12

12

முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்த மக்களை மிரட்டிய பொலிஸார் !

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்த பொதுமக்களை தடையுத்தரவை காண்பித்து பொலிசார் மிரட்டிய சம்பவம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சேனையர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த பொலிசார் நீதிமன்ற தடை உத்தரவைக்காட்டி அச்சுறுத்தி தடுக்க முற்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இதன்போது நாங்கள் வேறு யாரையும் நினைவு கூறவில்லை உயிரிழந்த பொது மக்களுக்காகவே இதனை செய்கின்றோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நீதிமன்ற தடை உத்தரவை வாங்க மறுத்ததாகவும் தெரியவருகின்றது.

எனினும் பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை காய்ச்சி பொதுமக்களுக்கு பரிமாறி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொது மக்களை நினைவை நினைவு கூர்ந்திருந்தனர்.

 

நாம் அணுகுண்டை தயாரிக்க நேரிடும் – இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரான் !

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், தாம் அணுகுண்டுகளை தயாரிப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உதவியாளர் கமால் கராசி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அணுகுண்டை உருவாக்கும் முடிவு இதுவரை எங்களிடம் இல்லை. ஆனால் ஈரானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ தங்கள் இராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரானின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரபேல் கிராஸி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது, ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது.

சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதமான குண்டுகளை அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடுவானில் இடைமறித்து அழித்தன.

இஸ்ரேல் – ஈரானின் இந்தத் தாக்குதல், 3 ஆம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்திருந்த நிலையில், சர்வதேச சமூகங்களின் அழுத்தத்தால் பதற்றம் சற்று குறைவடைந்திருந்திருந்தது.

இந்நிலையில், மீண்டும் ஈரான் மதத் தலைவர் ஆலோசகர் விடுத்துள்ள ‘அணுகுண்டு தயாரிப்போம்’ என்ற எச்சரிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை விட்டு வெளியேறியுள்ள நூற்றுக்கும் அதிகமான பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் !

நூற்றுக்கும் அதிகமான பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வியாபாரங்களிலிருந்து நீங்கி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த இவர்கள் விசேட அதிரடிப்படையினர் மீது பெரும் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேட அதிரடிப்படை  மற்றும் காவல்துறை புலனாய்வுப் பிரிவு அவர்களை கைது செய்ய முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மேல் மாகாணம்  மற்றும் தென் மாகாணத்தை இலக்காகக் கொண்டு பல வருடங்களாக இவர்கள் போதைப்பொருள் வியாபாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  இவர்களுள் அநேகமானோர் வெளிநாடுகளில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தை விட்டு விலகியே அவர்கள் இவ்வாறு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய தினங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் சுற்றிவளைப்புகள் காரணமாக இவர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தை விட்டு விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் – நெல்லியடியில் கஞ்சி வழங்கிய எம். ஏ சுமந்திரன் !

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் இலங்கை தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தலமையில் இடம் பெற்றது.

நெல்லியடி பேருந்து  நிலையத்தில் முள்ளிவாயக்கால் கஞ்சி காச்சப்பட்டு பயணிகள், வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், தமிழரசு கட்சி பருத்தித்துறை தொகுதி நிர்வாகிகளான பிரசாத், தயாபரன், உட்பட தமிழரசு கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் ​போது அரசியல்வாதிகளை அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்  நடைபெறவுள்ள மாதங்களில் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் ​போது அரசியல்வாதிகளை அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றின் மூலம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது பிரதேச செயலக மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் பெயரில் அரசியல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக்கூடும் என பெப்ரல் அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சுட்டிக்காட்டியிருந்தது.

மேலும், பிரசார நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு சார்பானதாக அமைந்துவிடும் எனவும் குறித்த அமைப்பு தெரிவித்திருந்தது.

எனவே, தேர்தல்கள் ஆணைக்குழு குறித்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வரலாற்றில் ஒரு இனப்படுகொலையாளன் – கொலம்பிய ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ சாடல் !

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வரலாற்றில் ஒரு இனப்படுகொலையாளன் என பதிவுசெய்யப்படுவார் என கொலம்பிய ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் அப்பாவி சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் மீது ஆயிரக்கணக்கில் குண்டுகளை வீசுகின்றார் இதன் காரணமாக அவர் கதாநாயகனாக மாற முடியாது.  என அவர் பதிவிட்டுள்ளார்.

மில்லியன் கணக்கில் யூதர்களை கொலை செய்த  நாஜிகளுடன் இஸ்ரேலிய ஜனாதிபதியை ஒப்பிட்டுள்ள  அவர்  எந்த மதத்தினரையும் நீங்கள் கொலை செய்தாலும் இனப்படுகொலை  இனப்படுகொலைதான் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொலம்பிய ஜனாதிபதியை இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ் ஆதரவாளர் என குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேலின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் !

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளன என காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக நாங்கள் மிகச்சாதாரணமான இயந்திரங்களை பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் இதனால் எங்கள் முயற்சியும் நேரமும் வீணாகியுள்ளது  என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் மஹ்மூத் பசால் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தாக்குதலை மேற்கொண்டதும் மருத்துபிரிவினரும் காசாவின்  சிவில் பாதுகாப்பு பிரிவினருமே முதலில் அங்கு செல்கின்றனர்.

அவர்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்கள் – உடல்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள்.

இடிபாடுகளிற்குள் சிக்குப்படுபவர்களை மீட்பதற்கு அவசியமான இயந்திரங்களை காசாவிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு ஐநாவும் மனிதாபிமான அமைப்புகளும் ஆதரவளிக்கவேண்டும் என என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் மஹ்மூத் பசால் தெரிவித்துள்ளார்.

அல்சிபா மருத்துவமனையிலிருந்து இஸ்ரேலிய படையினர் விலகி 40நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் மருத்துவமனைக்குள் பாரிய மனித புதைகுழிகளுக்குள் இஸ்ரேலிய படையினர் புதைத்த உடல்களை இன்னமும் மீட்டு வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த தொடரும் யுக்திய – ஒரு லட்சம் பேர் கைது !

பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட யுக்திய நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4,472 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளில் 41 கிலோ ஹெரோயின், 43 கிலோ ஐஸ் போதைப்பொருள், 03 லட்சம் போதை மாத்திரைகள் மற்றும் 1,500 மில்லியன் ரூபா சட்டவிரோத சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நமது ஆட்சியில் விவசாயிகள் நாட்டின் அரசர்களாக மாற்றப்படுவார்கள் – சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய விவசாயக் கொள்கை உருவாக்கப்பட்டு, விவசாயிகள் நாட்டின் அரசர்களாக மாற்றப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயப் பிரகடனத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நம்பகமான நீர்ப்பாசன கட்டமைப்பொன்று இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், காணி, காணி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி போன்ற அமைச்சுக்களை ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், புதிய தொழில்நுட்பம் மற்றும் இணையதள வசதிகளை பயன்படுத்தி அனைத்து விவசாய மையங்களும் சந்தையையும் உற்பத்தியாளரையும் இணைக்கும் திட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதேநேரம், பங்களிப்பு ஓய்வூதிய முறையின் மூலம் விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை தமது ஆட்சியில் செயல்படுத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சி செய்ய ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புத்தரின் போதனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை இவ்வருடத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்தபோதிலும், செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படாததால், அடுத்த வருடம் வரை அந்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய சட்டங்களை நிறைவேற்றிய பிறகு அடுத்தகட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மொரட்டுவை பௌத்த மன்ற மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்ற மொரட்டுவை இலங்கை பௌத்த சங்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

1924ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி ஆர்தர் வி.தியெஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட மொரட்டுவை இலங்கை பௌத்த சங்கத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மொரட்டுவை பௌத்த மண்டபத்துக்கு 1925ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டது.

இந்தக் கட்டடம் 1929 ஜூன் 24ஆம் திகதி மொரட்டுவை பௌத்தர்களின் பௌத்த தலைமையகமாக, அதை அப்போதைய இலங்கை ஆளுநர் ஹெர்பர்ட் ஜே. ஸ்டென்லி திறந்துவைத்தார். மொரட்டுவை மகா வித்தியாலயத்துக்கான அடிக்கல்லும் அன்றைய தினம் நடப்பட்டது.

நூறு வருடங்களைப் பூர்த்தி செய்யும் மொரட்டுவை பௌத்த மண்டபத்தின் திருத்தப் பணிகள் அரசாங்க செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் மொரட்டுவை பௌத்த விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். மொரட்டுவை பௌத்த சங்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வளாகத்தில் சந்தன மரக்கன்றை நடும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

மொரட்டுவை பௌத்த சங்கத்தின் உப தலைவர் தம்மிக்க சந்திரநாத் பெர்னாண்டோ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நூற்றாண்டு நினைவுப் பதிப்பை வழங்கிவைத்தார்.

மொரட்டுவை பௌத்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் ரஞ்சித் கமநாயக்க, உப தலைவர்களான பிரதீப் ஸ்ரீயந்த பெர்னாண்டோ, தம்மிக்க சந்திரநாத் பெர்னாண்டோ, காமினி பெரேரா, பிரதேச செயலாளர் கீர்த்தி பெரேரா ஆகியோர் ஜனாதிபதிக்கு நினைவுப்பரிசை வழங்கினர்.

அதன் பின்னர் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் மொரட்டுவை முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

மொரட்டுவை மகா வித்தியாலயத்தின் டபிள்யூ.ஏ. இமாஷ சாவிந்திர ஆஷிங்ஷன என்ற மாணவனால் வரையப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருவப்படத்துடன் கூடிய மொரட்டுவை பௌத்த மண்டபத்தின் படமும் இங்கு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:

”இன்று முழு உலகமும் காலநிலை மாற்றத்தால் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. இந்நாட்களில் நாம் எதிர்கொள்ளும் கடுமையான சூரிய வெப்பம் நாம் இதுவரை சந்திக்காத ஒரு சூழ்நிலை. இந்தக் காலநிலை வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டிய கடினமான சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இத்துடன், கடும் நீர் பிரச்சினையையும் சந்திக்க வேண்டியுள்ளது. பௌத்த தர்மத்தின்படி இந்த சிக்கலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் உலகின் முக்கிய பிரச்சினையாக காலநிலை மாற்றத்தால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மாறும். புத்தரின் போதனைகளின்படி பார்த்தால், நாகரிகத்தின் மீதான பேராசையின் காரணமாகவே நாம் இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. அனைவரும் வேகமாக முன்னேற விரும்பினர். வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதன்படி மனித சமுதாயம் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவித்துள்ளது. எனவே, காலநிலை மாற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதில் நாம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் உலகம் இன்று விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. குறிப்பாக 1945இல் அணுகுண்டு வெடித்தபோது, இனி தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பாடசாலையில் படிக்கும்போது கணினி, கையடக்கத் தொலைபேசி எதுவும் இருக்கவில்லை. ஆனால் தற்போது, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்று செயற்கை நுண்ணறிவு வரை சென்றுள்ளோம்.

இப்போது இருப்பது செயற்கை நுண்ணறிவின் ஆரம்பமாகும். அடுத்த இரண்டு தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவு எங்கே செல்லும் என்ற கேள்வியை நாம் எதிர்கொள்கிறோம். செயற்கை நுண்ணறிவுக்கும் புத்த மதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நம் மனதால் அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே புத்தரின் போதனைகள் சுட்டிக்காட்டுகிறது. மனதைக் கட்டுப்படுத்தினால் முன்னேறலாம். மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை. மனதைக் கட்டுப்படுத்துவது மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அதனால்தான் புத்தரின் போதனைகள் மனித குலத்திற்காக செய்யப்பட்டது. மனதைக் கட்டுப்படுத்தினால் பேராசையை ஒழிக்க முடியும். இந்த மனித மனதிற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு தற்போது வந்துவிட்டது. செயற்கை நுண்ணறிவுக்கு பல்வேறு தகவல்களை இணைக்க முடியும். செயற்கை நுண்ணறிவு அதற்கேற்ப செயல்படுகிறது. அப்படியானால், புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு வேறு மதத்தைப் போதிக்குமானால் அது பௌத்தத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே, நாம் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுர காலத்தில் பௌத்தம் இலங்கைக்கு வந்ததுடன், அதன் பின்னர் பௌத்தம் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்தது. இந்து மதம், மஹாயான தர்மம் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் அதில் தாக்கம் செலுத்தியுள்ளன. இக்காலத்தில் செயற்கை நுண்ணறிவும் அதில் இணைகிறது.

அப்படியானால் செயற்கை நுண்ணறிவு வேறு ஒரு தர்மத்தைப் போதிக்குமா என்று சிந்திக்க வேண்டும். மக்கள் தங்கள் கையில் இருக்கும் கைபேசியுடன் தர்மத்தை இணைத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும். இது பௌத்தம் மட்டுமன்றி ஏனைய மதத்தினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக மாறியுள்ளது.

எனவே, செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்தவும் புதிய சட்டவிதிகளை நாம் கொண்டு வருகிறோம். தொழில்நுட்ப மேம்பாட்டு சட்ட வரைவை தொழில்நுட்ப அமைச்சு தயாரித்துள்ளதுடன், அதன் கீழ் செயற்கை நுண்ணறிவு மையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவை நிர்வகிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. நாமும் அதையே செய்ய வேண்டும்.

மேலும், புத்தரின் போதனைக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சியைத் தொடங்க அடுத்த ஆண்டு ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதை இந்த ஆண்டு நிறைவேற்ற எதிர்பார்க்கப்பட்டாலும், செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இன்னும் நிறைவேற்றப்படாததால், அடுத்த ஆண்டுக்கு அது ஒத்திவைக்கப்பட்டது. அதற்கேற்ப புதிய சட்டங்களை முன்வைத்து அந்த செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மொரட்டுவெல்ல தம்ம நிகேதன சர்வதேச பௌத்த நிலையத்தின் தலைவர் அமரபுர கல்யாணிவங்சிக ஸ்ரீ சத்தம்ம யுக்திக நிகாயவின் மகாநாயக்க வண. மாகால்லே நாகித தேரர், பாணந்துறை சங்க சபையின் நீதித்துறை சங்க நாயக்க கொரலவெல்ல வாழுகாராம மகா விஹாராதிபதி வண. நெகின்னே ஆரியஞான தேரர், மொரட்டுவ ஒழுக்காற்று அதிகார சபையின் தலைவர், மொரட்டுவ, இந்திபெத்த ஸ்ரீ சுதர்ம ரத்னாராம விகாராதிபதி வண. கம்பளை சுகுணதஜ தேரர், மொரட்டுவ ஹொரேதுடுவ புரான சங்கிகாரமயவின் விகாராதிபதி, அங்குலானே ஞானவிமல பௌத்த நிலையத்தின் தலைவர் வண. உடுகம விமலகித்தி தேரர் உட்பட மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத்தலைவர்கள், மொரட்டுவ இலங்கை பௌத்த சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.