30

30

காசா யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே இஸ்ரேலிய இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது – அமெரிக்கா

காசா யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே இஸ்ரேலிய இராணுவத்தின் ஐந்து படைப்பிரிவினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உறுதி செய்துள்ளது.

எனினும் இதில் ஒரு படைப்பிரிவிற்கான  உதவிகளை குறைப்பதா இல்லையா என அமெரிக்கா இன்னமும் தீர்மானிக்கவில்லை என சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஏனைய நான்கு படைப்பிரிவுகளும் இந்த தவறுகளை திருத்திக்கொண்டுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஒருவர்தெரிவித்துள்ளார்.

நெட்சா யெகுடா படைப்பிரிவிற்கான  உதவிகளை நிறுத்துவதா இல்லையா என்பதை அமெரிக்கா இன்னமும் தீர்மானிக்கவில்லை.

2022 இல் முதிய பாலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு இந்த படைப்பிரிவே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நாங்கள் இஸ்ரேலிய படையினருடன் தொடர்ந்தும் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டுள்ளோம் அவர்கள் குறிப்பிட்ட படைப்பிரிவு குறித்து மேலதிக தகவல்களை தந்துள்ளனர் என இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து சம்பவங்களும் ஒக்டோர் 7 ம் திகதிக்கு முன்னர் இடம்பெற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லண்டனின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு – ஐவர் படுகாயம்!

லண்டனின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

வாள் ஏந்திய நபர் ஒருவர் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள்உட்பட ஏழு பேரை தாக்கினார் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

36 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹைனோல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்த மன்பிரீட் சிங் என்பவர் சம்பவத்தை இவ்வாறு விபரித்துள்ளார்.

காலை ஏழு மணியளவில் நான் அலுவலகத்திலிருந்து அப்போதுதான் வெளியே வந்தேன் வீதியின் மறுப்பக்கத்தில் ஏதோ குழப்பநிலை காணப்படுவதை அவதானித்தேன் கையில் வாளுடன் காணப்பட்ட நபருடன் ஐந்து ஆறுபேர் இழுபறியில் ஈடுபட்டுள்ளதை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளை அவர்களில் ஒருவர் வாளால் குத்தப்பட்டார் ஏனையவர்கள் பொலிஸாரையும் அம்புலன்சையும் தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பத்து நிமிடங்களின் பின்னர் பல பொலிஸ்கார்கள் அந்த பகுதிக்கு விரைந்தன அதன் பின்னர் நபர் ஒருவர் ஓடுவதை பார்த்தேன் அவர் அங்குள்ள வீடுகளிற்குள் நுழைய பார்த்தார் ஆனால் அவரால் முடியவில்லை அவ்வேளை அவர் மீது டேசரை பயன்படுத்தினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரை பொலிஸார் பிடிப்பதையும் அவர் அதனை எதிர்ப்பதையும்பார்த்தேன் பத்து 15 நிமிடங்களி;ல் எல்லாம் முடிந்துவிட்டது அந்த நபர் ஆட்களை வெட்டினார் நால்வரை குத்தினார் என கேள்விப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போலி முகநூல் பதிவு தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு!

போலி முகநூல் பதிவொன்றுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (30) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

2024ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின்கீழ் குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் மன்றில் சமர்ப்பணம் செய்திருந்தார்.

 

குறித்த வழக்கு தொடர்பில் சமர்ப்பணம்செய்கையில்,

 

மெய்யுறுதிப்படுத்தப்படாத முகநூல் நிகழ்நிலைக் கணக்கினை பயன்படுத்துபவரது ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும், குறித்த முகநூல் கணக்கு பயன்படுத்தப்படும் அமைவிடம் அவற்றோடு தொடர்புடைய ஏனைய நிகழ்வுகள் பற்றிய விடயங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும், போன்ற விண்ணப்பங்களை முன்வைத்ததோடு முகநூல் நிறுவனத்திடமிருந்தும், டயலொக் நிறுவனத்திடமிருந்தும் மேற்குறித்த விடயங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய விபரங்களை உடனடியாக பெறுவது தொடர்பாகவும் அவற்றை உடனடியாக கௌரவ நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பது தொடர்பாகவும் தேவையானதும், அவசியமானதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு 01இல் செயற்படுகின்ற குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணணிக் குற்றங்கள் விசாரணைப் பகுதியின் சமூக ஊடகப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிடுவதற்கான கட்டளையினை பிறப்பிப்பிக்குமாறு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

 

குறித்த விண்ணப்பங்களை ஏற்ற மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இவ்வாறான வழக்கு தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் – சிவில் சமூகத்தினர் கூட்டுத்தீர்மானம் !

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் இன்று வவுனியா வாடிவீடு விடுதியில் ஒன்றுகூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர்.

 

1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.

2. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.

3.அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது.

4.அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.

5.தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்போது ,வணக்கத்துக்குரிய ஆயர், திருகோணமலை மறைமாவட்டம்

தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கைலை ஆதீனம்

தவத்திரு வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதீனம்

பேராசிரியர் கே ரி கணேசலிங்கம் தலைவர் அரசறிவியல்துறை யாழ் பல்கலைக்கழகம்

கலாநிதி. க. சிதம்பரநாதன், அரங்க செயற்பாட்டு குழு

அருட்பணி த ஜீவராஜ் ஏசு சபை சமூக செயற்பாட்டாளர் மட்டக்களப்பு

திரு நிலாந்தன் அரசியல் ஆய்வாளர்

அருட்பணி பி ஞானராஜ் (நேரு) மனித உரிமை செயற்பாட்டாளர் மன்னார்

நீதி சமாதான ஆணைக்குழு யாழ் மறை மாவட்டம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரழுச்சி இயக்கம்

தமிழ் சிவில் சமூக அமையம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம்

அறிவார் சமூகம் திருகோணமலை

அகில இலங்கை மீனவர் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கூட்டமைப்பு

கரைச்சி வடக்கு சமாசம்

சமூக விஞ்ஞான ஆய்வு மையம்

சிவில் அமைப்பு மட்டக்களப்பு

தமிழ் ஊடகத் திரட்டு

கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

மாவட்ட கமக்காரர் அமைப்பு வவுனியா

கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

மாவட்ட கமக்காரர் அமைப்பு வவுனியா

தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்

தமிழர் கலை பண்பாட்டு மையம்

எம்பவர் நிறுவனம்

மக்கள் மனு வடக்கு கிழக்கு சிவில் சமூக குழு

குரலற்றவர்களின் குரல்

மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர் அமைப்பு

சமூக மாற்றத்துக்கான அமைப்பு வவுனியா

தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம் திருகோணமலை

புழுதி சமூக உரிமைகளுக்கான அமைப்பு திருகோணமலை

நலிவுற்ற சமூகங்களின் அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு திருகோணமலை ஆகிய அமைப்புக்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் – எரிக்சொல்ஹெய்ம்

இலங்கையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியின் போது அச்சமடைந்து ஓடாதவர் என்ற தனது சமூக ஊடக பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
18 மாதங்களிற்கு முன்னர் நாடு முன்னொருபோதும் இல்லாத மிக மோசமான நெருக்கடி நிலையில் சிக்குண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக மின்சார துண்டிப்பு காணப்பட்டது எரிபொருளிற்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டன -பணவீக்கம் மிகவேகமாக அதிகரித்துக்கொண்டிருந்தது அனேக வர்த்தகங்கள் வீழ்ச்சியடையும் நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ள அவர் மக்கள் ஜனாதிபதியை வீழ்த்தினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது ஸ்திரதன்மை மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது பணவீக்கம் மிகவும் குறைவாக காணப்படுகின்றது மின்துண்டிப்பும எரிபொருளுக்கான வரிசைகளும் கடந்தகால விடயங்களாகிவிட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல இலங்கையர்களிற்கு இன்னமும் வாழ்க்கை கடினமாக உள்ளது பல பொருளாதார வலிகள் காணப்படுகின்றன ஆனால் இலங்கை தற்போது எதிர்காலத்தை நோக்கி சிந்திக்கலாம் எனவும் எரிக்சொல்ஹெய்ம் பதிவிட்டுள்ளார்.
நெருக்கடி தாக்கியவேளை தப்பியோடாதவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனவும் குறிப்பிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம் இலங்கையில் எனது நீண்டகால நண்பர்கள் ரணில்விக்கிரமசிங்க அவரது மனைவி மைத்திரியுடன் சுவையான இரவு உணவை உண்டது மிகவும் சிறப்பான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

பொது வேட்பாளரை நியமிக்க எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று(30) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாளைய தினம் தொழிலாளர் தினமாகும். தொழிலில் ஈடுபட்டு எங்களது உறவுகளை கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டதனால் நாங்கள் அவர்களைத் தேடிக் கொண்டு இருக்கிறோம்.

தற்போது உழைப்பாளி என்ற வர்க்கத்தில் நாங்கள் இல்லாமல் கையேந்தும் வர்க்கத்தில் உள்ளோம். எனவே எங்களது உறவுகளை மீண்டும் எமக்கு திருப்பித் தர வேண்டும் என்பதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறோம்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது எங்கே எங்கே உறவுகள்,எங்கே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே, போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.