09

09

அமெரிக்கா வீசிய உணவு பொதிகள் தாக்கியதில் காசாவில் 5 பேர் பலி !

காசா மக்களுக்கு அமெரிக்கா வீசிய உணவு பொதிகள் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் தொடரும் போர் காரணமாக பட்டினிச் சாவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து நல்லெண்ண அடிப்படையில் காசா மக்களுக்கு அண்மையில் அமெரிக்கா உணவு விநியோகம் செய்தது.

விமானம் மூலமாக காசா பகுதியில் உணவுப் பொதிகள் அடங்கிய பெரிய பார்சல்கள் பாராசூட் கட்டி வீசப்பட்டன.

இதில் சில பார்சல்களின் பாராசூட்கள் சரியாக திறக்காததால் முழு வேகத்தில் சென்று நிலத்தில் விழுந்தன. இந்த பார்சல்கள் தாக்கியதில் 5 பேர் நசுங்கி பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டே காசா மக்களுக்கு உணவு வழங்கும் அமெரிக்காவின் நல்லெண்ணத்தை பலரும் விமர்சித்துள்ளனர்.

காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் – ஜோ பைடன்

மனிதாபிமான உதவிப் பொருட்களை விநியோகிப்பற்காக காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரவித்துள்ளார்.

 

அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை (07) நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார்.

 

இத்தற்காலிக துறைமுகமானது, பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

காஸாவுக்கு மேலும் அதிகளவு விநியோங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி பைடன் கூறினார்.

 

அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார்.

 

கஸாவிலுள்ள மக்களில் கால்வாசிப் பேர் பஞ்சத்தை எதிர்கொள்வதாக ஐநா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறி மலை சம்பவம் தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா..? -அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி !

வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இன்று (09) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிவ பக்தர்களையும், அவர்களின் வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வண்ணம் பொலிஸார் வழிபாட்டுப் பொருட்களை சப்பாத்து காலால் உதைத்து தள்ளியதோடு, பெண்களை இழிவுபடுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அறுவரை கைது செய்துள்ளனர்.

 

இதில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒட்டுமொத்த சிவ பக்தர்களுக்கும் வருத்தத்தை தெரிவிப்பதோடு, இது நாட்டின் அடிப்படை மனித உரிமையும் மற்றும் வழிபாட்டு உரிமையையும் மீறும் செயல் மட்டுமல்ல. தமிழர்கள் மீதும் இந்துக்கள் மீதும் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத மதவாத வன்முறையின் தோற்றமுமாகும்.

 

இதில் பொலிஸார் அராஜகத்தோடு பேரினவாத அதிகார அரசியல் பக்கபலமும் அதற்கு உள்ளது என்பதை உணரக்கூடியதாக உள்ளது. இக்கொடிய மதவாத இனவாத வன்முறை தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். இதனை சமயம் கடந்து அனைத்து சமய தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமது எதிர்ப்பை கூட்டாக வெளிக்காட்ட வேண்டும்.

 

களனியை மையமாகக் கொண்டு இயங்கும் பௌத்த தகவல் நிலையம் எனும் அமைப்பு வெடுக்குநாறி மலையில் இனவாதம், மதவாதம் என்பவற்றை தோன்றுவிக்கும் வழிபாடு நடைபெறவுள்ளதாக பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இக்கடிதம் எதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது? சிவராத்திரி வழிபாடு எவ்வாறு இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் எனவும் கேட்கின்றோம்.

 

இனவாதம், மதவாதம் அடிப்படை கருத்தியலில் இயங்கும் பயங்கரவாத அரசின் கூலிகளாக இயங்கும் பொலிஸாரே இனவாத, மதவாத அதிகார வெறியினை சிவ பக்தர்களிடம் காட்டியுள்ளமை வெட்கக்கேடாகும். அங்கு கூடியிருந்த பக்தர்கள் பொலிஸ் அராஜகம் ஒழிக என்றோ அல்லது வேறு எந்த வகையிலோ தமது எதிர்ப்பை காட்டவில்லை. சமய பக்தி கோஷங்களையே அவர்கள் எழுப்பினர். இதுவா மதவாத மற்றும் இனவாத வழிபாடு.

ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே தமிழர்களின் வழிபாட்டு உரிமை மீறப்பட்டுள்ளது.

 

இலங்கை தொடர்பாக கடந்த காலங்களில் மனித உரிமை பேரவை பல அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் கடந்த காலங்களில் வழங்கியபோது அவற்றை பின்பற்றால் சர்வதேசத்தை ஏமாற்றும் ஆட்சியாளர் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடக்கும் சந்தர்ப்பங்களில் அதனை அவமதிப்பது போல் நடப்பது இது முதல் தடவை அல்ல.

 

அமைச்சர் ஒருவர் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து விரட்டி மிரட்டியதும் இவ்வாறான காலப்பகுதியிலாகும். அதேபோன்று நேற்று இந்துக்களின் சிவ வழிபாட்டை கொச்சைப்படுத்தி அராஜகம் புரிந்துள்ளனர்.

 

இது இந்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனவாத வன்முறையை தொடர்கிறது என்பதை சுட்டி நிற்கிறது.

 

உயிர்ப்பு தினத்தில் கூண்டுகளை வடிக்கச் செய்து உயிர்களைக் கொண்டு அரசியல் செய்தவர்கள் தொடர்ந்து வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

 

தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா எனவும் கேட்கின்றோம்.

 

தேர்தல் காலத்தில் தமிழர்களின் வாக்குகளை எதிர்பார்த்து அரசியல் செய்யும் தென்பகுதி கட்சிகள் வெடுக்குநாறி மலையில் நடந்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும் அதனை தூண்டிவிட்டு குளிர் காய்பவர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்க வேண்டும்.

 

சர்வதேச பெண்கள் தினத்தில் அவ்வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களை அவமானப்படுத்தியதற்கு பெண்கள் தினத்தை கொண்டாடிய அனைத்து சக்திகளும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

 

அத்தோடு மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிராக தம் எதிர்ப்பை தெரிவிப்பதோடு ஜெனிவா மனித உரிமை பேரவையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு தனது ஆதரவையும் நல்க வேண்டும்.

 

தமிழர் தாயகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் தமிழர் தாயகத்தை சூழ்ந்துள்ள இருளினை கருத்தில் கொண்டு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். அத்தகைய விழிப்பினை கடந்த வாரம் சாந்தனின் உடல் எடுத்துச் சென்றபோது காட்டியது போன்று ஒன்றுபட்ட சக்தியாக வெளிப்படுத்துவதற்கான காலம் உருவாகி வருகின்றது என்பதை உணர்ந்து தேசிய சிந்தனையோடு கூட்டாக செயற்படுவதையும் உறுதி செய்தல் வேண்டும் என்றுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் பொலிசார் அடாவடியாக நடந்துள்ளனர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் இன நல்லிணக்கதை சீர்குலைக்கும் வகையில் அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

 

பளைப் பகுதியில் எரிபொருள் நிலைய திறப்புவிழா நிகழ்வு இன்றுகாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் குறித்த விடயம் தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

 

சிவராத்திரிதினம் என்பது இந்துக்களின் முக்கிய சமயம் சார் நிகழ்வாகும். இதனை முன்னிடு குறித்த ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள அடியவர்கள் சென்றபோது பொலிசார் தடுத்து நிறுத்து அடாவடியில் ஏடுபடுத்துயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குறிப்பாக வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவ பக்தர்களையும், அவர்களின் வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொலிசார் நடந்துகொண்ட விதம் அவர்களது அடாவடித்தனமாகவெ இருக்கின்றது.

 

ஆலய தரிசனம் செய்வது அவரவர் உரிமையாகும். இதை தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறான நிலையில் குறித்த ஆலயப் பகுதியில் பொலிஸார் இவ்வாறான தடைகளையும் அடாவடித்தனங்களையும் செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தது? அதேநேரம் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

 

அத்துடன் நடைபெறவுள்ள அமைச்சரவையிலும் இவ்விடயம் தொடர்பில் கொண்டு செல்லவுள்ளேன் என்பதுடன் இனிவருங்காலங்களில் பொலிசார் இவ்வாறான செயற்பாடுகளை மெற்கொள்ளாதிரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திரிந்தமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று குற்றங்களில் இருந்து இன்னமும் கூட பாடம் படிக்காத கோட்டாபாய ராஜபக்ஷ ஒரு அறிவிலி – மனோகணேசன் விசனம்!

சிங்கள பெளத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதாலேயே தனக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்று திரண்டு அரகலவை நடத்தினார்கள்” என தன் நூலில் கூறும் கோட்டாபய ராஜபக்ச, வரலாற்று குற்றங்களில் இருந்து இன்னமும் கூட பாடம் படிக்காத ஒரு அறிவிலி என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.

 

சிங்கள-பெளத்தர் பலமடைவது இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. சிங்கள மொழி பேசுவதன் மூலமும், பெளத்த தரிசனத்தை கடை பிடிப்பதன் மூலமும் நானும்கூட சிங்கள பெளத்த சிந்தனையை பலப்படுத்தி வருகிறேனே! எமக்கு அதில் என்ன பிரச்சினை?

 

இந்நாட்டில் சிங்கள- பெளத்தம், பேரினவாதமாக மாறி, பல இனங்கள், பல மதங்கள், பல மொழிகள் என்ற இலங்கை பன்மைத்துவதை இல்லாது ஒழிப்பதே எமது பிரச்சினை. அதுதான் எமது நீண்டகால போராட்டம். உங்கள் “அரகலய” வுக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது என மனோ கணேசன் கூறியுள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள “சதி” என்ற நூல் தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் கருத்து கூறியுள்ள மனோ எம்பி மேலும் கூறியதாவது,

 

கொழும்பிலும், நாடு முழுக்கவும் நடைபெற்ற அரகலவில் பங்கு பெற்ற மக்களில் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவிகிதத்தினர், 2019, 2020 தேர்தல்களில் மொட்டு சின்னத்துக்கு, வாக்கு அளித்தவர்கள். அவர்கள்தான், கோட்டாபயவின் முட்டாள்தனமான, பொருளாதார கொள்கைள் காரணமாக வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன் தெருவுக்கு வந்து போராடியவர்கள்.

 

தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கூட இவை பிரச்சினைகள்தான். ஆனால், அவற்றையும் மீறிய இன, மத ஒடுக்குமுறைகளால் அவர்கள் துன்பம் அடைந்தார்கள். ஆங்காங்கே ஒரு சில தமிழ், முஸ்லிம் மக்கள் இறுதி கால கட்டங்களில் அரகலவில் கலந்து கொண்டார்கள். சில அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அதீத கற்பனை பண்ணிகொண்டு, “இத்தோடு சேர்த்து இந்நாட்டில் இனவாதத்தையும் ஒழித்து விடுவோம்” என முழங்கியதும் உண்மைதான். “நல்லது நடந்தால் சரி” என நாம் அவர்களை வாழ்த்தியதும் உண்மைதான். அவர்கள் இன்று அரசியல் அரங்கில் அந்த அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்களை காணவில்லை.

 

எது எப்படி இருந்தாலும், அரகல முழுக்க முழுக்க, “வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன், தெருவுக்கு வந்த சிங்கள பெருந்திரள் மக்களால்” நடத்தப்பட்டது ஆகும். அதுவும் 2019, 2020 தேர்தல்களில் மொட்டு சின்னத்துக்கு வாக்களித்த மக்களால் நடத்தபட்டது. இதுதான் உண்மை. சிங்கள-பெளத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு பிடிக்காததாலேயே, அவர்கள் அரகலவை நடத்தினார்கள் என்ற மாதிரி கூறி, உண்மையை திரிபு படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவுக்கு கடுமையாக கூறி வைக்க விரும்புகிறேன் என்றார்.

சீஷெல்ஸ் துறைமுகத்தில் இலங்கை மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் 9 ஆவது நாளாகவும் தொடர்கிறது!

ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்டு சீஷெல்ஸ் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் 9 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

 

தங்களை நாட்டுக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தி, இந்த மாதம் முதலாம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை மீனவர்கள் ஆரம்பித்திருந்தனர்.

 

லோரன்சோ புதா 4 என்ற மீன்பிடி படகில் கடற்றொழிலுக்கு சென்ற 6 மீனவர்களே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

குறித்த படகு கடந்த ஜனவரி 12 ஆம் திகதி டிக்கோவிட்ட துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. சிலாபம் – மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 6 மீனவர்களே படகில் பயணித்திருந்தனர்.

 

இந்த நிலையில், மீனவர்கள் ஆயுதக் குழுவினரால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில், சீஷெல்ஸ் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் மீட்கப்பட்டனர். மீனவர்கள் தற்போது சீஷெல்ஸ் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் தீவில் 2 ஆம் கட்டமாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டம் – வாழ்வாதார இழப்பு ஏற்பட வாய்ப்பு!

மன்னார் தீவில் 2 ஆம் கட்டமாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்தினால் ஏற்பட உள்ள பாதிப்பு குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அவசர கடிதம் ஒன்றை நேற்று வெள்ளிக்கிழமை (8) அனுப்பி வைத்துள்ளதாக மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்தார்.

 

குறித்த கடிதம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் தீவினுள் பெரிதும் பேசுபொருளாக காணப்படும் காற்றாலை மின்சாரத்தினால் ஏற்படுகின்ற, ஏற்படப் போகின்ற பாதிப்புக்கள் குறித்து மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மின்னஞ்சல் வாயிலாக மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளோம்.

 

மன்னார் கரையோரப் பகுதிகளில் காற்றாலைகளை நிறுவுவது தொடர்பில் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் தமது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

காற்றாலை விசையாழி நிறுவலின் முதல் கட்டத்தால் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

போதுமான தணிப்பு நடவடிக்கைகள் இல்லாமல் மேலும் நிறுவல்களை மேற்கொள்ள எத்தனிப்பது குறித்து எம்முடைய கவலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஆரம்ப கட்டத்தில் 63 முதல் 95 மெகா வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு 30 காற்றாலைகள் நிறுவப்பட்டன.

 

இருப்பினும், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, இயற்கை, சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் மீதான எதிர் மறையான தாக்கங்களைத் தணிக்க தெளிவான மதிப்பீடுகளை வழங்கத் தவறிவிட்டது.

 

இதன் விளைவாக, ஈர நிலங்கள் தொடர்பான உடன் படிக்கையின் கீழ் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் போன்ற பகுதிகளில் காற்றாலை விசையாழிகள் இருப்பதால் பறவைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள விடயம் குறித்த கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் அக்கடிதத்தில் வாழத் தகுந்த நிலங்களின் இழப்பு, வாழ்வாதார இழப்பு, வன விலங்குகளின் வாழ்விடங்களை அழித்தல், கவனிக்கப்படாத சுற்றுச் சூழல் பாதிப்புகள், முக்கிய ஹைட்ராலிக் சிக்கல்கள் குறித்து அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நாங்கள் காற்றாலை மின்சார திட்டத்திற்கு எதிரானவர்கள் இல்லை. குறிப்பாக அதனை இச்சிறிய மன்னார் தீவிற்குள் கொண்டு வருவதையே வேண்டாமென்கின்றோம் என மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ மேலும் தெரிவித்தார்.

கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டமொன்றில் இருந்து 17 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

இவ்வாறு உயிரிழந்தவர் தல்கஹவத்த , கரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய ஹன்சிகா நதிஷானி என்ற சிறுமியாவார்.

 

இவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

நேற்று (8) முச்சக்கரவண்டியில் சென்ற சிலர் குறித்த சிறுமியை கரந்தெனிய, தல்கஹாவத்த பிரதேசத்தில் வைத்து பலாத்காரமாக அழைத்துச் சென்றதாக தெரிய வந்துள்ளது.

 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் இது தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் போசணை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள 4 இலட்சத்துக்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள்!

இலங்கையில் 5 – 19 வயது வரையிலான பாடசாலையில் கல்வி கற்கும் 410,000 பெண் பிள்ளைகள் போசணை குறைப்பாடு காரணமாக எடை குறைவாக இருப்பதாக வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ நேற்று தெரிவித்தார்.

 

பிரித்தானிய ‘லான்செட் மெடிக்கல் ஜர்னல்’ இதழின் ஆய்வின் படி உலகில் போசணை குறைபாடு காரணமாக உடல் எடை குறைந்தவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது.

 

உலகளவில் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களின் வீதம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கையில் உள்ளது.

 

199 நாடுகளில் 22 கோடி பேரிடம் சுமார் 1,900 ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உடற் திணிவுச் சுட்டி (உயரத்திற்கான எடை) முக்கிய அளவுகோலாக எடுக்கப்பட்டுள்ளது.

 

போசணைக் குறைப்பாட்டால் பாடசலை பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டு மன்றி, மனவளர்ச்சி குன்றும் ஆபத்தில் உள்ளனர். எனவே இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் தலைமுறை உருவாகும்.

 

போசணை குறைபாடு காரணமாக பிள்ளைகளிடையே என்சைம்கள் மற்றும் ஹோர்மோன்களின் உற்பத்தி பலவீனமடைந்து நாளாந்த உடல் செயல்பாடுகளில் தொய்வு நிலை ஏற்பட வழிவகுக்கிறது. அத்தோடு சிறுவர்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.

 

போசணைக் குறைப்பாடு நெருக்கடி மனவளர்ச்சி குன்றுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இது நாட்டில் தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய கல்வி கற்ற மற்றும் புத்திசாலி இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கும்.