24

24

இணைந்த வடக்கு கிழக்கிற்கான, தேச அரசியலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவது காலத்தின் கட்டாயம் – அருட்தந்தை மா.சத்திவேல்

இணைந்த வடக்கு கிழக்கிற்கான, தேச அரசியலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் வலியுறுத்தியுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இறுதி யுத்தக் காலப்பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டதாகவும் யுத்தமற்ற காலப்பகுதியில் இனவாத வன்முறைகளால் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் பொது சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நடத்தப்பட்டபோது கிழக்கின் பல இடங்களில் பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதோடு தாக்குதலும் நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை பேணுகின்றவர்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள்!

நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை பேணுகின்றவர்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு புலனாய்வு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்கு பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் துறைக்குச்  பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் இந்தக் குழு விசாரணைகளை முன்னெடுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிக்கொப்டர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான அறிகுறிகள் எவையும் இல்லை – ஈரான் இராணுவம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிக்கொப்டர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான அறிகுறிகள் எவையும் இல்லை என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

மலைப்பகுதியில் விழுந்ததும் ஹெலிக்கொப்டர் தீப்பிடித்து எரிந்துள்ளது அது தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் இல்லை என ஈரான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் என ஏ.பி செய்தி வெளியிட்டுள்ளது.

ஹெலிக்கொப்டர் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஈரான் இராணுவத்தின் இந்த அறிக்கை தொலைக்காட்சியிலும் வெளியாகியுள்ளது.

ஹெலிக்கொப்டர் விபத்திற்கு எவர்மீது குற்றச்சாட்டுகள் அந்த அறிக்கையில் சுமத்தப்படாதமை குறிப்பிடத்தக்கது.

ஹெலிக்கொப்டருடனான தொடர்பாடல்களின் போது சந்தேகத்திற்கு இடமான எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதமானோர் கையடக்க தொலைப்பேசி பாவனைக்கு அடிமையாகியுள்ளனர் – தென்மாகாண ஆய்வில் தகவல்!

பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதமானோர் கையடக்க தொலைப்பேசி பாவனைக்கு அடிமையாகி இருப்பதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தென் மாகாணத்தில் உள்ள நானூறு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தி வைத்தியர்கள் குழுவொன்று ஆய்வொன்றை நடத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சமூக நிபுணர் வைத்தியர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதில் பல சிறுவர்கள் இரவில் சரியாகத் தூங்காமல் எப்போதும் சோர்வாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தொலைப்பேசி பாவனைக்கு அடிமையான சிறுவர்களுக்குச் சக்கரை நோய் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டாய தேவை கருதி தொலைப்பேசி பாவிக்க வேண்டிய தேவை ஏற்படுமாயின் எந்தவொரு சிறுவர்களுக்கும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் தொலைப்பேசி பாவிக்க அனுமதிக்குமாறு பெற்றோர்களை வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் .

“நாம் கஞ்சி வழங்கினால் தான் நல்லிணக்கம் சீர்குலையும். தன்சல் வழங்கும் போது அப்படி நடக்காது.”- செல்வராஜா கஜேந்திரன்

கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லை என செல்வராஜா கஜேந்திரன் , நாடாளுமன்ற உறுப்பினர்கமுகநூல் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழ் மக்கள் கஞ்சி கொடுத்தால் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஐஸ்கிறீம் கொடுக்கலாம்.

 

கஞ்சி வழங்கினால் இனநல்லிணக்கம் குழம்புமென தடைகொடுக்கும் மன்றங்கள் சிங்களவர்கள் வசிக்காத வடக்கு கிழக்கில் வெசாக் கொண்டாடினால் இனநல்லிணக்கம் பாதிக்கப்படுமென தடை வழங்கவில்லை.

கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளைஇ வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லை.

வீதியோரமாக அனுமதியின்றி ஒரு சிறு வியாபாரியால் கடை போட முடியாது. ஆனால் இராணுவத்தினரால் அனுமதியின்றி ஆரிய குளத்தினுள் வெசாக் கூடுகளை கட்டமுடியும். தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம். சிங்களவர்களுக்கு இன்னொரு நியாயம்.

நம்புங்கள். இலங்கை ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை இன்று (24) திறந்துவைத்ததை தொடர்ந்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு இலங்கை மாணவர்களை வரவேற்கும் இந்தியா!

சுயநிதித் திட்டத்தின் கீழ் இந்தியப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு இலங்கை மாணவர்களின் விண்ணப்பங்களைக் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வரவேற்கிறது.

அதன்படி, 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான MBBS, BDS, BE, B.Tech, B.Pharm, B.Arch, Diploma level Technical மற்றும் Diploma in Pharmacy ஆகிய கற்கைநெறிகளுக்குத் தகுதியான இலங்கை மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களைக் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலத்தில் சமர்ப்பிக்க முடியும்.

MBBS/BDS பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் NEET தேர்வு மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் உயிரியல் ,பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாட நெறிகளில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொறியியலில் BE/B.Tech மற்றும் Diploma in engineering ஆகிய கற்கைநெறிகளுக்கு பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் கணிதம் ஆகிய பாட நெறிகளில் 60 சதவீதம் மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

B.Pharmacy மற்றும் Diploma in Pharmacy ஆகிய கற்கைநெறிகளுக்கு உயிரியல், பௌதிகவியல் மற்றும் இரசாயனவியல் ஆகிய பாட நெறிகளில் 60 சதவீதம் மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

B.Arch கற்கைநெறிக்கு புதுதில்லியின் கட்டிடக்கலை கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது விண்ணப்பங்களைக் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும்.

“பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒரு கொலைகாரன்” – தையிட்டியில் போராட்டம்!

தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளர்களையும் அங்கிருந்த பொலிசார் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதத்தில் செயல்பட்டுள்ளனர்.

இதன்போது அவ்விடத்திற்கு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருகை தந்தவேளை, “பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒரு கொலைகாரன், பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒழிக” என கூச்சலிட்டனர்.

 

ஈழதமிழ் பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் சுகந்தினி மதியமுதன் தங்கராஜிற்கு தென்கொரியாவில் விருது !

ஈழதமிழ் பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் சுகந்தினி மதியமுதன் தங்கராஜிற்கு தென்கொரியாவின் மே18 நினைவு அறக்கட்டளை 2024 குவாங்ஜூ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினதும் அதன் பாதுகாப்பு படையினரினதும் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டுள்ள -யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்களின் உரிமைகள் அவர்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக அமரா என்ற அமைப்பை ஆரம்பித்து சுகந்தினி தனது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார்.

சுகந்தினி 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பாலியல் வன்முறைகளில் இருந்து தப்பியவர்.

இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த பல பெண்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துபவராக துணிச்சல் தைரியத்தின் அடையாளமாக சுகந்தினி காணப்படுகின்றார் என மே 18 நினைவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

சுகந்தினியின் செயற்பாடுகள் எங்கள் அமைப்பின் உணர்வுகளோ நெருக்கமானதாக காணப்படுகின்றது என கருதுகின்றோம் என தெரிவித்துள்ள மே 18 நினைவு அறக்கட்டளை இலங்கையில் தமிழ் பெண்களின் மனித உரிமை நிலவரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அவரது முயற்சிகளிற்கு உறுதியான ஆதரவை வழங்குகின்றோம் எனவும் தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகத்தின் அக்கறையும் கவனமும் ஒத்துழைப்பும் ஆதரவும் தமிழர் பகுதிகளில் பாதுகாப்;பு படையினரின் அக்கிரமங்கள் குறி;த்த வெளிச்சத்திற்கு வருவதற்கு உதவியாக அமையும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டு காரணங்களிற்காக நான் விடுதலை இயக்கத்தில் இணைந்தேன் என தெரிவித்துள்ள சுகந்தினி ஒன்று தமிழர்களை சிங்கள அரசின் ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பது மற்றையது இலங்கையின் இராணுவ இயந்திரத்தின் பாலியல் வன்முறைகளில் இருந்து தமிழ் பெண்களை பாதுகாப்பது என தெரிவித்துள்ளார்.

2009 இல் ஆயுதமோதல் முடிவிற்கு வருவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சியின் கீழ் தமிழ் பெண்களின் பாதுகாப்பும் கௌரவமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு பாதுகாக்கப்பட்டது என சுகந்தினி தெரிவித்துள்ளார்.

பெண்கள் இரவில் அச்சமின்றி நடமாட முடிந்தது அவர்கள் தன்னிறைவு கொண்டவர்களாக சுதந்திரமாக வாழக்கூடியவர்களாக வலுப்படுத்தப்பட்டார்கள் பெண்களின் சுயவேலைவாய்ப்பிற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனஇசுய பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன ஆணாதிக்க சமூகத்தின் மூலம் உருவாக கூடிய சமூக தடைகளை உடைப்பதற்கான விழிப்புணர்வு வழங்கப்பட்டது எனவும் சுகந்தினி தெரிவித்துள்ளார்.

அனைத்து துறைகளிலும் பெண்களிற்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டது இதுமெல்ல மெல்ல ஆணாதிக்க சமூகஉணர்வுகள் மறைவதற்கு வழிவகுத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 2009 இல் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் முடிவடைந்த இராணுவநடவடிக்கையின் பின்னர் நிலைமை மாற்றமடைந்ததுஇஎன தெரிவித்துள்ள சுகந்தினி பாலியல் வன்முறைகள் சித்திரவதைகள் போன்ற சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகின இவை குழந்தைகள் வயது முதிர்ந்தவர்களிற்கு எதிராகவும் இழைக்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.

தான் கைதுசெய்யப்பட்டு வவுனியாவின் மிக மோசமான ஜோசப்முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதை சுகந்தினி நினைவு கூர்ந்துள்ளார்.

அங்கு மிகவும் பயங்கரமான சித்திரவதைகளை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராகக் கறுப்புக் கொடி கட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டடமொன்றைத் திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகம் மற்றும் மருத்துவ பீட வளாகத்தில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுமார் பன்னிரண்டாயிரம் பணியாளர்கள் தங்களுடைய சம்பள முரண்பாடு மற்றும் நீண்ட காலமாகத் தீர்த்து வைக்கப்படாத பிரச்சினைகள் பலவற்றை தீர்க்கக் கோரி நாடளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் நேரத்தில், பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான கட்டடமொன்றைக் கோலாகலமாகத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.