21

21

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது முறையாகவரும் முதலிடத்தில் பின்லாந்து – இலங்கைக்கு எத்தனையாவது இடம்..?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது முறையாக மீண்டும் ‘பின்லாந்து’ முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

 

அதைத் தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நோர்வே, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.

 

இதில் இலங்கை 128ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தரவரிசையில் ஒருபடி கீழே உள்ளது.

 

இந்தியா இந்த வருடமும் 126வது இடத்திலும், சீனா 60வது இடத்திலும், நேபாளம் 93வது இடத்திலும், பாகிஸ்தான் 108வது இடத்திலும், மியான்மர் 118வது இடத்திலும், பங்களாதேஷ் 129வது இடத்திலும் உள்ளன. இஸ்ரேல் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. ஆப்கானிஸ்தான் கடைசி இடமான 137வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ‘Sustainable Development Solutions Network’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச மகிழ்ச்சி தினத்தன்று (மார்ச் 20) உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுவருகிறது. இந்த ஆய்வு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், வாழ்க்கையைத் தேர்வு செய்யும் சுதந்திரம், பெருந்தன்மை, அநீதிகள் மற்றும் ஊழல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வறிக்கைப் பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க தொடர்ந்தும் பல நடவடிக்கைகள் – சுசில் பிரேமஜயந்த

பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், இதற்காக பாடசாலை நூலகங்களுக்கு மேலதிகமாக 4 வாசிப்புப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

குறித்த புத்தகங்கள் இ-தக்சலாவ இணையத்தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

 

குறித்த புத்தகங்கள் இங்கே…

https://www.ethaksalawa.moe.gov.lk/moodle/mod/url/view.php?id=57266

மூன்றாவது நாளாகவும் தொடரும் யாழ் மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் – ஒருவரது உடல்நிலை மோசம் !

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மீனவர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலைமுதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

செல்லத்துரை நற்குணம், அன்ரன் செபராசா, சின்னத்தம்பி சண்முகராஜா மற்றும் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் ஆகிய நான்கு மீனவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களில் ஒருவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தமக்கு ஆதரவு தெரிவித்து எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ வரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மாணவர்களின் பசியைத் தீர்க்கும் நோக்கில் வேல்ட் விஷன் அமைப்பினால் ‘Enough’ திட்டம்!

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிப்புற்றிருக்கும் நிலையில், அவர்களின் பசியைத் தீர்க்கும் நோக்கில் வேல்ட் விஷன் அமைப்பினால் ‘Enough’ (போதும்) எனும் மகுடத்திலான புதிய செயற்றிட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாளாந்தம் பசியுடன் இருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துவருவதனால் அதனை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் வேல்ட் விஷன் அமைப்பானது அரசாங்கம் மற்றும் ஏனைய தன்னார்வ கட்டமைப்புக்களுடன் இணைந்து ‘Enough’ (போதும்) எனும் மகுடத்திலான புதிய செயற்றிட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

அதன்படி எந்தவொரு நெருக்கடி நிலையின்போதும் சிறுவர்களே வெகுவாகப் பாதிக்கப்படுவதாகவும், அண்மைய காலங்களில் மோதல்கள், காலநிலை மாற்றம், கொவிட் – 19 பெருந்தொற்றுக்குப் பின்னரான பொருளாதாரம் போன்ற காரணிகள் பசியுடன் வாழும் சிறுவர்களின் எண்ணிக்கையில் மிகையான அதிகரிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் வேல்ட் விஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.

இச்செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

அதன்படி எந்தவொரு நெருக்கடி நிலையின்போதும் சிறுவர்களே வெகுவாகப் பாதிக்கப்படுவதாகவும், அண்மைய காலங்களில் மோதல்கள், காலநிலை மாற்றம், கொவிட் – 19 பெருந்தொற்றுக்குப் பின்னரான பொருளாதாரம் போன்ற காரணிகள் பசியுடன் வாழும் சிறுவர்களின் எண்ணிக்கையில் மிகையான அதிகரிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் வேல்ட் விஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ‘Enough’ செயற்றிட்டமானது சிறுவர்களின் பசியைத் தீர்ப்பதற்கு உலகளாவிய ரீதியிலுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் ஆதரவைத் திரட்டுவதைப் பிரதான நோக்காகக் கொண்டிருப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையில் நிலையான உணவு உற்பத்தி மற்றும் அதனை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கான தீர்வு என்பன அவசியமாக இருப்பதாகவும் வேல்ட் விஷன் அமைப்பின் தெற்காசிய மற்றும் பசுபிக் பிராந்திய தலைவர் செரியன் தோமஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதேபோன்று சிறுவர்களின் பசியைத் தீர்ப்பதற்கு அப்பால், வறுமை மற்றும் பசியின் பிடியிலிருந்து சமூகங்களை மீட்டெடுத்தல், ஊட்டச்சத்து குறைபாட்டுக்கான பிரதான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்தல், கொள்கைகள், கல்வி முறைமை, சுகாதாரம் மற்றும் உணவு தயாரிப்பு செயன்முறை போன்றவற்றில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தல் என்பனவும் ‘Enough’ செயற்றிட்டத்தின் நோக்கங்களாகக் காணப்படுகின்றன.

பசியை முடிவுக்குக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டு நாம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம். இருப்பினும் நாமனைவரும் ஒன்றிணைந்து மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

 

இப்போது பசி என்பது ஒரு குழந்தையின் பெயர். ஒரு குழந்தையின் முகம். நாமனைவரும் இணைந்து எந்தவொரு சிறுவரும் புறக்கணிக்கப்படாமல், அவர்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக அவர்கள் கல்வி பயில்வதற்கும், விளையாடுவதற்கும், ஆராய்வதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கும், முழுத்திறனையும் அடைவதற்கும் பங்களிப்புச் செய்யமுடியும்’ என வேல்ட் விஷன் லங்கா அமைப்பின் தேசிய பணிப்பாளர் கலாநிதி தனன் சேனாதிராஜா அறைகூவல் விடுத்துள்ளார்.

 

 

“வெடுக்குநாறி மலையில் கோயில்கள் எதுவேமே இல்லை. கோயில் என்று சென்றால் கைதுகள் தொடரும்” – எச்சரிக்கிறார் பாதுகாப்பு அமைச்சர்!

வெடுக்குநாறி மலையில் கோயில்கள் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள்.

 

வடக்கு மற்றும் கிழக்கு வாக்குகளை எதிர்பார்த்து ஒருதலைப்பட்சமாக கருத்துரைப்பதை எதிர்க்கட்சிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

நிகழ்நிலை காப்புச் சட்ட வரைபு 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. நிகழ்நிலைகளில் இடம்பெறும் வன்முறை மற்றும் மோசடிகளை கருத்திற் கொண்டு இச்சட்டம் விரைவாக இயற்றப்பட்டது.

 

உயர்நீதிமன்றத்தின் திருத்தங்களுடன் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதை சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் பின்னரும் ஏன் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதை அறியமுடியவில்லை.

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்குமாறு ஜனாதிபதி பரிந்துரைத்த போது அரசியலமைப்பு பேரவையின் 5 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினார்கள்.

 

பதில் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் ‘யுக்திய’ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது ஒரு தரப்பினர் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள்.

 

அரசியலமைப்பின் பிரகாரம் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.அரசியலமைப்பு பேரவையின் இரு உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபர் நியமனம் மீதான வாக்கெடுப்புக்கு கோரப்பட்ட வாக்களிப்பை புறக்கணித்தமை அரசியல் சூழ்ச்சி என்றே கருதுகிறேன் .

 

இந்த விவாதத்தில் வெடுக்குநாறிமலை பற்றி பேசப்பட்டது.கோயிலுக்கு சென்றவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.வெடுக்குநாறி மலையில் எந்த கோயில்களும் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறேன்.இந்த மலையை தொல்பொருள் திணைக்களம் அநுராதபுர யுகத்துக்கு சொந்தமான தொல்பொருள் மரபுரிமைகள் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தியுள்ளது.

 

பௌத்த மத மரபுரிமைகள் உள்ள பகுதியில் பிறிதொரு தரப்பினர் தமது மத வழிபாடுகளை முன்னெடுக்கும் போது முரண்பாடுகளே தோற்றம் பெறும்.

 

2023 ஆம் ஆண்டு இந்த மலையில் சட்டவிரோதமான முறையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததும் பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.

 

மார்ச் 04 ஆம் திகதி மதிமுகராசா என்ற பூசகர் வெடுக்குநாறி மலையில் பூஜை வழிபாட்டில் ஈடுபட வவுனியா நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளார்.

 

இந்த கோரிக்கையை நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில் மார்ச் 08 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று 400 பேர் வரை இந்த மலைக்கு சென்றுள்ளார்கள்.மாலை 06 மணி வரை மலையில் இருக்க முடியும்,06 மணிக்கு பின்னர் அங்கு எவரும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்த நிலையில் சுமார் 40 பேர் இரவு 08 மணிவரை அங்கு இருந்துள்ளார்கள்.

 

வெடுக்குநாறிமாலையில் இரவு 08 மணிவரை தங்யிருந்தவர்கள் அடுப்பு பற்ற வைத்து சட்டவிரோதமான முறையில் செயற்பட முற்படுகையில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதன் பின்னரே 08 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

 

பௌத்த மரபுரிமைகள் உள்ள இடங்களுக்கு சென்று முறையற்ற வகையில் செயற்பட்டால் பிரச்சினைகளே தீவிரமடையும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

 

சட்டவிரோதமான முறையில் எவர் செயற்பட்டாலும் கைதுகள் இடம்பெறும்.இந்து கோயில்களுக்கு சென்று பிற மதத்தவர்கள் முறையற்ற வகையில் செயற்பட்டால் அவர்களையும் நாங்கள் கைது செய்வோம்.ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வாக்குகளை எதிர்பார்த்து ஒருதலைபட்சமாக கருத்து தெரிவிப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

காலநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இரண்டாவது நாடாக இலங்கை !

காலநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இரண்டாவது நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக காலநிலை தாக்கங்களைக் குறைப்பதற்கான அணுகுமுறை திட்டத்தின் பணிப்பாளர் பந்துல சிறிமல் தெரிவித்துள்ளார்.

 

இத்திட்டத்தின் கீழ், அனர்த்த நிலைமைகள் தொடர்பான முன்னறிவிப்புத் தரவுகளை விரைவாக வழங்குவதற்காக வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அமைப்புகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

 

முன்கூட்டியே முன்னறிவிப்பு தரவுகளை வழங்குவதன் மூலம் மனித உயிர்களை மட்டுமல்லாது சொத்துக்களையும் பாதுகாக்க முடியும் என்றார்.

 

இந்நாட்டில் ஏற்படும் அனர்த்தங்களுக்காக வருடமொன்றுக்கு 238 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுவதாகவும், நீர்த்தேக்கங்கள் தொடர்பான அனர்த்த நிலைமைகளைத் தடுப்பதற்கு 152 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுவதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

அனர்த்த நிலைமைகளைத் தணிப்பதற்காக இலங்கையில் ஒரு குடும்பம் பதினெட்டாயிரம் (18,000) ரூபாவையும், ஒருவர் வருடத்திற்கு நான்காயிரம் (4,000) ரூபாவையும் செலவிட வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

மன்னாரில் எங்களுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது – அதானி குழுமம்

மன்னாரில் தான் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள காற்றாலை மின்திட்டத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் இடம்பெறுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

 

உள்நோக்கம் கொண்ட சக்திகள் மன்னாரில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள 250 மொகவோட் காற்றாலை மின்திட்டத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன என அதானி குழுமத்தின் பேச்சாளர் எக்கனமிநெக்ஸ்ட் இணையத்தளத்திற்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

காற்றாலையை அமைப்பதற்கான இடத்தை மிகவும் கவனமாக பரிசீலித்த பிறகே தெரிவுசெய்ததாக தெரிவித்துள்ள அவர் பறவைகளின் பறக்கும் பாதையில் விசையாழிகள் அமைக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் பேண்தகுஎரிசக்தி அதிகாரசபை பறவைகள் மற்றும் வெளவால்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது கொழும்பு பல்கலைகழகத்தின் விலங்கியல் மற்றும் சூழல் விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட பேராசிரியர் தேவகவீரக்கோன் தலைமையில் இந்த ஆராய்ச்சி இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் இலங்கை பறவைகள் சங்கம் போன்ற அமைப்புகளின் தரவுகளை ஆராய்ந்த பின்னரே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது எனவும் அதானி குழுமத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

சுற்றுசூழல் பாதிப்பை குறைப்பதற்காக காற்றாலை திட்டத்தை முன்னெடுப்பவருக்கு பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம் அதனைமுழுமையாக பின்பற்றுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம் சுற்றுசூழல் பாதிப்பை தவிர்ப்பதற்காகவும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இந்த திட்டத்தினை பூர்த்தி செய்வதற்காகவும் நாங்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பறவைகளை இனம் காண செயற்கை தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் ஆபத்தான தருணத்தில் டேர்பைன்கள் நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் இளைஞன் கடத்தி கொல்லப்பட்ட விவகாரம் – அடையாளம் காணப்பட்டார் ஐந்தாவது நபர் !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

 

வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் திரும்பும் வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து மனைவியுடன் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இதுவரையில் 06 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் புதன்கிழமை அடையாள அணிவகுப்பு நடைபெற்ற வேளை, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 06 சந்தேகநபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதன்போது, படுகொலையான இளைஞனின் மனைவி மன்றில் தோன்றி, ஐந்தாவது சந்தேகநபரை அடையாளம் காட்டினார்.

 

அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றையதினம் வரையில் ஆறு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டார்.

இலங்கைப் பொருளாதாரம்: காலனித்துவத்திலிருந்து ஜேவிபி – புலிகள் கிளர்ச்சிவரை !

இலங்கையின் அண்மைய கால பொருளாதார நிலை தொடர்பிலும் – அதன் வீழ்ச்சியில் காலனித்துவ காலம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பிலும் – முதலாளித்துவ சிந்தனையுடைய மேலைத்தேய நாடுகள் விடுதலை புலிகளுடன் எவ்வாறான போக்கினை பின்பற்றினர் என்பது தொடர்பிலும் – பொருளாதார நெருக்கடிக்கு பின்னைய இன்றைய காலகட்டத்தில் ஜே.வி.பி எவ்வாறு உருமாறியுள்ளது என்பது தொடர்பிலும் சமகால உலக அரசியல் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அதன் பின்னுள்ள அரசியல் போக்கு மற்றும் இலங்கையின் புதிய ஜனாதிபதி தேர்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் அருள்குமார் அவர்களுடன் பரபரப்பான ஓர் அரசியல் கலந்துரையாடல் .

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!