16

16

உக்ரைன் தொடர்பில் பேச்சுவார்த்தையை தொடங்க விரும்புகிறோம் – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

ரஸ்ய உக்ரைன் போர் தொடர்பில், பேசுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜின்பிங் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து புடின் இன்று(16)சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புடின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

2 நாட்கள் தங்கும் அவர் ஜனாதிபதி ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

சீனா செல்லும் முன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த புடின், உக்ரைன் போர் தொடர்பில் தான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நாங்கள் எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்ததில்லை என்று கூறியுள்ளார்.

உக்ரைன் தொடர்பில் பேச்சுவார்த்தையை தொடங்க விரும்புகிறோம், என்றாலும், அந்த பேச்சுவார்த்தைகள், ரஷ்யா உட்பட, பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள எல்லா நாடுகளின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 600,000 பாடசாலை மாணவர்கள் காலை உணவின்றி பாடசாலைகளுக்கு செல்கின்றனர்!

நாட்டில் 600,000 பாடசாலை மாணவர்கள் காலை உணவின்றி பாடசாலைக்கு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான பாராளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, பாடசாலைக்கு குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும் குழுவில் தகவல் வெளியானது. வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான குழு, ஆரம்பப் பாடசாலைக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வழங்குமாறு கல்வி அமைச்சுக்கு தெரிவித்தது.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்காக ஆண்டுக்கு 1600 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவிகளை வழங்க விரும்பும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு முறையான முறைமை ஒன்றைத் தயாரிக்கவும் குழு ஆலோசனை வழங்கியது.

வடக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்குடன் பாலியாறு திட்டம் ஆரம்பம்!

வடக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் நேற்று(15.05.2024) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாலியாறு நீர்த்திட்ட அங்குரார்ப்பண நிகழ்விற்கான நினைவுப் பாதாதை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் திரைநீக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாலியாறு நீர்த்திட்ட அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது.

பாலியாறு நீர்த்திட்டத்திற்காக 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களையும், பூநகரி பிரதேசத்தின் ஒரு பகுதியும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதிகளில் வசிக்கும் 127,746 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு லட்சமாக இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்படும் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்

2030 ஆம் ஆண்டளவில் நாட்டிலுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “போருக்குப் பின்னர், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை ஆராய்ந்து வருகின்றோம்.

 

எமது நாட்டுக்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்துவது ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாதுகாப்புச் சபையின் கடப்பாடு ஆகும்.

 

அதன்படி, பாதுகாப்பு ஆய்வு 2030 என்ற திட்டத்தின் கீழ் தனி நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, எங்களிடம் 208,000 வீரர்கள் உள்ளனர். அதனை ஒரு இலட்சம் வரை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

 

 

நாங்கள் யாரையும் நீக்குவதற்கு எதிர்பார்க்க பார்க்கவில்லை. மேலும், கடற்படை மற்றும் விமானப்படை பலப்படுத்தப்பட வேண்டும்.

 

புவியியல் ரீதியாக, நாம் மிகவும் சிக்கலான முக்கியமான இடத்தில் இருக்கிறோம்.

 

எனவே, கடற்படையை பலப்படுத்துவதையும் ஒரு திட்டமாக செயல்படுத்தி வருகிறோம்” என இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உட்பட அவருடைய குடும்பத்தினர் யாருமே உயிருடன் இல்லை – பிரபாகரனின் சகோதரர் மனோகரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வீர மரணமடைந்துவிட்டார்கள் என்பதை நூறு வீதம் தாங்கள் நம்புவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாட்டை மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியத் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி, வரலாற்றையே மாற்றிப் போடும் நிகழ்வுகள் தற்போது நடைபெற ஆரம்பித்துள்ளதாகவும் யாரோ ஒரு பெண் இங்கு வந்து நான்தான் துவாரகா என அறிவிப்பதுடன், இது போன்ற வரலாற்றை மாற்றியமைக்கும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இல்லை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் எனவும் அவர்கள் உயிருடன் இருப்பதாக யாரும் கூறினால் அவர்களை அழைத்து வர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருவேளை, தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவர் 14 வருடங்கள் குடும்பத்தை விட்டு விலகியிருக்கமாட்டார் அவர் வேறு எந்த நாட்டிலும் சொகுசு வாழ்க்கை வாழக்கூடியவர் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு இறுதி இறுதி அஞ்சலி நிகழ்வு ஒன்றை செய்து அவர்கள் தங்களுடைய நாட்டிலேயே இறுதி மூச்சை விட்டதாக உலக மக்களுக்கு அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி டென்மார்க்கில் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வை நடத்துவதற்கு தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு மீள இடம்பெறும் – முல்லைத்தீவு நீதிமன்றம்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கு நிதிகிடைத்தது அகழ்வாய்வுகள் ஜூலையில் மீளவும் ஆரம்பிக்குமென நீதிமன்று அறிவிப்பு விஜயரத்தினம் சரவணன் மே.16 முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை (04)ஆம்திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (16) இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டசெயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே, குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை ஆகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.

 

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடையப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

 

அத்தோடு, இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வுசெய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதிஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ளநிலையில் மீளவும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஜூலைமாதம் 04ஆம்திகதி கெக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் இந்த வழக்கு அழைக்கப்படவுள்ளதாக இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.ஸ்.நிரஞ்சன் தெரிவித்தார். அதேவேளை முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதி அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவுள்ளதால், குறித்த வீதிக்கு பதிலாக மாற்றுவீதியைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும், அகழ்வாய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் வீதிஅபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்தல்களை வழங்குமாறு, முல்லைத்தீவு நீதிமன்றம் கொக்கிளாய் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.

 

மேலும், அகழ்ந்தெடுக்கப்பட்ட மனிதச்சங்கள்தொடர்பான இடைக்கால பகுப்பாய்வு அறிக்கையொன்று, தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் ஏற்கனவே நீதிமன்றிம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

 

அந்தவகையில், அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்கள் 1994ஆம் ஆண்டிற்கு முற்படாததும், 1996ஆம் ஆண்டிற்கு பிற்படாததுமான எச்சங்களெனவும் அந்த ராஜ்சோமதேவவின் இடைக்கால பாகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம் !

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை மூதூர் நீதிமன்றம் அகற்றியிருப்பதாக சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

மூதூர் நீதிமன்றில், சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நால்வருக்கு எதிரான வழக்கானது, நகர்த்தல் பத்திரத்தின் மூலம் வழக்கு விசாரணைக்காக நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இன்றைய தினம் (16) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் எதிரிகளின் சார்பாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி, இவ்வழக்கில் எதிரிகள் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காரணத்தினால் அவர்கள் தொடர்பான அறிக்கையை துரிதமாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், மூதூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுவதாக கட்டளை பிறப்பித்திருக்கிறது.

தென்னிலங்கையிலே பாற்சோறு கொடுப்பது சட்ட விரோதமாகாது என்றால் எவ்வாறு வடக்கு, கிழக்கிலே கஞ்சி கொடுப்பது சட்ட விரோதமாகும் என்பது போன்ற பல கேள்விகளை வாதங்களாக நீதிமன்றில் முன்வைத்ததாகவும் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.

அத்துடன் இந்த வழக்கில் எதிரிகள் சார்பாக பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சட்டத்தரணிகள் தாமாகவே முன்னிலையாகியிருந்ததாகவும் இதற்காக அவர்களுக்கு தான் நன்றி கூறுவதாகவும் இந்த வழக்கானது தமிழ் – முஸ்லிம் இன ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கின்ற வழக்காக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக மாணவி உட்பட நான்கு பேர் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் இவர்கள் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நால்வருக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து மன்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த நால்வரின் கைது தொடர்பில் சம்பூர் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

யுத்த காலத்தில் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் விடயத்தில் ஒட்டுமொத்த சமூகமும் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டியுள்ளது – நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய

யுத்த காலத்தில் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் விடயத்தில் ஒட்டுமொத்த சமூகமும் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டியுள்ளது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யுத்த காலகட்டத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல்போன இலங்கை பிரஜைகளை நினைவுகூர்ந்து மூதூரில் கஞ்சி வழங்குவதற்கு செய்திருந்த ஏற்பாடுகளுக்கு அரச அதிகாரிகள் எதிர்வினை ஆற்றியிருப்பது தொடர்பில் நாம் மிகுந்த வருத்தம் அடைகின்றோம்.

தமக்கு நெருக்கமானவர்களின் மரணம் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு இருக்கும் மனவேதனையை நாம் ஒரு சமூகம் என்ற வகையில் உணர்வுபூர்வமாக புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், இந்த நாட்டை இருண்ட யுகத்துக்குள் கொண்டுசெல்லாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பது ஒட்டுமொத்த சமுதாயத்தினரதும் பொறுப்பாகும்.

அதற்கமைய அரச அதிகாரிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகமும் இது போன்ற சூழ்நிலைகளின்போது நாட்டின் பொது நலனை முதன்மையாக கருதி செயல்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எமது நாட்டை மீண்டும் இருளில் தள்ளுவதற்கு அதுவே காரணமாக அமையக்கூடும்.

ஆகையால், சமூக நீதிக்கான தேசிய இயக்கம் என்ற வகையில், நாம் கடந்த காலங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற பல்வேறு துர்பாக்கிய சம்பவங்களினால் உயிரிழந்த மற்றும் காணாமல் போன அனைவரை எண்ணியும் மிகுந்த மன வேதனை அடைகின்றோம்.

மீண்டும் இதுபோன்ற சூழல்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும், அவர்கள் அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து தரப்புகளிடத்திலும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் கற்றுத்தந்த பாடம் – இந்தியாவும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்..!

தமிழர்கள் தங்களுடைய உரிமைகளை சிங்கள பேரினவாத அரசிடம் இருந்து பெறுவதற்காக முன்னெடுக்கப்பட்ட இலங்கை தமிழரின் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. குறித்த தாக்கம் தமிழீழம் கோரிய போராட்டத்தில் ஏற்படுத்திய முடிவுகள் தொடர்பிலும் – கடந்த காலத்திலிருந்து தமிழர்களும் – தமிழ் அரசியல் தலைமைகளும் எவ்வாறான கற்றலை பெற்றுள்ளனர் – அதனை முறையாக நடைமுறை அரசியலில் பயன்படுத்துகின்றனரா..? என்பது தொடர்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நினைவேந்தல் பற்றிய கருத்தாடல்களின் போக்கு ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் அருள்குமார் அவர்களுடன் பரபரப்பான ஓர் அரசியல் கலந்துரையாடல் .

தொகுப்பாளர் – திரு.த. ஜெயபாலன்.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…!