09

09

கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் எண்ணிக்கை 11 லட்சமாக அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் எண்ணிக்கை சுமார் பதினொரு இலட்சமாக அதிகரித்துள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்  தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்துவது போன்றே போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “கொழும்பு மாவட்டத்தில் சுமார் 256 இடங்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக போதைப்பொருள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், போதைப்பொருள் வர்த்தகத்தையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ரஸ்ய எல்லையில் உள்ள கொலைகளங்களில் உயிரிழக்கும் இலங்கையின் இராணுவ வீரர்கள்!

பலகுழுக்களால் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைக்காக சேர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய எல்லையில் உள்ள கொலைகளங்களில் உயிரிழக்கின்றனர் என அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றின் பேட்டியில் கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர் இதே எண்ணிக்கையிலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகளே என்னை ரஸ்ய உக்ரைன் போர்முனையில் பணியாற்ற தெரிவு செய்தனர் அதற்காக 1.6 மில்லியன் செலுத்தினேன் முகாமில் உதவியாளராக பணியாற்றும் வேலை என தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரஜையான ரமேஸ் என்பவரே இந்த நடவடிக்கைகளின் சூத்திரதாரி என தெரிவித்துள்ள அவர் ரஸ்யாவில் தமிழில் பேசிய ஒருவர் எங்களை வரவேற்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாபயணிகளுக்கான விசாவில் செல்லும் இலங்கையர்களை வாக்னெர் கூலிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்காக ரஸ்ய மொழி ஆவணமொன்றில் கைச்சாத்திடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என தெரிவித்துள்ள முன்னாள் படைவீரர் சட்டத்தரணி போன்று தோற்றமளித்த இந்திய பெண் ஒருவர் எங்களிற்கு உதவினார் அவர் முகாம் உதவியாளராக பணிபுரிவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தம் என தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

என்னையும் 33 இலங்கையர்களையும் ரொஸ்டொவ்வில் உள்ள முகாமிற்கு கொண்டு சென்றார்கள் அங்கு 14 நாட்கள் பயிற்சி அளித்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் அந்த முகாமிலிருந்தவேளை 70 இலங்கையர்கள் காணப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 103 காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதி உயிரிழப்பு !

2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 103 காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதி உயிரிழந்துள்ளன. காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்குப் புகையிரத திணைக்களத்துடன் ஒன்றிணைந்து விசேட செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா தேவி வன்னியராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற அமர்வின் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்த நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் 103 காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதி உயிரிழந்துள்ளன.

காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு முறையான பொறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய புகையிரத திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு ஒன்றிணைந்து புகையிரத பாதைகளில் காட்டு யானைகள் பயணம் செய்யும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.இந்த பகுதிகளை விசேட பாதுகாப்பு பகுதிகளாகவும்,கண்காணிப்பு பகுதிகளுக்காகவும் அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

காட்டு யானைகள் கடக்கும் பகுதிகள் குறித்து புகையிரத சாரதிகளுக்கு தெளிவுபடுத்தவும்,புகையிரத பாதைகளில் வளைவு பகுதிகளைக் காட்டு யானைகள் கடக்கும் போது அவைகளை முன்கூட்டியே அவதானிக்கும் வகையில் விசேட இயந்திரங்கள் பொருத்துவதற்கும்,புகையிரத பாதை வளைவுகளைத் தொடர்ந்து பராமரிப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இலங்கை பிரஜை இல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது – மகிந்த தேசப்பிரிய

இலங்கையின் பிரஜை அல்லாத ஒருவர் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு நாட்டின் சட்டத்தில் எந்த தடையுமில்லை என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தின்படி இலங்கை பிரஜை இல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது தேர்தலில் வாக்களிக்க முடியாது நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களில் டயனா கமகே கையெழுத்திடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளிடமிருந்து கை மாறும் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி – து.சேனனுடனான கலந்துரையாடல்!

மே மாதம் 11 மற்றும் 12ம் திகதிகளில் முள்ளிவாய்க்கால் கண்காட்சி நிகழ்வை பிரித்தானியாவில் இயங்கும் இளைய தலைமுறையினர் அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. நியூமோல்டனில் மோல்டன் றோட்டில் உள்ள மனோர் பார்க் ஹோலில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்குப் பின் முள்ளிவாய்க்கால் நிகழ்வு தங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பறைசாற்றி வரும் அமைப்புகளின் பிடியிலிருந்து விடுபட்டுக்கொண்டுள்ளது. தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக பறைசாற்றுகின்ற உலகின் பல்வேறு பாகங்களிலும் இயங்கும் அமைப்புகள் படிப்படியாக தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அபிலாசைகளைக் கைவிட்டதால் தமிழ் சொலிடாரிட்டி இந்த முள்ளிவாய்க்கால் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினை கட்டியெழுப்பியவர்களில் ஒருவரும் கொமிற்றி போர் வேர்கஸ் இன்ரநஷனலின் (Committee for Workers International) செயலாளருமாகிய சேனன் தேசம்நெற்ககுத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தங்களைப் புலிகளின் பிரதிநிதிகளாகக் காட்டிக்கொள்ளும் இவ்வாறான அமைப்புகளிடம் எந்தவிதமான அரசியல் தெளிவோ அரசியல் திட்டமிடலோ இல்லையெனச் சுட்டிக்காட்டும் சேனன் இவர்கள் காலாவதியாக நீண்டகாலம் ஆகிவிட்டது எனத் தெரிவித்தார். அதனால் நினைவு தினங்களாக ஒரு மரண வீடாக நிகழ்வுகளை நடாத்தி காலத்தை விரயமாக்காமல் இந்த நினைவுகளை மக்களை எழுச்சியடையச் செய்யும் வகையிலும் அதனை ஒரு அரசியல் சக்தியாக மாற்றுகின்ற வகையிலும் தமிழ் சொலிடாரிட்டி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதாக சேனன் தெரிவித்தார். அவர் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணல் இதோ..!

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!