27

27

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க வாய்ப்பு வழங்க கோரி வவுனியாவில் பெண்கள் போராட்டம் – ஜனாதிபதி வழங்கிய பதில் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்துக்குச் சென்றபோது ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அறிந்த வட மாகாண ஆளுநர் பி. எஸ்.எம். சார்ள்ஸ், இரு பெண்களும் இருந்த இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினை தொடர்பாக வினவ, அதன்போது அவர்களின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

அதனையடுத்து, வட மாகாண ஆளுநர் அந்த இரு பெண்களை பற்றி ஜனாதிபதிக்கு அறிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

காணிப் பிரச்சினை காரணமாக தாம் உட்பட கேப்பாப்பிலவு கிராமத்தில் வசிக்கும் 56 குடும்பங்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், எனவே இதற்கு உடனடியாக தீர்வு காண ஏற்பாடு செய்யுமாறும் அந்த பெண்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தப் பிரச்சினையை விரைவாகக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், வட மாகாணத்தில் பெருமளவிலான காணிகளை விடுவிக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எஞ்சியுள்ள காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் குறிப்பிட்டார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட தம்மை சந்தித்து, தமது பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தமைக்கு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தமது நன்றியை வெளிப்படுத்தினர்.

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் புதையுண்டு போன 2000 பேர் !

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு அருகே இருக்கும் தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.

இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் உறங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர்.

இதனால் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும், 650-க்கு மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டனர் என்று முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரோடு புதையுண்டதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மையம் ஐ.நா.விடம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உதவ தயாராக இருப்பதாக அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பிலான வழக்கில் கட்சி மீண்டும் இரண்டாக பிளவுபட்டுள்ளது – சுமந்திரன் குற்றச்சாட்டு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பிலான வழக்கில் கட்சி மீண்டும் இரண்டாக பிளவுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனும் , மாவை சேனாதிராஜாவும்  வெவ்வேறு சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், சிறீதரன் மற்றும் மாவை சேனாதிராஜா இடையே வெவ்வேறான கருத்து நிலைப்பாடுகள் காணப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

‘கட்சியின் சார்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதில் நான் உள்ளிட்ட மூவர் ஒரு நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றோம்.

மீதமுள்ள 4 பேரும் இரு தரப்பாக பிரிந்து வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டு செயற்படுகின்றனர் எனவும், இதனை மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுத்துரைத்தேன். கட்சியின் முன்னணி அங்கத்தவர்கள் யாப்பை தெரியாதது போல் நடந்துகொள்வது தொடர்பிலும் விளக்கமளித்தேன்.” எனவும் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என தமிழரசு கட்சி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணும்
நோக்கில் எதிர்வரும் ஜுன் மாதம் 09ஆம் திகதி கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என தமிழரசு கட்சி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டார்.

அத்துடன் இறுதிக்கட்ட யுத்ததின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்ற பொறிமுறையின் ஊடாக தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்ததாகவும், ஆனால் சர்வதேச பொறுமுறையா அல்லது கலப்பு பொறிமுறையா என்பது தொடர்பான நிலைப்பாட்டினை அவர் தெரிவிக்கவில்லை என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒரு சான்றிதழுக்காகவும் – அரச வேலைக்காகவும் மட்டும் படிக்காதீர்கள்! – அரச வேலைக்காக போராடும் பட்டதாரிகள்!

வடமாகாணத்தில் 400 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தெரிவில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மே 25 இல் யாழ் மத்திய கல்லூரியில் வைத்து வடமாகாண ஆளுநர் சார்ள்ஸின் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது. இதுவரை ஆசிரியர்களுக்கான நியமனங்கள் அரசியல் நியமனங்களாக ஆளும் கட்சியினூடாக அவர்களின் பரிந்துரையின் பின்னணியில் இடம்பெற்று வந்ததே பெரும்பாலும் வடக்கில் மட்டுமல்ல இலங்கை முழுதுமே நடந்தேறியுள்ளது. ஆளுந்தரப்பு எம்பிக்களின் விசுவாசிகளுக்கும் – அல்லது அவர்களுக்கு ஒரு தொகை பணத்தை கொடுத்தோ இந்த வேலை வாய்ப்புகளை கையகப்படுத்தும் நிலை நீடித்தது. மேலும் தேசிய கட்சிகள் தமது வாக்கு வங்கியை தக்க வைக்க இந்த அரச நியமனங்களை தொடர்ந்தும் வழங்கி வந்துள்ளனர். இதிலும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் வழங்கிய 50000 பட்டதாரிகள் நியமனம் எல்லாமே இதே வகையறா தான். ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை கூட அரச ஊழியர்களின் அதிகரித்த தொகையையும் – அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் தொடர்பிலும் அதீத கரிசனை வெளியிட்டருந்தது. இந்த பின்னணியிலேயே ஐ.எம்.எப் அரச ஊழியர்களாக புதிதாக நியமிக்கப்படுவோர் தொகையை கட்டுப்படுத்துமாறு கூறியதும் நினைவில் கொள்ளத்தக்கது.

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர் – நாமல் ராஜபக்ச கவலை !

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர், எனவே தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கலந்துரையாடல் இடம்பெற்ற போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
“தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும், ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர்.
அரசியல் கட்சிகள் பொது மக்களின் வாக்குகளை தமது தேவைக்கு பயன்படுத்துகின்றன. ஜனாதிபதி தேர்தலில் அனைத்து மக்களும் விரும்பும் ஒருவரையே வேட்பாளராக நிறுத்துவோம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் ஆட்சி மாற்றத்தால் ஏனைய சில அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்க முடியாமல் போனது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இலங்கை முழுவதும் அந்த அபிவிருத்தி முடக்கப்பட்டதுடன் அந்த ஆட்சி காலத்தில்தான் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
இதற்கான அவப்பெயர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் ஏற்பட்டது. கேட்டாபாய ராஜபக்ச ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் அந்த சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
எங்களின் ஆட்சி இடைநடுவில் மாற்றப்பட்டதுடன், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்திருந்தோம்.
எவ்வாறாயினும், தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.