April

April

“மத தலைவர்கள் அரசியல் விடயங்களில் தலையிடக்கூடாது” – மஹிந்தானந்த அளுத்கமகே

“மத தலைவர்கள் அரசியல் விடயங்களில் தலையிடக்கூடாது” என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளதாவது,

இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீதோ, இதனை தடுக்கத் தவறியவர்கள் மீதோ குற்றச்சாட்டுகளை முன்வைக்காது எங்கோ ஒரு மூலையிலிருக்கும் கோட்டாபய ராஜபக்ச மீது குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

 

பேராயரின் அண்மைய ஊடக சந்திப்பின் போது அனுர அல்லது சஜித்துக்கு வாக்களிக்குமாறு கத்தோலிக்க மக்களுக்கு பேராயர் தெரிவிக்கிறார். ஒரு மதத்தலைவர் எவ்வாறு அவ்வாறான ஒரு கருத்தை தெரிவிக்க முடியும்? மதத் தலைவர்கள் என்பவர்கள் தங்களுடைய மதத்தை போதிக்கும் விடயங்களிலே ஈடுபட வேண்டுமே தவிர அரசியலை போதிக்க கூடாது.

மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களியுங்கள் என பேராயர் கூறுகிறார். தற்கொலை குண்டுத் தாக்கதாரிகளுடன் தொடர்புடைய கட்சிக்கு வாக்களியுங்கள் எனக் கூறுமளவுக்கு பேராயர் மாறியுள்ளார். சிங்கள மக்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்ற போது சிங்கள ஆட்சியாளர்கள் அதனை பயன்படுத்தி வாக்குகளைச் சேகரிக்கவில்லை.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பாரிய விடயங்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிறைவேற்றியுள்ளார்.

பேராயரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கோட்டாபய நிராகரித்துள்ளார். ஒரு மதத் தலைவராக அவர் இவ்வாறு பொய்யுரைக்கக் கூடாது. கர்தினால் அரசியலுக்குள் நுழையத் தேவையில்லை” இவ்வாறு மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 

 

இதேவேளை மதத் தலைவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாதென மகிந்தானந்த அளுத்கமகே கருத்து தெரிவித்துள்ள நிலையில் மகா

சங்கத்தினர் மற்றும் பௌத்த தேரர்கள் மட்டும் அரசியலில் ஈடுபடமுடியுமா என்ற கேள்வி எழுகின்றது.

அத்துடன் பௌத்த தேரர்கள் அரசியல் கருத்துக்களை வெளியிடமுடியும் என்றால் ஏன் ஏனைய மதங்களை சேர்ந்த மத தலைவர்கள் நீதியான அரசியல் கருத்துக்களை வெளியிட முடியாது? என்ற கேள்வியும் எழுகின்றது.

வெள்ளைமாளிகைக்கு அருகில் அமெரிக்க மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்களில் !

அமெரிக்காவில் வெள்ளைமாளிகைக்கு அருகில் அமெரிக்க மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 

அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக மாணவர்கள் வோசிங்டனில் ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திற்கு அருகில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 

காசா யுத்தத்தின் மத்தியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் அமெரிக்க பல்கலைகழகங்கள் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களில் தங்களுக்கு உள்ள தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதற்காகவும் வோசிங்டனை சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் செயற்பாட்டாளர்களும் அங்குகுழுமியுள்ளனர்.

அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழகங்களை போல ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திலும் மாணவர்கள் வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

 

ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழக மாணவர்களிற்கான எங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவும் அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழக மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காகவும் நாங்கள் இங்குவந்திருக்கின்றோம் என அனா வெசெல்ஸ் என்ற மாணவி அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

 

வெள்ளை மாளிகைக்கும்இராஜாங்க திணைக்களத்திற்கும் அருகில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

 

தலைநகரில் நாங்கள் எதனையாவது செய்யாவிட்டால் நாங்கள் எங்கள் தார்மீக கடப்பாடுகளை நிறைவேற்றவில்லை என்பதே அர்த்தம் என மாணவி வெசெல்ஸ் தெரிவித்துள்ளார்.

மே தினத்தை மக்களின் ஆட்சிக்காக மக்களை அணிதிரட்டுகின்ற நாளாக மாற்றுவோம் – ஜே.வி.பி அழைப்பு!

மே தினத்தை மக்களின் ஆட்சிக்காக மக்களை அணிதிரட்டுகின்ற நாளாக மாற்றிடுவோமென தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

 

குறித்த விடயத்தை தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் மே தினத்தில் கலந்துகொள்ளல் பற்றி கலந்துரையாடும் நோக்கத்துடன் நாங்கள் இந்த ஊடக சந்திப்பினை நடத்த தீர்மானித்தோம்.

மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாகும். அத்தோடு உலகம் முழுவதும் இருக்கின்ற தொழிலாளர்கள் மே தினத்தில் தமது நோக்கங்கள் மற்றும் இலக்குகளை வென்றெடுப்பதற்காகவும் தமது ஒற்றுமையையும் பலத்தையும் காட்டுவதற்காகவும் மே தினத்தைக் கொண்டாடுகின்றார்கள்.

இந்நிலையில், இந்த நாட்டை வங்குரோத்து அடையச் செய்வித்த கொடிய ஆட்சியை தோல்வியுறச் செய்வித்து நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய மக்கள் நேயமுள்ள ஆட்சியை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

 

அதற்கான சக்தியை அணிதிரட்டுவதே எமது தற்போதைய நோக்கமாகும். ஆனால் பெருந்தொகையான மக்களை கொழும்பிற்கு ஒன்றுதிரட்டுவது சிரமமானதென்பதால் பெருமளவிலான மக்களை தொடர்புபடுத்திக் கொள்வதை நோக்கமாகக்கொண்டு நாங்கள் நான்கு இடங்களில் மே தினத்தை கொண்டாட தீர்மானித்துள்ளோம்.

இதற்கமைய, யாழ்ப்பாணம், அநுராதபுரம், கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய நான்கு பிரதான நகரங்களில் நான்கு மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டத்தை முதலாம் திகதி காலைப்பொழுதிலும் ஏனைய மே தினக் கூட்டங்களை மாலைப்பொழுதிலும் நடாத்தக் கருதியுள்ளோம்.

 

மக்களின் உரிமைகளைப் பறிக்கின்ற இந்த ஆட்சியைக் கவிழ்த்து மக்களாட்சியை உருவாக்குவதற்காக மக்களை அணிதிரட்டுகின்ற மே தினமாக இந்த மே தினத்தை மாற்றிக்கொள்வோமென உழைக்கும் மக்களை முதன்மையாகக்கொண்ட ஒட்டுமொத்த மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் தற்போது அதிகரித்துவருவதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இதன்போது பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஸ்பிரயோகங்களுக்குள்ளாவது மற்றும் போதைக்கு அடிமையாவதானால் உண்டாகும் தாக்கங்கள் தொடர்பிலும் வைத்தியர் க.வாசுதேவா தெளிவு படுத்தினார்.

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 16 பெண்கள் உட்பட 660 பேர் கைது !

நாடளாவிய ரீதியில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 16 பெண்கள் உட்பட 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் 23 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 3 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சந்தேக நபர்களிடமிருந்து 66 கிராம் ஹெரோயின், 232 கிராம் கஞ்சா , 167கிராம் ஐஸ் , 653 கிராம் கஞ்சா மற்றும் 20 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Children of Gaza Fund – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்திற்கு பலரும் நிதியுதவி!

காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான (Children of Gaza Fund) நிதி நன்கொடைகள் வெள்ளிக்கிழமை (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.

 

கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் 1,589,000 ரூபாவையும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிண்ணியா கிளை 5,300,000 ரூபாவையும், கல்முனை வலயக் கல்வி அலுவலகம் 3,128,500 ரூபாவையும், Sports First Foundation 300,000 ரூபாவையும் சிறுவர் நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.

முதற்கட்டமாக, இந்த ஆண்டு இப்தார் நிகழ்வை நடத்துவதற்கு அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் ஒதுக்கிய நிதியில் இருந்து கிடைத்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை, ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழு மூலம் பலஸ்தீன அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கையளித்தார்.

அத்துடன், “Children of Gaza Fund” நிதியத்திற்கு பங்களிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய, அந்த நிதியத்திற்கு பெருமளவான நிதி கிடைத்துள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் குறித்த பணம் உத்தியோகபூர்வமாக பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

 

நன்கொடையாளர்கள் 2024 ஏப்ரல் 30, வரை மாத்திரமே இந்த நிதியத்திற்கு தொடர்ந்து பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் நன்கொடைகளை வழங்க விரும்புவர்கள் இருப்பின், அந்த நன்கொடைகளை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை வங்கியின் (7010) தப்ரோபன் கிளையில் (747) உள்ள கணக்கு இலக்கமான 7040016 க்கு வைப்பீடு செய்ய வேண்டும் என்றும் அது தொடர்பான பற்றுச் சீட்டை 077-9730396 என்ற எண்ணுக்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

இந்த நன்கொடைகளை கையளிப்பதற்கான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் சரத் குமார ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

புலிப்பயங்கரவாத அமைப்புடன் இருந்ததற்காக எல்லா பழிகளையும் என் மீது போடாதீர்கள் – நாடாளுமன்றத்தில் பிள்ளையான்!

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நேற்று சபையில் சாணக்கியன் பிள்ளையான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய வேண்டுமானால் பிள்ளையானை கைது செய்து விசாரணை செய்யவேண்டும் என நேற்று நாடாளுமன்றத்தில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

 

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் நேற்று சபையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளதாகவும் ஆனால் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காது உடலை எரித்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இன்று சபையில் சாணக்கியனின் கருத்தினை மறுத்துக் கருத்து வெளியிட்டிருந்ததுடன், தானும் ஏற்கனவே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பில் இருந்ததாகவும் அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.

 

அத்துடன் ஜே.வி.பி உள்ளிட்ட அமைப்புக்களும் பல பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தான் யார் என்பதை தனது மக்கள் நன்கு அறிவார்கள் எனவும், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பட்டார்.

வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவம் – மேலும் ஒருவர் கைது !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ,வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்று, கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதுடன், மனைவியை வீதியில் இறக்கி விட்டு சென்று இருந்தனர்.

 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் இதுவரையில் 09 பேரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்றால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் காரைநகர் பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுளளார்.

 

கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பளத்துடன் இரா.சம்பந்தனுக்கு மூன்றுமாத பாராளுமன்ற விடுமுறை!

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று (25) அனுமதி வழங்கியது.

 

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த தீர்மானத்தை ஆதரித்தார்.

 

91 வயதாகும் ஆர் சம்பந்தன் தற்போது சுகயீனமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளையானை கைதுசெய்து விசாரணை நடத்துங்கள் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கைது செய்யலாம் – இரா.சாணக்கியன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானை கைதுசெய்து விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 2005இல் இடம்பெற்ற பல்வேறு கொலைகள் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்ள முடியும்.

 

அதேநேரம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுமாக இருந்தால் அதில் சாட்சி சொல்வதற்குப் பலரும் இருக்கின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாணக்கியன் ராவமாணிக்கம் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் நடந்திருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் 2005ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் செயற்பட்டு வந்துள்ளன.

 

இது தொடர்பில் அடிக்கடி கூறியிருந்தாலும் இதன் பாரதூர தன்மை தொடர்பில் புரிந்துகொள்ளாது இருக்கின்றனர். எவ்வாறாயினும் தற்போது 2014ஆம் ஆண்டில் நடந்த சம்பவமொன்று தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இலங்கையில் புலனாய்வுத்துறையுடன் சம்பந்தப்பட்ட மூன்று இனங்களையும் சேர்ந்த புலனாய்வுக் குழு அதிகாரிகளின் குழுவொன்றே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளன.

 

2004ஆம் ஆண்டில் ஈமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாயிஸ், ஆமி மொஹிதீன், கலீல் ஆகிய மூவரையும் உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கலீல் என்ற நபர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சிறைக்குச் சென்று விடுதலையானவர்.

2009 ஆம் ஆண்டில் திருகோணமலையில் 6 வயது வர்ஷா என்ற சிறுமி பெற்றோரிடம் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலைக்குப் பொறுப்பான மேர்வின் என்பவர் கைது செய்யப்பட்டார் ஜனார்த்தனர், நிசாந்தன், ரெஜினோல்ட் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பின்னர் பொலிஸாரின் பொறுப்பிலிருந்த போதே உயிரிழந்துள்ளனர்.

 

இதேவேளை 8 வயது சிறுடு ஒருவரும் கப்பம் கோரி 2009இல் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் அவர்கள் நால்வரும் அரச படையினரால் கொலை செய்யப்பட்டனர்.

 

புலனாய்வு பிரிவின் குழுவினர் தமது நோக்கத்திற்காகக் கப்பம் பெறும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன், அதன்பின்னர் கைது செய்யப்படுபவர்களைக் கொல்லும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு பலர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவங்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இடையே என்ன தொடர்பு என்று நினைக்கலாம். ஆனால் 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் திட்டமிட்டு கிழக்கில் ஸ்தீரமற்ற நிலைக்குக் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறாகப் பரிசோதிக்கப்பட்ட விடயங்களே பின்னர் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. பிள்ளையான் உள்ளே இருந்தால் அவர் பலவற்றை கூறலாம் என்பதனால் அவரை விடுதலை செய்ய நடவடிக்கையெடுத்துள்ளனர்.

 

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளார். மரண பரிசோதனைக்கு இடமளிக்காது அவரின் உடலை எரித்துள்ளனர்.

 

அதனால் 2005ஆம் ஆண்டு முதல் ஈஸ்மர் தாக்குதல் வரை இடம்பெற்ற கொலை சம்பவங்களுக்குத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குத் தொடர்பு இருக்கிறது. அதனால் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த கட்சியின் தலைவை கைதுசெய்து விசாரணை நடத்தினால் இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ளலாம். எனவே மட்டக்களப்பு மாவட்ட வாக்குகளைப் பார்க்காமல் ஜனாதிபதி அவரை கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.