06

06

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சி – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“85 வருட காலமாக இலவச கல்வி இந்த உரிமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. அத்துடன், கஷ்டப் பிரதேசங்களில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு வரும் மாணவர்களின் வாழ்க்கையை வெற்றியடையச் செய்வதற்கு பல்கலைக்கழகத்தில் பெறும் கல்வி பாரிய உதவியாக அமைந்திருந்தது.

இந்த உரிமைக்கு இப்போது சவால் விடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் கடுமையான மாற்றங்களை மேற்கொள்ளும் முன்மொழிவுகளை அரசாங்கம் முன்வைத்துள்ளது.

உயர்கல்விக்கான பொறுப்பை நேரடியாக ஏற்றுக் கொள்ள தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை. அரசாங்கம் கொண்டு வந்துள்ள பிரேரணைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது. பல்கலைக்கழக கட்டமைப்பின் கல்வித் தரத்தைப் பாதுகாப்பது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

உயர்கல்விக்கான முன்மொழிவுகளை அரசாங்கம் கொண்டு வந்தாலும், அவை நேர்மையான முன்மொழிவுகள் அல்ல” என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் வாக்குவாதம் – சிறுவனைத் தரையில் அடித்த தந்தை கைது !

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது சிறுவனைத் தரையில் அடித்துப் பலத்த காயப்படுத்திய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, தனது ஏழு வயது சிறுவனைத் தனது கணவர் தரையில் அடித்து காயப்படுத்தியதாகப் பெண் ஒருவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார் .
தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்கப் பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார் .
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது , சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்த 7 வயது சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்காகப் பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது .
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து நபர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் – பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் !

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய நபரைக் கைது செய்யுமாறு கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் முன்னிலையில் தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ‘பொலிசார் பக்கசார்பாக செயற்படாது குழாய் கிணறு ராசனை கைது செய், பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு கொடுக்காதே, பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதும் நடவடிக்கை வேண்டும்” என பல்வேறு கோசங்களை எழுப்பி இருந்தனர்

இதனையடுத்து, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக 10 பேரை அழைத்து பேசியிருந்தார்.

இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், குறித்த சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட பொலிசார் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ரஃபாவில் இராணுவநடவடிக்கைகளை தீவிரமாக்கும் இஸ்ரேல் – ரஃபாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனியர்கள் !

ரஃபாவிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என உத்தரவுபிறப்பித்துள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.

ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

எதிர்காலத்தில் ரஃபாவில் இஸ்ரேல் தனது  இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உங்களின் பாதுகாப்பிற்காக  சோதனைசாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அல்ரபாவின் அல்சவ்கா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டுப்படுத்த அளவிலான நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இடம் பெயர்ந்த மில்லியன் கணக்காண மக்கள் எகிப்து எல்லையில் உள்ள ரபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

அச்சமடைந்த மக்கள் கால்நடையாகவும் அல்லது கழுதைகளின் மீதும் அல்லது தங்களின் உடமைகளை வாகனங்களில் ஏற்றியபடி வாகனங்களிலும் ரபாவிலிருந்து வெளியேறுகின்றனர்.

நேற்றிரவு இஸ்ரேல் மேற்கொண்ட விமானக்குண்டுவீச்சுகள் மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஃபாவிலிருந்து நகரத்தின் மேற்கு பகுதி உட்பட நகரத்தில் கடும் பதற்றநிலை காணப்படுகின்றது பலர் வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளனர் பலர் ஏற்கனவே வெளியேற ஆரம்பித்துள்ளனர் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார் என கார்டியன் தெரிவித்துள்ளது. மேலும் ரஃபா மனிதாபிமான நடவடிக்கைகளிற்கான பிரதான தளமாகவும் காணப்படுகின்றது.

அவர்கள்ரஃபாவின் கிழக்கில் உள்ளவர்களை வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்ரஃபா எல்லையில் மேற்கில் உள்ளவர்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர் எனக்கு என்ன செய்வது என தெரியவில்iலை நான் அறிவிக்கப்பட்ட இடத்தில் இல்லாவிட்டாலும் எனது குடும்பத்தை டெய்ர் எல் பலாவிற்கு கொண்டு செல்லப்போகின்றேன் எனரஃபாவின் வடக்கில் தனது குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள அபுமுகே தெரிவித்துள்ளார்.

தற்போது கடும் மழை பெய்கின்றது எங்கு போவது என எங்களிற்கு தெரியவில்லை இந்த நாள் வரும் என நான் கவலையுடன் இருந்தேன் எனது குடும்பத்தவர்களை எங்கு கொண்டு செல்வது என சிந்திக்கவேண்டும் என ரஃபாவில்  அகதியாக உள்ள அபுரயீட் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வேலைவாய்ப்பபை வெளிநாட்டவருக்கு வழங்கியதை எதிர்த்தே நான் குரல் எழுப்பினேன் – விமான நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன் வாக்குமூலம் !

இலங்கையின் வேலைவாய்பற்ற இளைஞர்களிற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டிய வேலைவாய்ப்பை வெளிநாட்டை சேர்ந்தவர்களிற்கு வழங்கியதை பார்த்த பின்னரே நான் எதிர்த்துகுரல் எழுப்பினேன்  என கொழும்பு விமானநிலையத்தின் விசா வழங்கும் நடைமுறைகளை வெளிநாட்டு நிறுவனத்திடம் வழங்கியமைக்காக எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு  விமானநிலையத்தின் வருகை விசாக்களை கையாளும் பொறுப்பினை  இந்திய நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளமைக்கு விமானநிலையத்தில்வைத்து எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸாரினால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

அவரது வாக்குமூலத்தினை பதிவு செய்துள்ளதாக கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ்பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆவணங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட விமானநிலையத்தின் குடிவரவு துறை அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளர்ர்.

விசாரணைகள் தொடர்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் காணப்பட்ட இளைஞன் இன்று பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் கருத்து தெரிவிக்கையில் இலங்கையின் வேலைவாய்பற்ற இளைஞர்களிற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டிய வேலைவாய்ப்பை வெளிநாட்டை சேர்ந்தவர்களிற்கு வழங்கியதை பார்த்த பின்னரேநான் எதிர்த்துகுரல் எழுப்பினேன்  என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வேலைவாய்ப்புகள் வெளிநாட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளமை கவலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் விசாவழங்குதல் போன்ற செயற்பாடுகள் வெளிநாட்டு நிறுவனங்களிற்கு வழங்கப்பட்டுள்ளதும் கவலையை ஏற்படுத்துகின்றது அவர்கள் அதனை பயன்படுத்தி இலாபம் உழைக்கபோகின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் தாய்லாந்தில் தொழில்புரிந்துவிட்டு நாடு திரும்பியுள்ளேன் தாய்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பெரும் இடைவெளி கவலைதருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு அரசியல் தொடர்புகள் உள்ளது தான் சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள அவர் நான் இலங்கையின் இளைஞர்களின் குரலையே விமானநிலையத்தில் ஒலித்தேன் இலங்கையின் அரசமைப்பின்படி செயற்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தேசம்திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.. !

விசா வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்து வருமானம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இலங்கையில் நடைமுறையில் இருந்து வந்த விசா வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்ததன் மூலம், 18.50 டொலர்களை அறவிட்டு, அந்த வருமானம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார்.

எமது நாட்டுக்கு கிடைக்கும் அதிக அளவிலான டொலர்களில் இழப்பு ஏற்படுவதுடன் இவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்துவதன் அடிப்படையும், நோக்கமும் என்னவென சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

பொல்லேகல மகா வித்தியாலத்தில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”தரவுகளை மையப்படுத்திய அறிவியல் ரீதியிலான பகுப்பாய்வுகளின் அடிப்படையிலயே இத்தகைய முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

நாட்டிற்கு நன்மை பயப்பதாக இது அமைய வேண்டும். இதன் சாதக, பாதகங்கள் குறித்தும், நன்மை தீமைகள் குறித்தும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். இது பிணைமுறி மோசடியை விட பாரதூரமான நிதி மோசடி என பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், இது தொடர்பில் உண்மை நிலையை நாடு அறிய வேண்டும்.

நாட்டை ஆள்பவன் ஒரு தற்காலிக பொறுப்பாளனே. எனவே முட்டாள்தனமான கொள்கைகளில் இருந்து விலகி யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். யாரேனும் நல்லது செய்தால் நல்லது என்று கூற வேண்டும்.

எதிர்க்கட்சியோ அல்லது வேறு யாரேனும் நாட்டுக்கு நல்லது செய்தால் அதைப் பாராட்ட வேண்டும். தான் பேசும் விவாதங்களுக்கும் போலவே செயலிலான விவாதங்களுக்கும் தயார். நாட்டுக்கு தேவையான பணிகள், தீர்வுகள், பதில்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழு, தலைவர்கள் எந்த நேரத்திலும் விவாதத்திற்கு தயாராக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மூன்றாவது விவாதமாக பேசுவதோடு மாத்திரமல்லாது செயல் ரீதியிலான விவாதத்திற்கும் தாம் தயார்.

மதுவிலக்கு கொள்கையை கடைப்பிடிப்பவன் என்ற முறையில் மது, போதைப்பொருள், சிகரெட் என்பவற்றை நான் பகிர்ந்து வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் உண்மையைப் பேசுவதால் தான் அதிகமாக சேறு பூசப்படுகின்றது. நாட்டை வங்குரோத்து நிலைமையிலிருந்து விடுவித்து, மீண்டும் வங்குரோத்து நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்கான மூலோபாயங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை.

தோல்வி கண்ட கம்யூனிஸ, மார்க்சிஸ சித்தாந்தங்களால் எமது நாட்டை கட்டியெழுப்ப முடியாது. தீவிர சோசலிஸவாதிகளின் பிள்ளைகள் கூட பணம் செலுத்தி படிக்கும் தனியார் பாடசாலைகளுக்கே செல்கின்றனர். எந்த சூழ்நிலையிலும் நாம் அரச பாடசாலைகளை தனியார் மயமாக்க மாட்டோம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் முதன்முறையாக AI தொழில்நுட்பம் மூலமான நேரலை செய்தி ஒளிபரப்பு !

இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவை (AI தொழில்நுட்பம்) பயன்படுத்தி சிங்கள செய்தி ஒளிபரப்பை ஊடகமொன்று வழங்கியுள்ளது.

குறித்த ஒளிபரப்பானது தொலைக்காட்சியில் நேற்றிரவு 8 மணிக்கு ஒளிபரப்பான செய்தியறிக்கையில், ஒளிபரப்பப்பட்டுள்ளது.

பிரதான அறிவிப்பாளர்களான நிஷாதி பண்டாரநாயக்க மற்றும் சமிந்த குணரத்ன ஆகியோரின் பிரதியே செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய செய்தி ஒளிபரப்பானது இந்த பிரதிகள் மூலம் நீண்ட நேரம் வழங்கப்பட்டது.

இதன்மூலம் செயற்கை நுண்ணறிவின் தொழில்நுட்பத்தின் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு குறித்த தொலைக்காட்சி வழங்கியுள்ளது.

இந்த செயன்முறையானது, உலகளாவிய ரீதியிலும் நாட்டிலும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒன்லைன் விசாவை வழங்கிய இந்திய அதிகாரிகள் தொடர்பில் விசனம் வெளியிட்ட இளைஞனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டிரன் அலஸ்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன்லைன் விசாவை இந்திய அதிகாரிகள் வழங்கியமையால் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் இலங்கை இளைஞன் கடும் கோபமாக பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தது.

இந்நிலையில், விசா வழங்கும் பிரிவில் குழப்பத்தை ஏற்படுத்திய இளைஞனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த மே மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞன் விமான நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சட்டத்தரணியான சந்தருவன் குமாரசிங்க என்ற இளைஞன் இன்று காலை விமான நிலைய காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவர் விமான நிலைய காவல்துறைக்கு வந்தபோது, ​​​​வேறு சில வழக்கறிஞர்களும் அங்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, விமான நிலையத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை பதிவு செய்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மூவரின் வாக்குமூலங்களையும் கட்டுநாயக்க காவல்துறையினர் நேற்று (05) மாலை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான தேசம்திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.. !

இலங்கையின் தற்போதைய சீர்திருத்தங்களிற்கான தனது ஆதரவையும் உறுதிப்பாட்டையும் உறுதி செய்தார் ரிக்கார்டோ புலிட்டி !

இலங்கைக்கு இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐ.எவ்.சியின் ஆசிய பசுபிக்கிற்கான துணைதலைவர் ரிக்கார்டோ புலிட்டி இலங்கையின் தற்போதைய சீர்திருத்தங்களிற்கான தனது ஆதரவையும் உறுதிப்பாட்டையும் உறுதி செய்துள்ளார்.

அதேவேளை அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார வளர்ச்சிக்காக தனியார் துறையினர் தலைமைதாங்கும் அபிவிருத்தியின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநர் வலுசக்தி துறை அமைச்சர் உட்பட பலரை இலங்கை விஜயத்தின் போது அவர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இலங்கைக்கு அபரிமிதமான ஆற்றல் உள்ளது. நாடு முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும்போதுஇ அந்த வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வதும் பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து நிலையான வளர்ச்சிக்கான மாற்றத்தை ஆதரிப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதும் முக்கியமானது.என புலிட்டி தெரிவித்தார்

தேவையான சீர்திருத்தங்களைத் தழுவி சாதகமான வணிகச் சூழலை வளர்ப்பதன் மூலமும் நிலையான உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும் இலங்கை தனது முழுமையான பொருளாதார ஆற்றலைத் திறந்து அதன் மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் ”என்று புலிட்டி கூறினார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் வங்கிகளுக்கு மிகவும் தேவையான நாணய பரிமாற்ற வசதியை வழங்குவதில் இருந்துஇப்போது பங்குகளில் முதலீடு செய்வது வரை இலங்கையை நிலைப்படுத்துவதில் இருந்து நிலையான வளர்ச்சிக்கு மாற்றும் போது ஆதரவளிக்க ஐஎவ்சிஉறுதிபூண்டுள்ளது. இது நாட்டின் தனியார் துறை மற்றும் பொருளாதார மீட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு” என்றார் புலிடி.

ஐ.எஃப்.சி இலங்கைக்குகார்பன் உழிழ்வை மிகக்குறைந்த அளவிற்கு மட்டுப்படுத்துவதற்கு உதவுவதற்காக பசுமை நிதியை மேம்படுத்துவதற்கும் அளவை அதிகரிப்பதற்கும் இலங்கைக்கு தொடர்ந்து உதவி செய்யும்” என்று புலிட்டி கூறினார்.

நாங்கள் தனியார் துறையுடன் இணைந்து ஒரு வலுவான முதலீட்டு குழாய்த்திட்டத்தை உருவாக்குவதற்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் மேலும் நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல்களில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போம். தரமான வேலைகளை உருவாக்குதல் போட்டித்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நகர்வுகள் முக்கியமானவை” என்று புலிடி கூறினார். “ஐஎஃப்சி நாட்டில் எங்கள் முதலீடுகளை ஆழப்படுத்த விரும்புகிறது எதிர்காலத்தில் இருக்கும் சாத்தியம் மற்றும் வாய்ப்புகளை அங்கீகரிக்கிறது.”

சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான இராஜதந்திர மட்டத்திலான ஏற்பாடுகள் பூர்த்தி – அமைச்சர் டக்ளஸ்

சோமாலியக் கடற்றொழிலாளர்களால் கடத்தப்பட்டு தற்போது சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான அனைத்து இராஜதந்திர மட்டத்திலான ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும்; எதிர்வரும் சில நாட்களில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்களெனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து லொரென்சோ புத்தா-04 எனும் ஆழ்கடல் மீன்பிடிப்படகில் கடற்றொழில் மேற்கொள்வதற்காக புறப்பட்ட 06 இலங்கை மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் வைத்து சோமாலியக் கடற்கொள்ளையர்களால் துப்பாக்கி முனையில் கடத்பட்டதுடன் இலங்கை அதிகாரிகள் துரிதமாக செயற்பட்டதன் காரணமாக சீசெல்ஸ் கரையோரக் காவற் படை மற்றும் கடற்படையினரால் இம் மீனவர்கள் மீட்கப்பட்டதுடன் கடற் கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது சீசெல்ஸ் துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இம் மீனவர்கைளை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி இன்றைய தினம் (06.05.2024) மீனவர்களின் உறவினர்களை அமைச்சரைச் சந்தித்து முறையிட்டனர். இதன் போது அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

மீனவர்களை அழைத்து வருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்காக நான் வருத்தமடைகிறேன். இது போன்ற சம்பவமொன்றுக்கு இலங்கை முதல் தடவையாக முகங்கொடுத்துள்ளதால் இதிலுள்ள சட்டச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதற்கு இரு நாட்டு அதிகாரிகளுக்கு; கால அவகாசம் தேவையாக உள்ளது. எமது கடற்றொழிலளர்களை மீட்பதற்கான அனைத்து இராஜதந்திர மடட்டத்திலான ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. எதிர்வரும் சில நாட்களில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள். இவர்களை விடுவிப்பது தொடர்பில் அமைச்சரவையிலும் நான் பல முறை பேசியுள்ளேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் வெளிவிவகார அமைச்சுக்கும் உரிய அலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் இவர்களை எதிர்வரும் சில நாட்களில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இன்றைய சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நயனா குமாரி சோமரத்ன, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தை ஆகியோரும் கலந்து கொண்டனர்.