15

15

இலங்கையை அதிகார போட்டிக்குள் நுழைத்து இன்னுமொரு உக்ரைனாக மாற்ற நாம் தயாரில்லை – இந்தியாவிடம் ஜே.வி.பி !

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பூகோள அரசியல் போட்டிக்கு மத்தியில் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு இலங்கை தயாரில்லை என்ற விடயத்தை இந்தியாவிடம் நாம் தெரிவித்துள்ளோம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

இராஜதந்திர தொடர்பு என்பது மெஜிக் கிடையாது.அது எமக்கு நன்கு தெரியும். வடகொரியா, கியூபா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் மட்டும்தான் எமது தொடர்பு இருக்கும் என சிலர் கூறுகின்றனர்.

இலங்கையை வடகொரியாவாக்குவதற்கு முற்படுகின்றனர் எனவும் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இது தவறு. உலகம் இன்று மாறியுள்ளது.

 

உலக பூகோள அரசியலும் மாறியுள்ளது. நாம் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா , ஜப்பான் உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் கொடுக்கல் – வாங்கல்களிலும் ஈடுபடுவோம். அதற்கான உறவு கட்டியெழுப்பட்டுள்ளது.

 

இலங்கை சீனாவிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளது, அதற்கு அடுத்தப்படியாக இந்தியாவிடம் கடன் வாங்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளனர்.

ஐஎம்எவ் என்பது அமெரிக்காதான். இவ்வாறு கடன்வாங்கியுள்ளதால்தான் நாடு இறுதியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, சீனா என்பன உலக அதிகார அரசியலில் ஈடுபடுகின்றன.

அந்த போட்டியில் எமது நாடு சிக்ககூடாது. நாம் இந்தியா சென்றிருந்தவேளை, நாம் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு தயாரில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தோம்.

 

பிராந்திய பாதுகாப்பு சார்ந்த விடயத்தின்போது சரியான இடத்தில் நாம் நிற்போம். அவர் அதனை ஏற்றுக்கொண்டார் என்றார்.

யாழ் – நவகிரியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி அட்டகாசத்தில் ஈடுபட்ட வாள்வெட்டு குழு!

யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

 

குறித்த சம்பவமானது இன்று(15) அதிகாலை 1:30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பெற்றோல் குண்டு வீசி தீயிட்டு எரித்து வீட்டில் ஜன்னல்கள் கதவுகள் என்பவற்றையும் கூரிய ஆயுதங்களால் உடைத்து சேதமாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையின் பாராளுமன்றம் முதியோர் இல்லமாக மாறி வருகிறது – கப்பிட்டியகொட சிறிவிமல தேரர் விசனம் !

நாடாளுமன்றத்தில் தற்போது உறுப்பினர்களாக உள்ள சில அரசியல்வாதிகள் விரைவில் பதவி விலக வேண்டுமென ராமஞ்ஞ பீடத்தின் கப்பிட்டியகொட சிறிவிமல தேரர் வலியுறுத்தியுள்ளார்.

 

இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால், விரைவில் நாடாளுமன்றம் முதியோர் இல்லமாக மாறி விடுமென அவர் கேளிக்கையாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டுமென சட்டம் உள்ளதாக ராமஞ்ஞ பீடத்தின் கப்பிட்டியகொட சிறிவிமல தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், 60 வயதுக்கும் மேற்பட்ட பலர் தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தற்போதைய நாடாளுமன்றில் உள்ள வயோதிபர்கள் பதவி விலக வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்துக்கமைய நாடாளுமன்றில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் பதவி விலகாவிட்டால், அவர்களுக்கு எதிராக புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்காக பணியாற்றுவதில்லை எனவும் நாட்டின் வளங்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்வதை நோக்கமாக கொண்டு செயல்படுவதாக கப்பிட்டியகொட சிறிவிமல தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள சாதாரண பிரஜை ஒருவர் 50 ரூபாய் திருடினால் அவருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், நாடாளுமன்றத்துக்குள் இருந்தவாறு பில்லியன் கணக்கில் திருடுபவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

சாதாரண பிரஜைக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் சட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண நகரில் கூரிய ஆயுதங்களுடன் இளைஞர்கள் வாள்வெட்டு குழு கைது !

யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக வெள்ளிக்கிழமை (15) அதிகாலை 2 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணம் மத்யூஸ் வீதியை சேர்ந்த 25 வயதான முச்சக்கர வண்டி சாரதி, கொக்குவிலை சேர்ந்த 25 வயதான இளைஞன், யாழ்ப்பாண நகரத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன், குருநகரை சேர்ந்த 26 வயதான இளைஞன், வண்ணார்பண்ணையை சேர்ந்த 19 வயதான இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டிக்குள் இருந்து வாள், இரும்பு கம்பி, இரும்பு குழாய் என்பன மீட்கப்பட்டன.

கனடாவில் ஆறு இலங்கையர்களை கொலை செய்த இளைஞனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் !

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கையர் அறுவரை கொலை செய்த 19 வயது இ​ளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

ஒரே குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் நால்வர் மற்றும் தாய் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபரால் தாக்கப்பட்ட, உயிரிழந்த பிள்ளைகளின் தந்தையான தனுஷ்க விக்ரமசிங்க, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வழக்கினை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான ஃபெப்ரியோ டி சொய்ஸாவின் உளநலம் தொடர்பில் அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்போது, சட்டத்தரணிகள் சரியான பதிலை வழங்கவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், சந்தேகநபரின் உளநலம் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை வழங்குவதற்கு சில மாதங்கள் செல்லுமென சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

 

இந்த நிலையில், கொலைக்கான காரணத்தை சந்தேகநபர் இன்னும் தெரிவிக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

யாழில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த திங்கட்கிழமை தனது மனைவியுடன் காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பியவர்களை பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படையின் முகாம் முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது.

 

கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு சென்றது. கணவனை கடத்தி சென்றவர்கள் கணவனை கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகாயங்களுடன் வட்டுக்கோட்டை வைத்திய சாலை முன்பாக வீசி சென்றனர்.

 

படுகாயத்துடன் காணப்பட்டவரை வைத்தியசாலை பணியாளர்கள் மீட்டு யாழ். போதனாவில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார்.

 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வட்டுக்கோட்டையில் ஒரு இளைஞனை கைது செய்தனர். அதேவேளை கிளிநொச்சியில் பதுங்கியிருந்த அராலி பகுதியை சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்டவர்களை கடந்த புதன்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி, கிளிநொச்சியில் கைதான நால்வரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். ஆகவே அவர்களை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற, மன்று நால்வரையும் 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. மற்றைய சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது. அத்தோடு அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் கட்டளையிட்டது.

 

அந்நிலையில் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட நால்வரையும் வெள்ளிக்கிழமை (15) மன்றில் முற்படுத்திய வேளை அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

 

இதேவேளை இளைஞன் கடத்தப்படும் போது கடற்படை முகாமில் இருந்த நான்கு கடற்படையினரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வன்முறை கும்பல் தம்மை கடத்த முற்பட்ட வேளை கடற்படை முகாமினுள் தஞ்சம் கோரி தாம் சென்ற வேளை, கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காது, தம்மை அடித்து விரட்டி, கடத்தலுக்கு ஒரு வகையில் உதவி இருந்தனர் என உயிரிழந்தவரின் மனைவி குற்றம் சாட்டி வரும் நிலையில், கடற்படை முகாம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் கடற்படையினர் தஞ்சம் கோரி வந்தவர்களை, விரட்டுவதும், கடற்படையின் அருகில் வைத்தே, வன்முறை கும்பல் தம்பதியினரை கடத்தி செல்லும் காட்சி நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் வீட்டுச் சின்னத்தை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு!

தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் வீட்டுச் சின்னத்தை மோசடி செய்ததாக ரோ புலிகள் என அறியப்பட்ட தியாகராஜா திபாகரன், பாலநந்தினி பாலசுப்பிரமணியம் மற்றும் சொக்நாதன் கேதீஸ்வரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானிய நடைமுறைப்படி ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக தேசம்நெற்க்கு தெரியவந்துள்ளது. பிரித்தானிய சட்டப்படி ஒரு அமைப்பினுடைய பெயரையோ சின்னத்தையோ அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமானது. Intelectual Property Act 2014 – அறிவுசார் உடைமைகள் சட்டம் 2014 இன் படி தக்க அனுமதியின்றி தியாகராஜா திபாகரன், பாலநந்தினி பாலசுப்பிரமணியம் மற்றும் சொக்நாதன் கேதீஸ்வரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒழுங்காற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி இந்தியாவின் நலன்களுக்கு எதிராக ஒரு போதும் செயற்படத் துணியாத போதும் வெளிப்படையாக தங்கள் கட்சியை இந்திய புலனாய்வுப் பிரிவான ரோவின் முகவர்கள் வழிநடத்துவதை விரும்பவில்லை. அந்த அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தில் தமிழரசுக்கட்சியின் கிளை ஆரம்பிக்கப்பட்டது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த கட்சியின் செயலாளர் பா சத்தியலிங்கம் இலங்கைக்கு வெளியே தாங்கள் கிளைகள் எதனையும் ஆரம்பிப்பதற்கு அனுமதிவழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பின் தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ்வின் – லங்காசிறி மற்றும் ஐபிசி ஊடக அமைப்பின் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான திபாகரன் மற்றும் நிலா அணி தங்கள் ரோ நடவடிக்கைகளை நியாயப்படுத்த, ரோவின் தமிழ்நாட்டுப் பிரிவான க்யூ பிராஞ்சின் கட்டுப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களை தடுத்து வைக்கும் சித்திரவதை முகாம்களை; அவை சித்திரவதை முகாம்கள் அல்ல என்றும் அங்கு இலங்கைத் தமிழர்கள் யாரும் கொடுமைப்படுத்தப்படவில்லை என்றும் ஐபிசி குழுமத்தைச் சேர்ந்த தமிழ்வின் – லங்காசிறி ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

தோழர் பாலன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு நீண்டகாலம் கொடுமைப்படுத் தப்பட்டனர். பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்த தோழர் பாலன் என அறியப்பட்ட எஸ் பாலச்சந்திரன் சிறப்பு முகாம்கள் என்ற சித்திரவதை முகாம்கள் பற்றி தேசம் சஞ்சிகையில் தொடராக எழுதியவர். தற்போது இக்கட்டுரைகளின் தொகுப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலாக வெளிவந்துள்ளது. தோழர் பாலன் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை என்ற போராட்ட அமைப்பை நிறுவி வழிநடத்தியவர்களில் ஒருவர். சிறப்புமுகாம்களில் அனுபவித்த கொடுமைகளின் அடிப்படையிலும் தான் அவருக்கு பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கிடைத்தது.

 

தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவுக்கு செவிசாய்த்தமைக்காக தமிழரசுக் கட்சியின் – தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்தனர். ஈபிஆர்எல்எப் செயலாளர் நாயகம் பத்மநாபாவையும் அவருடைய தோழர்களையும் படுகொலை செய்தனர், தங்கள் அமைப்பிற்குள்ளேயே மாத்தையாவைப் படுகொலை செய்தனர். ஆனால் தற்போது இந்த அமைப்பில் ஒருசாரார் தாங்கள் தடைகளை உடைப்பதில் வல்லவர்கள் என்று சொல்லி இந்திய புலனாய்வுப் பிரிவான றோ வோடு சேர்ந்து பிரபாகரன் குடும்பத்தையே உயிர்த்தெழ வைத்துள்ளனர். இன்னொரு பிரிவு தமிழரசுக் கட்சியை புலியரசுக்கட்சியாக்குவோம் என்று பொக்ஸடித்து முற்றுகையிட்டுள்ளது. இன்னுமொரு பிரிவோ இலங்கைப் புலனாய்வுத்துறையினரோடு சேர்ந்து இயங்குகிறது. இவற்றுக்குள் தங்களை இணைத்துக்கொள்ள முடியாத பலர் பலவாக உடைந்து சிதறியுள்ளனர். இவர்கள் யாருடைய உறவும் வேண்டாம். செய்தியும் வேண்டாம் எனப் பலர் ஒதுங்கித் தனித்து வாழ்கின்றனர்.

லண்டன் தமிழரசுக்கட்சியை ‘றோ புலிகள் – திவாகரன் – நிலா’ கொம்பனி பொக்ஸடித்து முற்றுகையிட்டுள்ளது!

ஒருவர் தான் ஒரு முட்டாள் என்று உணர்வதற்குக்கூட ஒரு அடிப்படை அறிவு அவசியம். அந்தக் குறைந்தபட்ச அறிவும் இல்லாதவர்கள் தங்களைத் தாங்களே மிகச் சிறந்த சிந்தனையாளர்களாக, அறிவுஜீவிகளாக நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். இத்தகையவர்கள் அண்மைக்காலமாக புலம்பெயர் அரசியல் சூழலில் பெரும் தொந்தரவாக மாறியுள்ளனர். ‘புலிகளின் இளவரசி துவாரகா வந்துவிட்டார்’ என்றும் அவருக்குப் பின்னால் தாயார் மதிவதனியும் தந்தை பிரபாகரனும் வருகிறார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து ஒரு கூட்டம் அப்துல்லா என்பவர் தலைமையில் புறப்பட்டுள்ளது. அதே அமைப்பிலிருந்து இன்னுமொரு கூட்டம், இந்தியாவின் உளவு நிறுவனமான றோ தமிழீழம் எடுத்துத்தரும் என்று திபாகரன் – நிலா தலைமையில் சன்னதம் ஆடுகின்றது. புலிகளின் இந்தத் தரப்புகளை மக்கள் நம்புவதாகத் தெரியவில்லை. ஆனால் அத்தரப்புகள் தங்களைத் தாங்களே வெகுவாக நம்பி சிற்றின்பம் காண்கின்றனர்.

இந்த முட்டாள்தனங்களை தொந்தரவாக எண்ணிக் கடந்துசெல்ல முடியாதபடி, இவர்கள் தாங்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக வேறு கதையளந்து வருகின்றனர். இப்புலிகளின் இரு தரப்புகளையும் இந்தியாவின் உளவுத்துறையான றோ அமைப்பே பின்னணியில் இருந்து இயக்குகின்றது எனத் தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை ராஜபக்ச சகோதரர்கள் நடத்தினார்கள் என்பதிலும் பார்க்க இந்திய உளவுத்துறையான றோவே இந்த யுத்தத்தை நடத்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையின் புலனாய்வுத்துறையினருக்குப் பயிற்சி அளித்ததே இந்திய புலனாய்வுத்துறையினர் எனத் தெரிவித்த அவர், கருணாவை தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரித்ததிலும் றோவினுடைய பங்களிப்பு இருந்ததாகத் தெரிவித்தார். ஆனால் இத்தகவலை தேசம்நெற் ஆல் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால் பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் தப்புவதற்க்கு நிறைய வாய்ப்புகள் இருந்ததாக றோ அமைப்பைச் சார்ந்த இராணுவத் தளபதி மதன்குமார் ஆணித்தரமாக கருத்து வெளியிட்டு வருகின்றார். துவாரகாவின் வருகைக்கும் அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

மறுமுனையில் திபாகரன் – நிலா கொம்பனி லண்டணிலிருந்து டெல்லிக்கு காவடி எடுத்ததை தேசம்நெற் பலதடவை அம்பலப்படுத்தியதுடன், இவர்கள் தமிழரசுக் கட்சியை புலி அரசுக் கட்சியாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர் என்பதை பெப்ரவரி 25இல் வெளியிட்ட கட்டுரையில் வெளிப்படுத்தியும் இருந்தது. றோ தமிழீழம் எடுத்துத் தரப்போகின்றது என்று நம்பும் இக்குழுவின் செயற்பாடுகள் தமிழ் மக்களை கேவலப்படுத்தும் வகையிலும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சேவகம் செய்யும் பாணியிலும் அமைந்துள்ளது. அடிப்படைவாத பிஜேபி – ஆர்எஸ்எஸ் இன் கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி இன, மத உணர்வுகைளத் தூண்டிவிடும் வகையில் இவர்கள் நடந்துகொள்கின்றனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த போதும் மத அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் ஒரு கிறிஸ்தவர் என்பதால் அவருக்கு எதிரான பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர். இதேபாணியில் பா உ சுமந்திரனையும் கிறிஸ்தவர் என்பதற்காக தாக்குவதையும் பரவலாகக் காண முடிகின்றது.

இந்தியாவுக்கு சீனா எதிரி, அதனால் சீனாவை தமிழர்களின் எதிரி என்று காட்டி இந்தியாவுக்கு காக்கா பிடித்து தமிழீழம் பெற்றுவிடலாம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளுர் மதியுரைஞராக இருந்த மு திருநாவுக்கரசுவின் அதிரடித் திட்டம். வன்னி யுத்த காலத்தில் தமிழகத்தைச் சென்றடைந்த மு திருநாவுக்கரசு றோ வின் அரவணைப்பில் இருந்து வருகின்றார். அவர் வளர்த்தெடுத்த வாரிசுகள் தான் ‘திபாகரன் – நிலா’ கொம்பனி. இவர்கள் றோ தமிழீழம் வாங்கித் தரும் என்று சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செய்யும் இக்குழு, ‘இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை தேசியத் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்தது மிகப்பெரும் அரசியல் தவறு’ என்று அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தற்போது இக்குழுவே தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளையையும் கைப்பற்றியுள்ளது. மார்ச் மாதம் 10ம் திகதி தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளைக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய இருந்த போதே தேசம்நெற் இவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்தி இருந்ததுடன் இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சிறிவாஸ் சின்னத்துரையிடம் இது பற்றிக் கேள்வியும் எழுப்பி இருந்தது. நேற்று மார்ச் 13இல் லண்டன் வெஸ்ற்மினிஸ்ரரில் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு வந்திருந்த சின்னத்துரை சிறிவாசிடம் மார்ச் 10இல் இடம்பெற்ற கூட்டம் தொடர்பாகக் கேட்டபோது: “நான் கூட்டத்தை கூட்டியது தமிழரசுக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கே. தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளைக்கான அலுவலர்களைத் தெரிவு செய்வதற்காக அல்ல. ஆனால் கூட்டத்தை திசை திருப்பி புதிய அலுவர்களுக்கான தெரிவு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டதால் தான் அதிலிருந்து வெளியேறிவிட்டேன்” என்றார் சின்னத்துரை சிறிவாஸ்.

றோ புலிகள் தமிழரசுக் கட்சியைக் கைப்பற்றுவார்கள் என்பதை தேசம்நெற் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தது. மார்ச் மாதம் 10ம் திகதி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாகவே பெப்ரவரி 17 அன்று தமிழரசுக் கட்சி போறம் லிமிடட் (Ilankai Thamil Arasu Kadchi (ITAK) Forum Ltd என்று ஒரு தனியார் நிறுவனமாக திபாகரன் – நிலா குழு பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்களாக கீத் என அறியப்பட்ட சொக்கநாதன் கேதீஸ்வரன், திபாகரன் என்று அறியப்பட்ட தியாகராஜா திபாகரன், நிலா என அறியப்பட்ட பாலநந்தினி பாலசுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர். பாலநந்தினி பாலசுப்பிரமணியம் நிறுவனத்தின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கமலேஸ்வரன், ஞானேஸ்வரன் ஆகியோர் திபாகரனின் உறவினர்கள், நண்பர்கள். கமலேஸ்வரன் லண்டன் வந்த சமயத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உறுப்பினர்களை உள்வாங்க மேற்கொண்ட நடவடிக்கையை ‘திபாகரன் – நிலா’ குழு தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது. நோர்த் ஹரோவில் ஜனவரி 28இல் நடைபெற்ற ஒன்றுகூடலில் இதற்கான திட்டமிடல் நடந்துள்ளது. ஆனால் தற்போது இந்த றோ புலிகளின் குளறுபடியை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராகத் திருப்புகின்ற முயற்சி நடைபெறுகின்றது. ஆனால் தேசம்நெற் அறிந்தவரை ‘திபாகரன் – நிலா’ குழு சுமந்திரனுக்கு முற்றாக எதிரானவர்கள். திபாகரன் – நிலா – திருநாவுக்கரசு என்ற இந்த றோ புலிகள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனுடன் நெருங்கிப் பணியாற்றியவர்கள். இவர்களுக்காக எஸ் சிறிதரன் இலங்கை அரசியல் யாப்பு என்ற திருநாவுக்கரசுவின் நூலையும் இலங்கையில் வெளியிட்டு இருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் லண்டன் வந்திருந்த போது திபாகரனும் மயூரனும் எஸ் சிறிதரனை கிழக்கு லண்டனில் உள்ள வோல்தம்ஸ்ரோவில் வைத்து சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் கிளையை இப்படிக் குளறுபடியாகக் கைப்பற்றும் திபாகரன் – நிலா குழுவின் எண்ணத்திற்கு உடன்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்பதவி மீது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு நிதியாதரவு வழங்கும் ஒரு தொழிலதிபரும் கண் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் தற்சமயம் லண்டனிலேயே கல்வி கற்கின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

என்னதான் கொம்பனிச் சட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழரசுக்கட்சி போறம் லிமிடட் (Ilankai Thamil Arasu Kadchi (ITAK) Forum Ltd டை பதிவு செய்த போதும் இதற்கும் தமிழரசுக் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் ஏற்படப்போவதில்லை. தமிழரசுக் கட்சியும் இந்த அமைப்பைக் கண்டுகொள்ளப் போவதில்லை. இது ‘திபாகரன் – நிலா’ குழுவின் இன்னுமொரு ஆர்வக்கோளாறு குளறுபடி மட்டுமே. புதிய உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் சந்தாவைச் செலுத்தினால் உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனால் அலுவர்களாக தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்ட தலைவர் சொக்கநாதன் கேதீஸ்வரன், உப தலைவர் தியாகராஜா திபாகரன், செயலாளர் பாலநந்தினி பாலசுப்பிரமணியம் ஆகியோர் இந்த உறுப்புரிமையைத் தக்க வைக்க முடியாது. ஏற்கனவே தமிழரசுக் கட்சி மாநாடு கூட்டி தெரிவு செய்த தலைவரே தலைவராக முடியாமல் திண்டாடுகிறார். இதற்குள் ‘திபாகரன் – நிலா’ கொம்பனியின் நப்பாசைக்குக் குறைவில்லை.