23

23

இஸ்ரேல் தற்போது இராஜதந்திரரீதியில் தனிமைப்படுத்தப்படுவது குறித்து அமெரிக்கா கவலை !

இஸ்ரேலிற்கு பாரம்பரியமாக ஆதரவை வெளியிட்டு வந்த நாடுகளால் இஸ்ரேல் தற்போது இராஜதந்திரரீதியில் தனிமைப்படுத்தப்படுவது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

 

நோர்வே அயர்லாந்து ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையிலேயே அமெரிக்க இஸ்ரேல் தனிமைப்படுவது குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

 

அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் இதனை தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேல் இராஜதந்திரரீதியில் தனிமைப்படுத்தப்படுவது குறித்து கரிசனையடைந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு ஆம் என அவர் பதிலளித்துள்ளார்.

 

இது நியாயமான கேள்வி சர்வதேச அமைப்புகளில் இஸ்ரேலிற்கு ஆதரவாக செயற்படுகின்ற நாடு என்ற அடிப்படையில் நாங்கள் இஸ்ரேலிற்கு எதிரான குரல்கள் அதிகரிப்பதை பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலிற்கு கடந்தகாலங்களில் ஆதரவை வெளியிட்ட குரல்கள் கூடவேறுதிசையில் பயணிக்கின்றன எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

 

இது எங்களிற்கு கரிசனையளிக்கின்றது இது இஸ்ரேலின் நீண்டகால பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்யாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பொதுமக்களை பாதுகாக்கும் மனிதாபிமான உதவிகள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் அதேவேளை ஹமாசை தோற்கடிக்கும் தந்திரோபாயத்தை முன்னெடுப்பதன் மூலமே இஸ்ரேல் சர்வதேச ரீதியில் தனிமைப்படுவதை தவிர்க்க முடியும் என சுலிவன் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை பேச்சுவார்த்தைகள் மூலமே பாலஸ்தீன தேசத்தை அடையமுடியும் ஒரு தலைப்பட்சமான பிரகடனங்கள் மூலம் அதனை அடைய முடியாது எனவும் அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன தேசத்திற்கு தற்போதைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எதுவுமில்லை – அவுஸ்திரேலிய அரசாங்கம்

பாலஸ்தீன தேசத்திற்கு தற்போதைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எதுவுமில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது

 

பாலஸ்தீன அதிகாரசபையை சீர்திருத்தவேண்டும் பணயக்கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்துவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

 

நோர்வே அயர்லாந்து ஸ்பெயின் போன்ற நாடுகளை பின்பற்றிஅவுஸ்திரேலியா பாலஸ்தீன தேசத்தைஅங்கீகரிக்கவேண்டும் என கிறீன்ஸ் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

அவுஸ்திரேலிய இரண்டு தேசகொள்கைக்கு நீண்டகாலமாக ஆதரவுஅளித்து வந்துள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இந்த செயற்பாடு முன்னர் எப்போதையும் விட அவசியமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

பாலஸ்தீனியர்களிற்கு மேலதிக உரிமைகளை வழங்கும் இரண்டு தேசக்கொள்கைகயை அங்கீகரிக்கும் ஐக்கியநாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியா இந்த மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வாக்களித்திருந்தது என தெரிவித்துள்ள பெனிவொங் எனினும் இதன் அர்த்தம் அவுஸ்திரேலியா ஓருதலைப்பட்சமாக பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது என்பதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக இருக்கக்கூடும் – சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகர்

இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வட்டுவாகல் பாலத்தின் நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும், இதன்போது காணாமல்போனவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகர் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு கடந்த சனிக்கிழமையுடன் 15 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், முதன்முறையாக தெற்காசியப்பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தார். இவ்விஜயத்தின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட அவர், பல்வேறு முக்கிய தரப்பினருடன் விரிவான சந்திப்புக்களையும் நடத்தியிருந்தார்.

அதன்படி முள்ளிவாய்க்கால் விஜயத்தின்போது வட்டுவாகல் பாலத்துக்கு அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை ‘வட்டுவாகல் பாலம்’ எனும் மேற்கோளுடன் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், ’15 வருடங்களுக்கு முன்னர் வட, கிழக்கில் விடுதலைப்புலிகளால் கையகப்படுத்தப்பட்டிருந்த பகுதியிலிருந்து  ஆயிரக்கணக்கான தமிழ் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் இப்பாலத்தைக் கடந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது இந்த நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மிகக்குறுகியதொரு பகுதிக்குள் சுமார் 300,000 தமிழர்கள் அடைபட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டிருப்பதுடன், போர் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதற்கு முன்னைய சில மாதங்களில் சுமார் 40,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளது’ எனவும் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை எனவும், அவர்களே வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோர் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களில் 6 மாதமேயான குழந்தை உட்பட பல குழந்தைகளும், சிறுவர்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த 30 வருடகால யுத்தத்தில் இருதரப்பினரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத , வலிந்து காணாமலாக்குதல்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களைப் புரிந்துள்ளனர். இவற்றால் சுமார் 100,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என குறைந்தபட்சம் 60,000 பேர் காணாமல்போயுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம்’ எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

காற்றாலை மின் உற்பத்திக்கு மன்னார் பொருத்தமான பிரதேசம் இல்லை – எம்.ஏ.சுமந்திரன்

காற்றாலை மின் உற்பத்திக்கு மன்னார் பொருத்தமான பிரதேசம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த விசேட கூட்டம் இன்று காலை மன்னாரில் இடம் பெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மெலும் தெரிவிக்கையில்,

“காற்றாலை மின்சாரம் அமைக்கலாம். ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் மன்னார் தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்தில் காணப்படுகின்றது.இத் தீவு இச்செயல் திட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லை.

மன்னாரில் இரண்டு பாரிய அச்சுறுத்தல்களை மக்கள் எதிர் கொள்கின்றார்கள். காற்றாலை அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் செயல் திட்டத்தில் மூன்று திட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

காற்றாலை அமைப்பதன் மூலம் இப்பிரதேசங்களில் எற்படுகின்ற பல விதமான பாதிப்புக்களை மக்கள் ஏற்கனவே நேரடியாக அனுபவிக்கின்றார்கள்.

குறிப்பாக மீன்பிடி சமூகம் அவர்கள் பிடிக்கும் மீன்களின் தொகைகளில் மாற்றம் காணப்பட்டு குறைகின்றமை மற்றும் நீரோட்டங்களின் திசைகள் வழமை போல் இல்லாது மாற்றமடைவது உள்ளடங்கலாக பல்வேறு காரணிகளால் பிடிக்கப்படுகிற மீன்களின் தொகை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கிளிநொச்சியில் சிறுமி மீது சகோதரியின் காதலனால் பாலியல் துஷ்பிரயோகம் !

கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் தனது சகோதரியின் காதலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த தகவல்  பொலீஸாருக்கு பரிமாறப்பட்டு கிளிநொச்சி பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி சகோதரியின் காதலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு  உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படடுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை  கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்களை நினைவுகூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தினர் தடுத்துவைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மே 18ம் திகதி 2009இல் முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச விசாரணைகள் மற்றும் ஏனைய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என மே 17ம் திகதி ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் இதன் காரணமாக உண்மை நீதி இழப்பீடு போன்றவற்றை வழங்குவதற்கு பதில் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் சமூகத்தினரையும் மௌனமாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்ட்ட மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கும் துஸ்பிரயோகங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் மேலும் சர்வதேச நடவடிக்கைகள் அவசியம் என்பது புலனாகின்றதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 18ம் திகதி நினைவேந்தல் தினத்திற்கு முன்னர் வடக்குகிழக்கில்நினைவேந்தல் நிகழ்வுகளை இலங்கை பொலிஸார் குழப்ப முயன்றனர் யுத்தத்தின்போது நிலவிய பட்டினி நிலையை குறிக்கும் விதத்தில் வழங்கப்படும் கஞ்சியை தயாரித்து வழங்கியமைக்காக நால்வரை கைதுசெய்து ஒருவாரம் தடுத்துவைத்திருந்தனர் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்களின் உறவினர்கள் சிலரும் ஏனையவர்களும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதை தடை செய்யும் விதத்தில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்தனர் என சர்வதேச மனித உரிமைகள்கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் பொலிஸார் தலையிட்டு நிகழ்வுகளை தடுத்தனர் அல்லது மக்கள் அங்கு செல்வதை தடுத்தனர் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படி வலிந்து காணாமலாக்கப்பட்டமை இலங்கையில் இடம்பெற்றது என்பதையும் அதன் அளவையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் உடனடி நம்பகதன்மைமிக்க விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்,பாரியமனித புதைகுழிகளை தோண்டுவதற்கு சர்வதேச தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும்,எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் ஒரு சுதந்திரமான வழக்குரைஞர் அதிகாரத்தை ஏற்படுத்த வேண்டும் பயங்கரவாததடைச்சட்டம் உட்பட துஸ்பிரயோகங்களிற்கு வழிவகுக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்கவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வெளிநாட்டு அரசாங்கங்கள் ஐக்கியநாடுகள் அமைப்புகள் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு கடும் வேதனையைதுன்பத்தை ஏற்படுத்தும் வலிந்து காணாமலாக்கப்பட்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் மேலும் இது நாட்டில் மேலும் துஸ்பிரயோகங்கள் நிகழும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கான ஆணையை செப்டம்பர் அமர்வில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவை புதுப்பிப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள அவர் அந்த குற்றங்களிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள வழக்குரைஞர்கள் இந்த ஆதாரங்களை பயன்படுத்துவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.