11

11

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி – குழந்தையை யாழ்.வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் !

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிறிப்டோ கரன்சி இலங்கையில் சட்ட ரீதியானதல்ல – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்

நாட்டில் கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கிறிப்டோ நாணயம் அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லையெனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிறிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த சிலர் நட்டமடைந்துள்ளதாகவும் இவ்வாறான முதலீடுகளின் மூலம் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை பற்றி பரிசீலிக்க வேண்டும் – ஐ.நாவில் தீர்மானம் !

ஐக்கியநாடுகள் சபையில்  பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை  வழங்குவது குறித்து  ஐக்கியநாடுகள்பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது.

பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது.

143 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

2012 முதல் பாலஸ்தீனத்திற்கு ஐநாவில் பார்வையாளர் அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து  பாதுகாப்பு சபை மாத்திரமே தீர்மானிக்க முடியும்.

பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா சமீபத்தில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தது.

எனினும் நேற்றைய தீர்மானம் பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை வழங்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்த தீர்மானத்தை பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் வரவேற்றுள்ளார்.

ஐக்கியநாடுகள் பயங்கரவாத நாட்டை தனது பக்கத்திற்கு வரவேற்றுள்ளது என ஐநாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் உணவகம், சிகையலங்கார நிலையம் என்பன திறந்துவைப்பு !

வவுனியா சிறைச்சாலையில் உணவகம், சிகையலங்கார நிலையம் என்பன திறந்துவைக்கப்பட்டதுடன், விடுதிக்கான அடிக்கல்லும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் நட்டு வைக்கப்பட்டது.

வவுனியா ஏ9 வீதியோரமாக சிறைச்சாலையுடன் இணைந்த வளாகத்தில் இன்று (11) இந்த நிகழ்வு நடைபெற்றது.

வவுனியா சிறைச்சாலையில் நீண்டகாலமாக தண்டனை பெற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை கொண்டு உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் என்பவற்றினை நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே நடத்தவுள்ளனர். அவர்கள் சிறையில் உள்ள காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கும், அவர்களது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விரு நிலையங்களையும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உப்புல் தெனிய திறந்துவைத்தார். அத்துடன், விடுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது.

வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் கே.ஏ.எஸ்.அபயரட்ண தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உப்புல் தெனிய, இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தினேஸ் நாணயக்கார, சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பொறுப்பதிகாரி ஏ.டீ.புத்திக்க பெரேரா, பௌத்த மதகுருமார், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை நலன் பேணும் அமைப்பினர், சிறைக் கைதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்!

கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் இன்று சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

2009 மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை முன்னிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை கஞ்சி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வருடாவருடம் கஞ்சி வாரம் இடம்பெற்றுவரும் நிலையில், இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர், கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட 152 பொதுக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் வாரத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் ஆரம்பித்துவைத்தனர்.

இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.