02

02

சொந்த காணியை துப்புரவு செய்ய சென்ற முல்லைத்தீவு மக்கள் மீது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வழக்குத்தாக்கல்!

முல்லைத்தீவில் கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்களில் 130 நபர்களுக்கு எதிராக  வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

சுண்டிக்குளம் தேசியா பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

குறித்த வழக்கானது கடந்த வருடம் 7.12.2023 அன்றையதினம் இடம்பெற்று 02.05.2024 வழக்கு தவணையிடப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றையதினம் குறித்த வழக்கானது விசாரணைக்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு தொடுக்கப்பட்ட மக்கள் சார்பில் சட்டத்தரணி சி.தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார். இது தொடர்பாக வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ,

 

இன்றையதினம் புதுக்குடியிருப்பு பகுதியிலே இருக்கின்ற கரியல் வயல் பிரதேசத்திலே வாழும் 100 மேற்பட்ட மக்களின் காணிகள் வனஜீவவராசிகள் திணைக்களத்திற்கு கீழே வருகின்ற காணிகள் என வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தொடரப்பட்ட வழக்குகள் இரண்டாம் தவணையாக நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த வழக்கிலே சம்பந்தபட்ட மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான நூற்றாண்டு உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும் அரச அனுமதிபத்திரம் பெற்றமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் சுட்டிகாட்டியிருந்தோம்.

 

இந்த வழக்கு தொடர்பாக மீள் பரிசீலனை செய்து இவ் வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டு குறித்த வழக்கானது மூன்றாக பிரித்து வருகின்ற ஜூலை மாதம் 19 ஆம் திகதி, 25 ஆம் திகதி, 26 ஆம் திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை தமிழர்கள் எவரும் விரும்பவில்லை – எரிக் சொல்ஹெய்ம்

தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ள இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம், இருப்பினும் இன்னமும் தமிழர்களின் அபிலாஷைகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாத நிலையில் இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

மே தினத்தன்று (1) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எரிக் சொல்ஹெய்ம் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இலங்கைத் தமிழரசுக்கட்சித் தலைவர் எஸ்.சிறிதரன் உள்ளிட்ட தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.

 

அதேவேளை இவ்விஜயம் தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் எரிக் சொல்ஹெய்ம், அதில் மேலும் கூறியிருப்பதாவது:

 

சுமார் இருபது ஆண்டுகளின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருப்பதானது என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச்செய்திருக்கின்றது. இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் பலமுறை நான் இங்கு வந்திருக்கின்றேன். சிங்களவர்கள் மற்றும் தமிழர்களின் எனது நெருங்கிய நண்பர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

 

யுத்தத்தின் பின்னர் இப்போதுதான் நான் முதன்முறையாக யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் விஜயம் செய்திருக்கின்றேன். என்னுடைய நண்பர்களான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹிமன்ஷு குலாட்டி மற்றும் கவின்குமார் கந்தசாமி ஆகியோருடன் இன்று (நேற்று முன்தினம்) இங்கு சென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

அதேபோன்று இலங்கையின் சிரேஷ்ட தமிழ் தலைவரான எஸ்.சிறிதரனுடன் அண்மையகால அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், தற்போது ஆன்மிக நிலையமொன்றை நடாத்திவருபவரும், சமாதானப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற காலத்தில் எனது பழைய நண்பருமான ஜே.மகேஸ்வரனையும் சந்தித்தேன். அத்தோடு எம்மைச் சந்திப்பதற்கு அழைப்புவிடுத்த வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு நன்றி கூறுகிறேன்.

 

தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பதுடன், அது மிகச்சிறந்த விடயமாகும். பாதுகாப்பு சிறந்த நிலையில் உள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை.

 

இருப்பினும் தமிழர்களின் பல அபிலாஷைகள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. குறிப்பாக யுத்தத்தின்போது காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காத்திருக்கின்றன. கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் இன்னமும் முழுமையாக அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதவழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஆலயங்களை அடிப்படையாகக்கொண்டு நிலவும் குழப்பங்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படவேண்டும். வட இலங்கையில் வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுபீட்சம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும். இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும்.

 

தமிழர் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும். இருப்பினும் அது வன்முறையற்ற விதத்தில் தொடரும் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினர் வடக்கில் தங்கள் முகாம்களை விஸ்தரிக்கின்றனர் – அம்பிகா சற்குணநாதன்

இலங்கையின் வடபகுதி அமைதியாக உள்ளது அது சிறப்பான விடயம் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்திற்கு கடும் பதிலடி கொடுத்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இராணுவத்தினர் அங்கு தங்கள் முகாம்களை விஸ்தரிக்கின்றனர் ஊடகங்கள் சிவில் சமூகத்தினர் போன்றவர்களை கடுமையாக கண்காணிக்கின்றனர் துன்புறுத்துகின்றனர் இது அமைதிக்கு மாறான நிலையை ஏற்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

அம்பிகா சற்குணநாதன் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடபகுதி கடுமையாக இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது பாதுகாப்பு தரப்பினர் சிவில் சமூகத்தினரை மாற்றுக்கருத்துடையவர்களை ஊடகங்களை கண்காணிக்கின்றனர் துன்புறுத்துகின்றனர் அச்சுறுத்துகின்றனர்.

பொதுமக்களின் காணிகளை கைப்பற்றுவதன் மூலம் இராணுவம் தொடர்ந்தும் தனது முகாம்களை விஸ்தரிக்க முயல்கின்றது, இந்து வழிபாட்டு தலங்களை பௌத்த மதகுருமாரும் தொல்பொருளியல் திணைக்களமும் கைப்பற்றுவதற்கு உதவுகின்றது.

இது பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகின்றது அமைதிக்கு எதிரான சூழலை உருவாக்குகின்றது.

வேறு விதத்தில் சொல்வதானால் – வெள்ளையடித்தல் இலங்கை அரசாங்கம் அதன் திட்டங்களை முன்னெடுக்க உதவுதல்

நாள் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் – அது சாத்தியமில்லை என்கிறது இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் !

அரசாங்கத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சம்பளத்தை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

 

எவ்வாறாயினும், சம்பள நிர்ணய சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர நேற்று முன்தினம் வெளியிட்டார்.

 

இதன்படி, நாளாந்த சம்பளம் 1,350 ரூபாவாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவு 350 ரூபாவாகவும் சேர்த்து மொத்தமாக 1,700 ரூபாவாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

பெருந்தோட்டக் கம்பனிகளின் உயர் அதிகாரிகளுடன் இன்று கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையிலேயே ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்காக அதிக செலவு ஏற்படுவதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

எனினும், பெருந்தோட்டக் கம்பனிகளுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும், குறித்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி நீதிமன்றத்தை நாடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதன்படி, பெருந்தோட்டக் கம்பனிகளின் உயர் அதிகாரிகளுடன் இன்று கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அதன் பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகாமையில் 15 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் – 2 வருடங்களாக நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல்!

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​டுபாய் கபில என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய இந்த சுற்றிவளைப்பில் 13 கிலோ ஹெரோயின், 6 கிலோ கிராம் ஹாஷ், 500 கிராம் கொக்கெய்ன் மற்றும் 15 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றுடன், பணத்தை வைத்திருந்த சந்தேக நபர் மற்றும் பெண் சந்தேக நபர் ஒருவரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

51 வயதான சந்தேக நபர் ஒருவரும் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நபர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியில் வாடகை வீட்டில் சுமார் 2 வருடங்களாக பாரியளவில் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி இந்த போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் 1 கிலோ 60 கிராம் ஹெரோயின் மற்றும் 49 இலட்சம் ரூபா பணத்துடன் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.