01

01

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம் !

 

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதோடு அவ்வழக்கினை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மன்றுக்கு நியாயாதிக்கம் கிடையாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

2020 வருடம் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் அங்கத்தவரான திலீபன் எனப்படும் ராசையா பார்த்தீபன் என்பவரின் 33ஆம் நினைவு தினத்தை நினைவுகூருமுகமாக கோண்டாவிலைச் சேர்ந்த கோகுல வீதியில் சிவாஜிலிங்கம் நினைவு தீபத்தை ஏற்றி நினைவுகூர்ந்தார்.

 

அதனூடாக அவர், இனங்களுக்கிடையே முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்ததாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் 27ஆம் பிரிவின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட 29.08.2011ஆம் திகதி 1721/2 என்ற வர்த்தமானியின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் 3(ஊ) பிரிவின் கீழ் குற்றம் ஒன்றை புரிந்ததன் விளைவாக, அவ்வொழுங்கு விதிகளின் நான்காம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமொன்றை செய்ததாக ம.க.சிவாஜிலிங்கத்தின் மீது மேல் மாகாணத்தின் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப்பத்திரிகை சட்ட விரோதமானது எனவும் இவ்வழக்கினை விசாரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும் பூர்வாங்க ஆட்சேபனை குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் நீதிமன்றத்தின் முன்னிலையாகிய சட்டத்தரணிகளால் வாதம் முன்னெடுக்கப்பட்டது.

 

இலங்கை அரசியல் யாப்பின் 154 P (3) பிரிவின் பிரகாரம், குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் பிரதேச எல்லைக்குள் நியாயாதிக்கம் கொண்ட மாகாண நீதிமன்றம் மட்டுமே மேற்குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்ற ஏற்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.

 

எனவே, குற்றம் புரியப்பட்டதாக கூறப்படும் நியாயாதிக்க எல்லைக்குள் அமைந்திருக்காத கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்கினை தாக்கல் செய்வதற்கும் விசாரணை செய்வதற்கும் சட்ட ஏற்பாடுகள் அமைவாக இல்லை என்றும் சட்டத்தரணியினால் சமர்ப்பணம் மேற்கொள்ளப்பட்டது.

 

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்குகள் நியாயாதிக்கம் எவ்வாறு இருப்பினும் மேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யமுடியும் என்ற வகையில் அமைந்துள்ள 27ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் செல்லுபடியற்றன என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால், வியாக்கியானங்கள் சட்டத்தின் 17(1) (சி)இன் பிரகாரம், எச்சட்டத்தின் கீழும் மேற்கொள்ளப்படும் ஒழுங்குவிதிகள் மூலச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரண்பாடாக அமையக்கூடாது என்று விதந்துரைக்கப்பட்டிருக்கிறது.

 

எனினும், இவ்வழக்கில் குறிப்பிடப்பட்ட ஒழுங்கு விதிகள் மூலச்சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரண்பாடாக மேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யும் அதிகாரத்தினை சட்டவிரோதமாக சட்டமா அதிபருக்கு கொடுத்திருக்கிறது.

 

எனவே குறித்த ஒழுங்குவிதிகள் சட்டவலு அற்றவை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

 

அத்துடன் இவ்வுலகை நீற்றுச்சென்ற சக மனிதர்களின் அல்லது உறவினர்களின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதை எந்த சட்டமும் தடைசெய்யலாகாது என்றும் இது தனிமனித சுதந்திரத்தையும் கலாசார மரபுகளையும் சமய மற்றும் பண்பாட்டு மரபுகளையும் சிதைக்கும் ஒரு செயல்.

 

மேலும் 33 வருடங்களுக்கு முன் மரணித்த அகிம்சை வழிப் போராளிகளை நினைவுகூரும் ஒரு செயல் எவ்வாறு பயங்கரவாத செயலாக அமையும்? அது எவ்வாறு இனங்களுக்கிடையே முரண்பாட்டினை தோற்றுவிக்கக்கூடும் என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

 

இந்நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றத்தின் கட்டளைக்காக நேற்றைய தினம் நியமிக்கப்பட்டிருந்தது.

 

இத்தீர்ப்பின் பகுதிகளை வாசித்த மேல் நீதிமன்ற நீதிபதி இலங்கை அரசியல் யாப்பின் சட்ட ஏற்பாடுகளுக்கும் மற்றும் குற்றவியல் சட்டங்களுக்கும் அத்துடன் மாகாணங்களின் மேல் நீதிமன்ற விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழும் குறித்த நியாயாதிக்கம் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மாகாணத்தின் மேல் நீதிமன்றத்துக்குத்தான் நியாயாதிக்கம் உள்ளது என்று வியாக்கியானம் செய்யப்பட்டது.

 

எனவே, இவ்வழக்கினை விசாரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லை என்று குறிப்பிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, மேற்குறித்த வழக்கினை நியாயாதிக்கம் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தினார்.

 

அத்துடன் ம.க. சிவாஜிலிங்கத்தை வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்தார்.

 

குற்றம் சாட்டப்பட்டவரான ம.க. சிவாஜிலிங்கத்தின் சார்பாக சட்டத்தரணிகள் சுரங்க பண்டார, லக்ஷ்மன் அபேவர்தன ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை தொடர்ந்தும் நிராகரிப்போம் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46 கீழ் ஒன்று மற்றும் 51 கீழ் ஒன்று ஆகிய தீர்மானங்களை தொடர்ந்தும் நிராகரிக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 

ஐ.நா மனித உரிமை பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகியது.

 

இந்த நிலையில், நேற்றைய தினம் (28) நடைபெற்ற கூட்டத்தொடரில் காணொளி வாயிலாக உரையாற்றும் போதே, அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரங்களை சேகரிப்பதற்கான வழிமுறைகள் மனித உரிமைப் பேரவையின் கொள்கைகளிற்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இலங்கை தற்போது பொருளாதாரம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயல்முறை ஆகியவற்றில் பாரிய முன்னேற்றங்களை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பேரவையின் செயற்பாடுகள் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக அமையக்கூடாது என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், இலங்கை மக்களுக்கு பயனளிக்ககூடிய ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து அரசாங்கம் செயற்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் -. உணவுக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பலி !

காசா நகரின் தென்மேற்கில் உணவு உதவிக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் 700 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசா சுகாதார அமைச்சகம் வியாழனன்று, குறைந்தது 104 பேர் கொல்லப்பட்டதாகவும், 750 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறியது.

பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சகம் குளிர் இரத்தம் கொண்ட “படுகொலை” என்று தெரிவித்து இந்த சம்பவத்தை கண்டித்துள்ளது.

இந்த தாக்குதல் இஸ்ரேலின் தற்போதைய “இனப்படுகொலை போரின்” ஒரு பகுதியாகும் என்று அமைச்சகம் கூறியது.

 

“பொதுமக்களை பதுகாப்பதற்கான ஒரே வழி” போர்நிறுத்தத்தை உருவாக்க “அவசரமாக தலையிட” சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தது.

துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி இறந்த மற்றும் காயமடைந்த உடல்கள் மீது ஏறியது. காசாவில் பட்டினியின் விளிம்பில் உள்ள மக்களை அச்சுறுத்துவதற்கான”இது ஒரு படுகொலை, ,” என்று அல்ஜசீரா செய்தியாளர் கூறினார்.

அல்-ஷிஃபா, கமால் அத்வான், அஹ்லி மற்றும் ஜோர்டானிய மருத்துவமனைகளுக்கு இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர் சாலைகள் “முற்றிலும் அழிக்கப்பட்டதால்” அம்புலன்ஸ்கள் அப்பகுதியை அடைய முடியவில்லை, என தெரிவிக்கப்படுகிறது.

 

பாடசாலை புத்தகப் பையின் எடை காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு முதுகுத் தண்டுவடக் கோளாறுகள் – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

பாடசாலை புத்தகப் பையின் சுமையை குறைப்பதற்கு கல்வி அமைச்சால் புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

 

மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பயிற்சிப் புத்தகங்களைத் தவிர, பாடசாலைக்கு கொண்டு வரப்படும் பாடப்புத்தகங்களை குறைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

பாடசாலை புத்தகப் பையின் எடை காரணமாக, முதுகுத் தண்டுவடக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

அதன்படி, மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுப்பாக அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

கல்வி அமைச்சின் செயலாளர் அனைத்து அதிபர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களுடன் சுற்று நிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களை வகுப்பறையில் பாதுகாப்பாக வைக்க திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் குறித்து சுற்றுநிருபத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் தொடரும் அரச பேருந்து சாரதிகளின் கவனயீனமான செயற்பாடு – பாடசாலை மாணவன் விபத்தில் பலி !

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிாிழந்துள்ளார்.

 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் குறித்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

 

சம்பவத்தில் கல்வி பொதுத்தராதர உயா்தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடா்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் சாரதிகளின் கவனயீனத்தால் A9 சாலைகளில் அண்மையில் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலை சிற்றுண்டி உணவக பெண்னை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய பாடசாலை அதிபர் கைது !

பாடசாலை சிற்றுண்டியின் உரிமையாளரான பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டில், அப்பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மொனராகலை கலபெத்த மகா வித்தியாலய அதிபர், பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தொம்பகஹவெல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

கலபெத்த அலபொத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இந்த பெண், கடந்த (28) உணவகத்தை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் பாடசாலையின் ஆசிரியை ஒருவர் வந்து, சிற்றுண்டிச்சாலையில் விளக்குகள் அணைக்கப்படவில்லை என்று கூறினார். மாலை 3.40 மணியளவில் பாடசாலைக்கு விளக்குகளை அணைக்கச் சென்றுள்ளார். விளக்குகளை அணைத்துவிட்டு வீட்டுக்குச் செல்ல இருந்தபோது அதிபரால் பாலியல் வன்கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பில் தொம்பகஹவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.