March

March

கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு பணம் !

கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக சட்டமா அதிபர் இன்று (28) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

 

குறித்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி சுற்றாடல் நீதி மய்யத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திருமதி அவந்தி பெரேராவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த மனு இன்று எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

பொருட்களை வாங்கும் போது நுகர்வோருக்கு கடைகளில் வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் என சுற்றாடல் நீதி மையம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

 

அந்த பைகளுக்கு கட்டணம் வசூலித்தால், அவற்றின் பயன்பாடு தடைபடும் என்றும், அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்றும் மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வடக்கில் வீடற்றவர்களுக்கு 50000 வீடுகள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

 

சூரிய கலன்களின் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறித்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

 

இதனடிப்படையில் பயனாளர்களுக்கு சுமார் 45 இலட்சம் பெறுமதியான 750 சதுர அடி விஸ்தீரணமுள்ள கல் வீடுகள் பயனாளர்களுக்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வான்வழியாக அமெரிக்கா காஸாவிற்குள் உணவு விநியோகம் – இதுவரை 18 பேர் பலி!

காஸாவில் விமானங்களிலிருந்து பரசூட்மூலம் உதவிப்பொருட்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரியுள்ள நிலையில் அமெரிக்கா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

காஸாவில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக விமானங்களிலிருந்து

பரசூட் மூலம் உதவிப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

 

இந்த உணவுப் பொதிகளை பெறுவதற்கான முயற்சிகளில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பரசூட் மூலம் பொதிகளை இறக்குவதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பதிலாக, தரை வழியாக அதிகளவு விநியோகங்களுக்கு இஸ்ரேல் அனுமதிக்க வேண்டுமெனவும் ஹமாஸ் கோரியுள்ளது.

 

எனினும், வான் வழியான விநியோகம் என்பது காஸாவிலுள்ள பலஸ்தீன மக்களுக்கு உதவிகளை விநியோகிப்பதற்காக அமெரிக்கா கையாளும் வழிகளில் ஒன்று எனவும், அதை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதிக்கு பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 அயிரத்து 490 ஆக அதிகரித்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – ஏப்ரல் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு !

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் !

சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு புதிய முறைமையொன்றை இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

இதன் மூலம் பெறப்படும் முறைப்பாடுகள் நேரடியாக இங்கிலாந்தில் உள்ள “Internet Watch Foundation” க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

 

மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

 

கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

அதிகரிக்கும் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கும் விபசார விடுதிகளின் எண்ணிக்கை – வேகமெடுக்கும் HIV எய்ட்ஸ் !

நீர்கொழும்பு பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதிகளில் பணிபுரிந்து வந்த 2 பெண்களுக்கு HIV எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தலதுவ இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

 

இந்தச் சோதனையின் போது 53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டு அதில் பணிபுரிந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

”கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவுகளில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டன . சட்டவிரோதமான முறையில் விபச்சார விடுதிகள் நடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. குற்றச்சாட்டின் கீழ் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்”.

 

“இவ்வாறு நடத்தப்பட்ட 53 க்கும் மேற்பட்ட மசாஜ் நிலையங்களை முற்றாக மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 8 ஆண்களும் 137 பெண்களும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பெண்களில் இருவருக்கு HIV எய்ட்ஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எச்.ஐ.வி., சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சந்தேகத்திற்கிடமான இடங்கள் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்.” என குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அரசமுறை கடன் மறுசீரமைப்பு தோல்வியடைந்தால் எந்த அரசாங்கத்தாலும் நாட்டை நிர்வகிக்க முடியாது – அமைச்சர் பந்துல குணவர்தன

வெளிநாட்டு அரசமுறை கடன் மறுசீரமைப்பு தோல்வியடைந்தால் எந்த அரசாங்கத்தாலும் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். கடன் மறுசீரமைப்பு வெற்றிப்பெற்றால் மாத்திரமே இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி நிர்மாண பணிகளை முன்னெடுக்க முடியும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 

கொழும்பு – கொஹூவல மேம்பாலம் அபிவிருத்தி நிர்மாணப் பணிகளை மேற்பார்வை செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

 

ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் வெளிநாடுகளில் கடன் பெற்றே அரச நிர்வாகத்தை முன்னெடுத்தன.

பெற்றுக்கொண்ட கடன்களை மீள் செலுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டவுடன் அபிவிருத்தி பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய நிறுவனங்கள் கடன் வழங்கலை இடைநிறுத்தின.இதனால் அபிவிருத்தி பணிகளும் ஸ்தம்பிதமடைந்தன.

 

அரசமுறை கடன்களை மறுசீரமைப்பதற்கு தீர்மானமிக்க பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை மீண்டும் ஆரம்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு,தேசிய ஒப்பந்தகாரர்கள் அவர்களின் நிதியை கொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்ததும் தேசிய ஒப்பந்தகாரர்களுக்குரிய நிதி முழுமையாக செலுத்தப்படும்.

 

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தோல்வியடைந்தால் எந்த அரசாங்கத்தாலும் நாட்டை நிர்வகிக்க முடியாது.இதுவே உண்மை என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.கடன் மறுசீரமைப்பு வெற்றிப்பெற்றால் மாத்திரமே அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும்.

 

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எனது தந்தையின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. – ஹெகலிய ரம்புக்வெலவின் மகள் !

கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ”தனது தந்தையின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவரது மகள் சமித்ரி ரம்புக்வெல்ல மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்து சமித்ரி ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் இந்த நாட்டின் பிரஜை என்ற ரீதியில் நான் அறிந்த சட்டத்தின் பிரகாரம். நபர் ஒருவர் கைது செய்யப்படுவரானால் விசாரணையின் பின்னரே கைது செய்யப்பட வேண்டும்.

 

ஆனால் எனது தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன்.

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எனது தந்தையின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. எனவே உடனடியாக விசாரணை நடத்தி நீதி வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளேன்” இவ்வாறு சமித்ரி ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மணல்கொள்ளையர்கள், கப்பம் பெறுவோர் என பல கள்வர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் உள்ளனர் – ரஞ்சன் ராமநாயக்க

நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரில் பல கள்வர்கள் உள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெற்றால் நெருக்கடி ஏற்படும். எனவே பெரும்பாலும் விரைவில் பொதுத்தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதாவது இந்த நாட்டை வீணடித்த 225 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

 

ஏனென்றால் 225 பேரில் பல கள்வர்கள் உள்ளனர். இந்த நாட்டில் ஊழல்வாதிகளெ இவ்வாறான கள்வர்களை பாதுகாக்கின்றனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மணல்கொள்ளையர்கள், கப்பம் பெறுவோர் தரமற்ற மருந்து இறக்குமதி செய்பவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.

நாட்டின் வரலாற்றில் அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் உள்ளார்.

இந்த நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்துவதாகவே இதனை கருத வேண்டும்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை – மாணவர்கள் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

ஆளும் கட்சியினால் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாக்கும் ஒரேயொரு ஆசியா நாடு இலங்கை மட்டுமே என ஜனாதிபதி தெரிவித்தார்.

 

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற இலங்கையின் முதலாவது தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

 

நாட்டின் 09 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 100 வலயங்களில் நிறுவப்பட்ட அனைத்து வலய மாணவர் பாராளுமன்றங்களிலிருந்தும் அதிக வாக்குகளைப் பெற்ற தலா இரு உறுப்பினர்கள் தேசிய மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

 

கல்வி அமைச்சின் இணைப்பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் கிளையின் ஒத்துழைப்புடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் நடத்தப்பட்ட தேர்தலில் தேசிய மாணவர் பாராளுமன்ற சபாநாயகர், பிரதமர், பிரதி சபாநாயகர் மற்றும் 10 அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.

 

தேசிய மாணவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி,

 

ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை என்பதால் எமது நாடு விசேடமான ஒரு நாடாகும். 1833ஆம் ஆண்டில் எமது நாட்டின் சட்டமன்றம் நிறுவப்பட்டது. அன்று வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆளுநரால் இலங்கையர்கள் சிலர் இதற்கு நியமிக்கப்பட்டனர்.

 

1912 இல் இலங்கையர் ஒருவரை உறுப்பினராகத் தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. சொத்து மற்றும் கல்வி அடிப்படையில் சுமார் ஐயாயிரம் பேருக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்தது.

 

பின்னர் 1931 இல் இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்தது. அதன்படி, 21 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்ற ஆசியாவின் முதல் நாடாக நாம் திகழ்ந்தோம். அன்று முதல் எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் கட்சியினால் தடை விதிக்கப்படாத ஒரே ஆசிய நாடாகஇலங்கை காணப்படுகிறது. 1931 க்குப் பிறகு, ஏனைய அனைத்து நாடுகளிலும் எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தை இழந்துள்ளன. எம்மை எவ்வளவுதான் விமர்சித்தாலும், குற்றம் சாட்டினாலும், பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை பாதுகாத்து வருகிறோம்.

பின்னர் டொனமோர் முறைமையின் கீழ் எங்களுக்கு ஏழு அமைச்சுப் பதவிகள் கிடைத்தன. மூன்று அமைச்சுப் பொறுப்புகளை வெள்ளையர்கள் வகித்தனர். பின்னர் அதற்கும் இலங்கையர்கள் நியமிக்கப்பட்டனர். இச்சபையினால் ஏழு குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றிலிருந்து ஏழு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அமைச்சர்களாக பணியாற்றினர். ஏனென்றால் அப்போது அரசியல் கட்சிகள் இருக்கவில்லை. உலக மகா யுத்தத்தின் போது யுத்த நடவடிக்கைகள் தவிர அனைத்து நடவடிக்கைகளும் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டன. ஏனெனில் அப்போது இலங்கை பிரித்தானியா, அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளுடன் இணைந்து செயற்பட்டது.

 

அதன் பிறகு சோல்பரி அரசியலமைப்பின் படி சுதந்திரம் கிடைத்தது. நீங்கள் இருக்கும் கட்டிடம் அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்திற்காக கட்டப்பட்டது. பின்னர் இந்த சபையில் டொனமோர் ஆணைக்குழு நிறுவப்பட்டது. பின்னர் இது மக்கள் பிரதிநிதிகள் சபை மீண்டும் செயல்பட்டது. செனட் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபை ஆகியவையும் இந்த இடத்தில் செயற்பட்டன.

 

1972 இல் இலங்கை குடியரசாக மாறியபோது, ​​இது தேசிய அரசாங்க சபையாகியது. 1977ல் தேசிய அரசாங்க சபைக்கு நான் தெரிவானேன். தேசிய அரசாங்க சபையை பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு பேர் இன்று பாராளுமன்றத்தில் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் 1970 இலும் 1977ஆம் ஆண்டில் ஆர். சம்பந்தனும் நானும் இங்கு வந்தோம். 1977 இல், நாடு நிறைவேற்று ஜனாதிபதி முறைக்குள் பிரவேசித்தது. 1982 இல் நாங்கள் புதிய பாராளுமன்றத்திற்குச் சென்ற பிறகு, இந்த கட்டிடம் ஜனாதிபதி அலுவலகமாக மாறியது.

 

இந்தப் பின்னணியில் உலகப் போர்கள், உள்நாட்டுப் போர் நடந்தாலும், ஜனநாயகத்தையும், அரசாங்கத்தின் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டையும் நாம் ஒருபோதும் இல்லாமலாக்கவில்லை. இந்த முறையால், அனைவரின் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. இந்த பாராளுமன்ற அமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும்.

முழு ஆசியாவுக்கும் மற்றும் ஆப்பிரிக்காவில் இரண்டு நாடுகள் மாத்திரமே இதைச் செய்துள்ளன. ஒன்று இலங்கை மற்றொன்று மொரிஷியஸ். அப்படியானால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதைப் பாதுகாக்க வேண்டும். பிரிட்டன், அயர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்வீடன் மட்டுமே ஐரோப்பாவில் ஜனநாயகத்தைப் பேணின. ஜனநாயகத்தைப் பேணுவது பற்றி நமக்கு அறிவுரை கூறும் ஏனைய அனைத்து நாடுகளும் அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சியின் கீழ் வந்தன.

இந்த பொறிமுறையை எவ்வாறு பேணுவது என்பதை கற்றுக்கொள்ள இங்கு இருக்கும் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். மேலும் இங்கு அரசியலில் ஆர்வம் உள்ளவர்களும் இருக்கலாம்.அதற்கு தேசிய மாணவர் பாராளுமன்றம் அடிப்படையாக அமையும் என நம்புகிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.