30

30

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறு பொதுமக்கள் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தின்போது, தங்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேச விசாரணை ஊடாக தீர்வு வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே நாடுகள்!

ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கூட்டாக பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

இதனுடன், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் தமக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை என பிரான்ஸும் அறிவித்துள்ளது.

அதன்படி, தகுந்த நேரத்தில், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிக்க தான் தயாராக இருப்பதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

பலஸ்தீனத்துக்கான அங்கீகாரம் சரியான தருணத்தில் கொடுக்கப்பட வேண்டும் என தான் கருதுவதாகவும், உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை தான் உடனடியாக எடுப்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது பிரித்தானிய நாடாளுமன்றம் !

பிரித்தானிய நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக இன்று (வியாழக்கிழமை) கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் அறிவித்திருந்தார்.

இதன்படி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதுடன் பொதுத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையும் என்று கூறப்பட்டிருந்தது

இதனைத் தொடர்ந்து 5 வாரங்களின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“All eyes on Rafah” -பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கோடிக்கணக்கான மனிதர்கள் !

காசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வெளியான “All eyes on Rafah” என்ற ஹேஷ்டெக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில், அதிகளவாக பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது.

அதன்படி, AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட “All eyes on Rafah” வாசம் பொருந்திய புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது.

இது, இஸ்டாகிராமில் மட்டும் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், All eyes on Rafah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் 2.75 கோடிக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.

காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையை கண்டிக்கும் வகையில், “All eyes on Rafah” என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் வைரலாகி வருகின்றது.

குறித்தப் புகைப்படத்தில் மிக நெருக்கமாக அமைந்துள்ள தற்காலிக கூடாரங்கள் இடம்பெற்றுள்ளன.

பாலைவனப் பின்னணியில், மலைகளுக்கு இடையே தற்காலிகக் கூடாரங்களில் இருக்கும் பலஸ்தீனர்களின் துயரமான நிலையை எடுத்துரைப்பது போல் அந்தப் புகைப்படம் அமைந்தது.

All eyes on Rafah என்ற புகைப்படத்தை, சர்வதேசக பிரபலங்கள் தங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை – சி.வி.விக்னேஸ்வரன்

எமது தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் வடக்கின் முதலமைச்சராக இருந்திருந்தால் பாடசாலை மாணவிகளுக்கு எதிராக இன்று மேற்கொள்ளப்படும் தகாத முறைகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்திருப்பேன்.அத்தோடு, வடக்கு மாகாணத்தில் இன்று இவ்வாறான சீர்கேடுகள் இடம்பெறுவது வெட்கித் தலை குனியும் படியான விடயமாகவே இருக்கின்றது.

ஏனெனில், தமிழ் மக்கள் ஒழுக்கமான இனமாக இருந்தவர்கள் அத்தோடு அவ்வாறே கருதப்பட்டவர்கள் ஒரு பெண் நள்ளிரவில் நகைகளை அணிந்துகொண்டு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சென்றுவரக்கூடிய நிலை என்று தோற்றம் பெறுகின்றதோ அன்றுதான் எமக்குச் சுதந்திரம் என்று மகாத்மா காந்தி சொன்னார்.

கிட்டத்தட்ட அவ்வாறான நிலை தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்த நிலையில் இப்பொழுது அனைத்தும் மாறிவிட்டது.

இன்று போதை தலை விரித்தாடுகின்றது அத்தோடு இராணுவத்தினர், கடற்படையினர், காவல்துறையினர் மற்றும் வான்படையினர் வடக்கில் முகாமிட்டிருந்தும் போதைப்பொருள்கள் எந்தத் தடையும் இல்லாமல் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன.

சீர்கெட்டுப்போயுள்ள இந்த சமூகத்தை மீட்பதற்கு இரும்புக்கரம் தேவை” என அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற இலங்கை திரைப்படம் !

மார்ச் 2024 இல் பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் சிறந்த நடனத் திரைப்படப் பிரிவில் இலங்கைத் திரைப்படமான ‘ஷேஷ’ வென்றுள்ளது.

‘ஷேஷ’ திரைப்படம் இசுரு குணதிலக்கவால் உருவாக்கப்பட்டது.

இதில் மூத்த நடனக் கலைஞர் சந்தன விக்ரமசிங்க முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.