11

11

உலகின் மனநல மட்டத்தில் இலங்கைக்கு மிக உயர்ந்த தரவரிசை!

Sapien Labs இன் 2023 ஆம் ஆண்டுக்கான உலக மன நிலை அறிக்கையின்படி, உலகின் மிகக் குறைவான துன்பகரமான நாடுகளில் இலங்கையும் உள்ளது.

89 மதிப்பெண்களுடன் மனநல மட்டத்தில் (MHQ) இலங்கை உலகின் 2வது மிக உயர்ந்த தரவரிசையில் உள்ளது.

 

டொமினிகன் குடியரசு பட்டியலில் முன்னணியில் உள்ளது, டான்சானியா, பனாமா மற்றும் மலேசியா ஆகியவை முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளன.

 

இலங்கையின் சனத்தொகையில் 14% பேர் மட்டுமே உலகளவில் மிகக் குறைவான மன உளைச்சலுக்கு ஆளாவதாக அல்லது போராடுவதாக தெரிவிக்கப்படுகின்றது .

 

அறிக்கையின்படி, இது பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டது, அங்கு 35% வரை மனநல சவால்களை எதிர்கொள்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் 4 லீட்டர் கசிப்புடன் சிறுவன் கைது !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உபட்ட சரசாலை பகுதியில் 4 லீற்றர் 500 மில்லிலீட்டர் கசிப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

 

குறித்த சிறுவன் கசிப்பை எடுத்து சென்றபோது சாவகச்சேரி பொலிஸால் கைது செய்யப்பட்டார் .

 

மேலதிக விசாரணைகளின் பின்னர் சிறுவன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர் .

33 வருடமாக இராணுவத்தின் பிடியில் காணப்பட்ட காணிகள் மக்களிடம் கையளிப்பு!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நேற்று ஞாயிற்றுக்கிழமை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.

 

அவற்றுள் காங்கேசன்துறை தெற்கு மற்றும் மயிலிட்டி தெற்கு ஆகிய இரு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள காணிகளுக்குள் செல்ல இராணுவத்தினர் இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளனர்.

 

காங்கேசன்துறை தெற்கு 235 கிராம சேவையாளர் பிரிவில் 20.3 ஏக்கர் காணிகளும் , மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) 240 கிராம சேவையாளர் பிரிவில் 24 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

 

அதேவேளை நேற்றைய தினம் விடுவிக்கப்பட்ட காணிகளில் பெரும்பாலான காணிகளில் இருந்து இராணுவத்தினர் முற்றாக வெளியேறாத நிலையில் இன்னமும் ஓரிரு நாட்களில் காணிகளில் இருந்து தாம் வெளியேறிய பின்னர் உங்கள் காணிகளுக்குள் நீங்கள் வர முடியும் என தம்மை இராணுவத்தினர் திருப்பி அனுப்பியதாக சில காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் !

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (11) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

 

இன்று காலை மாவட்ட செயலகத்துக்குச் சென்ற கேப்பாப்பிலவு மக்கள் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி, அரசாங்க அதிபருக்கான மகஜரை கையளித்துள்ளனர்.

 

பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

 

கேப்பாப்பிலவு மக்களின் ஒரு பகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, வைத்தியசாலை, தேவாலயம் உள்ளிட்ட முக்கிய மக்களின் குடியிருப்புக்கள் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு – நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது இன்று திங்கட்கிழமை (11) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், தடவியல் பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரினதும் அறிக்கைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ அவர்கள் அடுத்த தவணையில் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகும் படி கட்டளை ஆக்கப்பட்டிருந்தது.

 

குறித்த வழக்கு தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் வாதிடும் சட்டத்தரணி V.S.நிரஞ்சன் தெரிவிக்கையில்,

 

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

ஏற்கனவே நீதிமன்றத்தினால் கோரப்பட்ட அறிக்கை கடந்த தவணை சட்டவைத்திய அதிகாரி ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்க பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கையில் முழுமையாக எல்லா விடயங்களும் அடங்காத படியால் அது சம்பந்தமாக இன்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வந்திருந்தோம்.

 

அதாவது எடுக்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்து அதற்கான வயது, அதன் பால் நிலை ,இறப்புக்கான காரணம் ,தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருப்பதோடு பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 

அதே நேரம் தடவியல் நிபுணத்துவ (SOCO) பொலிஸார் போன்றவர்களாலும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஒட்டு மொத்தமாக எல்லாருடைய அறிக்கைகளும் பெறப்பட்ட பிறகு தான் குறித்த வழக்கு தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

 

இதனை அடுத்து நீதிமன்றமானது சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஷ அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகும் அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதுடன் குறித்த வழக்கு விசாரணை யை மீண்டும் மே மாதம் 13 திகதி அழைப்பதற்காக திகதிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸ் அராஜகத்தை கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டம் !

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற பொலிஸ் அராஜகத்தை கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பின் பேரில் நல்லை ஆதீனம் முன்பாக இன்று (11) மாலை 4 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இந்த போராட்டத்தில் மதகுருமார், சமயத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

மகா சிவராத்திரி பூஜையின்போது வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வழிபடச் சென்றவர்கள் மீதான பொலிஸாரின் அட்டூழியங்களை கண்டித்தும் கைது செய்தோரை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் இடம்பெற்றது.

பொலிசாரும் , தொல்லியல் திணைக்களமுமே இலங்கையில் இனவாத பிரச்சினைகளை தூண்டுகிறார்கள் -மு. சந்திரகுமார்

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டில் இனங்களுக்கிடையே இன நல்லிணக்கம் பற்றி சர்வதேச தரப்புக்கள் உட்பட உள்நாட்டிலும் அதிகம் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் துரதிஸ்டவசமாக நாட்டின் தொல்லியல் மற்றும் பொலீஸ் திணை்களங்கள் அவற்றுக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டுவருகின்றமை கவலைக்குரியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். சமத்துவக் கட்சியின் பொது செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

சிவராத்தி தினத்தில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் பொலீஸார் மேற்கொண்டு அடாவடித்தனமான செயற்பாடுகளை கண்டிக்கும் வகையில் அவர் வெளியிட்ட  அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

சிவராத்திரி நிகழ்வு  சைவ மக்களின் மிக  முக்கிய நிகழ்வாகும், இந்த நாளில் மிகவும் பக்தி பூர்வமாக சிவ வழிபாட்டினை மேற்கொள்வதற்காக தங்களது பூர்வீக ஆலயத்திற்கு சென்ற தமிழ் மக்கள் மீதும் அங்கு பூசை வழிபாடுகளி்ல் ஈடுப்பட்டவர்கள் மீதும் பொலீஸார் காட்டுமிராண்டித்தனமாக

நடந்துகொண்டுள்ளனர். பொலீஸாரின்  செயற்பாடுகள் பௌத்த சிங்கள மேலாதிக மனநிலையின் வெளிப்பாடாகவே இருந்தது. புனித தலம் ஒன்றில் சப்பாத்து கால்களுடன் வெறுக்கத்தக்க வகையில் பொலீஸாரின் நடவடிக்கைகள் காணப்பட்டன.

நாட்டு மக்களிடையே  இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சட்டத்தின் வழி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடப்பாடுடைய பொலீஸ் திணைக்களம்  தமிழ் மக்கள் விடயத்தில் அதற்கு மாறாக செயற்படுகிறது. இலங்கையை பொறுத்தவரை பொலீஸ் மற்றும் தொல்லியல் திணைக்களங்கள் இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றன.

இந்த நிலை மாற்றப்பட வேண்டும். வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் நடந்து சம்பவங்கள் போன்று இனியொரு சம்பவம் இடம்பெறாத  நிலை உருவாக்கப்படல் வேண்டும்.அரச நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் சந்திரகுமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.