அவர் இன்று பிற்பகல் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழரசு கட்சி தலைவர் தெரிவை ரத்து செய்ய உடன்படுவதாக அதிபர் சட்டத்தரணி கே.வி தவராசா அறிவிப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்துசெய்ய உடன்பட்டுள்ளதாக அதிபர் சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார்.

 

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவானது இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், ”கடந்தமாதம் 21 ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பொதுச்சபை கூட்ட தெரிவுகளை இரத்துசெய்யக்கோரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

இதன்படி மனுதாரர்களின் கோரிக்கைக்கு அமைவாகவும், கட்சியின் நலன்கருதியும் குறித்த கோரிக்கைகளுக்கு நாங்கள் உடன்பட்டோம். இதற்கு காரணம் இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினை மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினை.

இந்த வழக்கு நீடிக்குமாக இருந்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும். இதன்படி வழக்கானது எதிர்வரும் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றுக்கு முன்னிலையாகியுள்ள நிலையில் தமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

 

 

எனினும் எம். எ சுமந்திரன் நீதிமன்றுக்கு முன்னிலையாகாத நிலையில் அவரது நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசித்து முடிவை எடுப்போம்.” என்றார்.

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை இரத்துச் செய்யக் கோரிய வழக்கு – நீதிமன்றம் கட்டாணையை நீடித்து கட்டளை !

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை இரத்துச் செய்யக் கோரியும், மாநாட்டை தடை செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய தினம் (29) மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது கட்டாணையை நீடித்து கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,

 

ஜனநாயகத்தின் சிறந்த பண்பின் ஓர் அங்கமாக இருக்கின்ற கட்சியின் யாப்பு இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. கட்சியின் யாப்பு என்பது கட்சியின் கட்டமைப்புக்களினாலும், கட்சியின் நிர்வாகிகளினாலும், கட்சியின் அனைத்து அங்கத்தவர்களினாலும் பின்பற்றப்பட்டேயாக வேண்டும் என்ற கருத்தில் மாற்று கருத்து இல்லை.

 

நீதிமன்றுக்கு நீதி வேண்டி வருவதற்கான அனைத்து உரிமைகளும் உங்களுக்கு இருக்கின்றது. ஆனால் இங்கு வருவதற்கு முன்பு கட்சி மட்டத்தில் தீர்க்க முடிந்த பிரச்சினைகளை அங்கேயே தீர்த்து விடுவதுதான் சிறந்த ஒரு ஜனநாயக பண்பு எனவும் மக்களின் நலன்கருதி இரு தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருமாறும் யாப்பில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை இந் நீதிமன்றில் இருதரப்பும் இணங்கும் பட்சத்தில் தமது வழிமொழிகளை சமர்ப்பித்து சட்ட ரீதியாக இணக்கப்பாட்டை எட்ட முடியும் எனவும் குறித்த கட்டாணையானது தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாகவும் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு யாப்பு விதிகளுக்கு முரணானது எனவும், இடம்பெறவுள்ள மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரியும் கடந்த 15 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட நீதிமன்றி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன்போது மாநாட்டை நடாத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றானது கட்டானையொன்றினை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது குருந்தூர்மலையில் பௌத்த விகாரை நிர்மாணித்தமை தொடர்பான வழக்கு !

குருந்தூர்மலையில் பௌத்த விகாரை நிர்மாணித்தமை தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகினர்.

 

நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்கக் கூடாது.குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த 2022 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இதன்போது இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அது தொடர்பான வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன அரசமைப்பை மீறியுள்ளார் – ஜே.வி.பி குற்றச்சாட்டு!

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை நியமித்ததன் மூலம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன அரசமைப்பை மீறியுள்ளார் என தேசிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.

 

தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளதுடன் இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் செல்வதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

அரசமைப்பு பேரவையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்ட பின்னரும் சபாநாயகர் தேசபந்து தென்னக்கோனின் நியமனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ள டில்வின் சில்வா இது அரசமைப்பிற்கு முரணாண அதனை மீறும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.வாக்களிப்பில் சமநிலை காணப்பட்டால்தான் சபாநாயகரால் வாக்களிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

 

பொலிஸ்மா அதிபர் நியமனத்தினால் பிரச்சினை உருவாகியுள்ளது உயர்நீதிமன்றம் இதற்கு தீர்வை காணும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சாந்தனை இலங்கைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியது ஏன்..? – தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி !

சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தாா்.

 

அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த 24 ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (28) காலை மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

 

அவரின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாந்தனை இலங்கைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியது ஏன் என தமிழக அரசிடம் வினவியுள்ளது.

 

சாந்தனை கடந்த 27 ஆம் திகதி எயார் அம்பியூலன்ஸ் மூலம் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் அவரது உடல் மருத்துவ ரீதியாக ஒத்துழைக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சாந்தன் திருச்சி முகாமில் உயிருடன் இருந்த போதே, இலங்கையில் உள்ள தனது தாய் நோய்வாய்ப்பட்டுள்ளதால், அவரை கவனிக்க இலங்கை செல்ல வேண்டும். எனவே இலங்கைக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 

சில மாதங்களுக்கு முன் நடந்த இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. கடைசியாக நடந்த விசாரணையின்போது, மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது. விரைவில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று நீதிபதிகளிடம் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் தான் நேற்று சாந்தன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி !

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு சபாநாயகர் அனுமதிப் பத்திரம் வழங்கியதை எதிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

நீதியரசர்கள் பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது.

 

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றளித்ததைத் தொடர்ந்து சட்டமியற்றும் விவகாரங்களில் தலையிட உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சட்டமா அதிபர் ஆட்சேபனைகளை எழுப்பினார்.

 

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு சபாநாயகரின் சான்றிதழ் சட்டத்தில் செல்லாது என அறிவிக்குமாறு சுமந்திரன் தனது மனுவில் கோரியுள்ளார்.

 

பாராளுமன்றக் குழுவின் ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத் திருத்தங்கள் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்கவில்லையென சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்திற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கத் தவறியுள்ளதால் , மனுதாரர் மற்றும் குடிமக்களுக்கு அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14 வது உறுப்புரைகளில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள், சட்டமா அதிபரால் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் போராட்டம்!

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் யாழ்ப்பாணம் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா்.

 

இதனால் தனியாா் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளன.

 

இந்நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

 

அதனால் இ.போ.ச பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை சந்தித்தனர்.