25

25

வட, கிழக்கு மாகாணங்களில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்து வரும் தொல்பொருள் திணைக்களம் – அமெரிக்க ஆணைக்குழு

தொல்பொருள் திணைக்களமானது பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய அரச கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்காக வட, கிழக்கு மாகாணங்களில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு (United States Commission On International Religious Freedom), மதச்சுதந்திரத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்குமாறு ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளால் மத சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டப்பட்ட அமைதியின்மை மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக, குறித்த ஆணைக்குழு தமது வருடாந்த அறிக்கையில், சுட்டிக்காட்டியுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிராக பௌத்த பிக்குகளால் தூண்டப்பட்ட ஒடுக்குமுறைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கையின் மதச்சுதந்திரம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு, பல்வேறு சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளால் மத சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டப்பட்ட அமைதியின்மை மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆகவே, மதச்சுதந்திரத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசுக்கு சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் மதச்சுதந்திர நிலைவரம் தொடர்பில் அமெரிக்க அரசு முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கலாக மதச்சுதந்திரம் தொடர்பில் விரிவான தகவல்களை உள்ளடக்கிய 102 பக்க வருடாந்த அறிக்கையிலே சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையின் மதச்சுதந்திர நிலைவரம் 2023 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து பின்னடைவை சந்தித்ததாகவும் இலங்கை அரசாங்கம் மத சிறுபான்மையினரை தொடர்ச்சியாக ஒடுக்கியும், அச்சுறுத்தியும் வந்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

சில சந்தர்ப்பங்களில் அவர்களது வழிபாட்டுத்தலங்களுக்குள் பிரவேசிப்பதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்தோடு, சிறுபான்மையினரை இலக்குவைத்து கண்காணிப்பதற்கும் தடுத்துவைப்பதற்கும் அரசாங்கம் அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தியதாகவும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் மக்கள்கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும் பரந்துபட்ட அதிகாரங்களைக் கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு தொல்பொருள் திணைக்களம், பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய அரச கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்காக வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்தாகவும் சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள இளைஞர்கள், தொழில்முனைவோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல் !

கிளிநொச்சியில் உள்ள இளைஞர்கள், தொழில்முனைவோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர்கள், தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்ததுடன், அதற்கான தீர்வுகளையும் முன்வைத்தார்.

குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5,320 மில்லியன் ரூபா செலவில் பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று சனிக்கிழமை (25) திறந்து வைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2006ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார வசதிகளை வழங்கும் பிரதான வைத்தியசாலையாகும்.

இந்த வைத்தியசாலை மாவட்டத்தில் 150,000க்கும் அதிகமான மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்கி வருகின்றது.

இன்று திறந்துவைக்கப்பட்ட மகளிர் சுகாதார சேவைகளுக்கான சிறப்பு மையம், வடக்கில் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் பிரசவத்தை மேம்படுத்துவதுடன், புதிதாக பிறந்த பெண்குழந்தைகள் மற்றும் அவற்றின் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் வட மாகாண சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த நிகழ்வில் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து, மகளிர் சுகாதார சேவைகளுக்கான சிறப்பான நிலையத்தை திறந்துவைத்த ஜனாதிபதி, அதன் செயற்பாடுகளை அவதானிப்பதிலும் இணைந்துகொண்டார்.

யாழ்ப்பாணம் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியினை மேலும் மேம்படுத்தும் வகையில் சுமார் 1,265 மில்லியன் ரூபா திட்டங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி  [Clinical Training and Research Block  – CTRB] அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (24) திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதியானது சுமார் 942 மில்லியன் ரூபா செலவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகில் 08 மாடிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள  இந்த கட்டட தொகுதி 6000 சதுர மீட்டர் பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதில் மருத்துவக் கற்கை நெறிக்கான விரிவுரை, பரீட்சை மண்டபங்கள், கேட்போர்கூடம் மற்றும் மருத்துவத்திறன் விருத்தி ஆய்வுகூடங்கள் ஆகியன காணப்படுகின்றன.

சத்திர சிகிச்சை அறைகள், மீட்பு அறைகள், சத்திர சிகிச்சை கழிவுகளை அகற்றும் பகுதிகள்  கிருமித் தொற்றகற்றும் அறைகள் , சத்திர சிகிச்சை ஆயத்த அறைகள்  மற்றும் மருத்துவ களஞ்சிய சேமிப்பு வசதிகளும், பணியாளர் உடை மாற்றும் அறைகள், வரவேற்பு பகுதி நோயாளர் காத்திருப்பு அறைகள் உள்ளிட்ட பல வசதிகளும் இந்த புதிய கட்டட தொகுதியில்  காணப்படுகின்றன. அத்துடன் பிராந்திய ஒத்துழைப்பு மையமும் இங்கு ஸ்தாப்பிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ஆராச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், மருத்துவ கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் மருத்துவ வல்லுநர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த பிராந்திய ஒத்துழைப்பு மையம் ஸ்தாப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீடத்திற்கான மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தொகுதிக் கட்டிடத் திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நானும் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்த கட்டடத்தை அமைப்பதற்கான பொருத்தமான காணியை ஒதுக்கித் தருமாறு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் சங்கமானது 2013 ஆம் ஆண்டிலிருந்து என்னிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தது.

முன்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று, அவற்றை இயன்றளவில் நிறைவேற்றியுள்ள நான், இந்தக் கோரிக்கையினையும் ஏற்று, இந்த இடத்திலே குறித்த காணியை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்திருந்தேன்.

இதேவேளை யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான இந்தக் காணியை தங்களுக்குத் தருமாறு ஏற்கனவே யாழ்ப்பாணம் வர்த்தகச் சங்கத்தினரும், இலங்கை மின்சார சபையும் யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தின் பாவனைக்கு இந்தக் காணி மிகவும் பொருந்தும் எனக் கருதியே இந்தக் காணியை அன்று நான் தெரிவு செய்திருந்தேன்.

இதேவேளை மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதிக்கான கட்டிடத்தை அமைப்பதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அண்மித்ததாக காணி கிடைத்தால் அது பொருத்தமாக இருக்குமென ஏற்கவே யாழ்ப்பாணம் மருத்துவ பீட மாணவர் சங்கமும் என்னிடம் தெரிவித்திருந்தது.

அதனடிப்படையில் அன்றைய காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக இருந்த திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களுக்கு அறிவித்து 6000 சதுர மீற்றர் கொண்ட இந்தக் காணி பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இதேவேளை இலங்கையிலே கொழும்பில் இத்தகைய தொகுதி ஒன்று செயற்பட்டு வருகின்றது. அதற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடம் அமைவதற்கு பெரு முயற்சிகளை மேற்கொண்டோர் என்ற வகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் வசந்தி அரசரத்தினம் மற்றும் மருத்துவ பீடாதிபதியாக இருந்த அமரர் பேராசிரியர் பாலகுமார் ஆகியோரை இந்த சந்தர்ப்பத்திலே நினைவு கூருகிறேன்.

இதேவேளை இந்த மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியினை மேலும் மேம்படுத்தும் வகையில் சுமார் 1265 மில்லியன் ரூபா திட்டங்கள் என்னிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது முழுமையான ஒத்துழைப்புடன் இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தபோது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களது பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கு நான் ஏற்பாடு செய்திருந்தேன்.

அந்தச் சந்திப்பின்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களது விடுதிகளில் உள்ள குறைபாடுகள், முகாமைத்துவ பீடத்துக்கான பேருந்து வசதிகள், சித்த மருத்துவத் துறையை பீடமாகத் தரம் உயர்த்துதல், இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களுக்கு உள்ளக பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அந்தக் கோரிக்கைகளையும் இந்த இடத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது அவதானத்துக்கு மீள கொண்டு வருவதுடன், ஜனாதிபதி அவர்களது முழுமையான ஒத்துழைப்புகளுடன் அந்தக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு நான் உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கான விவசாய, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் பீடங்கள் அமைவதற்கு அதற்குரிய காணியினை நான் எவ்வாறு பெற்றுக் கொடுத்தேனோ, அதே போல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு நான் முன்னிற்பேன்.

இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மண்டபம் எவ்வாறு இன்று கம்பீரமாக வீற்றிருக்கிறதோ, அதே போன்று இந்த கட்டிடமும் தனது வினைத்திறன்மிக்க செயற்பாடுகளால் மிளிரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

மேலும், யாழ்ப்பாணத்திலே தேசிய வைத்தியசாலை ஒன்று அமைய வேண்டும் என் எண்ணம் என்னிடம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதேபோல், குழந்தைகளுக்கான வைத்தியசாலை மற்றும் முதியோர்களுக்கான வைத்தியசாலை போன்றவையும் அமைக்கப்பட வேண்டும். இந்த விடயங்களையும் எமது ஜனாதிபதி மேன்மைதங்கிய ரணில் விக்கிரமசிங்க அவர்களது அவதானத்துக்கு முன்வைக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம்!

வடக்கில் அரசாங்க அதிபர்கள் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் அரசியல் காரணமாக பின்னடிப்புச் செய்யக் கூடாதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலுமுள்ள நிரந்தர ஜிஏக்கள் ஓய்வு பெற்று சுமார் 03 மாதங்களாகியும் நிரந்தர அரச அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.

கூடுதல் GAக்கள் அந்த கடமைகளை உள்ளடக்கி உள்ளனர். தகுதியான தமிழ் சிறப்பு தர SLAS அதிகாரிகள் நியமனத்திற்கு தகுதி இருந்தும் முக்கியமான பொதுப் பதவிகளுக்கு இந்த மூத்த அதிகாரிகளின் நியமனங்களை அரசியல் தடுக்கக் கூடாது. மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் 04 செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சுகாதாரம், கல்வி மற்றும் மகளிர் விவகார அமைச்சகங்கள். ஆனால் கிரேடு 1 அதிகாரிகள் செய்கிறார்கள்.

கல்வி அமைச்சு, மகளிர் விவகார அமைச்சு மற்றும் ஆளுநர் அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற அதேவேளை விவசாய அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளராக செயற்படுகின்றார். திரு. குகநாதன், திரு. ஸ்ரீ, திருமதி. எலிலரசி மற்றும் திரு. அருள்ராஜ் போன்ற மூத்த சிறப்பு அதிகாரிகளும், அரசியல் காரணங்களுக்காக, GAக்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பதவியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு, பறிக்கப்படுகிறார்கள்.

முக்கியமான நிர்வாகப் பதவிகளுக்கு மூத்த SLAS அதிகாரிகளை நியமிப்பதை கெளரவ கவர்னர் வெறுக்கிறார். அதற்கு பதிலாக அவர் அந்த பதவிகளை நிர்வகிக்கும் இளைய கூட்டாளிகளை விரும்புவதாக தெரிகிறது.

இதனால் இந்த சிரேஷ்ட SLAS அதிகாரிகளின் பெறுமதியான சேவைகளை பொதுமக்கள் இழக்கின்றனர். நிரந்தர உத்தியோகத்தர்களை GAக்கள் மற்றும் செயலாளர்களாக விரைவில் நியமிக்க மாண்புமிகு உங்களது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.

ஐனாதிபதியின் வருகையை எதிர்த்து கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஊடக சந்திப்பு!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் கதிர்காமநாதன் கோகிலவாணி மேலும் தெரிவிக்கையில்,

இன்று கிளிநொச்சிக்கு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாகவும், அந்த போராட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது பிள்ளைகளை யுத்த காலத்தில் இராணுவத்திடம் கையால் ஒப்படைத்தும் விசாரணைக்கு என்று அழைத்து செல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டு இன்றுவரையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.

எத்தனையோ போராட்டங்கள் வாயிலாக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தும் இதுவரையில் எமக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.

கடந்த யுத்த காலங்களில் உண்ண உணவின்றி உப்பு கஞ்சி குடித்து உயிரை காத்து கொண்டோம் அதனை சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எடுத்து காட்டும் முகமாக மே 18 முள்ளிவாய்க்கால் கஞ்சி  வழங்கப்பட்டு வந்தது.

குறித்த நினைவு கஞ்சிகளை இராணுவம் மற்றும் பொலிசார் கஞ்சியை காலால்தட்டி சுகாதார கேடு என பலரை கைது செய்துமுள்ளனர்.

ஆனால் இன்று நாடுபூராகவும் வெசாக் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதுவரையில் எந்த குழப்பங்களும் இல்லாமல் நடாத்துகின்றனர்.

அப்படி என்றால் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா என கேள்விகள் எழுந்துள்ளதாகவும், இதன் காரணங்களுக்காகவே ஐனாதிபதியின் வருகையை இன்று எதிர்த்து சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் ஊடகங்கள் வாயிலாக கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் மன்னாரில் மக்கள் மேடை..!

தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் பெப்ரல்(PAFFRAL) அமைப்பின் ஏற்பாட்டில், மன்னார் மார்ச் 12 இயக்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த மக்கள் மேடை நிகழ்வு சனிக்கிழமை (25) காலை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

மார்ச் 12 இயக்கத்தின் மாவட்ட தலைவர் கொன்ஸால் வாஸ் தயாளராஜன் தலைமையில் இடம்பெற்ற குறித்த மக்கள் மேடை நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ,அரசியல் கட்சிகள்,பொது மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஆகிய வற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதி நிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,மத தலைவர்கள்,இளைஞர்,யுவதிகள்,சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசியல் பிரதி நிதிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மண் அகழ்வு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது குறித்து மக்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

எனவே மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஓரணியில் செயல்பட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.