22

22

இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலை செய்யவில்லை – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலை செய்யவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத – அமெரிக்க பாரம்பரிய மாத நிகழ்வில் பேசிய ஜோ பைடன்,

“காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப்படுகொலை செய்யவில்லை. காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல. இனப்படுகொலை நடப்பதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார்.

ஹமாஸ் அமைப்பால் பாதிக்கப்பட்ட நாடு இஸ்ரேல் ஒக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 1,200 பேரைக் கொன்று நூற்றுக்கணக்கான பிணைக் கைதிகளைப் பிடித்துச் சென்றவர்கள் ஹமாஸ் போராளிகள்.

இஸ்ரேலியர்களின் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் ஆதரவு என்பது இரும்புக் கவசத்தைப் போன்றது. “ஹமாஸ் தலைவர் சின்வார் மற்றும் ஹமாஸின் மற்ற கசாப்புக் கடைக்காரர்களை வெளியேற்ற நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம். ஹமாஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதைச் செய்ய நாங்கள் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுகிறோம்.

ஹமாஸ் போராளிகளால் பிடிக்கப்பட்டுள்ள நோயுற்ற, வயதான மற்றும் காயமடைந்த இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நின்றுபோயுள்ளன.

எனினும், அவர்களை விடுவிப்பதற்கான முயற்சியை நான் கைவிடமாட்டேன். அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

தயவுசெய்து போரை நிறுத்துங்கள், இங்கு மனிதர்களை பார்க்க முடிவதில்லை.“ – கண்ணீர் விட்டு கதறி அழும் பாலஸ்தீன் சிறுவன் !

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில் பலஸ்தீன் சிறுவன் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதலை மேற்கொண்டது.

இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பலியானதோடு நூற்றுக்கணக்கானோர் பிணைக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து காசா (Gaza) மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகின்றது.

இதேவேளை ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், போரை நிறுத்துங்கள் என பலஸ்தீன சிறுவனின் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

இது குறித்து அந்த காணொளியில் சிறுவன் கூறியதாவது “தயவுசெய்து போரை நிறுத்துங்கள், இங்கு மனிதர்களை பார்க்க முடிவதில்லை. எங்களுக்கென எதுவும் இல்லை. நாங்கள் இடம்பெயர்வு செய்யப்பட்டு வருகிறோம்.

காசாவில் மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். ஆனால் உலகம் எங்களிடம் பொய் சொல்லி வருகிறது. அவர்கள் இது ஆக்கிரமிப்பு எனக்கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் உண்மையை சொல்வதில்லை..” என அழுதபடியே கூறுகிறார்.

போரை நிறுத்துங்கள் என கூறும் காசா சிறுவனின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/C7KJI4wqbS5/?utm_source=ig_embed

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகத்தர் !

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது சிவில் உடையில் வந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் யாழ்.தொல்புரம் மத்தியில் நேற்றையதினம்(21) இடம்பெற்றுள்ளது.

இதன்படி, வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் காங்கேசன்துறை காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைகளுக்காக  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில்  வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தொழில்சார் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் – அனுர குமார திஸாநாயக்க

நாட்டில் உள்ள கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தமது தொழில்சார் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (22) நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

கிராம உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ சேவையை ஸ்தாபிக்காமை, தனித்துவமான சம்பளம் கிடைக்காமை, தேவையற்ற அழுத்தங்கள் போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக உத்தியோகபூர்வ விடுமுறை மற்றும் வேலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கிராம உத்தியோகத்தரின் சேவையானது எட்டு மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

 

இதேவேளை நீண்டகாலமாகியும் அவர்களது தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனவும் அனுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை !

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது

2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, இன, மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். சமூகத்தில் தீவிரவாதசக்திகளின் செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கும் நடவடிக்கையில் ஞானசார தேரர் ஈடுபட்டதாகவும் பாதுகாப்பு படையினருக்கும் ஆதரவளித்தாகவும் மகாநாயக்க தேரர்கள் அவர்களின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் சிங்கள – பௌத்த தேசியத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, வெசாக் போயா தினத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக ஆதரவுடன் செயற்பட்ட ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் தற்போது கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீன தேசத்தை  அடுத்தவாரம் அங்கீகரிக்கவுள்ள ஐரோப்பிய நாடுகள் !

நோர்வே அயர்லாந்து ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை  அடுத்தவாரம் அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இந்த நாடுகளிற்கான தங்கள் தூதுவர்களை இஸ்ரேல் உடனடியாக மீள அழைத்துள்ளது.

பாலஸ்தீன தேசம் என்ற ஒன்று இல்லாமல் மத்தியகிழக்கில் அமைதிநிலவாது  என நோர்வேயின் பிரதமர் ஜொனஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.

மே 28ம் திகதி நோர்வே பாலஸ்தீன தேசத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கும் எனஅவர் தெரிவித்துள்ளார்.

இரண்டுதேசம் தீர்வே மத்தியகிழக்கில்  அமைதிக்கு அவசியமான விடயம் என தெரிவித்துள்ள பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினரால்லாத நோர்வே இரண்டு தேசம் தீர்விற்கு உறுதியான ஆதரவை வெளியிட்டு வந்துள்ளது.

இரண்டு தேசம் கொள்கையை ஆதரிக்காத ஹமாஸ் அமைப்பும் ஏனைய பயங்கரவாத குழுக்களும் இஸ்ரேலுமே பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கில் உள்ள தமிழர்கள் விடுதலைப்புலிகளின் ஒடுக்குமுறைகளால் அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டனர் – கனடா பிரதமருக்கு இலங்கை பதில் !

முள்ளிவாய்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இனப்படுகொலை குறித்து குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் குறித்து கனடாவிலோ அல்லது உலகின் வேறு எந்த பகுதியிலோ உள்ள தகுதிவாய்ந்த அமைப்பும் புறநிலையான தீர்மானத்தை  அறிவிக்கவில்லை எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிநாட்டிற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுத பிரிவினைவாத பயங்கரவாத உள்நாட்டு போரின் இறுதிதருணங்கள் குறித்த இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஐக்கியநாடுகள் சபையின் பிரகடனத்திற்கு முரணாக காணப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கனடா உட்பட 33 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றிய தவறான கதைக்கு கனடா பிரதமரின் ஒப்புதல் கனடாவில் உள்ள இலங்கை வம்சாவளியினரிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றது எனவும் இலங்கையின்வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்களும் மோதல்களால் பாதிக்கப்பட்டனர் வடக்குகிழக்கில் உள்ள தமிழர்கள் விடுதலைப்புலிகளின் ஒடுக்குமுறைகளால் அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டனர் விடுதலைப்புலிகளின் ஈவிரக்கமற்ற பயங்கரவாத நடவடிக்கைகளால்  அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு கனடா பிரதமரின் பாரபட்சமான கதை இலங்கை மோதலின் சிக்கலான யதார்த்;தத்தை புறக்கணிக்கின்றது இந்த கருத்துக்கள் இலங்கையர்கள் மத்தியில் பாதகமான விதத்தில் எதிரொலிக்கும் இலங்கையில் தேசிய ஐக்கியம் நல்லிணக்கம் முன்னேற்றத்துக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை சீர்குலைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் என்பன முதலாம் வாசிப்புக்காக சபைக்கு!

பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் என்பன முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற அமர்வின் போது  ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க சட்டமூலங்களை சபைக்கு

சிறந்த பேரினப் பொருளாதார முகாமைத்துவத்துக்காக நிதிக் கொள்கையை மேம்படுத்தும் நோக்கில் பகிரங்க நிதிசார் முகாமைத்துவ கட்டமைப்பில் பகிரங்க  நிதிகளின் பொறுப்புக்கூறல், மேற்பார்வை செய்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் என்பனவற்றை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும்,  நிதிசார் முகாமைத்துவத்துடன் தொடர்புப்பட்ட நிறுவனம் சார் பொறுப்புக்களை தெளிவுப்படுத்துவதற்கும், வரவு செலவுத் திட்ட முகாமைத்துவத்தினை வலுப்படுத்துவதற்கும், நிதிக் கொள்கை மற்றும் நிறைவேற்றத்தின் பொதுமக்கள்  ஆராய்வுகளை வசதிப்படுத்துவதற்கும், 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் பாகம்  2 இன்  8 ஆம் மற்றும் 14 ஆம் பிரிவுகளை நீக்குவதற்கும், 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தினை நீக்குவதற்கும்  அத்துடன் அவற்றோடு தொடர்புப்பட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்யும் வகையில் இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிலைமாற்றம் மீதான தேசியக் கொள்கைகளை ஏற்பாடு செய்வதற்கும், இலங்கை பொருளாதார ஆணைக்குழு, இலங்கை முதலீட்டு வலயங்கள், சர்வதேச வியாபாரத்துக்கான அலுவலகம், தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழு, இலங்கை பொருளாதார மற்றும் சர்வதேச  வியாபாரத்துக்கான  நிறுவகம் ஆகியவற்றை தாபிப்பதற்கும், 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க,இலங்கை முதலீட்டுச் சபை சட்டத்தை நீக்குவதற்கும் அவற்றோடு தொடர்புப்பட்ட  அல்லது அவற்றின் இடைநேர்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்யும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச தரப்பிலிருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள சரத்பொன்சேகா!

முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார் என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதம் அவர் இது  குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

எந்த கட்சியுடனும் சேராமல் சுயேட்சை வேட்பாளராக அவர் போட்டியிடவுள்ளார்.

இதேவேளை ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவை சரத்பொன்சேகா பெற்றுள்ளார்  ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்ததைகள் தொடர்கின்றன என முன்னாள் இராணுவதளபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சரத்பொன்சேகா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊழல் அற்ற நாடு மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரகலயவின் போது அவர்களிற்கு ஆதரவு வெளியிட்ட சரத்பொன்சேகா அந்த சந்தர்ப்பத்தில் தனக்கு கிடைத்த ஆதரவை பயன்படுத்த முயல்வார்.

தனது பிரச்சாரத்தின்போதுஅவர் புத்திஜீவிகள் பிரபல பிரமுகர்களுடன் இணைந்து செயற்படுவார்.

இதேவேளை தேர்தல் பிரச்சார காலத்தில் சரத்பொன்சேகா யுத்தம் குறித்த நூலை வெளியிடவுள்ளார் இந்த நூலில் யுத்தம் குறித்த பல முக்கிய விடயங்கள்இடம்பெற்றிருக்கும். இதேவேளை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் பிரதிநிதியாக முன்னாள் இராஜதந்திரியொருவர் சரத்பொன்சேகாவை சந்திப்பதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பினை நிராகரிக்காத சரத்பொன்சேகா எனினும் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.