10

10

உலகளாவிய பாலின அடிப்படையிலான வேதன இடைவெளி சராசரியை விடவும் இலங்கையின் சராசரி உயர்வாகப் பதிவு !

உலகளாவிய பாலின அடிப்படையிலான வேதன இடைவெளி சராசரியை விடவும் இலங்கையில் உயர்வாகப் பதிவு !

உலகளாவிய ரீதியில் நிலவும் பாலின அடிப்படையிலான வேதன இடைவெளியானது சராசரியாக 20 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இருப்பினும் இலங்கையில் நிலவும் வேதன இடைவெளி இந்த உலகளாவிய சராசரியை விடவும் அதிகம் என்பதுடன், குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் காணப்படும் வேதன இடைவெளியை விட உயர்வானதாகும் எனச் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புதிய ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

‘உலகின் பெரும்பாலான நாடுகளில் நிலவும் பாலின அடிப்படையிலான வேதன இடைவெளியானது தொழிற்சந்தையில் காணப்படும் பாலின சமத்துவமின்மையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது.

 

சமூகநீதி மற்றும் பொருளாதார சுபீட்சம் ஆகிய இரு கோணங்களிலும் அதற்குத் தீர்வு காணவேண்டியது அவசியமாகும்.

 

பாரிய அளவிலானதும், உரிய காரணங்கள் தெளிவுபடுத்தப்படாததுமான பாலின அடிப்படையிலான வேதன இடைவெளியானது தொழிற்சந்தையில் சமத்துவமின்மையைத் தோற்றுவிப்பதுடன் மாத்திரமன்றி, பெண்கள் தொழிற்சந்தைக்குள் பிரவேசிப்பதிலும், முன்னேற்றமடைவதிலும் தடைகளை ஏற்படுத்தும்’ எனச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு இலங்கை தொடர்பான அதன் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

 

அதன்படி இலங்கையில் நிலவும் பாலின அடிப்படையிலான வேதன இடைவெளியைக் குறைப்பதற்கு உதவும் நோக்கில் இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்திருப்பதாகவும், இவ்வாய்வுக்காக 2013 – 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டில் நிலவிய வேதன இடைவெளி தொடர்பான தரவுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், 2019 ஆம் ஆண்டு தரவுகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட விடயங்கள் வருமாறு:

 

இலங்கையின் தொழிற்படையில் ஆண்களின் பங்களிப்புடன் ஒப்பிடுகையில் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. குறிப்பாக 2019 ஆம் ஆண்டு தொழிற்படையில் ஆண்களின் பங்களிப்பான 80 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் பெண்களின் பங்களிப்பு 40 சதவீதம் எனும் மிகக்குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது.

 

இதேபோன்ற இடைவெளி 2013 ஆம் ஆண்டிலும் பதிவாகியிருப்பதானது இலங்கையில் பாலின அடிப்படையிலான வேதன இடைவெளி தசாப்தங்களுக்கும் மேலாக நீடிப்பதைக் காண்பிக்கின்றது. அதேவேளை வயது அதிகரிக்கும்போது வேதன இடைவெளியும் அதிகரிப்பதை அவதானிக்கமுடிகின்றது.

 

அதாவது 15 – 24 வயதுடைய தொழிலாளர்கள் மத்தியில் 18 சதவீதமாகக் காணப்படும் பாலின அடிப்படையிலான வேதன இடைவெளி, வயது முதிர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் 50 சதவீதம் வரை உயர்வடைந்திருக்கின்றது.

 

2019 ஆம் ஆண்டு தரவுகளின்படி பெண் தொழிலாளர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு வழங்கப்படும் வேதனமானது, ஆண்களுக்கு வழங்கப்படும் வேதனத்திலும் பார்க்க 27 சதவீதம் குறைவானதாகக் காணப்படுகின்றது. முறைசாரா தொழில்கள் மற்றும் கல்வித்தகைமை குறைவான தொழில்களில் ஈடுபடுவோர் மத்தியில் இந்த இடைவெளி மேலும் உயர்வாக உள்ளது.

 

அதுமாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் நிலவும் பாலின அடிப்படையிலான வேதன இடைவெளியானது சராசரியாக 20 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கையில் நிலவும் வேதன இடைவெளி இந்த உலகளாவிய சராசரியை விடவும் அதிகம் என்பதுடன், குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் காணப்படும் வேதன இடைவெளியை விட உயர்வானதாகும்.

 

அதேவேளை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொழிற்படை ஆய்வின்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் தொழிற்படை பங்கேற்பு வீதம் குறிப்பிடத்தக்களவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 49.8 சதவீதமாகக் காணப்பட்ட தொழிற்படை பங்கேற்பு வீதம், 2023 இல் 48.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வீதமானது நாட்டில் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் தொழில்வாய்ப்பை முனைப்புடன் தேடுவோர் ஆகிய இருதரப்பினரையும் குறிக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரொருவரை நிறுத்துவது இன முரண்பாட்டிற்கு வழிவகுக்கும் – வே. ராதாகிருஷ்ணன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரொருவரை நிறுத்துவது இன முரண்பாட்டிற்கு வழிவகுக்குமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

ஹட்டனில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதி  தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்தினால் அவர் வெற்றி பெறுவாரா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, நாட்டு மக்களிடையே இனமுரண்பாடு ஏற்படும்.

எனவே ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

 

அதே நேரத்தில் சிறுபான்மை மக்களும் வாக்குகளை சிதறடிக்காமல் தமக்கு பிடித்தமான இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

காசா விவகாரத்தை கையாள்வதில் இஸ்ரேலிய பிரதமர் தவறிழைக்கின்றார் – அமெரிக்க ஜனாதிபதி பைடன் !

காசா விவகாரத்தை கையாள்வதில் இஸ்ரேலிய பிரதமர் தவறிழைக்கின்றார் என தான் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

 

அவர் தவறுசெய்கின்றார் என நான் கருதுகின்றேன் அவரது அணுகுமுறையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.

 

காசாவிற்குள் மருந்துகள் உணவுப்பொருட்கள் முழுமையாக செல்வதற்கான அனுமதி அவசியம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

 

நெடுஞ்சாலையில் மனிதாபிமான அமைப்புகளின் வாகனங்கள் தாக்கப்பட்டமை மூர்க்கத்தனமான விடயம் என பைடன் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலியர்கள் யுத்த நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் அடுத்த ஆறுமுதல் எட்டு மாதங்களிற்கு அனைத்து விதமான மனிதாபிமான பொருட்களையும் அனுமதிக்கவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என பைடன் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார்- அவுஸ்திரேலியா

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

 

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இதனை தெரிவித்துள்ளார் எனினும் பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தற்போதைய வன்முறையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அருகருகில் வசிக்கும் இரண்டு நாடு தீர்வே ஒரே நம்பிக்கை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

பல தசாப்தங்களாக இந்த அணுகுமுறையை பின்பற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் தவறியமையும் பாலஸ்தீனதேசம் குறித்த விடயத்தில் ஈடுபாட்டை காண்பிப்பதற்கு நெட்டன்யாகு அரசாங்கம் தவறியமையும் பரந்துபட்ட அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதன் காரணமாக இரண்டு தேசத்தினை நோக்கிய செயற்பாடாக பாலஸ்தீன தேசம் குறித்து சர்வதேசசமூகம் தற்போது சிந்திக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பது எதிரிக்கு வெகுமதி அளிக்கும் செயல் என்பது தவறான கருத்து இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது இரண்டுதேச கொள்கையிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இரண்டுதேச கொள்கையை ஏற்றுக்கொள்வது ஹமாசினை பலவீனப்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை பாதுகாப்பதே நமது வெளிவிவகார கொள்கையின் முக்கியமான அம்சம் – ஜேர்மனி

இஸ்ரேலின் பாதுகாப்பே தனது வெளிவிவகார கொள்கையின் முக்கிய அம்சமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஜேர்மனி தனது கடந்த கால வரலாறே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது.

 

எனினும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் இனப்படுகொலைக்கு உதவுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டினை ஜேர்மனி நிராகரித்துள்ளது.

 

ஜேர்மனி இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை நிறுத்தவேண்டும் என கோரும் வழக்கினை சர்வதேச நீதிமன்றில் நிக்கரகுவா தாக்கல் செய்துள்ளது.

 

இனப்படுகொலையை தடுப்பது சர்வதேச மனிதாபிமான சட்டம் மதிக்கப்படுவது தொடர்பான கடப்பாடுகளை ஜேர்மனி மீறிவிட்டது எனவும் நிக்கரகுவா குற்றம்சாட்டியுள்ளது.

 

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஜேர்மனி சர்வதேசநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

 

எங்கள் வெளிவிவகார கொள்கையில் இஸ்ரேலின் பாதுகாப்புமிக முக்கியமானதாக காணப்படுவதற்கு காரணம் எங்களின் வரலாறு என ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி சர்வதேச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலிற்கு ஜேர்மனி ஆயுதங்களையும் இராணுவதளபாடங்களையும் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள அவர் ஆனால் நிக்கரகுவா அதன் அளவையும் நோக்கத்தையும் திரிபுபடுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஜேர்மனி தனது கடந்தகாலங்களில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டுள்ளது அந்த கடந்தகாலம் மனித குலவரலாற்றில் மிகமோசமான குற்றங்களை உள்ளடக்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஜேர்மனி ஒவ்வொரு நாளும் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிவருவதாகவும் அதிகாரியொருவர் சர்வதேச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

“இரண்டு வருடங்களுக்குள் நிம்மியாக மூச்சு விடக்கூடிய சூழலை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை உறுதிப்படுத்தி.மக்களை பொருளாதாரத்தில் வலுவான பங்குதாரர்களாக மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

 

பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மக்களை மாற்றுவதன் மூலம், சரிவடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

கொழும்பு முகத்துவாரத்தில் நேற்று (09) நடைபெற்ற ரன்திய உயன வீட்டுத் தொகுதியை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

 

இதன்போது 2010 ஆம் ஆண்டில் கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 வீடுகள் அடங்கிய இந்த வீட்டுத்தொகுதியை ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளித்தார்.

 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

 

”பத்து வருடங்களுக்கு மேலாக காஜிமாவத்தை மக்கள் நரகத்தில் வசித்துள்ளனர். அந்த வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அதனால் இந்த குடியிருப்புகளை மக்களுக்கு விரைவில் கையளிக்க முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இது தொடர்பில் அதிக அக்கறை காட்டினார். இன்று நீங்கள் பெற்றுகொள்ளும் இந்த வீடு உங்களுக்கு மிகவும் மதிப்புள்ள சொத்தாகும். அதனைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. கடந்த பத்து வருடங்களாக கஷ்டப்பட்ட நீங்கள் இந்த வீடுகளை அடகு வைக்கவோ விற்கவோ கூடாது. இந்த வீடுகளை உங்கள் உயிரைப் போல பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இன்று வரையிலான இரண்டு வருடங்களுக்குள் நிம்மியாக மூச்சு விடக்கூடிய சூழலை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது. உணவு, எரிவாயு, எரிபொருள் வரிசையில் நின்று அவதிப்பட்ட மக்கள் இன்று சுமூகமாக வாழ்கின்றனர். வரிசையில் யுகத்தில் கொழும்பு மக்கள் பெரும் அவதிப்பட்டனர். அதிலிருக்கும் மாடிக்குடியிருப்புகளிலும், தோட்டங்களிலும் வசிக்கும் மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

 

பொருளாதாரத்தைப் பலப்படுத்த நாம் அமுல்படுத்திய வரிக் கொள்கை வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகப்படுத்தியது. ஆனால் அந்த கஷ்டங்களை நீங்கள் தாங்கிக் கொண்டதாலேயே, கடன் வாங்காமலும், பணம் அச்சடிக்காமலும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க முடிந்தது. அதனால் தான் இந்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடிந்தது. ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்துள்ளது.

 

அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்றிக் கூறும் வகையிலேயே நிரந்தர காணி உரிமை, நிரந்தர வீட்டுரிமையை வழங்குவதாக கருதுகிறேன். எதிர்காலத்தில் 50,000 வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படும். நான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1996 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளையும் இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம்.

காணி, வீட்டு உரிமைகளுக்கான நிரந்தர உரிமைகள் இதற்கு முன்னதாக வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் கல்வி,காணி, வீட்டு, வியாபார உரிமைகளை மக்களுக்கு வழங்கி பொருளாதாரத்தை மக்கள் பக்கம் விரிவுபடுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கான பெரும் பங்களிப்பை அதனூடாக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

தாமதமாகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தனிமனித போராட்டத்தில் மகிந்த தேசப்பிரிய!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

தனது இல்லத்திற்கு முன்பாக அவர் தனிமனித போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் அவரது இல்லத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

வேட்புமனுத் தாக்கல் செய்து தேர்தலை தாமதப்படுத்துவது எதேச்சாதிகாரத்துக்குச் சமமானது. அரசாங்கத்தின் செல்வாக்கு காரணமாகவே உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவிர்த்து அதிகாரிகள் ஆட்சி புரிவது மக்களின் உரிமைகளை மீறும் செயல் என பதாதையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அம்பலாங்கொட-படபொல வீதியில் பயணிக்கும் மக்கள் இந்த பதாதைகளை பார்வையிட்டு செல்வதையும் அவதானிக்க முடிந்தது.

 

பலர் மஹிந்த தேசப்பிரியவின் போராட்டத்துக்கு ஆதரவையும் வழங்கியுள்ளனர்.