09

09

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் – இந்தியாவின் நிலைப்பாடு என்ன..?

காஸா விவகாரத்தில் இந்தியா 4 முக்கிய நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் விளக்கியுள்ளார்.

காஸா விவகாரம் குறித்த விவாதம் இன்று (09) ஐ.நா. அவையில் நடைபெற்றது.

 

இதன்போது, காஸா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கிய, ருச்சிரா காம்போஜ்,

 

1. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான சண்டையால் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதங்களை சந்தித்துவிட்டோம். ஏராளமான உயிர்களை அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை இழந்துவிட்டோம். பொதுமக்கள் உயிரிழந்ததை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.

 

2. கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது. அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்கவும் நிபந்தனையின்றி விடுவிக்கவும் இந்தியா தரப்பில் கோரப்படுகிறது.

3. காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமாக உள்ளது. மேலும் சீரழிவை தவிர்க்க, காஸா மக்களுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும்.

 

4. பாலஸ்தீன மக்கள் தங்களுக்கான சுதந்திர நாட்டில் சுதந்திரமாக வாழ வழிசெய்யும் விதத்திலான நேரடி சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்த அனைத்து உறுப்பு நாடுகளும் செயலாற்ற வேண்டும் என, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் கூறினார்.

 

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு ஒக்டோபா் மாதம் 7 ஆம் திகதி ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினா், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.

 

 

மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

 

இதனைதொடர்ந்து, அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் இராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

காஸா மீது இஸ்ரேலின் படையெடுப்பால் இதுவரை 32,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனா்.

 

இஸ்ரேல் – காசா போர் ஆரம்பித்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளபோதிலும், உயிரிழக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

 

மேலும், பசி பட்டினியால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எத்தேர்தல் வந்தாலும் மக்களின் நலன் கருதி எமது முடிவுகளை எடுப்போம் – இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன்

கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து அரசியல் செய்தவர்கள் என்ற வகையில் எதிர்காலத்தில் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்கள் எத்தேர்தல் வந்தாலும் மக்களின் நலன் கருதி எமது முடிவுகளை எடுப்போம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து அரசியல் செய்தவர்கள் என்ற வகையில் நட்பு ரீதியில் பழகியவர்கள் அரசியலில் எதிர்காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வர்களாக அவர்களை அவதானிக்கின்றோம் நமது கட்சியானது பிராந்திய ரீதியில் அரசியல் பணிகளை முன்னெடுக்கும் கட்சி என்ற வகையில் எமது முடிவுகளை மக்களின் நலன் கருதி எடுப்போம்.

என்னைப் பொறுத்த வரையில் ஜனாதிபதி தேர்தல் தான் முதலில் வரும் அதன் பின்னர் பாராளுமன்ற பொது தேர்தல் இடம் பெறும் சில நேரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பொது மக்களின் நலனில் அக்கறையுள்ள கட்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் ஏத்தேர்தல் வந்தாலும் தாம் சந்திக்க தயாராக உள்ளதாகவும் இலங்கை வரலாற்றில் நம்பிக்கையுடன் வந்த ஜனாதிபதி தோற்று வெளியேறினார் என்பது முக்கியமான அடையாளமாக பதியப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் எவ்வாறான குழப்பங்கள் வந்தாலும் வராமல் போனாலும் அவ்வாறான நிலைமைகள் வரும்போது தாம் சந்திக்க தயாராக உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்தை தெரிவித்தார்.

தமிழர்களின் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களை விட ஜே.வி.பியினருக்கு கரிசனை அதிகம். – இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழர்களின் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களை விட எமக்குக் கரிசனை அதிகம். தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் திடமாக உள்ளோம் எனத் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 

யாழ். ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தமிழர்களின் தேசிய பிரச்சனை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்களை விட எமக்குக் கரிசனை உண்டு. தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் திடமாக உள்ளோம்.

 

தமிழ் மக்களின் பிரச்சனையை இனம் கண்டுள்ளோம். அதற்கான தீர்வினை பரிந்துரை செய்யவுள்ளோம். தீர்வு என்ன என்பதை மிக விரைவில் தெரியப்படுத்துவோம்.

 

தற்போது அது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி வருகிறோம். அடுத்து தமிழ் கட்சிகளோடு பேசவுள்ளோம்.

 

தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது, அவர்களுடைய சுய விருப்பம். ஆனால் பொதுவான நிலைப்பாடு மாற்றம் வேண்டும் என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது.

 

கடந்த 75 ஆண்டுகளாக நீலம்,பச்சை என மாறி மாறி ஆட்சிக்கு வந்து மக்களுக்கு வாய்க்கரிசி போட்டுள்ளார்கள். எனவே மாற்றம் வேண்டும் என பெரும்பாலான மக்கள் சிந்திக்கின்றனர்.

 

அநுர தான் அடுத்தது எனப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மாற்றத்தையே ஒட்டு மொத்த இலங்கை மக்களும் விரும்புகின்றனர்.

 

இந்த நிலையில் தமிழ் பொது வேட்பாளர் பேசுவது மீண்டும் நீலம் , பச்சையைத் தான் வீறு கொள்ள வைக்கும். ஆகவே தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்படுவார்கள் என நம்புகிறோம் என்றார்.

 

அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கலந்து கொண்டமை தொடர்பில் கேட்ட போது, எமது மாநாட்டிற்குக் கட்சி பேதமின்றி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம்.

 

யாருக்கும் தனிப்பட்ட அழைப்பு விடுக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாநாட்டிற்கு வருகை தந்தார். வந்தவரை நாம் வரவேற்றோம் எனத் தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் – ஜீவன் தொண்டமான் இடையே கலந்துரையாடல்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெறுவதற்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தமது அதிகார எல்லைக்குட்பட்ட வகையில் அனைத்து அறிவித்தல்களையும் விடுத்துள்ளது.

 

மேற்படி சம்மேளனத்தின் பிரதானிகள், அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான இயக்குநர் ஜொனி சிம்ப்சனிற்கும், இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு அமைச்சில் (08.04.2024) மாலை நடைபெற்றது.

 

மேற்படி சந்திப்பின்போது முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் நகர்வுகள் பற்றி மேற்படி பிரதிநிதிகளிடம் ஜீவன் தொண்டமான் விளக்கமளித்தார். அத்துடன், இந்த விடயத்தில் உள்ள சவால்கள் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சர்வதேச தொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகள், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என அறிவிறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

 

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மற்றும் தொழில் பாதுகாப்பு தொடர்பில் தாம் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாகவும் சர்வதேச பிரதிநிதிகள் அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளனர். அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் கூறியுள்ளனர்.

 

மேற்படி சந்திப்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான சட்ட ஆலோசகர் கா.மாரிமுத்து, உப தலைவரும், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, உப தலைவரும், சிரேஷ்ட இயக்குநர் – தொழில் உறவு அதிகாரியுமான எஸ்.ராஜமணி ஆகிய இ.தொ.கா பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். திருமதி.பிரமோ, திரு.தசுன் கொடிதுவக்கு ஆகியோர் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

அரசாங்கம் உடனடியாக அரிசியின் விலையை 100 ரூபாய்க்கு கீழ் கொண்டு வர வேண்டும் – வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு!

அரசாங்கம் உடனடியாக அரிசியின் விலையை 100 ரூபாய்க்கு கீழ் கொண்டு வருமாறு கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் மன்னார் மாவட்டத்திலும் இன்று செவ்வாய்க்கிழமை (9) முன்னெடுக்கப்பட்டது.

 

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைதத்தனர்.

ஒட்டுமொத்த இலங்கை மக்களின் அடிப்படை உணவு அரிசிச் சோறு .அந்த வகையில் தற்காலத்தில் இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் பொருட்களின் விலையேற்றமும் கிராம மட்டங்களில் உள்ள வறிய மற்றும் நடுத்தர குடும்பங்களில் உள்ள பெண்கள் மற்றும் பிள்ளைகள் மத்தியில் பாரிய உணவு தட்டுப்பாடு மட்டுமல்லாது போசாக்கு குறைபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

 

பல மக்கள் தங்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள நிலையில் காணப்படுகின்றனர்.

 

குறிப்பாக இலங்கையில் கடந்த காலங்களிலும் தற்போதும் ஏற்பட்டுள்ள அரிசியின் விலை ஏற்றம் என்பது நாளாந்தம் தினக்கூலி வேலை செய்யும் குடும்பங்களுக்கும் கூடுதலான அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களிலும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு பதிலாக ஒன்று அல்லது இரண்டு வேளைகளில் மட்டுமே உணவிணை பெற்றுக்கொள்ள கூடிய நிலையில் உள்ளனர்.

சில குடும்பங்களில் சோறு இல்லாமல் கஞ்சி காய்ச்சி குடித்து கொண்டு இருக்கின்றனர். பெண் தலைமை தாங்கும் குடுமபங்களில் இந்த அரிசியின் விலை ஏற்றம் இன்னும் பட்டினிக்கு தள்ளியுள்ளது.

 

தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்ட யுத்தம் ,கோவிட் தாக்கம், வெள்ளம், வரட்சி மற்றும் தற்கால பொருளாதார நெருக்கடி அடி நிலையிலுள்ள வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தின் உணவுத் தேவையில் அதிக தாக்கத்தை செலுத்தியுள்ளது.

சிறுவர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள் பெண்கள் அனைவரும் தமது பசியினைப் போக்குவதற்காக போசாக்கற்ற உணவுகளை உண்ண வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந் நிலையால் நாட்டில் போசாக்கற்ற குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள்.

நோய்த் தாக்கங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். அத்துடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் வறுமை காரணமாக சாப்பிடாமல் பாடசாலைகளில் மயங்கி விழுந்து உள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

முதியோர்கள்,தொழில் இழந்த ஆண்கள்,வறுமைப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பலர் தரப்பினரும் உணவுக்காக வீதிகளில் கையேந்துவதை இலங்கை முழுவதும் காணக்கூடியதாகவுள்ளது.

எனவே இலங்கை அரசு மக்களின் வேண்டுகோளையும் பசியின் கொடூர நிலையையும் கவனத்தில் கொண்டு இலங்கையில் அரிசியின் விலையை நூறு ரூபாய்க்கு கீழ் உடனடியாக கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். மக்களின் வறுமை நிலை போக்கி மக்கள் மூன்று வேளையும் பசியின்றி சோறு உண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

இலங்கை அரசு மக்களின் சோற்றில் கை வைக்காமல் அரிசியின் விலையை 100 ரூபாய்க்கு கீழ் குறைத்து மக்களின் பட்டினிச் சாவை தவிர்த்து மக்களின் பொருளாதார சுமையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

இறுதியில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.