04

04

நாங்கள் ரணிலின் பக்கம் பல்டி அடிக்க மாட்டோம் – சாம் ரெலோ தொடரும் பொது வேட்பாளர் சர்ச்சை !

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் – 2024 தொடர்பான அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாடாக பொதுவேட்பாளர் என்ற கொள்கையை தமிழ்தேசிய கட்சிகள் முன்மொழிந்து வருகின்றன. இது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பொதுவேட்பாளர் தொடர்பிலும் அதிலுள்ள சாதக – பாதக நிலை தொடர்பிலும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரித்தானிய பிரதிநிதியும் – பேச்சாளருமான நகுலேஸ்வரன் ஞானசம்பந்தனுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் பரபரப்பான அரசியல் கலந்துரையாடல்.

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்த துருக்கி நடவடிக்கை !

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்த துருக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை  துருக்கியின் வர்த்தக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேல் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து தயாரிப்புகளையும் உள்ளடக்கியது.

காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி போதுமான அளவு வருவதற்கு இஸ்ரேலிய அரசாங்கம் அனுமதிக்கும் வரை துருக்கி இந்த புதிய நடவடிக்கைகளை கண்டிப்பாகவும் தீர்க்கமாகவும் செயல்படுத்தும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் இரு நாடுகளுக்கும் இடையே ஏழு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வர்த்தக பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

இந்த தீர்மானத்திற்கு பதிலளித்துள்ள இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர், துருக்கி ஜனாதிபதி  ரிசெப் தையிப் எர்டோகன் சர்வாதிகாரியாக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எர்டோகன் “துருக்கி மக்கள் மற்றும் வணிகர்களின் நலன்களைப் புறக்கணித்து, சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை புறக்கணிக்கிறார்” என்று இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உள்ளூர் உற்பத்தி மற்றும் பிற நாடுகளின் இறக்குமதியை மையமாகக் கொண்டு துருக்கியுடனான வர்த்தகத்திற்கான மாற்று வழிகளைக் கண்டறியுமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலக ஊடக சுதந்திர குறிகாட்டி – இலங்கைக்கு 150ஆவது இடம் !

எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் ஊடக சுதந்திர குறிகாட்டியின் பிரகாரம் 180 நாடுகளின் வரிசையில் இலங்கை 35.21 புள்ளிகளுடன் 150 இடத்தில் இருக்கின்றது. கடந்த ஆண்டு ஊடக சுதந்திர குறிகாட்டியுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
உலக ஊடக சுதந்திர தினத்தை (3) முன்னிட்டு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால் 2024 ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர குறிகாட்டியை அடிப்படையாகக்கொண்டு வரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளின் பட்டியல் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலின் பிரகாரம் மொத்தமாக 180 நாடுகளில் கடந்த ஆண்டு 45.85 புள்ளிகளுடன் 135 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இவ்வருடம் 35.21 புள்ளிகளுடன் 150 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டிருக்கின்றது. அரசியல் குறிகாட்டி, பொருளாதார குறிகாட்டி, சட்டக் குறிகாட்டி, சமூக குறிகாட்டி மற்றும் பாதுகாப்பு குறிகாட்டி ஆகிய 5 விடயப்பரப்புகளுக்குத் தனித்தனியாகப் புள்ளியிடப்பட்டு, ஊடக சுதந்திரக் குறிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையில் ஊடக சுதந்திரம் சார்ந்த நெருக்கடிகள் பெருமளவுக்கு 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட யுத்தத்துடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, ஊடகவியலாளர்கள் பலருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பில் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை என விசனம் வெளியிட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி இலங்கையின் ஊடகத்துறையானது அரசியல் தரப்புக்களில் பெரிதும் தங்கியிருப்பதாகவும், இந்நாட்டில் ஊடகத்துறை இன்னமும் அச்சுறுத்தல்மிகு நிலையிலேயே இருப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் 2022 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, நாட்டைவிட்டு வெளியேறியபோது ஊடக சுதந்திரத்தின் மீதான அவரது ஒடுக்குமுறைகள் முடிவுக்குவந்துவிட்டதாகக் கருதப்பட்டதாகவும், இருப்பினும் இன்னமும் ஊடகத்துறை மீதான அரசியல் ரீதியான துருவமயப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பாலஸ்தீனுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் – 2000பேர் கைது !

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்தள்ள அமெரிக்க கல்லூரி வளாகங்களில் காவல்துறையினரின் கைது நடவடிக்கைள் 2,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்லூரி வளாகங்களில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை இரவு முதல் வியாழன் பகல் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைதானவர்களின் எண்ணிக்கை 2000 கடந்துள்ளதாகவும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, காவல்றையினரால் அவர்களின் கூடாராங்களும் அகற்றப்பட்டுள்ளது.

மேலும், நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியில் 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாட்டில் எவருக்கும் போராட உரிமை உள்ளது என்றும், ஆனால் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் மருத்துவ கழிவுகள் – மன்னார் பிரதேச சபை அசமந்தம் !

மன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான மன்னார் தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் மருத்துவ கழிவுகள் உட்பட பொலித்தீன் கழிவுகள் முறையற்றவிதமாக கொட்டப்பட்டுள்ளமை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக  வீதி ஓரங்களில் பொலித்தீன் பைகளால் சுற்றப்பட்டு  பாரிய அளவு குப்பைகள் வீதி ஓரங்களில் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டுள்ள நிலையில் அவை காற்று காரணமாக முழு பகுதியிலும்  நிறைந்து  காணப்படுவதுடன் மிருகங்களும் அவற்றை உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மருத்துவ கழிவுகளும் முறையற்ற விதமாக கொட்டப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், மாவட்டத்தின் பிரதான வீதியில் இவ்வாறான குப்பைகள் நீண்ட காலமாக கொட்டப்பட்டுவருவதை மன்னார் பிரதேச சபை கவனத்தில் கொள்ளாமல் குப்பைகளை அகற்றாமல் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

அதே நேரம் பொலித்தீன் பைகள் பிளாஸ்ரிக் போத்தல்கள் அதிகளவு கொட்டப்பட்டு காணப்படுகின்ற நிலையில் அவ்வப்போது பெய்யும் மழையின் போது டெங்கு நுளம்புகளும் பெருக கூடிய வாய்புக்கள் காணப்படுகின்றது.

எனவே, அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உரிய விதமாக அகற்றுவதுடன் அப்பகுதிகளில் குப்பைகளை கொட்டும் நபர்களுக்கு எதிராக பிரதேச சபை மற்றும் சுகாதார ஊழியர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொது மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.