28

28

ரபாவில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !

இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகரம் மீது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவினர் பாரிய ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் படையினர் ஹமாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது  வான்வெளி தாக்குதலில் நடத்தி உள்ளது.

வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரபாவில் தஞ்சம் புகுந்துள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது.

இந்த மிலேச்சதனமான தாக்குதலில் 35 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர் என காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மற்றும் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் காசாவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

எற்கனவே ரபா எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்காததால் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர்.

தற்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பொதுமக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். இதற்கிடையில் தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களில் இஸ்ரேல் படையினர் நடத்திய புதிய தாக்குலுக்கு 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல் 11 பாடசாலை மாணவிகள் பொலிஸில் முறைப்பாடு – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல் 11 பாடசாலை மாணவிகள் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே இவ்வாறு ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த மூன்று வருடங்களாக அகப்பை காம்பு, தடி மற்றும் தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென தம்மை சித்திரவதை செய்ததாக மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர்.

ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது மற்றும் பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட்சகோதரி தாக்குதல் நடத்தியதாக மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தம்மை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாகவும் மாணவிகள் குறிப்பிட்டுள்ளதுடன் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் குறித்த 11 மாணவிகளும் இன்று (28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதையடுத்து மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியை கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறு கோரிய முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம் இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு தியோநகர் பகுதியில் சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறு கோரி பாதிக்கப்பட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரக் கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிராதான வீதியினையும் கடற்கரையினையும், இணைக்கும் இணைப்பு வீதியானது சில தரப்பினரால் வேலியிட்டு அடைக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த பகுதி மக்களினால் வேலித் தடைகளை அகற்றப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சுற்றுலாத்தளம் ஒன்றினை அமைத்துள்ள தனியார் நிறுவனம் ஒன்று மீனவர்களுக்கு தொடர்ச்சியாக இடையூறுகளை விளைத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே இதற்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மக்கள் தெரிவித்து நேற்று முன்தினம் இரவு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து நேற்றைய தினம் பிரதேச செயலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது குறித்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு பெற்றுத்தரப்படும் என வாக்குறுதி அளக்கப்பட்ட நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

தீர்வு கிடைக்காவிட்டால் இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் 15 இலட்சம் பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் !

நாட்டில் 15 இலட்சம் பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.புகைப்பழக்கத்திலிருந்து இளையோர் பலர் விடுபட்டு வருகின்றனர்.

எனினும், அவர்களை மீண்டும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக்க பல்வேறு வழிகளில் ஈர்ப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இளையோர், சிறுவர்களை புகைப்பழக்கத்துக்கு அடிமையாக்க புகையிலை நிறுவனங்கள் பல தந்திரங்களை மேற்கொள்கின்றன.

இது தொடர்பில் சமூகத்திலுள்ளவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்கு பயப்பட்டதில்லை – எம்.ஏ.சுமந்திரன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் நடைபெற்ற 2005 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு மக்கள் நூறு சதவீதம் ரணில் விக்ரமசிங்கவிற்கே வாக்களித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ் ஊடக அமையத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பிதிலளிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை வட பகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைக்கின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சில தினங்களுக்கு முன்னர் சுமந்திரன் கூறியிருப்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதனடிப்படையில், இந்த கேள்விக்கு சுமந்திரன் பதிலளிக்கையில், “அந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம் தானே.  ஆனாலும் கிழக்கு மாகாணம் வாக்களித்தது அத்தோடு கிழக்கு மாகாண மக்களுக்கும் இந்த அறிவித்தல் கொடுத்தாலும் அங்கு மக்கள் வாக்களித்தனர்.

ஏனென்றால் அதை முன்னிலைப்படுத்துகின்ற அதிகாரம் அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. எனினும் ஒருசிலர் வாக்களித்தவர்கள் என நினைக்கிறேன் அத்தோடு வாக்களித்த ஒரு சிலரும் அந்த நேரம் நூறுவீதம் ரணில் விக்ரமசிங்கவிற்கு தான் வாக்களித்தவர்கள்.

ஆனபடியால் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் யாருக்கு அந்த வாக்கு போயிருக்கும் என்பதில் எவருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இதுவரையில் இருந்த்தில்லை ஆனால் இன்றைக்கு ஊடகவியலாளர்கள் தான் இப்படியான சந்தேகத்தை எழுப்புகிறீர்கள். எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து இதைச் சொன்னால் துரோகி என்று சொல்லிவிடுவீர்கள் என கருதி ஊடகவியலாளரே பயந்திருக்கிற ஒரு சூழலைத் தான் இன்றைக்கு இங்கு கேட்கிற கேள்வி காட்டுகிறதே தவிர எப்படி வாக்கு கொடுக்கப்கட்டிருக்கும் என்பது தொடர்பில் மக்களுக்கு மிகத் தெளிவு இருக்கிறது.

எனினும் நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்கு பயப்பட்டதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் – ஆசிரியர் கைது !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 09 அன்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின்  இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்தமை தொடர்பில் இதுவரை 25க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட் சந்தேக நபர் களுத்துறை (Kalutara) மாவட்டத்தின் கிரந்திடிய பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையில் அதிவேக Starlink இணைய சேவையை ஆரம்பிப்பதற்காக இந்த வருட இறுதியில் !

இலங்கையில் அதிவேக இணைய சேவையை ஆரம்பிப்பதற்காக இந்த வருட இறுதியில் எலோன் மஸ்க் நாட்டிற்கு வரவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

“Starlink” போன்ற திட்டத்தில் இணைவதன் மூலம் நாட்டின் பின்னடைந்த பிரதேசங்களுக்கு இணைய வசதிகளை பிரச்சினையின்றி வழங்க முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ருவன் விஜயவர்தன இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “10 ஆவது உலக நீர் மாநாடு  இந்தோனேசியாவின் பாலி  தீவில் கடந்த 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது. இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின்  உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  உள்ளிட்ட தூதுக்குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.

அந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் மற்றும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

அதன்போது “Starlink” திட்டத்தை இலங்கையில் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இத்திட்டம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட வேண்டுமாயின் ஜனாதிபதியின் ஆதரவு தேவை என எலோன் மஸ்க் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில் இவ்வாறான செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார். எனவே இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இந்த வருட இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உண்மையில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க் போன்ற உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர்களின் முதலீடுகளை ஈர்க்க முடிந்தால், அது இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

இவ்வாறானதொரு செயற்திட்டத்தை இலங்கையில் ஆரம்பிப்பதன் மூலம் இலங்கை முழு உலகிற்கும் திறக்கப்பட்டுள்ளது என்ற செய்தி உலகெங்கிலும் பரவும். இதன் மூலம் உலகின் கோடீஸ்வர வர்த்தகர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மேலும், “Starlink” போன்ற திட்டத்தில் இணைவதன் மூலம், நாட்டின் பின்னடைந்த பிரதேசங்களுக்கு எந்த சிக்கலும் இன்றி இணைய வசதிகளை வழங்க முடியும். அது சுற்றுலாத் துறை உட்பட பொருளாதாரத்திற்குப் பயன்படும் பல துறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் சலுகைக் கட்டண முறைகளின் கீழ் இணைய வசதிகளை வழங்குவது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். எதிர்காலத்தில் நிறுவனத்துடன் கலந்துரையாடவுள்ளதாக அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Starlink” திட்டம் தற்போது உலகில் 99 நாடுகளில் பரவியுள்ளது. மாலைதீவு, இந்தோனேசியா போன்ற நாடுகளும் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.

வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வரும்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது இலங்கை அரசியலில் வழக்கமாகிவிட்டது. ஒரு விடயத்தை ஒருவர் வெற்றிகரமாகச் செய்யும்போது, அதற்கு தடைகளை ஏற்படுத்துவதும், அந்த முயற்சிகளுக்கு இடையூறு செய்வதும் அரசியலில் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.

ஆனால் இதுபோன்ற உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர்களை இந்த நாட்டுக்கு முதலீட்டாளர்களாக அழைப்பதை மக்கள் எதிர்க்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஊர்காவற்துறையில் மதுபான சாலை அனுமதியை நிறுத்த கோரி மக்கள் போராட்டம் !

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் மதுபான சாலை அனுமதியை நிறுத்த கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள், நீதிமன்றம் மற்றும் காவல் நிலையம் என்பவற்றுக்கு அண்மையில் இந்த மதுபானசாலை சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் இதனால் பல சமூகப் புரள்வான நடவடிக்கைகள் ஊர்காவற்துறை பிரதேசத்தில் நடைபெற்று நீதிமன்ற வழக்குகளாகவும் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தீவக மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்க கூடாது என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது மக்கள், பதாகைகளை தாங்கியும் மதுபான சாலை நிறுத்த கோரியும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மதுபான சாலையை நிறுத்த கோரி கையொப்பமும் பெறப்பட்டுள்ளது.

ஊர்க்காவற்துறை சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை சிறுவில் வீதியில் சட்டவிரோதமாக இயங்கி வருகின்ற மதுபான சாலையை அனுமதியை நிறுத்த கோரி பிரதேச செயலகம் முன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்துக்குள் பதாகைகள் தாங்கியவாறு உள் நுழைந்து ஊர்காவலத்துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியிடம் மகஜரையும் கையளித்தனர்.

மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்த நபர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் – யாழ்.போதனா வைத்தியசாலையில் சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்த நபர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

 

வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு, மதுபோதையில் வந்த நபரொருவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்து சிகிச்சையளிக்க கோரியுள்ளார்.

இதன்போது ஏன் மோட்டார் வண்டியில் உள்ளே வந்தீர்கள் என கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது மதுபோதையில் வந்த நபர், அலுவலகம மேசை மீது இருந்த அச்சு இயந்திரத்திரத்தினால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அங்கு ஒன்றுகூடிய வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த வைத்தியசாலை உத்தியோகத்தர் மற்றும் வாள்வெட்டில் காயமடைந்தவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டனர்.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு!

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பொருளாதார மாற்றுச் சட்டம் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் சட்டமூலம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (27) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தற்போது ஆணை இல்லாத நாடாளுமன்றம் இருப்பதால், இவ்வாறான சட்டத்தை நிறைவேற்றுவது மிகவும் ஆபத்தானது என பேராசிரியர் தெரிவித்துள்ளார். அங்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில்,

இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் துரிதமாக தயாரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய நாடாளுமன்றத்தின் தேவை இன்றைய சமூகத்தில் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் தேர்தலை கண்டு பயந்து பணமில்லை என கூறி தேர்தலை ஒத்திவைக்க முயல்வதாக பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதலில் நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதி தேர்தலா என்பது தொடர்பில் மக்கள் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்த எம்.பி, அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.