18

18

இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா உடன்நிறுத்தவேண்டும் – அமெரிக்கத்தூதரகத்தை சென்றடைவதற்தான் போராட்டம் நிறுத்தம்!

காஸாவில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும், இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா உடன்நிறுத்தவேண்டும் எனக்கோரியும் வெள்ளிக்கிழமை (17) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணி, அமெரிக்கத்தூதரகத்தை சென்றடைவதற்கு முன்பதாக பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப்படையினரால் இடைநடுவே தடுத்துநிறுத்தப்பட்டது.

காஸாவில் இடம்பெற்றுவரும் படுகொலைகள் மற்றும் அமெரிக்காவினால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுவரும் இராணுவ உதவிகள் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தியும், இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தலைமை வகிக்கும் போர் எதிர்ப்புக்கான உலகளாவிய கூட்டணியினால் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அண்மையில் பி.ப 2.30 மணியளவில் ஆரம்பமான இப்பேரணி, சேர்.மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தை ஊடாக அமெரிக்கத்தூதரகத்தை நோக்கிப் பயணித்தது.

‘துப்பாக்கிகளுக்கு ஈடாக ரோஜாக்கள்’ எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பேரணியில் போர் எதிர்ப்புக்கான உலகளாவிய கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸி, சர்வமதத்தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தலைவர்கள், சகல இன, மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுமக்கள், சிறுவர்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் ‘பலஸ்தீன விடுதலை’, ‘யுத்தம் வேண்டாம்’, ‘போரை நிறுத்துங்கள்’, ‘இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்குவதை அமெரிக்கா நிறுத்தவேண்டும்’ என்பன உள்ளடங்கலாக போர்நிறுத்தத்தையும், பலஸ்தீன விடுதலையையும் வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், பலஸ்தீன மற்றும் இலங்கைக்கொடிகளையும் ஏந்தியிருந்தனர். அதுமாத்திரமன்றி பலர் பலஸ்தீனத்தை அடையாளப்படுத்தும் சால்வையை அணிந்திருந்ததுடன், சிறுமிகள் காஸாவில் கொல்லப்பட்ட அப்பாவி சிறுவர்களைக் அடையாளப்படுத்தும் வகையில் சிவப்புநிறம் தோய்ந்த (இரத்தம்) துணியினால் சுற்றப்பட்ட பொம்மையையும், மேலும் பலர் ரோஜாப்பூக்களையும் கைகளில் ஏந்தியிருந்தார்.

அத்தோடு பேரணியில் கலந்துகொண்டவர்கள் ‘எப்போது போர்நிறுத்தம்? – இப்போதே போர்நிறுத்தம்’, ‘அப்பாவிகளைக் கொல்வதை நிறுத்து’, ‘அமெரிக்காவே, இஸ்ரேலுக்கு உதவுவதை நிறுத்து’, ‘சிறுவர்களைக் கொல்லாதே’, ‘ஐக்கிய நாடுகளை சபையே, வேடிக்கை பார்க்காதே’, ‘முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய அவலம் பலஸ்தீனத்திலும் நிகழ இடமளிக்காதே’ என்பன உள்ளடங்கலாக காஸா மீதான தாக்குதல்கள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையிலான கோஷங்களையும் எழுப்பினர்.

மழைக்கு மத்தியில் இவ்வாறு கோஷங்களை எழுப்பியவாறு சென்ற பேரணி சேர்.மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தையை அடைந்தபோது அங்கு பெரும் எண்ணிக்கையான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களைக் கடந்து பேரணியாகச்சென்ற மக்கள் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையை அடைந்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், விமானப்படையினர் உள்ளிட்ட சகலரும் நடுவீதியில் இறங்கி, பேரணி முன்நோக்கி நகராதவண்ணம் மறித்து நின்றனர். திடீரென அவர்களின் பின்னாலிருந்து வந்த பௌத்த பிக்குகள் இடைநடுவே மறிக்கப்பட்டுநின்ற பேரணியுடன் இணைந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து பேரணியின் முன்னரங்கில் நின்ற சர்வமதத்தலைவர்களுக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத்தொடர்ந்து 6 பேரை மாத்திரம் அமெரிக்கத்தூதரகத்துக்கு அழைத்துச்செல்வதற்கு பொலிஸார் உடன்பட்டனர். அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும், பௌத்த பிக்குகள் இருவரும், இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தலா ஒரு மதத்தலைவரும் என மொத்தமாக அறுவர் பொலிஸாரால் ஜீப் ஒன்றில் ஏற்றப்பட்டு அமெரிக்கத்தூதரகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அவ்வாறு அழைத்துச்செல்லப்பட்ட பிரதிநிதிகள் போர்நிறுத்தத்தையும், இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா உடன்நிறுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தி தூதரக அதிகாரிகளிடம் மகஜரொன்றைக் கையளித்தனர்.

அதேவேளை மக்கள் பேரணி ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் இடைநடுவே நிறுத்தப்பட்டதை அடுத்து, போராட்டக்காரர்கள் சற்றுநேரம் அங்கு தரித்துநின்றவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதன்விளைவாக அவ்வீதியில் சொற்ப நேரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட போதிலும், பொலிஸாரின் தலையீட்டின் மூலம் அந்நெரிசல் சீராக்கப்பட்டது.

ரயிலில் பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது !

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் சென்ற 06 இளைஞர்கள் அதே ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவிக்கு பல தடவைகள் தொல்லை கொடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் குறித்த மாணவி தனது பெற்றோருக்கு அறிவித்து பின்னர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த 06 இளைஞர்களை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று ஹட்டன் புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகை வந்துள்ளதாகவும் கொழும்பில் வசிக்கும் 20 முதல் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களிடம் இருந்து ஆரம்பகட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், அவர்கள் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம்

வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்காக பொதுமன்னிப்புக் கோரப்பட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறந்துவிட முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அவர்களின் உறவுகளும் நீண்ட காலமாகக் காத்திருப்பதாகவும், உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுத மோதல்கள் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஆரம்பகட்ட வலிந்து காணாமலாக்கப்படுதல்கள் இடம்பெற்று பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கை அதிகாரிகள் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இன்றுவரை தவறியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பத்தரமுல்லயில் நாளை இராணுவ வெற்றி நாள் கொண்டாட்டம்!

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் நிறைவந்துள்ளதாக தெரிவித்து நாளையதினம் பத்தரமுல்லையில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் இராணவ வீரர்களால் கொல்லப்பட்டதை தொடர்ந்து யுத்தம் நிறைவிற்கு வந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த யுத்ததிற்கு தலைமை தாங்கியதுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை கொண்டாடுவதற்கு நாளை பிற்பகல் பத்தரமுல்லை நாடாளுமன்ற விளையாட்டரங்கில் உள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு முன்பாக ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு கடற்படையின் 3,146 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதுடன், 1,300 இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, நாளை மாலை 4 மணிக்கு தேசிய படைவீரர் தின நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

தமிழர்கள் ஒருதேச அங்கீகாரத்துக்குரியவர்கள் ஏற்கப்பட வேண்டும் – முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2024!

தமிழர்கள் ஒருதேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதோடு அவர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்த இயலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு,-கிழக்கு) ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின்போது தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதீன முதற்குரு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் வாசிக்கப்பட்ட இந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் “இனிமேல் இது நடக்கவே கூடாது” என்ற உணர்வுப் பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது.

இனிமேல் நடக்கவே கூடாது என்ற உணர்வுப் பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது. ஈழத்தமிழினப் படுகொலை ஒரு வரலாற்று செயன்முறையாக காலணித்துவத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.

தமிழினப்படுகொலையின் வழிவரைபடம் பேரரசுக் கட்டமைப்பின் புவிசார் அரசியல் நலன்களைத் தவிர்த்து உருவாக்கப்படவில்லை என்பது ஐயமுற தெரிகின்றது. புவிசார் அரசியல் நலன்களின் பிராந்திய தளங்களில் ஏகாதிபத்தியத்தை தக்கவைப்பதற்காக பேரரசுக் கட்டமைப்பை துணைக் குத்தகைக்கு விட்டுள்ளது.

அதனுடைய ஒரு வடிவமாகத்தான் இஸ்ரேலையும் இலங்கையையும் அவதானிக்க வேண்டும். தமிழினப்படுகொலை நடந்து 15ஆவது ஆண்டில் பலஸ்தீனப் படுகொலை அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

பலஸ்தீனப் படுகொலையை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு தமிழினப் படுகொலைக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பலஸ்தீனப் படுகொலைக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமைப் பண்புகள் இருப்பதை அவதானிக்கலாம்.

ஆசியாவில் இலங்கைத் தீவினதும், குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவமும் மத்திய கிழக்கில் பலஸ்தீனத்தின் கேந்திர முக்கியத்துவமும் புவிசார் அரசியலில் கோலோச்சுவதற்கு பேரரசுக்கு மிக அவசியமானது.

பேரரசைக் கட்டமைப்பதற்கு அதன் நலன் சார்ந்த எந்த விலையையும் கொடுப்பதற்கு பேரரசு தயாராக இருப்பதை இவை கோடிட்டுக் காட்டுகின்றன.

பேரரசும் அதன் வலையமைப்பும் உற்பத்தி செய்கின்ற இராணுவத் தளபாடங்களுக்கும் பேரரசின் பொருளாதார இருப்புக்கும் தொடர்ந்து உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போர்க்களங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

ஏக பேரரசை கட்ட முயலும் நாடுகள் தான் மனித உரிமையையும் பொறுப்புக்கூறலையும் போதிக்கின்றன என்பது அபத்தம். இவை இரண்டுமே ஒவ்வாத்தன்மை கொண்டவை. இது பலஸ்தீனப் படுகொலையில் மிகத் தெளிவாகவே உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2002 பேச்சுவார்த்தை முறிவடைவதற்கு அமெரிக்கா காரணமாய் இருந்தது என்பது ஏற்கனவே ஆய்வுகள் மூலம் வெளிவந்த உண்மையாய் உள்ளது.

அதுவே இன்று காசாவில் போர் நிறுத்தத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துகின்றது.

ஐ.நா. சபையும் அதன் ஏனைய அலகுகளும் சர்வதேச சமூகமும் அதன் கட்டமைப்பும் எவ்வாறு முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய மனித பேரவலத்தை தடுக்கமுடியாமல் போனதோ அதேபோல் இன்று அவர்களால் பலஸ்தீனப் படுகொலையையும் தடுக்கமுடியாமல் போனது எமக்கு ஆச்சரியத்தை தரவில்லை.

தமிழினத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி, புதுப்புது வடிவங்களை எடுத்துள்ளன. அது தமிழினத்தின் தன்னிறைவுப் பொருளாதாரத்தின் மீது, பண்பாட்டின் மீது, கல்வியின் மீது, ஈழத்தமிழினத்தின் மரபுகள் மீது, சைவத்தலங்கள் மீது, தொல்லியல் வரலாறு மீது, ஈழத்தமிழினத்தின் வரலாறு மீதானதாக இருக்கலாம்.

ஈழத்தமிழினத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள உளவியல் போரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் வடிவமாகவே கருத வேண்டியுள்ளது.

 

உளவியல் போரின் நோக்கம், ஈழத்தமிழினம் தமிழ்த் தேசியத்தின் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையைச் சிதைத்தலாகும்.

 

தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கை விழுமியங்கள் தான் ஈழத்தமிழினத்தின் கூட்டுப் பிரக்ஞையை விழிநிலையில் வைத்துக்கொண்டுள்ளது.

தமிழ்த் தேச நிலத்தின் மீதான போரின் பரிமாணங்களின் வடிவங்கள் எல்லாரும் அறிந்ததே. முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தமிழினம் தனது இருப்பின் மீதான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது.

தமிழினத்தின் இருப்பை சவாலுக்குட்படுத்தும் அலகுகளை எதிர்த்து போராடவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்குள் தமிழினம் வலிந்து நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுக் கடமை ஒட்டுமொத்த தமிழினத்துக்கானது. யாரும் இப்பாரிய பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாத வரலாற்றுத் தேவைக்குள் நாம் இருக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால், பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல, அடக்குமுறை எதிர்ப்பின் குறியீடும் கூட. முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாளில் கொத்துகொத்தாக கொல்லப்பட்ட உறவுகளை நினைக்கையில் அவர்கள் சுமந்து வந்த கனவுகளையும் இலக்குகளையும் நினைத்து, குருதி உறைந்து சிவந்துபோன மண்ணிலிருந்து சபதம் எடுக்கின்றோம். எத்தடை வரினும் எமது இலக்கை அடைவோம் என்று எம் உறவுகளின் கல்லறைகள் மீது உறுதி எடுக்கின்றோம்.

அதன் அடிப்படையில்,

* நினைவுகூரல் கூட்டுரிமை சார்ந்தது மட்டுமல்ல பண்பாட்டு உரிமையும் கூட. ஆகவே இலங்கை அரசு தமிழினப் படுகொலை நினைவுகூரலைத் தடுக்க முடியாது.

* தமிழினம் தமிழினப் படுகொலைக்கான நீதியை சர்வதேச விசாரணைக்கூடாகவே கோரி வருகின்றது. அக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

* தமிழினம் ஒரு தனித்துவமான தேசத்திற்குரிய அலகுகளை தன்னகத்தே கொண்ட இனம்.

* கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கூடாக தமிழின இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது. இதுவும் இன அழிப்புப் போரின் ஓர் அங்கமென நாம் கருதுகின்றோம்.

* தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்.

எம் பாசமிகு உறவுகளே, தமிழ் தேசிய விடுதலை தரும் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் பயணிக்க முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு அழைப்பு விடுக்கிறது என்று வாசித்து முடித்தார்.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – குழப்ப முற்பட்ட சிங்கள ராவய !

மூன்று தசாப்தகாலப்போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (18 ) கொழும்பில் நடைபெற்றது.

மூன்று தசாப்தகாலப்போர் மிகமோசமான மனிதப்பேரழிவுடன் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இன்றறையதினத்துடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவேந்தல் நிகழ்வுகள் வட, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததுடன், பிரதான நிகழ்வு இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் முற்றத்தில் நடைபெற்றது.

அதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும் எனவும், கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் எழுச்சியடைந்த போராட்டங்களின் தளமாக அமைந்திருந்த காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’வில் 2022 மே 18 ஆம் திகதியன்று எவ்வித இன, மதபேதமுமின்றி சகலரும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுட்டித்து போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர்.

அதன்படி, கடந்த ஆண்டைப்போன்றே இம்முறையும் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு இன்று சனிக்கிழமை (18) காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான ஷ்ரீன் ஸரூர், சுவஸ்திகா அருலிங்கம், சந்தியா எக்னெலிகொட, ராஜ்குமார் ரஜீவ்காந்த், கௌதமன், ரத்னவேல், நுவன் போபகே உள்ளிட்ட பலரும், கத்தோலிக்க மதகுருமாரும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ‘சிங்கள ராவய’ அமைப்பினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறையும் பிற தரப்பினரால் இடையூறு ஏற்படுத்தப்படக்கூடும் என்ற சந்தேகம் நிலவியது. அதன்படி, நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கடற்கரைப்பகுதிக்கு அண்மையில் காலையிலேயே பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதனையடுத்து 9.30 மணியளவில் அங்கு கூடியிருந்த அனைவரும் ஈகைச்சுடரேற்றி, அதில் வெண்ணிற மலர்தூவி போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்தனர். இந்நினைவுகூரல் இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில், பிறிதொரு குழுவொன்று கொடிகளை ஏந்தி கூச்சலிட்டவாறு கடற்கரைப்பகுதிக்குள் உட்பிரவேசித்து நினைவேந்தல் நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க முற்பட்ட வேளையில், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரால் அவர்கள் தடுத்துநிறுத்தப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து நிகழ்வை விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து அனைவரையும் வெளியேறுமாறும், தாமதமேற்படின் அதன் பின்னர் நிகழக்கூடியவற்றுக்குத் தம்மால் பொறுப்புக்கூறமுடியாது எனவும் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணி ரத்னவேலிடம் எச்சரித்தார்.

இக்குழப்பங்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய சிவில் சமூக செயற்பாட்டாளர்களான சந்தியா எக்னெலிகொட, மிலானி மற்றும் ராஜ்குமார் ரஜீவ்காந்த் ஆகியோர் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரவேண்டியதன் தேவைப்பாட்டையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிப்பேசினர். அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகிப்பதற்கும், உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதற்கும் தடைவிதிக்கப்பட்டு, இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டமை குறித்து தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தினர். அதன்பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து வெள்ளை மலர்களை கடலில் தூவி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை, நினைவேந்தல் நிகழ்வுக்கு சற்றுத் தாமதமாக வருகைதந்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் ஆணையாளரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான மிராக் ரஹீம் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் தண்டவாளத்துக்கு அண்மையிலேயே பொலிஸாரால் தடுத்துநிறுத்தப்பட்டனர். நிகழ்வில் குழப்பம் விளைவிப்பதற்கென குழுவொன்று வருகைதந்ததாகவும், எனவே தாமதமாக வந்த செயற்பாட்டாளர்களை தாம் அறிந்திருக்காததன் காரணமாக அவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் பொலிஸார் விளக்கமளித்தனர். பின்னர் அனைவரையும் வெகுவிரைவாக அங்கிருந்து கலைந்துசெல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியதைத்தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர் – முள்ளிவாய்க்காலில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் !

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர் என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் தெரிவித்தார்.

2009 மே 18 ஆம் திகதியன்று இலங்கையின் உள்ளகப் போர் நிறைவடைந்து, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் பெருமளவான பொது மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த நினைவுதினத்தை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் அஞ்சலிசெலுத்திவிட்டு அங்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நிலவிய ஆயுதம் தாங்கிய உள்ளகப் போரில் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு தவறிய இலங்கைய அதிகாரத் தரப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் இணைந்த கவனயீனமான செயற்பாட்டை இன்றைய வருடபூர்த்தி நினைவூட்டுகின்றது.

15 வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தின் இறுதி நாட்களில் உயிரிழந்த பெருமளவான அப்பாவி பொது மக்கள் உயிர் நீத்த பகுதியில் இன்று நாம் மிகவும் துயரத்துடன் நிற்கின்றோம்.

இந்த நிகழ்வுக்கு முன்னதாக, யுத்தத்தின் போது தாம் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில் தமிழ் சமூகத்தார் முன்னெடுத்திருந்த முயற்சிகளை தடுக்கும் வகையில் கைதுகள், பலவந்தமாக தடுத்து வைப்புகள் மற்றும் வேண்டுமென்றே தவறான கருத்துகளை பரப்பியிருந்தமை போன்ற நினைவுகூரலை தடுக்கும் வகையிலான சம்பவங்களை நாம் அவதானித்திருந்தோம்.

உயிர்நீத்தவர்களை நினைவுகூரவும், தமது அன்புக்குரியவர்களுக்காக அமைதியான முறையில் ஒன்றுகூடி தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமைக்கு அதிகாரத்தரப்பினர் மதிப்பளிக்க வேண்டும்.

யுத்தத்தில் இரு தரப்புகளிலிருந்தும் சர்வதேச சட்டங்களுக்கமையவும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்களை மீறும் வகையிலான குற்றங்கள் புரியப்பட்டுள்ளமை தொடர்பில் போதியளவு ஆதாரங்கள் காணப்படுகின்றமையை ஐக்கிய நாடுகளின் விசாரணைகள் இனங் கண்டுள்ள போதிலும், அவ்வாறான பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற அல்லது சுயாதீனமான தேசிய விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் எவ்விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன், யுத்தத்தின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் எஞ்சியுள்ள அங்கத்தவர்கள், தமது அன்புக்குரியவர்களை தொடர்ந்தும் தேடிய வண்ணமுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியை நீண்ட காலமாக தேடுவதை அவர்களிடமிருந்து அறிந்து கொள்வது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் சிறந்த தீர்வாக அமைந்திருந்த போதிலும், கடந்த 15 வருட காலப்பகுதியில் பொறுப்புக்கூரலுக்காக உள்ளகக் கட்டமைப்பை நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் வெறும் கண்துடைப்புகளாகவே அமைந்திருந்தன.

இந்த வாரத்தின் முற்பகுதியில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், இலங்கையின் பொறுப்புக்கூரல் செயற்பாடுகளில் காணப்படும் இடைவெளிகள் காரணமாக, இந்த விடயம் தொடர்பான கறைகள் மாறாமல் காணப்படுவதை வலியுறுத்தியிருந்தது.

உண்மை, நீதி மற்றும் இழப்பீடு போன்றவற்றுக்காக இன்றும் ஆயிரக் கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்கின்றனர். இன்று முள்ளிவாய்க்காலில் நாம் அவர்களுடன் உறுதியாக கைகோர்த்துள்ளோம் என்றார்.

இதேவேளை, போரின் இறுதிக் கட்டத்தின் போது குறிப்பாக 2009 மே மாத காலப்பகுதியில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதநேய சட்டங்களை மீறல்கள் போன்றன பெருமளவில் அதிகரித்திருந்தது. குறிப்பாக போர் நடைபெற்ற பகுதிகளில் சுமார் இடம்பெயர்ந்த சுமார் 300,000 பொது மக்கள் மனிதக் கேடயங்களாக அடைபட்டிருந்தனர். இலங்கையின் வட மாகாணத்தின், முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறிய கிராமமான முள்ளிவாய்க்கால் பகுதியில், இலங்கை படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக் கட்டப் போர் நடந்ததுடன், ஐக்கிய நாடுகளின் மதிப்பீடுகளின் பிரகாரம் சுமார் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வில், போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுகூடி, போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்வதுடன், நீதியையும் பொறுப்புக்கூரலையும் வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இந்த வாரம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.