06

06

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களுக்கு தொழில்வாய்ப்புகள் திட்டமிட்டே இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. – தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசாங்கம் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

 

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பின் ஊடகச் சந்திப்பின் போதே அதன் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேற்கண்டவாறு கூறினார்.

 

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

 

எதிர்வரும் 8 ஆம் திகதி 113 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பாகிய நாங்கள் கொண்டாடவிருக்கிறோம்.

 

இத்தருணத்தில் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள நாட்டு மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யமுடியாது, மருத்துச் செலவைத் தாங்கிக்கொள்ள முடியாது நெருக்கடியான வாழ்க்கைக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

 

குறிப்பாக 70 இலட்சம் பேர் அதாவது, இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் அடுத்தவேளை உணவை பெற்றுக்கொள்வதற்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

 

இதற்கான பிரதான காரணம் 2022 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியாகும். இந்தப் பொருளாரதார நெருக்கடியின் காரணத்தால் கடந்த இரு வருடங்களில் 15 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களுக்கு தொழில்வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. இம்மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. நில ஆக்கிரமிப்பு தொடர்கிறது. விவசாயக் காணிகள் விடுவிக்கப்படவில்லை. அதைப்போல, இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையில் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

 

வடக்கு கிழக்கில் காணிப்பிரச்சினை, காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, கணவனை இழந்த பெண்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினை, மீனவர்களின் பிரச்சினை போன்றவற்றுக்கு இன்னமும் தீர்வு கிட்டவில்லை. இவற்றுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசாங்கம் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறது.

 

ஆனால், அரசாங்கமோ கூத்துக்களை காண்பித்து மக்களை திரட்டுவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

 

தற்போது 24 குடும்பங்களுக்கு அஸ்வெசும எனும் பெயரில் நிவாரணம் வழங்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

 

சமுர்த்தி கொடுப்பனவு பெற்ற 16 இலட்சம் குடும்பங்கள் தற்போது அஸ்வெசும திட்டத்தில் 24 இலட்சமாக அதிகரித்திருக்கின்றது. எனவே, மேலும் 8 இலட்சம் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளமை தெளிவாகின்றது.

 

அதுமட்டுமன்றி, தற்போதைய விலைவாசியுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற 1000 ரூபா சம்பளம் நாளாந்த வாழ்க்கைக்கு போதாமல் இருக்கிறது.

 

இந்த மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும். மலையகத்தில் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். அந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் வலியுறுத்துகிறோம்.

 

நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. அநீதிக்கு எதிராக போராடுகின்ற மக்களை இந்த அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் ஒடுக்கி வருகிறது.

 

ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளிலேயே இறங்கியிருக்கிறது. இதற்கு எதிராக நாங்கள் பெருந்திரளான பெண்களை அணித்திரட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றோம். நாட்டை அழிக்கின்ற இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்காக பொதுமக்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

இந்தியச் சிறையில் இருக்கின்ற முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்யுங்கள் – நாடாளுமன்றத்தில் சிறீதரன்!

இந்தியச் சிறையில் இருக்கின்ற முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தோடு சேர நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர், இந்தியப்பிரதமர் மற்றும் இலங்கை அரசிடம் கேட்கிறோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்றைய நாள் 16 வருடங்களுக்கு முன்னர் எங்களுடைய மண்ணிலே மாமனிதர் கிட்டினன் சிவனேசன் இலங்கையினுடைய படையினரால் ஆழ ஊடுருவும் படை என்ற பெயரில் மிக மறைமுகமாக கொலை செய்யப்பட்டிருந்தார் இந்த பாராளுமன்றத்தினுடைய உறுப்பினராக இருந்த சிவனேசன் அநியாயமாக கொல்லப்பட்டார்.

 

அதேவேளை இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை ஆகியும் கூட வீடு வர முடியாமல் சில நாட்களுக்கு முன்னர் மரணத்தை தழுவிக் கொண்ட சாந்தன்னுக்கும் நான் இந்த இடத்திலே எங்களுடைய அஞ்சலிகளை செய்து கொள்கிறேன்

 

தன்னுடைய தாயைப் பார்க்க, உறவினர்களை பார்க்க தன்னுடைய ஊரை பார்க்க துடியாய் துடித்த 20 வயதில் புறப்பட்ட இளைஞன் 53 வயதைக் கடந்து சடலமாக வரவேண்டிய மிகப்பெரிய நெருக்கடியும் ஒரு மன உளைச்சலும் இந்த மண்ணிலே ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய ஆதங்கம்.

 

இது தொடர்பாக நான் மனோகணேசன் எம்.யுடன் சென்று இலங்கையினுடைய வெளியுறவுத் துறை அமைச்சர் அலிசப்ரி மற்றும் நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் பேசி இருந்தேன் அதேபோல இந்தியாவிலே இருக்கிற இலங்கை தூதரகத்தினுடைய தூதரக அதிகாரியையும் கூட தொடர்பு கொண்டு சாந்தனின் வருகைக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அந்த முயற்சிகள் தோல்வி கண்டிருந்தது. உயிருடன் வீட்டுக்கு வர ஆசைப்பட்ட சாந்தனின் உயிரற்ற உடல் மட்டும்தான் இங்கு வந்தது என்பது மக்கள் மனங்களிலே மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

எனவே தற்போது இந்தியச் சிறையில் இருக்கின்ற முருகன் ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தோடு அவர்கள் சேர வேண்டும் அதற்கு உயர்ந்த சபையின் ஊடாக தமிழ்நாட்டினுடைய முதலமைச்சரையும் பாரதத்தினுடைய பிரதமரையும் இலங்கையினுடைய அதிகாரிகளையும் அவர்களை இந்த மண்ணிலே தங்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து வாழக்கூடிய வகையிலே ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

விலகுகிறார் நிக்கி ஹேலி – மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்க்கு வாய்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து நிக்கி ஹேலி விலகவுள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இதனால், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாத்திரமே குடியரசுக் கட்சியின் எஞ்சியுள்ள ஒரேயொரு போட்டியாளர் ஆவார்.

 

தென் கரோலினா மாநில முன்னாள் ஆளுநரும் ஐநாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவருமான நிக்கி ஹேலி, தனது தீர்மானத்தை தென் கரோலினா மாநிலத்தின் தலைநகர் சார்ள்ஸ்டனில் உள்ளூர் நேரப்படி இன்று புதன் காலை 10.00 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி இரவு 8.30) அறிவிக்கவுள்ளார்.

 

இதுவரை நடைபெற்ற குடியரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களில் வொஷிங்டன் டி.சி மற்றும் வேர்மண்ட் மாநிலத்தில் மாத்திரமே நிக்கி ஹேலி வெற்றியீட்டிய நிலையில் அவர் இப்போட்டியிலிருந்து விலகுகிறார்

பொருளாதார நெருக்கடியின் எதிரொலி – இலங்கையில் அதிகரிக்கும் இறப்பு விகிதம்!

பொருளாதார பாதிப்பினால் நாட்டில் இறப்பு வீதம் உயர்வடைந்து,பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது ஆனாால்  பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.

 

ஆனால் சமூக கட்டமைப்பில் மக்கள் வாழும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற வரித்திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

தேர்தலுக்கான அறிகுறிகள் இடம்பெறவுள்ள நிலையில் மின்கட்டணம்,அத்தியாவசிய உணவு பொருட்கள் குறைக்கப்படுகிறது.உரித்து வழங்கப்படுகிறது.

 

யுக்திய சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.ஆகவே வெகுவிரைவில் தேர்தல் ஒன்றை எதிர்பார்க்கலாம்.

 

நாட்டில் 57 இலட்சம் குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களில் 91 சதவீதமானோரின் வாழ்க்கை செலவுகள் உயர்வடைந்துள்ளன.

 

பெரும்பாலான குடும்பங்கள் மூன்று வேளை உணவை இரண்டு வேளையாக மட்டுப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.ஆனால் நாடு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.

 

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு மொத்த சனத்தொகை வளர்ச்சி 1 இலட்சத்து 44 ஆயிரத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. பிறப்பு வீதமும், குறைவடைந்துள்ளது..பொருளாதார பாதிப்பால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தவர்களில் 7120 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

 

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மாத்திரம் 13,1180 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். 3 இலட்சம் சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிறு கைத்தொழில் முயற்சியாண்மையாளர்களில் 15 ஆயிரம் பேரின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.

 

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்சிப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

 

ஆனால் கடந்த ஆண்டு மாத்திரம் ஏற்றுமதி பொருளாதாரம் ஒரு பில்லியன் டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது.நடைமுறையில் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை.நிவாரணம் வழங்கி மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் – மேலும் மூன்று ஊழியர்கள் பணி இடைநிறுத்தம் !

நாவலப்பிட்டி ரயில் நிலைய ஊழியர்கள் சிலரால் வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

 

கடமை அதிகாரி மற்றும் ரயில் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பண்டார தெரிவித்துள்ளார்.

 

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 6 ரயில்வே ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சுற்றுலாப் பயணிகள் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுகளுடன் முதல் வகுப்பில் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

அதன்படி, சுற்றுலாப் பயணிகள் இருவரையும் நாவலப்பிட்டி ரயில் நிலைய ஊழியர்கள் தாக்கி, ரயிலில் இருந்து வெளியே இழுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இரு வெளிநாட்டவர்களையும் ரயிலில் இருந்து இறங்குமாறு ரயில்வே கட்டுப்பாட்டாளரால் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் இறங்க மறுத்ததால், ரயிலில் இருந்து அவர்களை வௌியேற்றியதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

‘ஒரு தரப்பினர் அதிகாரத்துக்காக பொய் சொல்கிறார்கள். நான் அதிகாரத்துக்காக செயல்படவில்லை.’ – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறன்றமையால் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

குறித்த தகவலை அவர் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே தெரிவித்துள்ளார்.

 

எதிர்காலத்தில் VAT வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாகவும் இதன்படி புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் வற்(VAT) வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிவாரணம் வழங்கப் போவதில்லையெனவும் வெளிநாட்டு அரச முறை கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என்றும் 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்ளப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வருடத்தில் இரண்டு சதவீதம் முதல் மூன்று சதவீதமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளதாகவும் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதேவேளை, ஒரு தரப்பினர் அதிகாரத்துக்காக பொய்யுரைப்பதுடன் நான் அதிகாரத்துக்காக செயல்படவில்லையெனவும் நாட்டுக்காகவே செயற்படுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அழகிய வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாதெனவும் கடுமையான தீர்மானங்கள் ஊடாகவே நெருக்கடியில் இருந்து மீள முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்தோடு நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் சிலர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விமர்சித்து வருவதாக ரணில் தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகத் தோன்றினாலும், அதனை மக்களிடம் காட்டவில்லையெனவும் மக்கள் மீது தேவையில்லாமல் வரி விதிப்பதாகவும் மற்றும் மின்சாரக் கட்டணம், எரிபொருள் கட்டணங்கள் தேவைக்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.

 

அத்தோடு மந்தமாக இருந்த பொருளாதாரம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த ரணில், அது சிரமமானதாக இருந்தாலும் கூட நாளுக்கு நாள் பொருளாதாரம் வலுவடைவதாக தெரிவித்துள்ளார்.

 

‘The Conspiracy ‘ – தனது ஆட்சி கவிழ்க்கப்பட்ட சதி பற்றி நூல் வெளியிடுகிறார் கோட்டாபய ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகுறித்து நூல் ஒன்றை வெளியிடவுள்ளார்.

 

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் 2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி முயற்சிகள் என்ற நூலை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது என தெரிவித்துள்ள அவர் இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் முதல் 60 வருடங்களில் இந்த நிலை காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

என்னை அரசியலில் இருந்து அகற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கை அரசியலில் புதிய அம்சத்தை கொண்டுவந்தது எனவும் குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் ஆட்சிமாற்றங்கள் அமைதியான முறையிலேயே இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

2022 இல் இடம்பெற்ற சம்பவங்களால் நாட்டின் எதிர்காலத்திற்கு கடும் பாதிப்பு என தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்ட ஆட்;சிமாற்றத்திற்கான நடவடிக்கைகளின் நேரடி அனுபவங்களை தனது நூல் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த 6 நாடுகளின் தூதுவர்கள் !

6 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

 

இச் சந்திப்பு இன்று புதன்கிழமை (06) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

 

பாலஸ்தீனத்தின் தூதுவர் Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர் திருமதி R. Demet Sekercioglu, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர் Tareq M.D. Ariful Islam, இந்தோனேசிய குடியரசின் தூதுவர் திருமதி Dewi Gustina Tobing, ஆகியோரும் இந்திதோனேசிய தூதரகத்தின் பிரதம கொன்சல் Heru Prayitno, மலேசிய உயர்ஸ்தானிகர் Badli Hisham Bin Adam மற்றும் மாலைதீவு குடியரசின் பதில் தூதுவர் திருமதி Fathimath Ghina ஆகிய இராஜதந்திரிகள் அந்நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் றிஷ்வி சாலி மற்றும் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் இராஜதந்திரிகள் விழிப்புணர்வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

அத்துடன் நாடுகளுடன் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பினை அடிப்படையாகக்கொண்டு செயலாற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை பற்றியும் இந்த சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.

உயர்தரப் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த 25000 மாணவர்களுக்கு தொழில்பயிற்சிகள் ஆரம்பம்!

இந்த வருடம் (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டல் பயிற்சிகளை வழங்கும் நாடளாவிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

 

இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 25,000 மாணவர்கள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இன்று முதல் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 300 நிலையங்களில் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில் மஹரகம மத்திய மகா வித்தியாலயத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் பயிற்சித் திட்டங்கள் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.