April

April

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை  நிறுத்துவது என்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது – சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை  நிறுத்துவது என்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்த சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கம் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாராயின் சாத்தியமான நிலைமைகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு, தமிழ் மக்கள் எதிர்ப்பு வாக்கு அரசியலில் இருந்து மீள்வதுடன் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு எமது  உரிமைகளை பெற முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் வல்லமை அமைப்பினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் தேர்தல் காலங்களில் எவ்வாறு அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவது என்பது தொடர்பான இக்கலந்துரையாடலின் பின்னர் அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது :

தமிழ் பேசும் மக்கள் இவ்வளவு காலமும் எதிர்ப்பு வாக்குகளில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் இனிவரும் காலங்களில் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு தமது உரிமைகளை பெற முடியும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. நானும் அதை வரவேற்பேன். ஆனால், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொது வேட்பாளராக நிறுத்துவது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமற்ற விடயம்.

ஏனெனில், தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால், அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பது கேள்வியே.

தமிழ் பொது வேட்பாளரை நியமிக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும்.

ஆகவே, தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு வாக்கு அரசியல் முன்னெடுப்பதை நிறுத்தி, தெற்கு மக்களுடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவார்களாயின், தமிழ் மக்கள் சார்ந்து பிரச்சினைகளின் சாதகமான நிலைப்பாட்டினை அடைய முடியும் என அவர் தெரிவித்தார்.

சமையலறை கழிவுகளை வைத்து எரிவாயு உற்பத்தி – இளைஞருக்கு குவியும் பாராட்டுக்கள் !

பலாங்கொட மிரிஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் வீட்டில் உள்ள சமையலறையிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை வைத்து எரிவாயு உற்பத்தி முறைமையொன்றை கண்டுபிடித்துள்ளார்.

முகமது பிர்தாவிஸ் ரஷீத் என்ற நபரே இவ்வாறு வீட்டின் சமையலறையில் இருந்து வீசப்படும் அழுகும் குப்பைகளை பரல்களில் சேகரித்து எரிவாயு தயாரித்துள்ளார்.

இந்த கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு விடாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து எரிவாயு உற்பத்தியாக்கி வீட்டில் உணவு சமைக்க அந்த எரிவாயுவை அவர் பயன்படுத்தியுள்ளார்.

எரிவாயு உற்பத்திக்குப் பிறகு திரவ உரம் உப பொருளாக உற்பத்தி செய்யப்படுவதுடன் மேலும் திரவ உரத்தைப் பயன்படுத்தி காய்கறிகளை வளர்க்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “எனது வீட்டில் சமையல் அறையில் இருந்து சேகரிக்கப்படும் அழுகும் குப்பைகளை சேகரித்து பரல்களில் போட்டு சில நாட்கள் செரிக்க வைக்கப்படும்.

இதற்கு சுமார் ஐந்து பீப்பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன பின்னர், அந்த பீப்பாய்களில் குழாய்கள் இணைக்கப்பட்டு அதிலிருந்து எரிவாயு தயாரிக்கப்படுகிறது.

மீதமுள்ளவை கரிம திரவ உரத்தின் துணை விளைபொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வாயு வீட்டில் உணவு சமைக்கப் பயன்படுகிறது கரிம திரவ உரங்களைப் பயன்படுத்தி  விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுவதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய கண்டுபிடிப்பு இதுவாகும்.

இந்த தயாரிப்புகளை மேம்படுத்தி நல்ல தொழில் தொடங்கி நல்ல வருமானம் பெறுவதே எனது நோக்கமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்கள் இந்தியாவின் முதலீடுகளுக்காக காத்திருக்கின்றன. – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

டிஜிட்டல்மயமாக்கலின் மூலம் இந்தியா அடைந்துள்ள அசுர வளர்ச்சியுடன் நாமும் இணைந்து பயணிக்க வேண்டும். திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்கள் இந்தியாவின் முதலீடுகளுக்காக காத்திருக்கின்றன. எனவே இவற்றில் முதலீடுகளை மேற்கொண்டு இலங்கையின் வளர்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச ரோட்டரி கழகத்தின் 3220 மாவட்டத்தின் இலங்கை – மாலைதீவு மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை (26) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சேர, சோழ, பாண்டிய, பல்லவ காலத்திலிருந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெருங்கிய பிணைப்பு காணப்படுகிறது.

அந்த பிணைப்புடன் தொடர்ந்தும் முன்னோக்கி பயணிக்க வேண்டும். இந்தியாவைப் போன்று டிஜிட்டல் மயமாக்கலுடன் அபிவிருத்தியடைய வேண்டும்.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கின்றோம். கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் இந்தியாவின் முதலீட்டுக்காக காத்திருக்கின்றன.

தற்போது சிலர் இலங்கையின் எதிர்காலத்துக்கான திட்டம் குறித்து என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். அடுத்த 5 வருடங்களுக்கான நிலையான திட்டம் எம்மிடம் உள்ளது.

அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே முன்னுரிமை அளிப்போம். மாறாக நிறைவேற்றதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கல்ல.

இந்தியாவுடனான தொடர்புகள் மீன்புதுப்பிக்கத்தக்க சக்தி பரிமாற்றம் மற்றும் கல்வி என்பவற்றின் மூலம் புதுப்பிக்கப்படுகின்றன. அதற்கமைய கண்டியில் சென்னை ஐ.ஐ.டி. பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு தீர்மானித்தமைக்கு இந்தியாவுக்கு நன்றி கூறுகின்றோம். இது தவிர குருணாகல், சீதாவாக்கை மற்றும் கொழும்பிலும் மேலும் 3 புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படவுள்ளன. கல்வியை டிஜிட்டல் மயப்படுத்துவதன் ஊடாகவும் எம்மால் வேகமாக வளர்ச்சியடைய முடியும்.

நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அவற்றை வெற்றிகரமாக கடந்துள்ளோம். பரிஸ் கிளப் மற்றும் சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். அவை நிறைவடைந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் சகல நிபந்தனைகளையும் நிறைவேற்றிவிடுவோம். அதன் மூலம் நெருக்கடிகளிலிருந்து முழுமையாக வெளிவரத் தொடங்கலாம்.

சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளைப் போன்று நிலையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி அவற்றை பின்பற்ற வேண்டும். இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவைப் போன்று ஏற்றுமதி சந்தைகளை பரவலாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு உற்பத்தி பொருளாதாரத்தில் அதிக அவதானம் செலுத்த வேண்டும்.

நாம் உலகில் சிறிய தீவாகக் காணப்படுகின்ற போதிலும், பிராந்திய பொருளாதாரத்தின் கேந்திரமாகவே உள்ளோம். எனவே தான் எமது துறைமுகங்களை விஸ்தரிக்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

மறுபுறம் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்த வேண்டிய சவாலையும் நாம் எதிர்கொள்ள வேண்டும். 2019ஆம் ஆண்டு 16 சதவீதமாகக் காணப்பட்ட வறுமை நிலை தற்போது 26 வீதமாக உயர்வடைந்துள்ளது. விவசாயத்தை நவீனமயப்படுத்தி உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் ஊடாக இதனைக் குறைக்க முடியும். அதன் அடிப்படையிலேயே சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம். அத்தோடு இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளோம்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நாம் முறையாக நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றோம். அவற்றை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா அல்லது இந்த இடத்திலேயே இருப்பதா அல்லது முன்னோக்கிப் பயணிப்பதா என்ற கேள்வியை மக்கள் முன் வைக்கின்றேன். அவர்களே இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தமிழக மாணவி கைது !

அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ளனர்.

சொந்த மண்ணில் பாலஸ்தீனிய அரேபியர்கள் அகதிகளாக வாழும்நிலைக்கு இஸ்ரேல் யூதர்களால் ஆளாக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை வலுவாக முன்வைத்து அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக இஸ்ரேல் ராணுவம் காசா யுத்தத்தில் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவிப்பதைக் கண்டித்து நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலை மாணவர்கள் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது.

இதன் தொடர்ச்சியாக தற்போது பிரின்ஸ்டன் பல்கலையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரின்ஸ்டன் பல்கலை மாணவர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி:

பிரின்ஸ்டன் பல்கலை வளாகத்தின் முற்றத்தில் மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் கூடாரமிட்டுக் கடந்த சில நாட்களாக பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வந்தனர். பின்னர் பல்கலையின் பிற மாணவர்கள் சில பேராசிரியர்கள் வெளிநபர்கள் உட்பட பலர் அவர்களுடன் இணைந்து பாலஸ்தீனை ஆதரித்தும்இ இஸ்ரேலை எதிர்த்தும் கோஷமிட்டனர்.

மேற்கொண்டு கூட்டங்கள் நடத்த அவர்கள் திட்டமிட்டு வந்தனர். இதனிடையில் கடந்த புதன்கிழமை அன்று பல்கலை வளாகத்தில் இவ்வாறு கூடாரம் இடுவது விதிமுறை மீறலென நிர்வாகம் எச்சரித்து மின்னஞ்சல் அனுப்பியது. இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகிய இருவரும் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகியஇருவரும் பல்கலையின் விடுதியில் தங்க தடை விதிக்கப்பட்டி ருப்பதாகப் பல்கலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் பல்கலையைவிட்டு வெளியேற்றப் படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டமாணவி அசிந்தியா சிவலிங்கன் பிரின்ஸ்டன் பல்கலையில் சர்வதேச வளர்ச்சிக்கான பொது விவகாரத் துறையில் முதுநிலைப் பட்டம் படித்து வருகிறார்.

நரேந்திர மோடி முஸ்லீம்களுக்கு எதிராக செயற்படுவதால் ஒலுவில் துறைமுக பகுதிக்கு இந்திய உயர்ஸ்தானிகரை அனுமதிக்க முடியாது – ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான்

இலங்கையிலுள்ள பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அபிவிருத்தி செய்ய அல்லது பராமரிக்க போகின்றோம் என்ற தோரணையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது அது இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்து என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் (Kaleelur Rahman) தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார், இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணம் அம்பாறை (Ampara) மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தினை (Oluvil Port) அண்டிய பிரதேசங்கள் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு துறைமுகமும் ஒழுங்காக இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது, இதனை சீரமைப்பதில் இலங்கை அரசாங்கமும், கிழக்கு மாகாண ஆளுநரும் அலட்சியப்போக்கினை கடைப்பிடித்து வந்தனர்.

இந்நிலையில் இதனைக், காரணமாக வைத்து அந்த துறைமுகத்தை சீரமைக்கும் நோக்கில் இந்திய உயர்ஸ்தானிகர் (indian Ambassidor) கிழக்குக்கு விஜயம் செய்து அந்தத் துறைமுகம் தொடர்பில் ஆய்வு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் இந்தத் துறைமுகத்தை அண்டை நாடான இந்தியாவுக்குக் கொடுப்பதற்காக ஒலுவில் கடலை அழிக்க பொறுப்பான அதிகாரிகள் குழு எவரேனும் சதி செய்கிறார்களா என்பதை அரசாங்கம் பரிசீலித்து, இந்தத் துறைமுகத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் எடுத்து, அபிவிருத்தி செய்து,பின் அதனை முதலீட்டு திட்டங்களுக்காகத் திறந்து வைக்க வேண்டும்.

வடகிழக்கில் அண்டை நாடான இந்தியாவுக்கு நிறைவான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் வடக்கு மற்றும் மலையக பிரதேசங்களிலும் இந்தியாவுக்கு வழங்கப்படும் பெரும் மரியாதை போதுமானது. இந்தியாவை மேலும் கௌரவிக்க வேண்டும் என்றால், புவியியல் ரீதியாக இலங்கையின் கிழக்கில் கொடுக்காமல் தெற்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் கொடுப்பது நல்லது என்பது எங்களின் கருத்து.

இலங்கை மண்ணுக்குள் இந்திய அமைதிப் படை நுழைந்து செய்த அநியாயங்களால் இந்தியாவைக் கண்டு நாம் மிகவும் பயப்படுகிறோம். இலங்கை உள்நாட்டு போரின் போது இந்தியா கடைபிடித்த ராஜதந்திர விடயங்கள், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அறிக்கையின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட கருத்துக்கள் இந்தியா தொடர்பில் எங்களுக்கு மேலும் அச்சத்தை கொடுத்துள்ளது

 

கடந்த காலங்களில் இந்தியாவை நேசித்தோம் எனினும், தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மற்றும் அவரது குழுவினர் தற்போதைய தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசியதால், முஸ்லிம் சமூகம் வாழும் கிழக்கு மாகாணத்தில் இந்திய பிரவேசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே முஸ்லிம் சமூகத்தை அவமரியாதை செய்யும் ஒரு நாட்டின் அரச தலைவருக்கு எதிராக அறிக்கை விடாமல் பயந்து அவர்களுக்கு அடிபணிந்து இருக்கும் அரசியல்வாதிகள் அந்த நாட்டின் தூதுவரை கிழக்கு மாகாணத்திற்கு அழைக்க வேண்டாம் என கிழக்கு மாகாணத்தில் அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

கிழக்கின் உரிமைகள், சொத்துக்கள், இருப்புக்கள், பாதுகாப்பு தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் மத, அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இவ்வாறான காட்டிக்கொடுப்புக்களுக்கு எதிராக எழுந்து நின்று குரல் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.

கிளிநொச்சியில் திட்டமிட்டு முஸ்லீம் பாடசாலையாக மாற்றப்படும் தமிழ்க் கலவன் பாடசாலை – சுகாஸ் குற்றச்சாட்டு !

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

குறித்த பாடசாலையின் அதிபர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பதவி முத்திரையை பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த கட்சியின் பேச்சாளர் சுகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் நியமனம் வழங்கப்பட்ட கல்லூரியின் தற்போதைய அதிபர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற முத்திரையை பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Gallery

இந்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அரசினர் முஸ்லிம் கலவன்பாடசாலை என்ற பதவி முத்திரையைப் பயன்படுத்தி அதிபர் கையொப்பம் வைத்துள்ளமை யாரைத் திருப்திப்படுத்துவதற்காக என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மாணவர்கள் பழைய மாணவர்கள் பிரதேச மக்கள் கவனத்தில் எடுப்பார்களாக எனவும் அவர் வினவியுள்ளார்.

 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளது – ஜோசப் ஸ்டாலின் விசனம் !

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக, வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ். மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது.
இதே போன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவமொன்று இடம்பெற்றிருக்கிறது.
அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது அதிபராக நியமித்திருக்கின்றனர். அங்குள்ள அரசியல்வாதியான பிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும்.
எனவே, பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

அநுர குமார திசாநாயக்கவுக்கு சுவீடனில் இலங்கையர்களால் சிறப்பான வரவேற்பு !

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (27) காலை சுவீடனின் ஸ்டாக்ஹோம் (STOCKHOLM) விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அநுர குமார திசாநாயக்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை (25) இரவு இலங்கையிலிருந்து சுவீடனுக்கு பயணமானார்.
இந்நிலையில், சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
அதன்படி, இன்று சுவீடனில் NACKA AULAஇல் அந்நாட்டின் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு STOCKHOLM மக்கள் சந்திப்பை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் சுவீடன் குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களினால் சாட்சியமளிக்கும் விசாரணை தம்பலகாமத்தில் !

காணாணல்போனோர்  பற்றிய அலுவலகத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களினால் சாட்சியமளிக்கும் விசாரணை இன்று சனிக்கிழமை  (27) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது .

கடந்த யுத்த காலத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள் அது தொடர்பாக கொழும்பில் இருந்து வருகை தந்த  ஆணைக்குழு முன்னிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம், கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும், மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 48 உறவுகளுக்காக விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது .

இதில் திருகோணமலை சார்பாக 16 , கந்தளாய் 06, மொறவெவ 04, தம்பலகாமம் 22 என விசாரணைகளுக்காக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டன. இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு இடம்பெற்றன.

இதில் காணாமல் போன அலுவலக தவிசாளர், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மன்னார், மட்டக்களப்பு, யாழ்ப்பாண பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள், தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம் !

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்பினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் நேற்று மாலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கே.டி.யு.மூலம் மருத்துவ பட்டத்தினை விற்கும் அமைச்சரவை தீர்மானத்தை முறியடிப்போம் என்னும் தொனிப்பொருளில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தில்லிருந்து ஊர்வலமாக வந்த மாணவர்கள் மட்டக்களப்பு நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தினை தனியார் மயப்படுத்தி அரச பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது கே.டி.யு.மூலம் கல்வியை இராணுவ மயமாக்குவதை நிறுத்து,தேசிய கல்விக்கொள்கை கட்டமைப்பினை உடனடியாக வாபஸ்வாங்கு,கொத்தலாவல மருத்துவ கறுப்புச்சந்தையினை உடனடியாக நிறுத்துங்கள்,அரச பல்கலைக்கழகங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கு போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக வந்த மாணவர்கள் அங்கு தீப்பந்தங்களை ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டதுடன் இலவச கல்வியை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவோம் உட்பட பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.
மாணவர்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.