19

19

இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி எதிர்காலத்தில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் – மகிந்த ராஜபக்ச

யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கிறோம்.ஆகவே யுத்தம் பற்றி சிந்திக்க கூடாது என ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள். இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி எதிர்காலத்தில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

15 ஆவது இராணுவ வெற்றியை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மூன்று தசாப்தங்களாக இலங்கையை ஆக்கிரமித்திருந்த பிரிவினைவாத, பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியைடைந்துள்ளன.

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு குழுவாக ஆரம்பமான தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலகில் பிரபல்யமான பயங்கரவாத அமைப்பாக எழுச்சிப் பெற்றது.

தற்கொலை மனித குண்டுதாரிகள் மற்றும் சிறுவர் படையணி என்பனவற்றை விடுதலை புலிகள் அமைப்பே உலகுக்கு அறிமுகம் செய்தது. தற்கொலை குண்டுகள் அடங்கிய சிறிய ரக படகுகள், இரவு நேரங்களில் தாக்குதல் நடத்த கூடிய இலகு விமானங்கள் உட்பட ஆயுதங்களை கொண்டு வரும் கப்பல்கள் என பலமான கட்டமைப்பில் புலிகள் அமைப்பு செயற்பட்டதை நினைவுகூற வேண்டும்.

இலங்கை மற்றும் இந்திய அரச தலைவர்கள் இருவர் உட்பட இலங்கையின் சிரேஷ்ட அரச தலைவர்கள் மற்றும் சிவில் மக்கள் உள்ளடங்களாக பலரை கொலை செய்த விடுதலை புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட பல்வேறு வழிகளில் அழைப்பு விடுத்தேன். சகல வழிகளை நிராகரித்து விடுதலைப் புலிகள் அமைப்பு தாக்குதலை தொடர்ந்ததால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் எதிர் தாக்குதலை தீவிரமாக முன்னெடுத்தோம்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.2009.05.18 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையாக இராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து 2009.05.19 ஆம் திகதி காலை வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

நான்காவது ஈழ போராட்டத்தை தோற்கடித்தது மாத்திரமல்ல விடுதலை புலிகள் அமைப்பில் பணயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பல இலட்சக்கணக்கான சிவில் பிரஜைகள் பாதுகாக்கப்பட்டார்கள்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அப்போதைய பாதுகாப்பு பாதுகாப்பு செயலாளர்,பாதுகாப்பு சபையின் பிரதானி,முப்படையின் தளபதிகள்,பொலிஸ்மா அதிபர்,சிவில் பாதுகாப்பு படையணியின் பிரதானிகள்,மற்றும் முப்படையினருக்கும்,நாட்டு மக்களுக்கும் முன்னாள் ஐந்தாவது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி என்ற அடிப்படையில் கௌரவமளிக்கிறேன்.

யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கிறோம். ஆகவே யுத்தம் பற்றி சிந்திக்க கூடாது என ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள்.இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்த்து வழங்கி நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

ஜே.வி.பியுடனான விவாதத்துக்கு திகதி வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தி!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு மற்றும் கட்சி தலைவர்களுக்கிடையில் இடம்பெற இருக்கும் விவாதத்துக்காக திகதி வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் பிரகாரம் இரண்டு கட்சிகளின் பொருளாதார குழுக்களுக்கிடையிலான விவாதத்தை இந்த மாதம் 27ஆம் திகதிக்கும் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதி ஒன்றும் தலைவர்களுக்கிடையிலான விவாதத்தை ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கும் 7ஆம் திகதிக்கும் இடையிலான ஒரு திகதி வழக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தேசிய மக்கள் சக்திக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

அத்துடன் இரண்டு கட்சிகளின் பொருளாதார குழு மற்றும் தலைவர்களுக்கிடையில் இடம்பெறும் விவாா நடவடிக்கைக்கு தேவையான இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரியிருப்பதாகவும் விவாதத்துக்கான ஊடக நடவடிக்கைக்கு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் நளின் பண்டார தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விவாதத்துக்கான திகதி இன்று 20ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் அதன் பின்னர் இந்த விவாதம் தொடர்பாக நாங்கள் கதைக்கவும் மாட்டோம் விமர்சிக்கப்போவதும் இல்லை என தேசிய மக்கள் சக்தி அரசியல் சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது – இரா.சம்பந்தன்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்துவெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், சம்பந்தன் ஐயாவை நேரில் ஒருதடவை சந்தித்திருந்தேன். அதன்பின்னர் அவர் தொலைபேசி வாயிலாக உரையாடியிருந்தார். இந்நிலையில், அவர் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சம்பந்தமாக மூன்று விடயங்களை சுட்டிக்காட்டினார்.

முதலாவதாக, நாங்கள் தொடர்ச்சியாக தமிழாகள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிற்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துவருவதோடு, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதேபோன்று, பொதுவேட்பாளர் விவகாரம் ஒஸ்லோ உடன்பாட்டை மீறுவதாக அமையும். ஏனென்றால் ஒஸ்லோ உடன்பாட்டில் இலங்கை அரசாங்கம் சமஷ்டி அடிப்படையிலான பேச்சுக்கு தயார் என்றே கூறியுள்ளது. ஆகவே பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதன் ஊடாக அந்த ஒப்பந்தத்தினை தூக்கியெறிந்து செயற்பட முடியாது.

மூன்றாவதாகரூபவ் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கை இணைப்புச் செய்வதாக இருந்தால் வாக்கெடுபபைச் செய்ய வேண்டும்.

எனினும் அவ்வாறு வாக்கெடுப்பைச் செய்வதாக இருந்தால் கல்லோயாத் திட்டம் உள்ளிட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். ஆகவே கிழக்கு மாகாணாத்தில் வெளியேற்றப்பட்டவர்கள் மீளக்குடியேற்றப்பட்டதன் பின்னரேயே வாக்கெடுப்பை நடத்த முடியும்.

அவ்விதமான சந்தர்ப்பங்களை விடுத்து பொதுவேட்பாளர் தெரிவுக்குச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

அத்துடன், தனது நிலைப்பாட்டினை மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும் ரியபர்படுத்தியுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

நாம் வெற்றி பெற்றால் சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பாஜக பிரம்மாண்ட கோயிலை கட்டும். – அமித் ஷா

என்டிஏ கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பீகாரில் சீதாமர்ஹி நகரில் நேற்று (மே 16) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா,

“அதிகார அரசியலுக்காக, தனது மகனை முதலமைச்சராக்க லாலு பிரசாத் யாதவ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார். பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது பற்றி காங்கிரஸும், ஆர்ஜேடியும் ஒருபோதும் நினைக்கவில்லை. மோடி அரசுதான் அதை செய்தது. பீகாருக்கு வளர்ச்சி அரசியல்தான் தேவை, காட்டுராஜ்ஜியம் அல்ல.

நாங்கள் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படுவதில்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோயிலை கட்டியவர் பிரதமர் மோடி. தற்போது, சீதை பிறந்த இடத்தில் மிகப் பெரிய கோயில் கட்டும் பணிதான் எஞ்சியிருக்கிறது. சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு பாஜக பிரம்மாண்ட கோயிலை கட்டும். ராமர் கோயிலுக்குச் செல்லாமல், ஒதுங்கியவர்களால் (எதிர்க்கட்சிகள்) நிச்சயமாக சீதா தேவிக்கு கோயில் கட்ட முடியாது. சீதைக்கு யாராவது கோயில் கட்ட முடியும் என்றால், அது பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியால் தான் முடியும்” என தெரிவித்தார்.

பீகாரில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு உடல்நலக் கோளாறுகள் !

கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னர் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ம் ஆகஸ்ட் வரை, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

வளரிளம் பருவத்தைச் சேர்ந்த 635 பேர், 18 வயதுக்கு மேற்பட்ட 291 பேர் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 50% பேர் கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மேல் சுவாசக் குழாய் தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது. கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவா்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வளரிளம் பருவத்தைச் சோ்ந்தவர்களில் 10.5% பேருக்கு தோல் சார்ந்த பிரச்னைகளும், 10.2% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகளும், 4.7% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 8.9% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகள், 5.5% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. 5.8% பேர் தசைகள், எலும்புகள், மூட்டுகள், தசைநாண்கள், தசைநார்கள் மற்றும் குருத்தெலும்பு மண்டலம் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பெண்களில் 4.6% பேருக்கு மாதவிடாய் பாதிப்புகளும், 2.7% பேருக்கு கண்விழி பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு கிளாண்ட்) இருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன் குறைவாக சுரப்பதன் மூலம் உடலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் 0.6% பேருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சதவீதம் பேருக்கு கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர் கில்லன் பாரே சின்ட்ரோம் என்ற அதிவிரைவான நரம்பு தளா்ச்சி, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனர். அவா்களுக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவா்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.