April

April

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் இதுவரையில் 5,555 விசாரணைகள் பூர்த்தி !

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் இதுவரையில் 5,555 விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றில் சுமார் 4,200 விண்ணப்பங்கள் இடைக்கால நிவாரணத்திற்காக, இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் ரூபராஜா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” இதுவரையில் எமது காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு 21,000முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

 

அவற்றில் முப்படையினர்,பொலிஸார்,இரட்டைப்பதிவுகள் நீக்கப்பட்ட நிலையில் 14,988விண்ணப்பங்கள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

 

இவற்றில் 5,555 விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 4,200விண்ணப்பங்கள் இடைக்கால நிவாரண கொடுப்பனவுக்காக இழப்பீட்டு அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 2000, சிபாரிசு கடிதங்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு இறப்பு சான்றிதழைப்பெற்றுக்கொடுக்க அனுப்பப்பட்டுள்ளது” இவ்வாறு ரூபராஜா தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் தாண்டியும் யாழில் வீடுகள் இன்றி தவிக்கும் 1,500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் !

யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 1,500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்விடங்கள் இன்றித் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் யாழில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்போது யாழில் இடம்பெயர்ந்த “1,512 குடும்பங்களைச் சேர்ந்த 4,567 பேர் உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர் எனவும், 10 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் குறித்த மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள் எனவும், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வருடத்திற்குள் அவர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதனையடுத்து இதுவரை மீள்குடியேறாத மக்களை மீள்குடியேற்றுவதற்கான வேலைத்திட்டம் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட ஏனைய வசதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஆளுநர், மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிரான மாணவர்கள் போராட்டங்களால் திணரும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள்!

அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவகளிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ள பொலிஸார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கைதுசெய்துள்ளனர்.

 

அவுஸ்டினின் டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட 34 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தென்கலிபோர்னியா பல்கலைகழகத்தில் 50க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

இஸ்ரேலுடன் தொடர்புகளை கொண்டுள்ள ஆயுதவியாபாரிகளுடனான தொடர்பை துண்டிக்கவேண்டும் என கோரி நியுயோர்க்கின் கொலம்பியா பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழகத்தை சூழ கூடாரங்களை அமைத்து போராட்டங்களை ஆரம்பித்ததை தொடர்ந்து அமெரிக்காவின் பல பல்கலைகழங்களில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் பல்கலைகழகங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

கலிபோர்னியாவில் யுசிபேர்க்லே மற்றும் யுஎஸ்சி பல்கலைகழங்களில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

 

கலிபோரினா அரச பொலிடெக்னிக் பல்கலைகழகத்தில் தளபாடங்கள் கூடாரங்கள் போன்றவற்றை பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் பல்கலைகழகத்திற்குள் முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டதால் பல்கலைகழகம் மூடப்பட்டது.

பாலஸ்தீன ஆதரவு குழுவை சேர்ந்த மாணவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டமைக்கும் காசா யுத்தத்திற்காக பல்கலைகழகம் இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தும் ஹவார்ட் பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழக வளாகத்திற்குள் கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

மாசசூட்ஸ் முதல் கலிபோர்னியா வரை பல பல்கலைகழங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணிகள் மற்றும் பல்கலைகழகங்களை சுற்றி முற்றுகையிடும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஒத்திவைக்கப்பட்டது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான வழக்கு !

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

ஐந்தாவது எதிராளியான சண்முகம் குகதாசன் இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகததால், திருகோணமலையில் அவரது சரியான முகவரிக்கு மீண்டும் அழைப்பு கட்டளை அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதன்போது முதலாம் மற்றும் மூன்றாம் எதிராளிகள் தரப்பு சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைக்க கால அவகாசம் கோரினார்.

 

இதனையடுத்து எதிராளிகள் தமது சமர்ப்பணங்களை முன்வைக்க அவகாசம் வழங்கி ஜீன் 20ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றதை தொடர்ந்து வழக்கு எதிர்வரும் மே 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல் நான்கு மாதங்களுக்குள் வெளிநாட்டு வேலை தொடர்பில் 1,371 முறைப்பாடுகள் !

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு வேலை தொடர்பில் 1,371 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்த்தல் , வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடிகள் செய்தல் , சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு மக்களை வழிநடத்துதல் போன்ற குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

அவற்றில் 495 முறைப்பாடுகள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில் முறைப்பாட்டாளர்களுக்கு சொந்தமான சுமார் 53,509,520 ரூபா பணத்தை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 

இந்நிலையில், 680 முறைப்பாடுகள் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இதேவேளை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் 28 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

 

மேலும், அனுமதியின்றி சட்டவிரோதமாக நடத்தப்பட்டதாக கூறப்படும் 8 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய சூழல் சுட்டு விளையாடும் திடல் அல்ல – பரபரப்பான வழக்கில் நீதிபதி!

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் இருந்து, நல்லூர் , சங்கிலியன் வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , நல்லூர் ஆலய தெற்கு வாசல் கோபுரத்திற்கு அருகில் இருவர் போக்குவரத்திற்கு இடையூறாக செயற்பட்டனர்.

 

அதனை அடுத்து நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜெண்ட் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, மோதலில் ஈடுபட்டிருந்த நபர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உத்தியோகபூர்வ துப்பாக்கியை பறித்து பொலிஸ் உத்தியோகஸ்தரை சுட்டதுடன் நீதிபதியின் காரினையும் நோக்கி சுட்டிருந்தார்.

 

துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்ததுடன், மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்திருந்தார். நீதிபதி தெய்வாதீனமாக காயங்கள் இன்றி உயிர் தப்பி இருந்தார்.

 

இது தொடர்பான வழக்கில் நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

 

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

 

அதன் போது , நேற்று புதன்கிழமை (24) நீதிபதி இளஞ்செழியன் மன்றில் தோன்றி, தனது சாட்சியங்களை பதிவு செய்தார்.

 

சம்பவ தினத்தன்று மேல் நீதிமன்றில் இருந்து எனது காரில் யாழ். – கண்டி வீதி வழியாக சென்று , கோவில் வீதி வழியாக எனது உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி பயணித்தேன்.

 

காரினை எனது சாரதி ஓட்டினார். அவருக்கு அருகில் எனது ஒரு மெய்ப்பாதுகாவலர் அமர்ந்திருந்தார். நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தேன்.

 

எனது கார் சாரதியின் மோட்டார் சைக்கிளை எனது மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் செலுத்தி வந்தார்.

 

நல்லூர் ஆலய பின் வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமையால் , மோட்டார் சைக்கிளில் முன்னே சென்ற எனது மெய்ப்பாதுகாவலர் வீதியின் போக்குவரத்தினை சீர் செய்து எனது காரினை சந்தியால் பருத்தித்துறை வீதி பக்கம் அனுப்பினார்.

அவ்வேளை காரின் பின் புறமாக இருந்த நான் காரின் கண்ணாடி வழியாக பின் புறம் அவதானித்த போது , சிவில் உடை தரித்த நபர் ஒருவர் வீதியில் போக்குவரத்தினை சீர் செய்து கொண்டிருந்த எனது மெய்ப்பாதுகாவலரின் இடுப்பு பட்டியில் இருந்த துப்பாக்கியை பறிக்க முற்பட்டார்.

 

அதனை அவதானித்து காரினை நிறுத்துமாறு சத்தமிட்டேன். மெய்ப்பாதுகாவலர் சிவில் உடை தரித்தவரிடம் இருந்து தனது துப்பாக்கியை பறிக்க மல்லுக்கட்டினார்.,

 

நான் காரினை விட்டு இறங்கி துப்பாக்கியை கீழே போடுமாறு கத்தினேன். எனக்கும் அவர்களுக்கும் இடையில் 12 – 15 அடி இடைவெளி இருந்தது. துப்பாக்கியை பறித்தவர் துப்பாக்கியை லோர்ட் செய்தார். சிறிது நேரத்தில் “மகே அம்மே ” என கத்தியவாறு எனது மெய்ப்பாதுகாவலர் வயிற்றை பிடித்தவாறு சரிந்து விழுந்தார்.

 

அடுத்து துப்பாக்கியுடன் நின்றவர் என்னை நோக்கி சுட்டார் உடனே என்னுடன் காரில் பயணித்த மற்றைய மெய்ப்பாதுகாவலர், என்னை காரின் இடது புறம் தள்ளி விட்டு கீழே படுத்துக்கொண்டார்.அவ்வேளை அவரது இடது தோள் புறத்தில் துப்பாக்கி சூடு பட்டது. பதிலுக்கு எனது மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

 

இருவரது துப்பாக்கி ரவைகளை தீர்ந்த நிலையில் , சிவில் உடை தரித்தவர் எனது காரின் எதிர்புறமாக பருத்தித்துறை வீதி வழியாக ஓடி தப்பினார்.

 

துப்பாக்கி சூடு நடத்தியவரை சுமார் 12 நிமிடங்கள் நேரில் பார்த்தேன் என்பதால், எதிரி கூண்டில் நிற்கும் எதிரி தான் துப்பாக்கி சூட்டினை நடாத்தினார் என நன்கு தெரியும் என கூறினார்.

 

குறுக்கு விசாரணையின் போது, எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , “முச்சக்கர வண்டி சாரதிக்கு இடையிலான முரண்பாட்டின் போது, உங்கள் மெய்ப்பாதுகாவலர் தலையீடு செய்தமையால், ஏற்பட்ட முரணாலேயே துப்பாக்கி சூடு இடம்பெற்றது, உங்களை கொல்லவேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை” என குறிப்பிட்டதை , நீதிபதி மறுதலித்து ” நல்லூர் ஆலய சூழல் சுட்டு விளையாடும் திடல் அல்ல என தெரிவித்தார்.

 

நீதிபதியின் சாட்சியம் நிறைவுற்றதை அடுத்து , நீதிபதி பலத்த பாதுகாப்புடன் , நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார்.

 

அதேவேளை , சம்பவ தினத்தன்று , நீதிபதியின் மற்றுமொரு மெய்ப்பாதுகாவலராக கடமைக்கு சென்று , துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது சாட்சியத்தின் போது , துப்பாக்கி சூட்டில் எனது நண்பர் படுகாயமடைந்த நிலையில் , நான் எனது நண்பரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. அதனால் சூழலை என்னால் முழுமையாக அவதானிக்க முடியவில்லை. என கண்ணீருடன் தனது சாட்சியத்தை பதிவு செய்தார்.

 

குறித்த வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

மன்னாரை துறைமுக நகரமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார

ரணில் விக்கிரமசிங்க அரசியலில் நீண்டகாலம்  இருந்த போதிலும் ஜனாதிபதியாக முதற்தடவையாக பதவியேற்றுள்ளார். இந்த முதற் சந்தர்ப்பத்திலே வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதி என்று பாராமல் சகலருக்கும் சமனாக சேவை செய்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக் காட்டினார்.

மன்னாரில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி வழங்கும் நிகழ்வு கடந்த 21 ஆம் திகதி நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது ஜனாதிபதி பதவி இது என்பதை மறந்து விடாதீர்கள். 2015 ஆம் ஆண்டில் தமிழில் தேசிய கீதத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் அனைவருக்கும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான கொள்கைகளை செயல்படுத்துவது போன்ற முயற்சிகளில், தேசத்தை உயர்த்துவதற்கான ஒரு பார்வை அவருக்கு உள்ளது.

“குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அரிசி விநியோகம் நாடு தழுவிய ரீதியில்  நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதியின் இலக்கு காலவரையின்றி மானியங்களை நம்பியிருக்கவில்லை. மாறாக, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, குடும்பங்களை மேம்படுத்துவது மற்றும் தன்னிறைவை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளார்” என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

மன்னாரின் அபிவிருத்தி தொடர்பில், மன்னாரை துறைமுக நகரமாக மாற்றுவதற்கும், இந்தியாவுடனான படகு சேவையை புத்துயிர் பெறுவதற்கும் ஜனாதிபதியின் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் அதிகமாக மன்னார் மாவட்டத்தில்  சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. உள்ளூர்வாசிகளின் வருமானத்தை அதிகரிக்க ராமர் பாலம் போன்ற இடங்கள் பயன்படுத்தப்படுகின்றது.

வட மாகாணத்தின் போருக்குப் பின்னரான போராட்டங்களை அங்கீகரித்த அமைச்சர், முன்னேற்றத்திற்கான அடித்தளக் கூறுகளாக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளித்து, நாடு முழுவதும் சமத்துவமான அபிவிருத்திக்கு ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றார் என தெரிவித்தார்.

ஜே.வி.பி அரசியல் ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது – சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவு பிரதிநிதியும் அமைச்சருமான ஷன் ஹயன்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவு பிரதிநிதியும் அமைச்சருமான ஷன் ஹயன் தலைமையிலான குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

இதன் போது தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத்திணைக்களத்தின் பிரதி அமைச்சர் ஷன் ஹய்ன் தலைமையிலான குழுவினர் அநுர குமாரவிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது நடப்பு அரசியல் நிலைமை, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள் மற்றும் வளர்ந்துவரக்கூடிய அரசியல் நிலைமைகள் பற்றி குறிப்பாக இருதரப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டன.

தேர்தல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை, அதன்பொருட்டு கடைப்பிடிக்க எதிர்பார்த்துள்ள வழிமுறைகள் மற்றும் உபாயமார்க்கங்கள் பற்றியும் தோன்றியுள்ள நெருக்கடியான நிலைமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முதலில் அரசியல் உறுதிநிலையை நாட்டில் உருவாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசியல் துறையில் வேகமாக வளர்ந்துவந்து மக்கள் மத்தியில் பிரபல்யத்யத்தையும் கவர்ச்சியையும் அடைகையில் கடைப்பிடித்த வழிமுறைகள் மற்றும் அமைப்பாண்மைப் கட்டமைப்புகள் தொடர்பிலும் சீனத் தூதுக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பல்வேறு மக்கள் குழுக்கள், சமூக அடுக்குகள் மற்றும் வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுடன் நிலவுகின்ற உறவுகள், நாட்டைக் கட்டியெழுப்புகையில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள், கட்சிக் கட்டமைப்புகள் பற்றி தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இவ்வேளையில் சீனத் தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் கொண்டுள்ள பரஸ்பர நம்பிக்கை, சமூக கலாசார உறவுகள் மற்றும் ராஜதந்திர உறவுகளை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மேலும் வளர்த்துக்கொள்வது மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்கையில்  மேற்படி உறவுகளைப் பிரயோகிக்கக்கூடிய விதங்கள் பற்றியும்  இருதரப்பினருக்கும் இடையில் மேலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இச் சந்திப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி அமைச்சரும் அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான ஷன் ஹய்ன், சீன கம்யூனிஸ கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் லின்தோ, கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் கவுன்ஸிலர் சென் சியன்ஜியான், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகார திணைக்களித்தின் பணிப்பாளர் லி ஜின்யன், பிரதி பணிப்பாளர் வென் ஜின், பிரதி அமைச்சின் செயலாளர் ஜின் வன், கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் இரண்டாம் செயலர் ஜின் என்ஸ் மற்றும் மொழிபெயர்ப்பாளர் சாங் குயு ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம்செய்து தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான விஜித ஹேரத், கலாநிதி ஹரினி அமரசூரிய, பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவில் தீவிரமடையும் இஸ்ரேலுக்கு எதிரான பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் !

அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கொலம்பிய பல்கலைகழகம் வகுப்பறை கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. நியுயோர்க் பல்கலைகழகத்திலும் யால் பல்கலைகழகத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவின் பல பல்கலைகழகங்கள் ஹமாசிற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்தினால் உருவாகியுள்ள பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

கொலம்பிய பல்கலைகழகத்தின் வெளியே முகாமிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டனர்.

அதேவேளை ஏனைய பல்கலைகழகங்களில் கொலம்பிய பல்கலைகழகத்தில் ஏற்பட்ட நிலை உருவாகியுள்ளது.

நியுயோர்க் பல்கலைகழகத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பல்கலைகழத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர்.

முதலில் அவர்களை வெளியேற சொன்னோம்  எனினும் நிலைமை குழப்பகரமானதாக மாறிய பின்னர் பொலிஸாரை அழைத்தோம் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மிரட்டும் கோசங்கள் மற்றும் யூத எதிர்ப்பு கோசங்களை கேட்க முடிந்ததாக  பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வளாகத்திற்குள் மாணவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு பல்கலைகழகம் அனுமதிப்பது கடும் கண்டணத்திற்குரியது என நியுயோர்க் பல்கலைகழக சட்டககல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள்காரணமாக மாணவர்கள் மத்தியிலான பதற்றமும் அதிகரித்து காணப்படுகின்றது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை தங்களது பல்கலைகழகங்கள் கண்டிக்கவேண்டும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் இருந்து விலகியிருக்கவேண்டும் என பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

இதேவேளை இஸ்ரேலிற்கு எதிரான விமர்சனங்கள் அனேகமாக யூதஎதிர்ப்பை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய மாணவர்கள் தாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதுடன் ஹமாஸ் இன்னமும் பணயக்கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொலம்பிய பல்கலைகழகத்திலும் பதற்ற நிலை அதிகமாக காணப்படுகின்றது.

அனுரகுமார – சஜித்பிரேமதாஸ இடையே விவாதத்தை நடத்துவதற்கு நாம் தயார் என சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியம் அறிவிப்பு !

தேசிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான விவாதத்தை நடத்துவதற்கு தமது சங்கம் தயாராக இருப்பதாக சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான விவாதத்தை சட்டக்கல்லூரி வளாகத்தில் நடத்தவும், அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க விருப்பம் தெரிவித்து அக்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தேசிய மக்கள் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் கட்சிக்கும் இடையில் நடைபெறவுள்ள விவாதத்தை சட்டக்கல்லூரியில் நடத்துமாறு தமது சங்கம் இரு கட்சிகளின் தலைவர்களிடம் முன்மொழிந்துள்ளதாக இலங்கை சட்டக்கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவர் நவோத் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கும் ,ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த விவாதத்தின் ஊடாக இலங்கை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு முன்வைக்கும் பொருளாதார கொள்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வாய்ப்புள்ளதாக சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.