23

23

பிறந்த நாள் கேக்கில் saccharine எனப்படும் செயற்கை ஸ்வீட்னர் – 10வயது சிறுமியின் இறப்பில் வெளியான திடுக்கிடும் தகவல் !

பிறந்த நாள் கேக் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி காரணம் ஒன்று வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியை சேர்ந்தவர் மான்வி (10). இந்த சிறுமியின் 10-வது பிறந்தநாளை கடந்த 24-ம் தேதி அவரது குடும்பத்தினர் கொண்டாடினர். அதற்காக பாட்டியாலாவில் உள்ள ஒரு பேக்கரியில் ஒன்லைன் மூலமாக கொள்வனவு செய்துள்ளனர்.

இதனையடுத்து கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய மான்வி, அதனை குடும்பத்தினருக்கு ஊட்டி விட்டுள்ளார். பின்னர் அவரும் கேக் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுமிக்கு தொண்டை வறண்டு தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அவர் மாறி மாறி வாந்தி எடுத்துள்ளார். இது போன்று பாதிப்பு அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியை அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதற்காக சம்பந்தப்பட்ட பேக்கரியில் இருந்து கேக்கின் மாதிரிகளை கைப்பற்றி அதனை ஆய்வுக்கு அனுப்பினர். தற்போது அந்த சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், saccharine எனப்படும் செயற்கை ஸ்வீட்னர் கேக்கில் அதிகம் பயன்படுத்தப்பட்டது உறுதியானது.

இதனை மாவட்ட சுகாதார அதிகாரி வைத்தியர் விஜய் ஜிண்டால் உறுதி செய்துள்ளார். பொதுவாக நாம் வெளியே வாங்கி சாப்பிடும் உணவு மற்றும் பானங்களில் சிறிதளவு saccharine பயன்படுத்தப்படும். ஆனால், இதன் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் கூட உடலில் இருக்கும் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு மிக வேகமாக உயரும் அபாயம் உள்ளது. இந்த சிறுமியின் உயிரிழப்பிலும் இதுதான் நிகழ்ந்துள்ளது.

இந்த செயற்கை ஸ்வீட்னர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட பேக்கரி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த பேக்கரியின் உரிமையாளர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விவாதம் செய்ய நான் தயார் – திகதிகளை குறித்து சஜித்பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பிய அனுர குமார திசாநாயக்க !

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி நேற்று(22) அறிவித்துள்ளது.

அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு தேசிய மக்கள் சக்தி கடிதமொன்றை அனுப்பியது. அதற்கமைய மே மாதம் 7, 9, 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

திகதியை தெரிவு செய்ததன் பின்னர் நேரம், விவாதத்திற்கான காலப்பகுதி, இடம் மற்றும் விவாதம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி என்பன தொடர்பில் தீர்மானிக்க முடியும் என தேசிய மக்கள் சக்தி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு வகையில் விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கவில்லையாயின் அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாதத்திற்கான திகதி இதுவரையில் நிர்ணயிக்கப்படாமையின் காரணமாக மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரவுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன புங்குடுதீவு கண்ணகியம்மனின் சேலை !

வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மனின் சேலையை 16 இலட்சம் ரூபாய்க்கு ஒருவர் வாங்கியுள்ளார்.

புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் நேற்றைய தினம் (22) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இதில் கண்ணகியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேகத்தினை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய  அம்பாள், உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பீடத்தில் வீற்றிருந்து முத்தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த இரதோற்சவத்தில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை ஒன்று ஏலத்தில் விடப்பட்டது.

அதில் சேலை ஒன்றுக்கு 16 இலட்சம் ரூபாயை கொடுத்து பக்தர் ஒருவர் அச் சேலையினை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 கிலோ இலவச அரிசியை வழங்குவதற்கு பணம் கேட்கும் அதிகாரிகள் !

அரசாங்கத்தின் தேசிய அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசியை வழங்குவதற்கு முன்னர் ஒருவரிடமிருந்து தலா 100 ரூபாய் அறவிடப்படுவதாக பொலன்னறுவை – மன்னம்பிட்டி, திம்புலாகல பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
புத்தாண்டு விழாவில் பங்கேற்பதற்காக அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்களை வரவேற்று மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே இந்தத் தொகை அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், பணம் செலுத்தத் தவறியவர்களுக்கு 10 கிலோ அரிசி கிடைக்காது என தெரிவிக்கப்பட்டதாகவும் பொலன்னறுவை – மன்னம்பிட்டி, திம்புலாகல பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனினும், அரிசி வழங்கும் போது பணம் அறவிடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக திம்புலாகல பிரதேச செயலாளர் S.M. அல் அமீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பணம் அறவிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை எனவும், அது குறித்து எழுத்து மூலம் தெரிவித்தால், உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடரும் இஸ்ரேலின் கொடூர தாக்குதல் – கொல்லப்பட்ட தாயின் கருப்பையிலிருந்து  குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் !

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட தாயின் கருப்பையிலிருந்து  குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் காசாவில் இடம்பெற்றுள்ளது.

சபிரீன் என்ற பெண்ணின் கருப்பையிலிருந்து குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

அந்த இளம்தாய் ஏழு மாதங்களாக பிள்ளையை தன் வயிற்றில் சுமந்துள்ளார் – கடும் மோதல்கள் அச்சங்களிற்கு மத்தியில் யுத்தம் முடிவடையும் வரை தங்கள் குடும்பத்தின் அதிஸ்டம் நீடிக்கும் என அவர் எதிர்பார்த்தார்.

எனினும்  ஏப்பிரல் 20 திகதி நள்ளிரவிற்கு முன்னர் இடம்பெற்ற பாரியவெடிப்பினால் ஏற்பட்ட சத்தங்கள் தீ பரவலிற்கு மத்தியில் அவர் எதிர்பார்த்த அதிஸ்டம் காணாமல்போனது.

சப்ரீனும் கணவரும் அவரின் மூன்றுவயது மகள் மலாக்கும் உறங்கிக்கொண்டிருந்த ரபா வீட்டின் மீது இஸ்ரேலிய படையினர் குண்டொன்றை வீசினர்.

சபிரீன் கடும் காயங்களிற்குள்ளானார் அவரது கணவர் கொல்லப்பட்டார் எனினும் மீட்பு பணியாளர்கள் அந்த வீட்டை நெருங்கிய வேளை சிசு தாயின் வயிற்றில் இன்னமும் உயிருடன் இருந்தது.

மீட்பு பணியாளர்கள் சப்ரீனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிசேரியன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

சப்ரீனை காப்பாற்ற முடியவில்லை ஆனால் குழந்தையை உயிர்ப்பிப்பதற்காக மருத்துவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர் சுவாசத்தை தூண்டுவதற்காக அவளின் நெஞ்சில் மெதுவாக தட்டினார்கள் அவளது நுரையீரலிற்குள் காற்றை செலுத்தினர்.

அவள் மிகக்கடுமையான சுவாசக்கோளாறின் மத்தியில் பிறந்திருகின்றாள் என தெரிவிக்கின்றார் ரபாவின் எமிராட்டி மருத்துவமனையின் நியோநட்டல் அவசர பிரிவின் தலைவர் மருத்துவர் முகமட் சலாமா.

எனினும் 1.45 கிலோ உடைய அந்த குழந்தை தான் பிறந்தவேளை எதிர்கொண்ட சோதனைகளில் இருந்து மீண்டுள்ளாள்.

தியாகி சப்ரீன் அல்ஹானியின் குழந்தை  என்ற வாசகத்தை ஒரு சிறிய டேப்பில்  எழுதிய மருத்துவர்கள் அதனை அவளது உடலில் ஒட்டினார்கள் பின்னர் அவள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டாள்.

அவளது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது என தெரிவிக்க முடியும் என்கின்றார் மருத்துவர் சலாமா.

ஆனால் நிலைமை இன்னமும்  ஆபத்தானதாக காணப்படுகின்றது உரிய மாதத்திற்கு முன்னர் பிறந்த குழந்தை என்பதால் சுவாசக்கோளாறு நோய் அறிகுறி காணப்படுகின்றது இந்த நாட்களில் குழந்தை தாயின் வயிற்றில் இருந்திருக்கவேண்டும் ஆனால் அதற்கான அவளின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவிக்கின்றார்.

மேலும் சில மாதங்களிற்கு குழந்தையை மருத்துவமனையிலேயே வைத்திருக்கவேண்டியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அதன்பின்னர் அவளை மருத்துவமனையிலிருந்து அனுப்புவது குறித்து சிந்திப்போம் இங்கு பெரும் துயரம் இடம்பெற்றுள்ளது இந்த குழந்தை உயிர்பிழைத்தாலும் அநாதையே என வைத்தியர் சலாமா தெரிவிக்கின்றார்.

அந்த குழந்தைக்கு பெயரிடுவதற்கு பெற்றோர்கள் எவரும் இல்லை கொல்லப்பட்ட அவளது மூன்று வயது சகோதரி ரூஹ் என பெயரிட விரும்பினால் எனினும் அவளது தாயின் நினைவாக சப்ரீன் என அழைக்கின்றனர்.

“இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி.” – சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிறார் திருமாவளவன் !

“இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,

“ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார்.

மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. “காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது” என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். “உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்? பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள். அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு, நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல்காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?.

நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து முஸ்லிம்களுக்கு கொடுக்கப் போகிறார்கள்; அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது” என பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி  “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார். “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்றார். அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்? சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” என்று கூறினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டங்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் – உலக வங்கி

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 வீத மிதமான வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் நாடு இன்னும் அதிக அளவிலான வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை எதிர்கொள்வதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் 25.9 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் நாட்டின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என்றும் உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிவனொளி பாத மலைக்கு செல்லும் வீதிகளில் 03 தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் – மாசடையும் சுற்றாடல் !

சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரீகர்ககளால் போடப்படும் கழிவுப்பொருட்களால் சுற்றாடல் மாசடைகின்றது என சுற்றாடல் அதிகாரி தெரிவிக்கின்றார்.

இவ்வருட ஆரம்பமான சிவனொளிபாத பாதமலை யாத்திரை காலத்தில் நல்லதண்ணியிலிருந்து – சிவனொளி பாத மலைக்கு செல்லும் வீதியில் உள்ளூர் யாத்திரிகர்களால் 25 தொன் மக்காத திண்மக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

அவற்றில் 03 தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளது என மஸ்கெலியா பிரதேச சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் (2023/2024) சிவனொளிபாத மலை பருவகாலம்   ஆரம்பித்து 5 மாதங்களில் நல்லதண்ணி – சிவனொளிபாத மலை செல்லும் வழித்தடத்தில் இருந்து யாத்திரைக்கு வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சுமார் 25 தொன் மக்காத திண்மக் கழிவுகளை சுற்றாடலில் வீசி சென்றுள்ளனர்.

இதில் சுமார் 03 தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் மட்டுமே  உள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி ரசிகா சமரநாயக்க தெரிவித்தார்.

05 மாதங்களாக தொடரும்  பருவகால நிகழ்வின் போது மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட சுற்றாடல் பிரிவினாரால் நல்லதண்ணி – சிவனொலி பாத மலை வீதி மற்றும் நல்லதண்ணி நகர வீதிகளில் தேங்கும் மக்காத திண்மக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன.

2023 டிசம்பரில், சிவனொலி பாத மலை யாத்திரை காலம் தொடங்கியதில் இருந்து, வார இறுதி நாட்களிலும், வார நாட்களிலும் அதிக எண்ணிக்கையிலான யாத்திரீகர்கள் வருகை தருவதால், மக்காத தின்மக்கழிவுகள் மற்றும் அகற்றப்படும் குப்பைகளின் அளவு அதிகமாக உள்ளது என்று சுற்றுச்சூழல் அதிகாரி மேலும் கூறினார்.

இக்கழிவுகள் யாவும் பிரதேச சபையின் பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட பின்னர் மஸ்கெலியா, ரிக்கட்டான் பகுதியில் நிறுவப்பட்டுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த ஆண்டு சிவனொலி பாத மலை பருவகாலம் முடிய இன்னும் ஒரு மாதம் உள்ளது.எதிர் வரும் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் நிறைவு பெறும்.