15

15

இலங்கையில் ஒரே நாளில் 7 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – நால்வர் கைது !

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், 16 வயதுக்குட்பட்ட ஏழு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்  தெரிவித்துள்ளது .

இந்த பாடசாலை மாணவிகள்  12, 14, 10 மற்றும் 15 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் , மனம்பிட்டிய, மாங்குளம், இரத்தினபுரி, வெல்லம்பிட்டிய, வெலவாலி மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்களைக் கைது செய்ய பொலிஸார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

யாழ்.போதனா வைத்தியசாலையில்  பிரசவித்த குழந்தையை கைவிட்டு சென்ற சிறுமி அடையாளம் கண்ட பொலிஸார் – 25 வயது இளைஞன் கைது !

யாழ்.போதனா வைத்தியசாலையில்  பிரசவித்த குழந்தையை கைவிட்டு சென்ற 15 வயதுடைய சிறுமி நேற்று செவ்வாய்க்கிழமை (14)  பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தாயரும் குறித்து சிறுமியுடன் உதவிக்கு நின்றுள்ளார்.

சிறுமிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் சிறுமியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , குழந்தையை பிரசவித்த சிறுமியையும் அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்குட்படுத்தி, கர்ப்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் தமிழர்களின் தனிநாடு என்ற அவர்களின் கோசம் வெற்றிபெறும் – நாடாளுமன்றில் சரத் வீரசேகர !

தமிழர்களுக்கு எதிராகவே வடக்கு கிழக்கில் யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் தனிநாடு என்ற அவர்களின் கோசம் வெற்றிபெறும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐ.நா.சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளமை சாதாரண விடயமல்ல.

30 வருட கால யுத்தத்தின் போது இஸ்ரேல் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. புலிகளுக்கு எதிராக அமெரிக்கா எவ்வித பிரேரணைகளையும் கொண்டு வரவில்லை.

அதேபோன்று இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாகவும் எந்த பிரேரணைகளையும் அமெரிக்கா கொண்டு வரவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அரசியல் தீர்வு குறித்து ஆராயுமாறு அமெரிக்கா அழுத்தம் பிரயோகித்தது.

விடுதலைப்புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உயிரை தியாகம் செய்தார்கள்.

இந்த தியாகத்துக்கு தற்போது மதிப்பளிக்கப்படுகிறதா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெளியக பொறிமுறை நீடித்தால் இலங்கையில் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிப்பதற்கு முயற்சிக்கின்ற அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.

குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு !

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) காலை  நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு, உணர்வெழுச்சி நினைவேந்தல் நடைபெற்றது.

இதன்போது, பசுந்தீவு ருத்திரன் எழுதிய குமுதினி படுகொலை நினைவுகளைச் சுமந்த “உப்புக் கடலை உரசிய நினைவுகள்” என்ற கவி நூல் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் குமுதினி படகில் வெளியிடப்பட்டது.

இந்த நூலை சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் வெளியிட்டுவைத்தார்.

தொடர்ந்து, குமுதினி படகில் இருந்து கடலில் மலர் தூவி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

அத்தோடு, உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

1985/05/15 அன்று இதேபோன்ற நாளில் நெடுந்தீவு கடற்பரப்பில் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் இருந்து யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவான் நோக்கி கடலில் குமுதினி படகில் மக்கள் பயணித்தபோது கடற்படையினரால் 07 மாத பெண்குழந்தை,  பெண்கள் அடங்கலாக 36 பேர் நடுக்கடலில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நினைவேந்தலில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், நெடுந்தீவு பங்குத்தந்தை S.பத்திநாதன், மத தலைவர்கள், படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவுகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் !

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று (15) விஜயம் செய்தார்.

வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கான வழிகளை ஆராய்வதற்காக சிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் பலதரப்பட்ட கண்ணோட்டங்களைக் கேட்பதற்காக இந்த வாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளேன் என அமெரிக்க தூதர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் விவசாய மாணவர்களுடன் மறுசுழற்சி மற்றும் பாதுகாப்பு, மரங்களை நடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.

இதன்போது அமெரிக்க தூதர் ஜூலி சங் மற்றும் அமெரிக்கன் கோனர் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையம் முற்றுகை – தம்பதியினர் தலைமறைவு !

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையத்தை தம்பதியினரே நடத்தி வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதை பொருள் தயாரிப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு , போதைப்பொருள் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு இருந்தது.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டில் வசித்து வந்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , வீட்டின் அறையை தம்பதி ஒன்று வாடகைக்கு கொடுத்ததாகவும், அந்த அறையில் தம்பதியினர் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த அறையில் தங்கியிருந்த தம்பதியினரில், கணவன் யாழில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றுடன் இணைந்து கடந்த காலங்களில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்தநிலையில் அவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதில்லை எனவும் , திருந்தி வாழ்வதாகவும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் தெரிவித்து வந்துள்ளார்.

அவரது மனைவி யாழில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தாதியாக கடமையாற்றி வருகிறார். மனைவி ஊடாகவே ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு தேவையான ஆய்வு கூட பொருட்களை பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .

அதேவேளை கணவன் – மனைவி இருவரும் இணைந்து தான் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டனரா அல்லது ஒருவர் உற்பத்தியில் ஈடுபட மற்றவர் உடந்தையாக செயற்பட்டாரா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது தம்பதியினர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் – விடுதி முகாமையாளர் கைது !

வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று புதன்கிழமை (15) தெரிவித்தனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயது பெண் ஒருவரை வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்கு இளைஞரொருவர் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சிறுமிக்கு இளைஞர் போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், அதற்கு உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட 4 பேர் அண்மையில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா பொலிஸார் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட தமிழர்களுக்கு உரிமை உண்டு – நாடாளுமன்றில் ஜே.வி.பி !

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் உரிமை உண்டு என கூறியுள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனப் போர் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது பேசிய அவர்,மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் தோழர்களுக்கு போரில் இறந்தவர்களை நினைவு கூர உரிமை உண்டு.

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் சம்பூரில் நினைவேந்தல் நடத்தியதற்காக 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

நக்பா சம்பவத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நாளாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளதாகவும், அதேபோன்று உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையர்களுக்கும் உரிமை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.

போரில் இறந்தவர்களை நினைவு கூரும் உரிமையானது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமை எனவும், இலங்கையிலும் அந்த உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களைப் பற்றி சிந்தித்து கல்விசாரா ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க

கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இலங்கையில் பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும், கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் மாணவர்களைப் பற்றி சிந்தித்து பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இன்று (14) தெரிவித்துள்ளார். .

கொழும்பு 7 இல் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்தார்.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தற்போது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் நடத்தப்பட்டு வருவதாகவும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கற்கும் சுமார் 3500 மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அமரதுங்க தெரிவித்தார்.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக நுழைவுக்கான மாணவர் கையேடு தயாரிக்கும் பணி ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பதும் தாமதமடைந்துள்ளதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமர்ட்  !

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமர்ட்  தனது முதலாவது தெற்காசிய பிராந்திய விஜயத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

அந்த விஜயத்தின் போது அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதன்போது, முள்ளிவாய்க்கால் போரில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவேந்தலில் ஆக்னஸ் காலமர்ட் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மே 24ஆம் திகதி நேபாளத்தின் காத்மாண்டுவில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், இளைஞர் சமூகம் மற்றும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.