April

April

இலங்கை தமிழர்கள் என எங்களை அடையாளப்படுத்தாதீர்கள் – இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த இலங்கை தமிழ்ப்பெண்!

இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, நளினி என்ற இலங்கை பெண் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை அகதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நளினி என்ற பெண்ணுக்கு, இம்முறை திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிக்க வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

 

குறித்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் முதல் முறையாக இவருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்களித்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள நளினி, “இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை, மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கண்காணிப்புடன் வைத்திருப்பார்கள். அதனால் இங்குள்ள மக்கள் மன உளைச்சலில் காணப்படுகின்றனர்.

எங்களை இலங்கைத் தமிழர் என்று தெரிவிப்பதை விட, இந்திய வம்சாவளியினர் என்று அதிகாரிகள் அடையாளப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுகிறது – ஐ.நா சுட்டிக்காட்டு !

காசாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

 

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (United Nations Children’s Fund) மற்றும் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் ( United Nations Office for the Coordination of Humanitarian Affairs) ஆகியவை காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளன.

 

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் கூற்றுப்படி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒரு பலஸ்தீன குழந்தை கொல்லப்படுகிறது அல்லது காயமடைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது காசா சுகாதார அமைச்சகத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஏப்ரல் ஒன்று முதல் வடக்கு காசா மற்றும் தெற்கு காசாவின் சில பகுதிகளுக்கு மனிதாபிமான உதவி பணிகளில் 15% இஸ்ரேலிய அதிகாரிகளால் மறுக்கப்பட்டுள்ளன அல்லது தடை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் இந்த புள்ளிவிவரங்கள் காசாவில் ஏற்பட்டு வரும் மோசமான மனிதாபிமான நெருக்கடியை குறிப்பிட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபரின் இலங்கை வருகை ஒத்திவைப்பு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நோக்கில் ஈரான் அதிபர் எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

ஆனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபரின் இலங்கை விஜயத்தின் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் கொழும்பில் உள்ள ஈரான் தூதுவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் 24ஆம் திகதி ஈரான் அதிபர் இலங்கைக்கு வராவிட்டால் உமா ஓயா திறப்பு தினத்தை ஒத்திவைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடற்படை கொமாண்டர் கைது !

போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் 2 பேர் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சந்தேகநபர்களிடம் இருந்து 510 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அவற்றின் பெறுமதி 7.5 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

2 வருடங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறிய 1,800 வைத்தியர்கள் !

கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் அந்த சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

 

குறித்த காலப்பகுதியில் சுமார் 300இற்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இதேவேளை, ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த மூன்றாவது மயக்கவியல் வைத்திய நிபுணர்களும் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னதாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேவையாற்றிய இரண்டு மயக்கவியல் வைத்திய நிபுணர்கள் முன்னறிவிப்பின்றி வெளிநாட்டுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்று 60000 இளைஞர்களின் உயிரை பறித்த ஜே.வி.பி இன்றும் இளைஞர்களை அழித்துக் கொண்டு இருக்கின்றது – அமைச்சர் மனுஷ நாணயக்கார

நாட்டைக் காப்பாற்ற வருவோம் என்று தம்பட்டம் அடித்தவர்கள் அன்று 60,000 இளைஞர்களின் உயிர்களை பறித்தவர்கள். ஆனால் இன்று இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்குச் செல்வதைத் தடுப்பதன் மூலம் அன்று செய்த தீங்குகளை மக்கள் விடுதலை முன்னணி இன்றும் செய்துவருகிறது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

 

உமண்தாவ பௌத்த உலகளாவிய கிராமத்தில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகளுக்காகத் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான முதலாவது வதிவிட பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார் .

 

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

 

இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டம் மூல்ம் இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை செய்பவர்களுக்கு விரிவான பயிற்சி மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவால்களை எதிர்கொண்டு தமது பணிகளை வெற்றிகரமாகச் செய்வதற்கும் நாட்டிற்கு மீள வந்த பின்னர் தொழில்முனைவோராக வெற்றிபெறுவதற்குத் தேவையான பயிற்சிகள் இங்கு வழங்கப்படும்.

 

எங்களின் முதன்மை நோக்கம் விவசாய தொழில் மற்றும் நிர்மாணத்துறை பயிற்சி அளிப்பதன் மூலம் வாழ்க்கையை கற்பிப்பதாகும். நாட்டில் விவசாயத் தொழிலுக்கு பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும் நீங்கள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் எதுவும் இல்லை. மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கான ஒரே இடம் உமண்தாவ என்று முடிவு செய்தோம். தேவையான ஒழுக்கமான சூழலும் மனவலிமையை அளிக்கக்கூடிய சூழல் இங்கு உள்ளது.

 

விவசாயத் தொழில் எப்படி நவீனப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இங்கு அனுபவபூர்வமாக காண முடிகிறது. பரந்து விரிந்த அறிவை இங்கு பெற்றுக்கொள்ள முடியும். இஸ்ரேல் உட்பட பல நாடுகளுக்கு இளைஞர்களை அனுப்புகிறோம். இவர்கள் வெளிநாடு சென்று திரும்பி வர வேண்டிய சூழலை உருவாக்க விரும்புகிறோம், பணத்தைப் மாத்திரம் தேட வல்ல , தோல்வியடையாது வாழ்க்கையை வெல்லும் குழுவாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்திட்டத்தை இன்று ஆரம்பிக்கிறோம்.

இதுவே சமூக முன்னேற்றத்தின் ஆரம்பம். இந்த நாட்டை தொழிலதிபர்கள், இந்த மண்ணை நேசிக்கும் மக்கள் நிறைந்த நாடாக மாற்றும் வேலைத்திட்டத்தின் அழகுதான் இன்று இங்கு நடக்கிறது.

 

இந்த நாட்டில் இளைஞர்கள் மற்றும் கல்வி தொடர்பில் பாரிய பிரச்சினை உள்ளது. ஆனால் நாட்டில் கல்வி சிந்திக்கக்கூடியவர்களை உருவாக்கவில்லை. நமது கல்வி சிந்திக்க முடியாத சிலரை உருவாக்குகிறது, பின்னர் உயர்கல்வி மனப்பாடம் செய்யும் ஒரு குழுவை உருவாக்குகிறது.

 

மேலும், கற்பனையே இல்லாமல் வெறும் மிதக்கும் ஒரு சிலரை ஊடகங்கள் உருவாக்கும் போது, நம்மால் முடிந்தவரை மக்களை மாற்ற முயல்கிறோம். அதற்கிணங்க இந்த நாட்டை மாற்றியமைத்து கட்டியெழுப்பி ஒரு தேசமாக நாம் வெற்றிப் பயணத்தை ஆரம்பிக்கின்றோம்.

 

நாட்டுத் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என்று பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படும் இவ்வேளை இதனை தேசியப் பொறுப்பாக கருதுகிறோம். அண்மைக் காலத்தில், 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுத் தொழிலாளிகளால் அந்நிய செலாவணியாக நாட்டிற்கு கொண்டு வர முடிந்தது.

 

நாட்டுக்கு தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைப்பது கடினமாக இருந்தது. ஆனால் மற்றொரு குழு வெளிநாட்டு தொழிலாளர்ககளிடம் நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறியது. ஆனால் நாம் நாட்டின் நிலைமையை மாற்றியுள்ளோம் என்றார்.

ஜே.வி.பிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து போரிட்டாலும் நாம் எதிர்கொள்ளத்தயார் – நலிந்த ஜயதிஸ்ஸ

மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டாலும் அதனை தாம் வரவேற்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ரணில், சந்திரிக்கா, சஜித், மஹிந்த, கோட்டாபய மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஒன்றாக இணைந்து எங்களுக்கு எதிராக போட்டியிடுவார்களாக இருந்தால் அப்போதுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றி.

எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதனை நாம் விருப்பத்துடன் வரவேற்போம்.

கடந்த 1947 ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி செய்த அனைவருமே இந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தனர். எனவே இவர்கள் ஒன்றாக இணைந்து எம்மை எதிர்க்கும் போது அதனை மக்களுக்கு இலகுவாக அடையாளம் காட்டமுடியும்.

நாட்டில் தீய விளைவுகளை ஏற்படுத்தியவர்கள் இவர்களே. நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் இவர்களே நாட்டை கொள்ளைடித்தவர்களும் இவர்களே.எமது பக்கம் இருப்பவர்கள், நாட்டை வளச்சி பாதையில் இட்டுச் செல்ல எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்கள்.

புதிய வேலைத்திட்டங்களுடன், புதிய அரசியல் தலைவருடன் மக்களின் திசைக் காட்டியாக எம்முடன் பலர் இருக்கிறார்கள்.

இன்னும் இரு நாட்களில் குறித்த இரு குழுக்கள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரியவரும் என நினைக்கின்றேன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தற்போது சந்திரிகாவின் காலடியில் வைத்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவில் அநேகமான அமைச்சர்கள் தற்போது ரணிலுடன் இருப்பதாக கூறப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்திக்கும் தற்போது வலைவீசப்பட்டுள்ளது” இவ்வாறு நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருட்டுத்தனமாக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் சுண்ணக்கல் – யார் அனுமதி கொடுத்தது என சிறீதரன் கேள்வி!

யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் தினசரி சுண்ணக்கல் அகழப்பட்டு இரகசியமான முறையில், திருட்டுத் தனமாக திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

நேற்று (18) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இதனை சிறீதரன் இதனைக் குறிப்பிட்டார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காங்கேசன்துறையில் இயங்கிய சீமெந்து ஆலைக்காக சுண்ணக்கல் அகழ்ந்த பிரதேசங்களான காங்கேசன்துறை, பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாரிய இரு குழிகளும் இன்று மூடப்படமால் இருக்கின்றது.

ஆபத்தான நிலையில் குடிமனைகளின் நடுவே இந்த குழிகள் உள்ளன. இந்தநிலையில், தற்போது புத்தூர், மாதகல், இளவாலைப் பகுதிகளில் சிலர் இரகசியமான முறைகளில் சுண்ணக்கல்லை அகழ்ந்து மூடிய பார ஊர்திகளில் எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு தினமும்10 முதல் 15 வரையான பார ஊர்திகளில் (கெண்டெயினர்களில்) கற்கள் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு எந்தத் திணைக்களமாவது அனுமதி வழங்கியதா“ எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

இதேவேளை இதற்குப் பதிலளித்த புவிச் சரிதவியல் திணைக்களத்தைச் சேர்ந்த மயூரன் அவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் கடத்தலில் யாழ்ப்பாண பொலிஸாருக்கும் தொடர்பு – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

 

யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது.

 

இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளோம்.

 

மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த விடயம் தொடர்பில் பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர் கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார்.

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்!

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் இன்று (19) தனது 89ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

 

உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

1958ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்துக்கு ஆற்றலை வெளிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

 

இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்துக்கு உள்ளது.

 

1962ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

 

யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஆகஸ்ட் 24ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார்.

 

பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது.

 

இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.