May

May

காஸா பகுதியில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தக்கோரி இலங்கையில் போராட்டம்!

காஸா பகுதியில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தக்கோரியும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் இன்று லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

காசாவில் நடந்த மோதலில் 15,000 குழந்தைகள் மற்றும் 7,500 பெண்கள் உட்பட 36,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதில் இலங்கை பலஸ்தீன ஒற்றுமைக் குழு, சோசலிச இளைஞர் சங்கம் உள்ளிட்ட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் !

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என மட்டு.ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கு உண்டு எனவும் ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் கடந்த இருபது வருடங்களாக அவரின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இலங்கையில் இன்றுவரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 சிங்கள ஊடகவியலாளர்களும் 03 முஸ்லீம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக்காலத்தில் 01 ஊடகவியலாளரும் ரணசிங்க பிரேமதாச ஆட்சிக்காலத்தில் 02 ஊடகவியலாளரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

1985ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் 2010ஆம் ஆண்டுவரை தொடர்ந்துகொண்டே இருந்தது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்றுவந்த படுகொலை ஆட்சியை ஊடகத்துறையின் பெரும்பங்குடன் முடிவுக்கு கொண்டுவந்த இலங்கை அரசாங்கம் இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருந்த போதும் அதன் குற்றவாளிகள் கூட கைது செய்யப்படவில்லை.

அத்தோடு இந்த நாட்டில் பெருந்தொகையாக படுகொலை கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளை இன்றுவரை ஆரம்பிக்கவில்லை.

இந்நிலையில் மட்டக்களப்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளரும் மனிதவுரிமை செயற்பாட்டாளருமான ஐயாத்துரை நடேசன் அவர்களின் 20 வது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இணைந்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளிடம் மேற்படி கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

ரணிலின்  உண்மை முகத்தை மறைப்பதற்காக தேச விரோதிகளான எம்.ஏ சுமந்திரனும் மற்றும் சி.வி விக்னேஸ்வரனும் பொய் பிரச்சாரத்தை செய்கின்றார்கள் – கஜேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்காக ஒரு தளத்தை போட்டுக்கொண்டிருந்த ரணிலின்  உண்மை முகத்தை மறைப்பதற்காக தேச விரோதிகளான எம்.ஏ சுமந்திரனும் மற்றும் சி.வி விக்னேஸ்வரனும் பொய் பிரச்சாரத்தை செய்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.

குறித்த தகவலை அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தரப்புகளின் எடுபிடி முகவராக இருக்கின்ற ரணிலுக்கு வெள்ளையடித்து தமிழ் மக்களை நம்ப வைத்து மீண்டும் அவருக்கு வாக்களிக்க சுமந்திரன் சதி செய்கின்றார்.

எனவே தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் இவர்களுடைய கருத்துக்களை நம்பி ஏமாற கூடாது.

சுமந்திரன் மற்றும் இந்திய மேற்கு தரப்பின் விருப்பத்தின் அடிப்படையில் ரணிலை பலப்படுத்தி பாதுகாக்கும் நோக்கத்தோடுதான் முள்ளிவாக்கால் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது திட்டமிடப்பட்ட சதி” என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவிகளுடன் தகாத நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு பணித்தடை!

யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவிகளுடன் தகாத நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 இல் கல்வி கற்கும் 10 வயதான மாணவிகளுடன் ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் பெற்றோர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் , பொலிஸார் ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மன்றில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் திணைக்களம் ஊடான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணை அறிக்கை கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து, ஆசிரியர் தனது பணியினை தொடர தடை விதிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக டிரம்ப் !

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைக்க டிரம்ப் பணம் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் டிரம்ப் 34 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

இந்நிலையில் அமெரிக்காவில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக டிரம்ப் கருதப்படுகிறார்.

டிரம்ப் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 11 ஆம் திகதியன்று தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் டிரம்ப்பிற்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறு பொதுமக்கள் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தின்போது, தங்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேச விசாரணை ஊடாக தீர்வு வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே நாடுகள்!

ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கூட்டாக பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

இதனுடன், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் தமக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை என பிரான்ஸும் அறிவித்துள்ளது.

அதன்படி, தகுந்த நேரத்தில், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிக்க தான் தயாராக இருப்பதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

பலஸ்தீனத்துக்கான அங்கீகாரம் சரியான தருணத்தில் கொடுக்கப்பட வேண்டும் என தான் கருதுவதாகவும், உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை தான் உடனடியாக எடுப்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது பிரித்தானிய நாடாளுமன்றம் !

பிரித்தானிய நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக இன்று (வியாழக்கிழமை) கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் அறிவித்திருந்தார்.

இதன்படி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதுடன் பொதுத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையும் என்று கூறப்பட்டிருந்தது

இதனைத் தொடர்ந்து 5 வாரங்களின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“All eyes on Rafah” -பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கோடிக்கணக்கான மனிதர்கள் !

காசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வெளியான “All eyes on Rafah” என்ற ஹேஷ்டெக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில், அதிகளவாக பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது.

அதன்படி, AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட “All eyes on Rafah” வாசம் பொருந்திய புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது.

இது, இஸ்டாகிராமில் மட்டும் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், All eyes on Rafah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் 2.75 கோடிக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.

காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையை கண்டிக்கும் வகையில், “All eyes on Rafah” என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் வைரலாகி வருகின்றது.

குறித்தப் புகைப்படத்தில் மிக நெருக்கமாக அமைந்துள்ள தற்காலிக கூடாரங்கள் இடம்பெற்றுள்ளன.

பாலைவனப் பின்னணியில், மலைகளுக்கு இடையே தற்காலிகக் கூடாரங்களில் இருக்கும் பலஸ்தீனர்களின் துயரமான நிலையை எடுத்துரைப்பது போல் அந்தப் புகைப்படம் அமைந்தது.

All eyes on Rafah என்ற புகைப்படத்தை, சர்வதேசக பிரபலங்கள் தங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை – சி.வி.விக்னேஸ்வரன்

எமது தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் வடக்கின் முதலமைச்சராக இருந்திருந்தால் பாடசாலை மாணவிகளுக்கு எதிராக இன்று மேற்கொள்ளப்படும் தகாத முறைகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்திருப்பேன்.அத்தோடு, வடக்கு மாகாணத்தில் இன்று இவ்வாறான சீர்கேடுகள் இடம்பெறுவது வெட்கித் தலை குனியும் படியான விடயமாகவே இருக்கின்றது.

ஏனெனில், தமிழ் மக்கள் ஒழுக்கமான இனமாக இருந்தவர்கள் அத்தோடு அவ்வாறே கருதப்பட்டவர்கள் ஒரு பெண் நள்ளிரவில் நகைகளை அணிந்துகொண்டு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சென்றுவரக்கூடிய நிலை என்று தோற்றம் பெறுகின்றதோ அன்றுதான் எமக்குச் சுதந்திரம் என்று மகாத்மா காந்தி சொன்னார்.

கிட்டத்தட்ட அவ்வாறான நிலை தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்த நிலையில் இப்பொழுது அனைத்தும் மாறிவிட்டது.

இன்று போதை தலை விரித்தாடுகின்றது அத்தோடு இராணுவத்தினர், கடற்படையினர், காவல்துறையினர் மற்றும் வான்படையினர் வடக்கில் முகாமிட்டிருந்தும் போதைப்பொருள்கள் எந்தத் தடையும் இல்லாமல் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன.

சீர்கெட்டுப்போயுள்ள இந்த சமூகத்தை மீட்பதற்கு இரும்புக்கரம் தேவை” என அவர் தெரிவித்துள்ளார்.