28

28

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத் தண்டனை !

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி 4 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் குற்றவாளி என சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டது.

 

2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல் தொடர்பில் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவித்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டது.

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தைக்கு 14 நாட்கள் விளக்கமறியல் !

அம்பாறை – மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போதே, படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இது தொடர்பான மறு விசாரணையை ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்தி வைக்குமாறும் நீதவான உத்தரவிட்டுள்ளார்.

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவில் இடம்பெற்றுள்ளது.

 

சம்பவ தினமான மார்ச் வியாழக்கிழமை (14) காலை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.

அத்தோடு, குறித்த மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் வெளியானது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை காவல் நிலையப் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு பணம் !

கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக சட்டமா அதிபர் இன்று (28) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

 

குறித்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி சுற்றாடல் நீதி மய்யத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திருமதி அவந்தி பெரேராவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த மனு இன்று எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

பொருட்களை வாங்கும் போது நுகர்வோருக்கு கடைகளில் வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் என சுற்றாடல் நீதி மையம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

 

அந்த பைகளுக்கு கட்டணம் வசூலித்தால், அவற்றின் பயன்பாடு தடைபடும் என்றும், அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்றும் மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வடக்கில் வீடற்றவர்களுக்கு 50000 வீடுகள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

 

சூரிய கலன்களின் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறித்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

 

இதனடிப்படையில் பயனாளர்களுக்கு சுமார் 45 இலட்சம் பெறுமதியான 750 சதுர அடி விஸ்தீரணமுள்ள கல் வீடுகள் பயனாளர்களுக்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வான்வழியாக அமெரிக்கா காஸாவிற்குள் உணவு விநியோகம் – இதுவரை 18 பேர் பலி!

காஸாவில் விமானங்களிலிருந்து பரசூட்மூலம் உதவிப்பொருட்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரியுள்ள நிலையில் அமெரிக்கா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

காஸாவில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக விமானங்களிலிருந்து

பரசூட் மூலம் உதவிப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

 

இந்த உணவுப் பொதிகளை பெறுவதற்கான முயற்சிகளில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பரசூட் மூலம் பொதிகளை இறக்குவதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பதிலாக, தரை வழியாக அதிகளவு விநியோகங்களுக்கு இஸ்ரேல் அனுமதிக்க வேண்டுமெனவும் ஹமாஸ் கோரியுள்ளது.

 

எனினும், வான் வழியான விநியோகம் என்பது காஸாவிலுள்ள பலஸ்தீன மக்களுக்கு உதவிகளை விநியோகிப்பதற்காக அமெரிக்கா கையாளும் வழிகளில் ஒன்று எனவும், அதை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதிக்கு பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 அயிரத்து 490 ஆக அதிகரித்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – ஏப்ரல் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு !

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் !

சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு புதிய முறைமையொன்றை இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

இதன் மூலம் பெறப்படும் முறைப்பாடுகள் நேரடியாக இங்கிலாந்தில் உள்ள “Internet Watch Foundation” க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

 

மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

 

கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .