May

May

தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் மருத்துவ கழிவுகள் – மன்னார் பிரதேச சபை அசமந்தம் !

மன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான மன்னார் தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் மருத்துவ கழிவுகள் உட்பட பொலித்தீன் கழிவுகள் முறையற்றவிதமாக கொட்டப்பட்டுள்ளமை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக  வீதி ஓரங்களில் பொலித்தீன் பைகளால் சுற்றப்பட்டு  பாரிய அளவு குப்பைகள் வீதி ஓரங்களில் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டுள்ள நிலையில் அவை காற்று காரணமாக முழு பகுதியிலும்  நிறைந்து  காணப்படுவதுடன் மிருகங்களும் அவற்றை உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மருத்துவ கழிவுகளும் முறையற்ற விதமாக கொட்டப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், மாவட்டத்தின் பிரதான வீதியில் இவ்வாறான குப்பைகள் நீண்ட காலமாக கொட்டப்பட்டுவருவதை மன்னார் பிரதேச சபை கவனத்தில் கொள்ளாமல் குப்பைகளை அகற்றாமல் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

அதே நேரம் பொலித்தீன் பைகள் பிளாஸ்ரிக் போத்தல்கள் அதிகளவு கொட்டப்பட்டு காணப்படுகின்ற நிலையில் அவ்வப்போது பெய்யும் மழையின் போது டெங்கு நுளம்புகளும் பெருக கூடிய வாய்புக்கள் காணப்படுகின்றது.

எனவே, அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உரிய விதமாக அகற்றுவதுடன் அப்பகுதிகளில் குப்பைகளை கொட்டும் நபர்களுக்கு எதிராக பிரதேச சபை மற்றும் சுகாதார ஊழியர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொது மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கோவெக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – பாரத் பயோடெக் நிறுவனம்

கோவெக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

 

கொவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், அதில் பலர் மரணம் அடைந்ததாகவும் சமீபத்தில் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

 

அவை விசாரணைக்கு வந்தபோது, “கொவிஷீல்டு தடுப்பூசியால் டி.டி.எஸ் எனப்படும் இரத்தம் உறைவு மற்றும் இரத்த தட்டணுக்கள் குறைதல் போன்ற பக்கவிளைவு மிக மிக அரிதாக ஏற்படும்” என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறியிருந்தது. கொரோனாவிற்கு தடுப்பூசி செலுத்திய அனைவரிடமும் இச்செய்தி பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது.

 

மேலும், ‘இந்தியாவில் கொவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதா’ என ஆய்வு செய்யக்கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவெக்சின்’ தடுப்பூசி குறித்தும் பலருக்கு சந்தேகம் கிளப்பியது. இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான கோவெக்சின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் தனது அறிக்கையில், இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.

 

அதில், “பலமுறை சோதனை செய்த பிறகே கோவெக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. ஆகவே, இரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்கவிளைவுகளும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது. மக்களின் பாதுகாப்புதான் முதன்மையானது. எனவே, கோவெக்சின் எவ்வித எதிர்மறையான பாதிப்புகளையும் கொடுக்காது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி கோவெக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பெருமூச்சை அளித்துள்ளது.

சர்வதேச ஊடக சுதந்திர தினம் -ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு,யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டமொன்று முன்னெடுப்பப்பட்டது.

இதன்போது ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், அரச அதிகாரிகள், அரச பலங்களை பிரயோகித்து ஊடகவியலாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அச்சுறுத்துவது உள்ளிட்ட செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சமூக ஊடகங்களில் பெற்றோர்களால் பகிரப்படும் குழந்தைகளின் படங்கள் – எச்சரிக்கிறது அவுஸ்திரேலிய அரசாங்கம் !

சமூக ஊடகங்களில் தங்கள் பிள்ளைகளின் படங்களை பெற்றோர் பகிர்ந்துகொள்வது ஆபத்துக்களை உருவாக்குகின்றது என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

 

சமூக ஊடகங்களில் தங்கள் பிள்ளைகளின் படங்களை பதிவிடும் பெற்றோர்களை பாலியல் நோக்கத்தில் பலர் இலக்குவைப்பது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

 

சமூக ஊடகங்களில தங்கள் பிள்ளைகளின் படங்களை பெற்றோர் இலக்குவைத்து செயற்பட்டுள்ள கும்பல்கள் தாங்கள் பணம் செலுத்தினால் பிள்ளைகளின் நிர்வாண படங்களை தருவீர்களா என வேண்டுகோள் விடுத்துள்ளமை இந்த கருத்துக்கணிப்பின் போது தெரியவந்துள்ளது.

 

4000 பேரிடம் இந்த விடயங்கள் குறித்து கருத்து கோரப்பட்டதாகவும் இவர்களில் 100க்கும் அதிகமான பெற்றோர் தங்களிடம் தங்கள் பிள்ளைகளின் நிர்வாண படங்களை ஆகக்குறைந்தது ஒருவராவது கோரியதாகதெரிவித்துள்ளனர் என கருத்துக்கணிப்பினை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

 

சிறுவர் பாலியல் நாட்டம் கொண்டவர்கள் உட்பட பலர் தங்கள் பிள்ளைகளின் படங்களை பார்த்த பின்னர் தங்களிடம் மேலும் படங்களை கோரினார்கள் என தெரிவித்துள்ளனர்.

 

பொதுவான சமூக ஊடக பதிவுகள் போன்றவற்றில் படங்களை பகிர்ந்துகொள்ளும் பெற்றோரிடம் இவ்வாறான வக்கிரமான கேள்விகள் கேட்கப்படலாம் என அவுஸ்திரேலிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் – மாணவர்களை தாக்கும் பொலிஸார்!

அமெரிக்காவின் கலிபோர்னியாபல்கலைகழக வளாகத்திற்கு கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பாலஸ்தீன மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ள பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில பகுதிகளில் மாணவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன.

எங்களின் பல்கலைகழகத்திலிருந்து வெளியேறு என மாணவர்கள் கோசம் எழுப்பிவருகின்றனர்.

நூற்றுக்கணக்கான பொலிஸார் உள்ளே நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.

 

தனியார் மருத்துவக்கல்லூரிகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை தாக்குதல்!

எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட மருத்துவபீட மாணவர்களை கலைப்பதற்காக அவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 07, விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவபீட மாணவர்கள் மீதே இவ்வாறு நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கும், தேசிய வணிக முகாமைத்துவப் பாடசாலையில் மருத்துவ பீடமொன்றை நிறுவுவதற்கும் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதனை எதிர்த்து, அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படக்கூடாது என்பதற்காக மருத்துவ பீட மாணவர்களின் நடவடிக்கைக் குழுவினால் இன்று (03) எதிர்ப்பு ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மருத்துவபீட மாணவர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக கொழும்பு 07 சிறிமத் அநாகரிக தர்மபால மாவத்தையின் ஒரு பாதை, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

இந்த நிலையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரை நிர்வாண உள்ளாடையோடு பகிரப்பட்ட பெண் என் முன்னாள் காதலி – மனைவி: லூட்டன் UK அனாதன் ஒப்புதல் வாக்குமூலம் !

‘Ana Than’ அனாதன் யார் இந்த முகநூல் பொறுக்கி? என்ற தலைப்பில் தேசம்நெற்றில் வெளியான செய்தியை அடுத்து சம்பந்தப்பட்ட முகநூலின் சொந்தக்காரர் தேசம்நெற்றைத் தொடர்புகொண்டு அரைநிர்வாணப் படங்களை தான் தான் பகிர்ந்ததை ஒப்புக்கொண்டார். இரு ஆண் குழந்தையின் தந்தையான மில்ட்ன் கீன்ஸ்ஸில் கடை வைத்திருந்த வர்த்தகரான இவர் முன்னாள் காதலியோடு மீண்டும் உறவை ஏற்படுத்தியதாகவும் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டதும் அவரைப் பழிவாங்கும் வகையில், அரை நிர்வாண உள்ளாடையோடு அவரது படங்களைப் பகிர்ந்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் தற்போது யாழிலேயே வாழ்கின்றார்.

 

அப்பெண்ணோடு தான் சிறுவயது முதல் யாழ் சங்கானையில் உள்ள பாடசாலையில் கல்வி கற்றதாகவும் பதின்ப வயதில் அப்பெண்ணோடு காதல் மலர்ந்ததாகவும் தெரிவிக்கின்றார். பின்னல் அவர்கள் யுத்தம் காரணமாக வன்னிக்குப் புலம்பெயர தொடர்புகள் விடுபட்டதாகவும் அனாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஆனால் 1996இல் தான் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து விட இருவரது வாழ்க்கையும் வெவ்வேறு திசைகளில் பயணித்ததாகக் கூறுகின்றார்.

 

வன்னியில் இயக்கம் கட்டாய ஆள்சேர்ப்பில் ஆண்களையும் பெண்களையும் பிடித்துச் சென்றதால் அவளின் பெற்றோர் அவளுக்கு சிறுவயதிலேயே திருமணம் பேசி தங்களுக்கு பிடித்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததாக லூட்டன் அனாதன் தெரிவிக்கின்றார். அதன் பின் மீண்டும் இவர்கள் தொடர்பை ஏற்படுத்தி உறவை வளர்த்து அது விரிசலாகி அவரது குடும்பமும் பிரிந்து தற்போது முகநூல் வசையாடல்களில் வந்து முடிந்துள்ளது. யுத்தம், பல வந்த ஆட்சேர்ப்பு என்பன இவ்வாறான சமூகச் சிதைவுகளையும் பண்பாட்டுச் சிதைவுகளையும் கூட இன்றும் ஏற்படுத்தி வருகின்றது. நாற்பது வயதில் பேரப்பிள்ளைகளை பராமரிக்கும் பெண்கள் வன்னியில் அதிகம்.

 

தற்போது மில்டன் கீன்ஸ் கடை உரிமையாளர் அனாதன் தேசம் ஜெயபாலனோடு நடத்திய உரையாடலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

யாழ்ப்பாணத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு தாக்குதல்கள்!

யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அச்சுவேலி பகுதியில் நேற்று முன்தினமும் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு மற்றும் கற்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக வன்முறை கும்பல்கள் அட்டகாசம் செய்யும் நிலையில் காவல்துறையினர் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

விசா விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் – இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பினர்

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குறித்த போராட்டத்தை இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பினர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக முன்னெடுத்தனர்.

 

சொந்த காணியை துப்புரவு செய்ய சென்ற முல்லைத்தீவு மக்கள் மீது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வழக்குத்தாக்கல்!

முல்லைத்தீவில் கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்களில் 130 நபர்களுக்கு எதிராக  வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

சுண்டிக்குளம் தேசியா பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

குறித்த வழக்கானது கடந்த வருடம் 7.12.2023 அன்றையதினம் இடம்பெற்று 02.05.2024 வழக்கு தவணையிடப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றையதினம் குறித்த வழக்கானது விசாரணைக்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு தொடுக்கப்பட்ட மக்கள் சார்பில் சட்டத்தரணி சி.தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார். இது தொடர்பாக வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ,

 

இன்றையதினம் புதுக்குடியிருப்பு பகுதியிலே இருக்கின்ற கரியல் வயல் பிரதேசத்திலே வாழும் 100 மேற்பட்ட மக்களின் காணிகள் வனஜீவவராசிகள் திணைக்களத்திற்கு கீழே வருகின்ற காணிகள் என வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தொடரப்பட்ட வழக்குகள் இரண்டாம் தவணையாக நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த வழக்கிலே சம்பந்தபட்ட மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான நூற்றாண்டு உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும் அரச அனுமதிபத்திரம் பெற்றமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் சுட்டிகாட்டியிருந்தோம்.

 

இந்த வழக்கு தொடர்பாக மீள் பரிசீலனை செய்து இவ் வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டு குறித்த வழக்கானது மூன்றாக பிரித்து வருகின்ற ஜூலை மாதம் 19 ஆம் திகதி, 25 ஆம் திகதி, 26 ஆம் திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது.