முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றியதில் சதித்திட்டம் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள அரகலய என்ற காலிமுகத்திடல் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே, பொதுமக்களே அவரை வீட்டுக்கு அனுப்பினர் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு மக்களுக்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, “என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி” என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.
குறித்த நூலில் தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான அரசியல் காரணங்களை விளக்கியுள்ளார். அதில் “2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்றதில் இருந்து வெளிநாட்டுத் தலையீடுகள் இலங்கையின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
2019 நவம்பரில் நான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து, சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகள் என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் இருந்துள்ளன.
மேலும், இந்த நாடு சுதந்திரமடைந்த முதல் அறுபது வருடங்களில் ஒருபோதும் அனுபவித்திராத வகையில் வெளிநாட்டுத் தலையீடும், உள்ளக அரசியலின் சூழ்ச்சியும் இன்று இலங்கையின் வாழ்க்கையில் கலந்துள்ளது“ என்று கோட்டாபய தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளை தமிழர்களும் – முஸ்லீம்களும் தனக்கு எதிரான சதியை செய்ததாக கோட்டாபாய ராஜபக்ச தனது நூலில் குறிப்பிட்டுள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் ‘அரகலய’ போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் மாறாக சிங்களவர்களே அப்போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டனர் எனவும் மக்கள் பேரவையின் செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.